Monday, December 28, 2009

இன்னுமென்னையே உருக்கி
அன்பே உனை நான் இசைப்பேன்
சொல்லிழந்த பாழ் வெளியில்
அல்லலுற்ற போதினிலும்...

(இன்னுமென்னை.................)

எதனடியில் என் மனது
துயரத்தை வாங்கியது.
எதன் நுனியில் என்னிருப்பு
இப்படியே நெழிகிறது
அன்பென்பது வளரும் வடிவம்
கட்டறுந்து எனில் வளரும்
சிற்றெறும்பு தேனில் விழுந்து
தத்தளித்து நீந்திவரும்

(இன்னுமென்னை.............)

கடந்து செல்லும் மனதினுள்ளே
புள்ளி வைக்கும் குணமெதற்கோ
வைத்தபுள்ளி கடந்து போனால்
வருந்துமிந்த மனம் எதற்கோ
உள் வெளியை உற்றுப் பார்த்தேன்
புள்ளியல்ல பூரணி நீ
எல்லையற்று எனில் பரந்தாய்
பிள்ளையென ஆனேனடி

(இன்னுமென்னை.............)
...........................................................
ஒற்றைச் சிறகால் ஒருபறவை
என்னுள் பறக்கிறதே
கொத்தும் அலகால் அது எந்தன்
குடலைத் தின்கிறதே
என்றோ நான் விழுங்கிய முட்டை
இன்றென்னுள் பொரித்தது
இன்றதுவோ என்னையும் தூக்கி
வானத்தில் பறக்குது............
(ஒற்றைச்..................)

கனவுலகம் சென்று வந்தேன்
கனவுக்குள்ளே என்னைக் கண்டேன்
என்றும் நான் கண்டிராத
முகமாக இருக்கக் கண்டேன்
என்முகமே என்முகமே
இத்தனை நாள் எங்கிருந்தாய்?
என்றே நான் முனகிக் கொண்டேன்
இப்போதான் திரும்பி வந்தேன்.


(ஒற்றைச்....................)
உள்ளியங்கும் ஓர் உலகம்
ஊமைக் காற்றாய் நானிருப்பேன்
சொல்லைவிட வல்லதொன்று
அவ்வுலகை ஆட்டிவைக்கும்
உள்ளொளியில் கண்டதெல்லாம்
உன்னுடனே சொல்லி வைத்தேன்
சொல்லைவிட ஏதோ ஒன்றால்
சொல்லிவிட முயலுகின்றேன்.............


(ஒற்றைச்..................)

Sunday, October 18, 2009

…ராணி………………………………..

சிறு,சிறு பற்றைக் காடுகள், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வீதி குறுக்கு மறுக்காய் வீதி கடந்து
ஓடும் நரிகள், தம்மைப் பிடிக்க யாரோ வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் தொடர்ந்தோடிச்
சிலிர்க்கும் முயல்கள்…….. அந்த முயல்கள்… அவற்றின் பயம், ஓட்டம், குறண்டல், பதுங்கல்….
பாவம் அந்த முயல்கள்.
இருண்ட காட்டின் அமைதியைக் குலைத்த படி இரண்டு ஒளிக் கோடுகளை
ஏவிச் செல்லும் சிவப்பு வாகனமொன்றினுள் தலை மாற்றி இரண்டு விமானங்களிலேறி நாடுகளின்
எல்லைகளைக் கடந்த மூன்று மனிதர்கள் இருந்தனர். யாழ்ப்பாணமும், மன்னாரும், மட்டக்களப்பும்
கூட அந்த வாகனத்துள் மன முடிச்சுகளாய் இருந்தன. மூன்று மனிதர்கழுக்கும் ஆறு பெயர்கள் இருந்தன.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் தத்தமது இரவற் பெயர்களை
கைவிடாதவர்களாய் தமக்கே உரிய ரகசியங்களை தமது மன முடிச்சு களுக்குள் வைத்திருந்தனர்.
வாகனம் ஒரு வீட்டின் முன்னே நின்றபோது ‘தவசீலன் ‘எனப்படும் இளைஞன் மட்டும் இறக்கப்பட்டான்.
மிகுதி இருவருமே தத்தமது இரகசியங்களைச் சுமந்தபடியே கடந்து சென்றனர். கதவுஒருமுறை சட்டெனத்
திறந்தபோது வீடு அவனை விழுங்கிக் கொண்டது. கொஞ்சம் முதுகைப்பிடித்து அழுத்தினால்
முறிந்துவிடுவானோ என கருதக்கூடிய அவன் தனது பொதியைச் சுமந்தபடி வீட்டினுள் நின்றான்.
சாயம் போன உடைகளோடும் உற்சாகமற்ற முகபாவங்களோடும்
உள்ளேயும் சில தமிழ் முகங்கள். ‘தீபன்’ இவருக்கு உள்ளுக்க கூட்டிக்கொண்டுபோய் இடத்தக் காட்டு”
என்று வாசலில் இருந்த ஒருவன் சொல்ல சற்று பருமனான உடல் வாகைக் கொண்ட தீபன் வந்து
கூட்டிச் சென்றான். உள்ளே ஒன்றும் விசாலமான இடமில்லை. ஒரு விறாந்தை, அதனருகில் இரண்டு
மலகூடங்கள் அமைந்ததொரு ஓடை, ஓடையை ஒட்டி சமையலறை அதன் பின்புறமாய் இரண்டு அறைகள்,
அருகில் கூரை இல்லாததொரு சீமெந்துத் தரை. அவ்வளவும்தான் அந்த வீடு.
முழுதாக மூடப்படாத
முன்னறைக் கதவோரம் ஒரு பாதி முகம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கடந்து அடுத்த
அறையில் நுளைந்தபோது. அங்கே நான்கு குதிரைகள் மாறி மாறிப் பாய்ந்துகொண்டிருந்தன, அறை முழுவதும்
ஒரு யுத்தகளமாய்க் கிடந்தது. இரண்டு அரசுகளின் சண்டை , அரசுகளைக் காப்பாற்ற அப்பாவி இளைஞர்களின்
மரணங்கள்……………….. தந்தரங்கள், ஏமாற்றங்கள், இறந்த காலத்தில் நகர்த்திய பிளையான காய்கள் கொடுக்கும்
துன்பியல்கள், ஓமோம் அங்கே மும்முரமாய் ‘செஸ்’ விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக்
கண்டான். அவர்கள் வரவேற்பதில் பெரிய ஆர்வம் இல்லாதவர்களைப் போல தலைகளை நிமிர்த்தி இரண்டு
சிறிய புன்சிரிப்புகளோடு குனிந்து காய்களை அகற்றுவதற்கான சிந்தனைக்குள் மூழ்கினார்கள். ‘ செஸ்காய்கள்
செஸ்போட்டை விட்டு வெளியே நகருவதில்லை’ என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். அந்த அறை
பெருமூச்சுகளால் நிறைந்து கிடப்பதையும் அவனால் உணரக் கூடியதாக இருந்தது. ஏற்கனவே வந்துபோன
பயணிகள் விட்டுச் சென்ற சுமைகளும் அவை ஒவ்வொன்றுக்குமான கதைகளும் அங்கே அடுக்கப்பட்டிருந்தன.
அந்த அடுக்கின் மேலே ஏறி அமர்ந்து கொண்டது ‘தவசீலனின் கதை”. ஆடை மாற்றி, தேனீர் பருகி அங்கே
இருந்த விவிலியத்தை புரட்டியபடி இருந்தவனிடம் தீபன்தான் கதை கொடுத்தான்.

நாட்டில அண்ணன் எந்த இடம்?
யாழ்ப்பாணம் கூத்தர் துற….
கூத்தர் துறையோ…. அங்க நான் வந்திருக்கிறனப்பா…..
ஆ…
அப்ப உங்களுக்கு மக்காட்டத் தெரியுமோ….?
ஓமோம் தூரத்துச் சொந்தம்தான்….
அப்ப உங்கழுக்கு………………………… தெரியுமோ?
ஒரே ஊர் என்றால் தெரியும் தானே…..
உங்கட ஊருக்கு நான் வந்ததே ரெண்டு பேர மண்டையில போடுறத்துக்குதான்.
ஒராள்……………… மற்றாள்……………………….ஆக்களிப்ப எங்க இருக்கிறாங்கள்?
நான் ஊரைவிட்டு வெளியேறி கனகாலம் தானே……………

இந்தத் தொடக்கமே தவசீலனுக்கு ஒத்துவராததாய் இருந்திருக்கவேண்டும். அவனோடு கொஞ்சம் அளவாகவே
கதைக்கவேண்டுமென்று நினைத்தான். தீபனின் விசாரணைகளுக்கு பட்டும் படாமலும் பதில்களைச் சொல்லிக்
கொண்டிருந்தான். பின்னர் நித்திரை வருவதாகச் சொல்லி கதையின் சூட்டைத் தணித்துப் படுத்தான். தீபன் போனதும்
அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கழும் விளையாட்டை முடித்து இவன் பக்கம் திரும்பினார்கள்.
‘சொறியண்ணே நீங்க அவனோட கதச்சுக் கொண்டிருந்ததால நாங்க பேசாம இருந்திட்டோம்’ என்றான் முப்பத்திநான்கென
வயசுமதிக்கத் தக்க சிவா. மற்றவன் இருபத்தி நான்குவயது சுதன். சிவா அய்ந்து வருடமாகவும், சுதன்
இரண்டு மாதமாகவும், அவர்கள் வருவதற்கு முன்னரே தீபன் அங்கே இருப்பதாகவும் அறிந்து கொண்டபோது புதிதாய்
வந்த தவசீலனுக்கு இடி விழுந்தது. கொஞ்ச நேரம் கதைத்தார்கள் பிறகு அவர்கழுக்கே உரிய கதைகளோடு
படுத்தார்கள். அவர்கள் படுத்தபோது கதைகள் பேன்களைப் போல ஊரத் தொடங்கின.

கூத்தர்துறையில்’ மக்காட்” என்று அழைக்கப்படும் ஒருவன் இருந்தான். அவனொரு தேர்ச்சி பெற்ற
படகோட்டியாய் இருந்தான். துருதுருவென பண்டிக் கீளி மீனைப் போலவே அவனது செயல்கள் இருக்கும்.
மக்காட் யாருடனும் மிக இலகுவாக பளக்கம் பிடித்து விடுவான். முதல்நாள் ஒருவருடன் பளகி மறு நாள்
மச்சான் என்று தோழில் கை போட்டு விடுவான். அதனை அவன் நட்பு என நம்பினான். எப்போதுமே அவனது
நுனி நாக்கில் வார்த்தைகள் இருந்தன.

இரவில் கடலைக் கடந்து போகும் இயக்கக் காரர்கள் அவனை வந்து இரகசியமாய் கூட்டிச் செல்வது
வளக்கமாய் இருந்தது. அது இரகசியமாய் நடக்கும் வேலை என்று இயக்கக் காரர்கழும் நம்பினார்கள்.
மக்காட்டைக் கூட்டிச் செல்லும் நாட்களில் அவனது மனைவி வீட்டில் படுப்பது இல்லை. அவள் பிள்ளைகளையும்
காவிக்கொண்டு அவளது தாயின் வீட்டில்போய் படுத்து விடுவாள். ‘இயக்கம் வந்து கடலால போகுதாம்’ என்ற
செய்தி இரவோடு இரவாக பரவத் தொடங்கிவிடும். மக்காட்டின் மாமியார் வீட்டில் ‘பீ பீ சீ செய்தி”
கேட்பதற்காகக் கூடும் கூட்டம் விடிந்ததும் மக்காட்டைச் சந்திக்கக் காத்திருக்கையில் மக்காட்டு ‘கெப்பேறு” வந்தவனாய்
நடந்துகொண்டிருப்பான். சில வேளைகளில் வீட்டுக் கூரையின் மேலே ஏறி நின்று நெற்றியின் மேலே
கையை வைத்து கடலை அவன் பார்க்கும்போது. அவனையே அவதானித்தபடி இருக்கும் கிழவர்கள் கூட்டம் ‘ டேய்… மக்காட்…
கடலப் பாக்கிறானெடா… நேவி, கீவி வாறானோ தெரியேல்ல” என்று குசு குசுக்கத் தொடங்கி விடுவார்கள்.
ஒரு முறை கூரையின் மேலே ஏறி நின்றவன் கடலில் தூரத்தில் தெரிந்த பிழையான கறுப்பைக் கண்டு
‘ ஓ மக் காட் “ என்று சொல்லிய போது ஆங்கிலம் தெரிந்த ஒரு கிழவன் சூட்டிய நாமம்தான் ‘மக்காட்”

ஆனால் கூரைக்கு மேலே படம் காட்டும் பல மனிதர்களின் வீட்டு அறைகளில் வாழ்க்கை விசித்திரமானதாகவே
அமைந்து விடுகிறது. உண்மையான இயக்கக்காரர்களை இனம் காண முடியாத ராணுவம் மக்காட்டைத் தேடவே
அவன் ஊரை விட்டு ஒளிந்தோடித் திரிந்தான். அவனது குடும்பம் அவன் இல்லாத காலத்தில் மிகுந்த
வறுமைக்குள் உளன்றது.
தீபனும் மக்காட் வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று ஊகித்தபடி படுத்திருந்தான் தவசீலன்.
புதிதாய் வந்த இரண்டு பேரும் நித்திரைக்குள் புதைந்து கிடக்க சிவா மட்டும் எழுந்து குந்தினான். சிறிது நேரம்
சுவரையே பார்த்தபடி இருந்தான். ஒவ்வொரு காலையிலும் அவன் முழிக்கின்ற சுவர் அது, அவனது வாழ்க்கையின்
முன்னே எழுந்து நிற்கும் பெருஞ் சுவரின் சிறிய படிமம். அவன் படுக்கையிலிருந்து எழுந்து கூரையற்ற சீமெந்துத்
தரைக்குப் போனான். போகும்போது பக்கத்து அறையை நோட்டம் விட்டவாறே நடந்தான். அறைக்குள் எந்த அரவமும்
இல்லை. அனேகமாக அவளும் நித்திரை கொண்டிருக்க வேண்டும். சீமெந்துத் தரையில் இருந்தவாறே வானத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மின்மினியைப் போல விமானமொன்று பறந்து கொண்டிருந்தது. அவன்
பெருமூச்சொன்று விட்டான் அம்மா…. என்று முனகினான். துயரம் வரும்போது அம்மா என்கின்ற சொல்லில்தான்
எத்தனை ஆறுதல் கிடைக்கிறது.
அவனது மனக்கண்ணில் மிழகாய்த் தோட்டத்தில் கிளி கலைத்துக் கொண்டிருக்கும்
தாயின் உருவம் தோன்றி இறந்த காலத்தின் நினைவுகளை நகர்த்திக் கொண்டிருந்தது. தோட்டம் விடியும்போது
எழுந்து புதிதாய் வெண்படை போர்த்தி இருக்கும் புடலங்காய்களைத் தடவிப் பார்ப்பதும், தக்காளிச் செடிகளின்
ஸ்பரிசத்தோடு அவற்றிலுருந்து வெளிவரும் வாசத்தை நாசியில் இழுத்துக் கொள்வதிலும்தான் எத்தனை இன்பம்…
அம்மா இப்போதும் கிளிகளை துரத்துகிறவளாகவே இருக்கிறாள். கிளிகள் போட்ட சாபம்தான் நான்இப்படி நாடு நாடாய்
அலைவதற்குக் காரணமோ என்று அவன் நினைத்துக் கொண்டான். எத்தனை விமான நிலையங்கள், சிறைச் சாலைகள்,
காடுகள்,விபசார விடுதிகள், இந்த வாழ்க்கைக்குள்தான் எத்தனை வளைவுகள்…….

அவனது தனித்துவம் மறுக்கப் பட்டபோதெல்லாம் அவனிருந்த இடங்களில் தன் காமத்துக்கான வடிகாலைத் தேடி
கடப்பவனாகவே இருந்தான். ஆனால் இங்கே……. சுவர்கள், கதவுகள்……………… அவளது அறையின் முன்னால் கால்களை
‘சீய்த்துக் கொண்டு” நடந்தான். பின்னர் அறைக்குள் வந்தபோது தீபன் முழித்திருக்கிறான் என்பது தெரிந்தது.
இந்தத் தீபன் எத்தனை மணிக்குத்தான் நித்திரை கொள்கிறான்…. பார்க்கிற நேரமெல்லாம் முழிப்பாக இருக்கிறானே..
என்று சினந்தவாறே படுத்தான்.
திகதி மறந்துபோன அந்த மறுநாள் விடிந்தபோதும் சிவா படுத்திருந்தான்.
சுதன் படுக்கையை சுருட்டியபோது தவசீலனும் எழுந்து கொண்டான். குசினிக்குள் வந்தபோது தனக்கான தேநீரை
கலக்கிக் கொண்டு அறைக்குள் போய்க்கொண்டிருந்தாள் ‘ராணி”. ‘அண்ணே தேத்தண்ணி குடியுங்க’ என்று ஒரு
குவளையை நீட்டினான் தீபன், தனக்கான தேனீரை எடுத்துக்கொண்டான் சுதன்.

ராணி அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரம் இருந்தாள், பின்னர் எழுந்து முன் விறாந்தைக்குப் போய் தீபனிடம்
ஏதையோ சொன்னாள் அவன் தலையை ஆட்டிவிட்டு ‘சேட்” ஒன்றைப் போட்டுக்கொண்டு கடைக்குப் போய் வருவதாகச்
சொல்லிச் சென்றான். அவள் திரும்பவும் வந்து அறைக்குள் இருந்தாள். உடம்பு மிகுந்த பெலவீனமாக இருந்தது. தனியொரு
பெண்ணாய் அந்த அறைக்குள்ளேயே எவ்வளவு காலம் அடைந்து கிடப்பது…..அவளோடு வந்து கனடாவுக்கு அனுப்பப் பட்ட
அவளது அண்ணன் பயண வழியில் பனிக்கட்டிக்குள் புதைந்து செத்தான் என்பதும், அவளது கிராமத்தில் நடந்த விமானத்
தாக்குதலில் அவளைப் பெற்றோர் சிதறிப் போயினர் என்பதையும் அறிந்திராத அவள் ஒருநாள் தனது குடும்பத்துடன்
கனடாவில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொண்டாள். அவழுக்குத் துணையாக அவளது கற்பனை மட்டுமே
அந்த அறைக்குள் வாழ்ந்து வந்தது.
அவழும் இரண்டு முறை அங்கிருந்து புறப்பட்டு இரண்டு முறையும் பிடிபட்டதால்
பயணமே கேள்விக்குறியாகிப் போனது. தனது இறுகிப்போன வாழ்க்கையின் பின்னால் இருக்கும் கோரமான அரசியலின்
முகத்தையும், தன் கையிலில்லாத தனது நிகழ்கால வாழ்க்கையின் நிலையையும் எண்ணி அவள் வருந்தினாள்.
அவழுக்குப் பின்னே பலர் வந்து போய் விட்டனர். அங்கே வந்து போன ஆண்கள் பலரது கண்கள் வயது வித்தியாசம் பாராமலே
அவளின் மேலே மேய முயலும் போதெல்லாம் அவழுக்கு மிகுந்த கோபம் வரும் அவள் கோபங்களை அடக்கி அடக்கியே
தன் மனதை காயப் படுத்திக் கொண்டாள் ஆண் இனத்தின் மீதே அவழுக்கு அருவருப்பு வந்தது. அவளது மனது அவளுக்
குள்ளேயே பல எச்சரிக்கைக் கோடுகளை ஏற்படுத்திக் கொண்டு ஆழமாகிக் கொண்டிருந்தது. ஆழமான பழ்ழமொன்றிலிருந்து
வரும் நசிபட்ட குரலாய் தனது குரலை அவளே உணர்ந்தாள். ஆயினும் தனது மனசுக்குக் கட்டுப்படாத உடலோடு
அவளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருந்தது.

ராணியின் கதையை சுதனிடமிருந்து கேட்டறிந்தான் புதிதாய் வந்த தவசீலன். அவன் அவளுக்கு ஆதரவாக
இருக்கவேண்டுமென நினைத்தான். ஆண்கள் எல்லோருமே அப்படி இல்லை என்பதை அவளுக்குச் சொல்ல தான் எந்த
அளவிற்குத் தகுதியானவன் என்பதை அவன் யோசித்தான். அவன் எந்த அளவிற்கு மரியாதையாக பெண்களோடு
நடந்து கொள்ள முயன்றாலும் பாளாய்ப் போன கண்கள் சொல்வளி கேட்பதாக இல்லையே என்று முண்முணுத்தான்.
காமம் நல்லதுதான்…. அது அழகானதும் கூட.. காமத்தின் மீது வக்கிரம் விழுந்துவிடாமல் பார்க்கவேண்டும் என
ஒரு வகையாக முடிவெடுத்தான். அவனது சுய இன்ப முயற்சியில் எந்தப் பெண்ணின் உருவத்தையும் அவளது
அனுமதியின்றி நினைப்பதில்லையென முடிவெடுத்தான். அவ்வாறாய் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மலகூடத்தில்
ஆழுக்கொரு சுய இன்பம் தாறுமாறாய் நிகழ்ந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் ஆண்களது அறையினுள் பெண்கள் பற்றிய கதைகளே நிறைந்திருக்கும். கொழும்பு பயணிகள்
விடுதியொன்றில் தனக்குப் பளக்கமான அக்காமார்பற்றிய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பான் சுதன்.
பெண்களை நெருங்குவதற்கு உகந்த ஆயுதமாக ‘ அக்கா” என்ற சொல்லை அவன் பாவிப்பதில் கெட்டிக் காரனாக
இருந்தான். வார்த்தைகளுக்குள் பதுங்கியிருக்கும் பூனையைப் போல அவன் நடந்து கொண்டபொழுதுகளை வாயூற
விபரித்துக் கொண்டே இருப்பான். அவன் ராணியையும் ‘ அக்கா” என்றே அழைத்தான். சுதனின் கபடத் தனங்களை
அவன் வாயாலேயே அறிந்த தவசீலன் ராணியை எச்சரிக்க நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என்று யோசித்தான்.
அவளுக்கும் சுய அறிவு இருக்கிறதுதானே என்று அதுபற்றிக் கதைப்பதை தவிர்த்தான். பின்தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்
தனது பயணநாளை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானான், அந்த வீட்டின் ‘மாபிள்’ தரையில் கால்களைக் கெந்தி
அவற்றை எண்ணித்திரிந்தான், அந்த வீடு அவனுக்கு ஒருபெரிய ‘செஸ் போட்” ஆகத் தெரிந்தது

இவ்வாறாக காலம் கரைந்து கொண்டிருந்தது. இரவுகளில் ராணியின் அறைமுன்னால் சிவா கால்களை சீய்த்துக் கொண்டு
நடந்தான், ராணி தம்பியை நம்பினாள், தவசீலனிடம் கடனாக வாங்கிய நூறு டொலர்களை தர
முடியாது என்று சொல்லிய தீபனிடம் சண்டைபோட நாதியில்லாதவனாய்
தவசீலனும் தனது பயணத்தைத் தொடங்கினான்.
சில ஆண்டுகளின் பின்னர்
சிவா, தவசீலன், சுதன் என்ற அந்த மூன்று இளைஞர்கழும் ‘ பரிஸில்’ உள்ள தேனீர்ச் சாலையொன்றில் சந்தித்தனர். சுதன்
தான் சொன்னான் ‘ தவசீலன் அண்ணே உங்கழுக்கு ஒரு விசயம் தெரியுமே..
சிவாண்ணே அந்தப் பொட்டைக்கு……. குடுத்து விட்டிட்டேர் என்ன………

Thursday, September 3, 2009

அணிசேராப் படிமங்கள்

Monday, 29 January 2007
வரலாறெங்கிறது ஆளுறவர்களுக்குச் சாதகமா எழுதப் படுகிறதெண்டு ஆச்சி சொன்னாள். அவளே தான் ஏழுமலைகளையும், ஏழுகடல்களையும் தாண்டிப்போய் ஒரு மரப்பொந்தில இருக்கிற கிளியின்ர இறக்கையைக் கிழிச்சா(ல்) மந்திரவாதிகள் சாவானுகள் எண்ட கதையையும் சொன்னாள்.
நான் ஏழுமலைகளையும், ஏழு கடல்களையும் தாண்டினன். இருந்த மரப்பொந்துகளில எல்லாம் தேடினன். ஒரு பொந்திலயும் கிளி இருக்கேல. ஆச்சியெட்ட காட்டுக்கத்தல் கத்திச் சொன்னன்- கிளியில்லயெண எண்டு. அட மோனே நீ வெத்தில வாங்கித்தருவாய் எங்கிறத்துக்காக சும்மா சொன்ன உவகதயெடா எண்டு சொன்னாள் ஆச்சி. ஆச்சி இப்ப ஊர் முழுக்கையும் வெத்திலயால துப்பீற்றுத் திரியிறாளாம். வெத்திலைக்கொரு கதை, புகையிலைக் கொரு கதையெண்டு அவளெட மடிப்பெட்டிக்க நிறையக் கதையள் வச்சிருக்கிறாளாம். கதை கேட்க ஆருங் கிடைக்க மாட்டீனமா வெண்டு தேடியிருப்பாள்.
இருந்து வாற காலத்தில இப்ப நான் கதையெழுதத் தொடங்கீற்றன். ஆச்சியின்ர கதையளில எனக்கு நம்பிக்கயத்துப் போச்சு. என்ர கொப்பி ஒற்றைக்கு மேல ஒரு குருசு போட்டன்.
அடிக்கடி சிலுவ
நித்தம் பூச
கல்லற கிட்ட
கபால மல தூர
சுத்தி வர சம்மனசு
தூரப்போகும் சத்திராதி
யெண்டு ஆச்சி சொல்லித்தந்த செவத்தையும் சொல்லிப்போட்டு ஒரு கத எழுதினன்.
ஒரு ஊரிலயாம் ஒரு ராசாவுக்கும், ராசாத்திக்கும் மூண்டு புள்ளயளாம். மூண்டும் ஆம்பிளப் புள்ளயளாம். மூத்தவனுக்கு பெரிய மீசையாம். ரெண்டாவதுக்கு குடும்பியாம். மூண்டாவதுக்கு குஞ்சுத்தாடியாம். மூத்தவன் வேட்டையாடுறதில காலத்தக் களிக்க, குடும்பியன் அந்தப்புரத்திலேயும் குஞ்சுத்தாடி அடுப்படியிலேயும் படுத்துக் கிடந்தாங்களாம்.
குஞ்சுத்தாடி யோசிப்பானாம் அடுப்புக்கு ஏன் மூண்டு கல்லு வைக்கினம் எண்டு. குடும்பி சொல்லுவானாம் பொம்பிளையள்; கற்பப்பையை தூக்கி எறிய வேணுமெண்டு.
இதயெல்லாம் அரண்மன மதிலுக்கு மேல இருந்து குரங்கொண்டு பார்த்து தலையாட்டிக் கொண்டிருக்குமாம்.
இருந்து வாற காலத்தில, ஒருக்கா அரசன் தன்ர படைகளைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்கு யாத்திர போன நேரம் பாத்து, பக்கத்து நாட்டரசன் படையெடுத்து இவங்கட நாட்டுக்குள்ள வந்திருவானாம். குடும்பியையும், குஞ்சுத்தாடியையும் குரங்கு தூக்கீற்றுப்போய் காட்டுக்குள்ள வச்சு வளர்க்குமாம். குடும்பியும், குஞ்சுத்தாடியும் வளர் வளரெண்டு வளருவாங்களாம்.
குரங்கு இவங்களுக்கு குத்திகரணம் எல்லாம் அடிச்சுப் பழககுமாம். ரெண்டு பேரும் ஒருநாள் ஆரு பெரிய கரணம் அடிக்கிறதெண்டு போட்டி போட்டிற்று கரணம் அடிச்சாங்களாம். அடிச்ச அடியில ரெண்டு பேரும் வந்து வெளிநாட்டில விழுந்தாங்களாம்.
உன்னாண இந்த ரெண்டுபேரையும் அண்டைக்கு லாச்சப்பல்ல கண்டனான். ரெண்டு பேரும் நிறையக் கிளி வச்சிருக்கிறாங்க. கிளி யோசியமெல்லாம் சொல்லுறாங்களாம். நல்லா கரணமடிக்கிறாங்களாம். அரண்மனையைச் சுத்தி பசாசுகளும், மந்திரவாதிகளுமாம். அரசி தின்னவும் அரிசி இல்லையாம்.
அடிக்கடி சிலுவ நித்தம் பூச, கல்லற கிட்ட கபால மல தூர, சுத்திவர சம்மனசு வர, தூரப்போகட்டும் சத்துராதி.
கதையும் முடிஞ்சுது
கத்தரிக் காயும் காச்சிது.
இந்தக் கதைய எழுதீற்று என்ர மகளுக்கு வாசிச்சுக் காட்டினன். அவள் சொன்னாள்,
காட்டூன் பொம்மை யொண்டு கண்ணீர் விட்டிற்றிருக்கிறதப்போல இருக்குதப்பா உங்களப் பார்த்தாலெண்டு

Friday, August 28, 2009

நான் பற்றிய குறிப்புகள்

நான் ஒவ்வொரு நிமிடமும்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்,
ஒவ்வொரு நிமிடமும்
மறந்துகொண்டும் இருக்கிறேன்
இந்த நிமிடத்தின் நினைப்புத்தான்
நான்.
மறதியின் நான் பிரேதம்.
செத்துப்போன என்னை
சில வேளைகளில் உயிர்ப்பிக்கிறேன்
நினைப்பின் அழகே
வாழ்க்கையின் அழகு.

நான் வாழ்க்கையைச் சேமிக்கிறேன்
மரணத்தைத் தாண்டிய ‘நினைப்பில்’
அதனை இருத்தி வைக்கிறேன்
நினைப்பு எனக்கு மட்டும்
சொந்தமானதல்ல……………………………

நினைவில் காலூன்றி
எதிர்பார்ப்புகள் எனக்குளிருந்து
எள முயல்கின்றன
எதிர்பார்ப்புகளின் சுமை
அதிகரிக்கையில்
சேமித்து வைத்த வாழ்க்கை
கொஞ்சம் குறைகிறது.

எனக்குள் அரூபங்கள் இருக்கின்றன
அவற்றுக்குள் மறைந்து கிடக்கிறது
‘மாவாழ்க்கையின் வரைபடம்’
நான் அந்த வரைபடத்தைத் தேடுகிறேன்.

எழுத்துக்களின் வாலில்தான்
இப்போது நிற்கிறேன்
எழுத்துக்கழுக்கு
வரைபடம் தெரியும்.

Monday, August 17, 2009

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)

[நாள்- ஒன்று]
ஒரு சொட்டுப் பூலோகம் தன்காலடியிற் கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தான் மாணங்கி. படர்ந்துகிடந்த மேகங்களைக்கிழித்துக்கொண்டு எந்தப்பேரொளியும் பூலோகத்தைத் தொடுவதாய் தெரியவில்லையே என முணுமுணுத்தான். ‘நொருங்குண்ட இந்த இரவுகளைக் கடக்க நீர் தந்த குப்பிவிளக்குகள் போதவில்லையே என் பரமபிதாவே” என்று அவன் கண்ணீர் வடித்தான். உளைவுமிக்க இரவுகளை அவன் கடக்கமுடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்துபோயின. ‘எண்ணெய்ப்பீப்பாய்களை உருட்டிக்கொண்டு பகல் ஒரு வேட்டைநாயைப்போல வருகிறது எழுந்திரு மாணங்கி, எழுந்திரு” என்று உலுப்பியெழுப்பினான் கிழவன். படுக்கையை விட்டெழுந்து சோம்பல்முறித்து கிளிநொச்சியிலிருந்து இறைச்சிக்கெனக் கொண்டுவந்து பிணமாகி வயிறூதிய உருண்டை மாடுகளைச் சளியச், சளிய வண்டிலிலேற்றி குருகுமணலில் கால்புதைய இழுத்திழுத்து மாய்ந்தான் மாணங்கி. கொழுத்திய வெயிலில் கொப்பளித்துப்போனது அவர்களின்
கால்கள்.
‘வாழ்க்கை மிகவும் பாரமானது தாத்தா… அதைக்கடக்க நம்மை விடவும் பாரமான பலவற்றைச் சுமக்கவேண்டியிருக்கிறது…. இதோ பார்த்தாயா பசியிலும் பார்க்க வலிகூடிய கொப்பழங்கள்” என்றான் மாணங்கி. கிழவன் எதுவுமே பேசாமல் நடந்தான். அவனிடம் பெருமூச்சைத்தவிர அந்தக்கணங்களில் எதுவுமே இருக்கவில்லை. நீளநடந்தவர்களின் வாழ்க்கையின் முன்னே வாலைச் சுருட்டியபடி ஊளையிட்டுக்கொண்டு கிடந்தது பகல்நாய்.
[நாள்-இரண்டு]
இரவிரவாக தேங்காய் மூடைகள் ஏற்றிப்பறித்துவிட்டு வாடியிலேயே கண்ணயர்ந்தனர். பிணங்களுக்குப் பக்கத்தில் படுத்திருந்த கிழவன் எண்ணெய்ப்பீப்பாய்கள் உருட்டிய சத்தத்தில் துடித்துப் பதைத்து எழுந்து குருதியொட்டியிருந்த தனது சட்டையைக் கழற்றி பகலின்முகத்தில் விசுக்கியெறிந்துவிட்டே அரட்டினான். ‘எழுந்திரு மாணங்கி…. எழுந்திரு…. வண்டில் காத்துக்கிடக்கிறது…. பிணங்களும்… எழுந்திரு…. எழுந்திரு…. ” ஆவென வாய்விரித்து, முழிபிதுங்கி கடலுக்குள் உயிரைக் கக்கிவிட்டுப் படுத்திருந்த பிணங்களை ‘ஏமலித்துப்பார்த்தான்” மாணங்கி. ‘பிணங்களைச் சுமப்பதற்கு வெறும் உயிர்மட்டும் போதுமா தாத்தா? கொப்பழங்கள் இம்முறை நெஞ்சுக்குள் உடைந்து ஒழுகுகின்றனவே” என்றான். இருவருமாக எழுந்து வெளியேவந்தனர்.
‘கடந்துபோன இரவின் தொடக்கத்தில் இதே இடத்திற்தான் யார் முன்னுக்குப் போவதென்று முண்டியடித்து கடவுச்சீட்டு வாங்கினார்கள்…… இதோ இந்த அலுவலகத்தினுள்ளேதான் நேற்று யாருக்கும் தெரியாமலே ‘மரணம்” ஒரு அதிகாரியைப்போல இருந்து அவர்களின் முடிவுத் திகதியைத் தீர்மானித்திருக்கிறது.” என்று பெருமூச்சுவிட்டான் கிழவன். வண்டிலில் ஏற்ற முடியாத அளவு பிணங்களை கடல் அள்ளிவந்து கரையிற்கொட்ட வீணி வடித்துக்கொண்டே பகல்நாய் அவர்களின் வெறித்தப்போன முகங்களைப் பார்த்தது.
[நாள்-மூன்று]
கிளாலிச் சந்தியோகுமையோரின் குதிரைக்கால் லாடம் தொலைந்த அந்நாளில் கரையிலொதுங்கிய பிணங்கள் எவற்றிலேனும் வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டியிருக்கின்றதாவென தேடித்திரிந்தான் கிழவன். பிணங்கள் எல்லாமே அவனுக்கு ஒரேமுகபாவத்தையே காட்டின. பருவங்களின் வித்தியாசங்களைக்கடந்த மரணத்தின் ஒரே வயதுப் பிரேதங்களென அவன் வாய்க்குள் முணுமுணுத்தான். தனக்குள் ஏதோ முடிவெடுத்தவனாய் புளியமரங்களில் அடித்துவைத்த ஆணிகளை பிடுங்கத்தொடங்கினான்.
மஞ்சவண்ணா இலையில் காய்ச்சிய புக்கையில் பத்துப் போட்டு படுத்திருந்தான் மாணங்கி. கடந்த இரவு தூக்கிய தேங்காய்களைப் போலவே கட்டி கட்டியாய் வீங்கியிருந்தது அவனது முதுகு. புளியமரங்களில் ஆணியடித்துக்கட்டி வைத்த பேய்களெல்லாம் அவனைச் சுற்றியிருந்து குசு குசுத்தன. அவை அவனது உடலை வர்ணித்துக்கொண்டே அவனைத்தின்னக் காத்திருந்தன. ‘தாத்தா… ஓடியா… தாத்தா…. ஓடியா…” என்று அவன் கத்தினான். கிழவன் தான் சேர்த்த ஆணிகளை மடிப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டே ஓடிவந்தான். தனக்கான சவப்பெட்டியில் அறையவே அவற்றைப் பிடுங்கியதாகவும் கூறினான். சவப்பெட்டிக்குள் தான் தூங்கியபின்னர் பகலென்ற வேட்டைநாய் தன்னைப்பார்த்து வீணியூற்ற முடியாது என்றும், உன்னை நான் எழுப்பியதுபோல நீ என்னை எழுப்பமுயலாதே என்றும் பலமுறை இறந்து உயிர்த்த கிழவன் கூறினான். அவன் பேய்களையும் கூட்டிக்கொண்டே இருண்ட காட்டுக்குள் மறைந்தான்.
[நாள்-நான்கு]
கடலின் போக்கிற்கு எதிராய் பயணிக்கமுடியாத கயிற்றுக்கோர்வைப் படகுகள் கிளாலிக் கரையைத்தேடி அடைந்துகொண்டிருந்தன. குபீர், குபீரென வழிந்துகொண்டிருந்த குருதிப் பெருக்கிற்குள் பிணங்களை அள்ளிப் போர்த்திக்கொண்டே தானும் ஒரு பிணத்தைப்போல பாவனை செய்துகொண்டு கிடந்தான் மாணங்கி. படகுகள் கரையொதுங்கியபோது பிணங்களிடம் தான் பெற்ற அமைதியின் முகச்சாயலோடு எழுந்து நடந்தான் அவன்.
… வண்டிலை இழுத்துக்கொண்டிருந்தான் மாணங்கி,
யார் முதலில் கடலுக்குள் இறங்குவதென்று கடவுச்சீட்டிற்கு முண்டியடித்துக்கொண்டிருந்தனர் பயணிகள்,
பகல் நாய் வாடியின் முன்னே வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடந்தது,
கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்துக்கிடந்தது ‘மறுகரை”.
* தற்போது மாணங்கி யாழ்தீவகத்தின் புளியங்கூடல் என்ற கிராமத்தில் வசித்து வருகிறான்.

மலையைச் சுற்றிய கன்றுக் குட்டி

(முருகையன் பற்றிய நினைவுக் குறிப்பு)மரணத்தை எப்படி எழுதுவதென்று யாரும் எனக்கு சொல்லித் தந்ததில்லை.
சொல்லித் தந்தவர்களின் நுட்பங்களெல்லாம் வாழ்க்கைக்குள் மட்டுமே நின்று
சுழன்றிருக்கின்றன. நான் மரண இருட்டைக் குடைய ஆசைப்படும் சுயம்பு.

கடந்துபோய்க்கொண்டிருக்கும் காலம் வீசியெறிந்திருக்கும் மரணப் புத்தகங்களின்
குவியல் என் நுண்ணுணர்வின் மீது அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கையில்
முருகையனென்ற கவிஞர் மரணமடைந்தார் என்ற செய்தியும் எனக்கு எதையோ
குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கிறது. குறியீடுகளோடு பரீட்சயமான மனிதர்கள்
குறியீடுகளாகவே மாறுதலில் ஒன்றும் புதுமை இல்லைதான்.
மரணம் பற்றி அவரோடு
உரையாடியிருக்கிறேன். எப்போதுமே அவர் தனது சிந்தனை ஊன்றியெழுகின்ற தொடக்கப் புள்ளியை
விட்டுத்தூரம் போவதில் நாட்டமிருந்தாலும் தான் தொடங்கிய புள்ளியை யாருடைய விவாதமும்
உடைத்துவிடக் கூடாதென்பதில் அக்கறையாக இருப்பார்.
இராமுப்பிள்ளை முருகையன்
என்ற கவிஞர் – ஈழத்துக் கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவர்,சிறந்த மொழி
பெயற்பாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர், தாயகம்சஞ்சிகையின் ஆசிரியர்
குழுவில் அங்கம் வகித்தவர்,நாடகப் பிரதிகளை உருவாக்கியவர், என்றெல்லாம் நீண்டுகொண்டு
போகும் அவர்பற்றிய பட்டியலொன்றைப் பதிய நான் தேவை யில்லையென்றே நினைக்கிறேன்.
நான் எழுத முயல்வதெல்லாம் எனக்குத் தெரிந்த முருகையன் பற்றியதே. நீர்வேலி ‘கந்தசுவாமி
கோவில்” சந்தியில் இறங்கி மாக்சியவாதியென்று பலரால் புரிந்துகொள்ளப்பட்ட அந்த மனிதருடனான
உரையாடல்களை மீட்டுப் பார்த்தபடி நடந்த நடைக்குள் ஏற்பட்ட புரிதல்கள் பற்றியதே.

முருகையன் ஒரு நல்ல ஓவியன். அவரது வீட்டின் மறைவிடமொன்றில் நீர் வர்ணங்கள்,
தையல்நூல், குருகுமண் என்பவற்றால் உருவாக்கப் பட்ட பாரதியின் ஓவியமொன்று இருந்தது.
அதனை அவரே வரைந்திருந்தார். அவரது வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தபோது மிகுந்த
கூச்சத்தோடு அதனை எனக்குக்காட்டினார். பாரதியின் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில்
உங்கள் கண்களை வரைந்திருக்கிறீர்கள் என்றேன் சிரித்தார். அவர் பாரதியை மிகவும் நேசித்தார்.
பாரதி,பாரதிதாசன் அவர்களின் அறுந்துபோகாத தொடர்ச்சியாகத் தாம் இருக்கிறோமென்ற தலைக்கனமற்ற
தன்னிறைவொன்று அவருக்குள் இருந்தது. ‘நீங்கள் எங்கு போனாலும் கவிஞனாக இருங்கள்”
என்ற வாசகத்தை எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். இலக்கியச் சர்ச்சையொன்றில் நான்
மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்த காலத்தில் எனக்கு தைரியத்தைத் தந்தவை அவரது கடிதங்களே,
இந்த நிலையற்ற அரசியல் சூழல்களுக்குள் கவிதையை அடகு வைத்து விடாதீர்கள், என்று சொல்பவர்
தனது அனுமதியின்றியே தனது பெயரினைப் பாவித்த அரசியல் கட்சிகளுக்கு தான் கொடுத்த
பதிலடிகளைச் சொல்லிச் சிரிப்பார். வெளியே தன்னைப் பரத்தி வைத்திருந்த முருகையனின்
சிந்தனை மூலத்தை துருவியபடியே கதை கேட்பேன். முருகையனிடம் போலித்தனத்தை நான் கண்டதில்லை
தனது ஆளத்தில் தான் கண்டடைந்த முடிவுகளை கொஞ்சம் எழிமையாக்கியே வெளியிடுவார்,
ஆனால் அந்த எழிமை புறச் சூழலில் கலைந்து போகாததாக இருக்கும்.
ஆரம்பங்களில் நவீன
கவிதைகளின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த முருகையனின் விமர்சனப் போக்கு
பிற்காலங்களில் தளர்வடைந்தபோது அவருக்குள் ஏற்பட்டிருந்த அகமாற்றம் அவதானிக்கப் பட
வேண்டியது. அவர் சில தளர்வுகளோடு கடக்கத் தொடங்கினார், ஆயினும் அந்தரத்தில் இலக்கியத்தை
கட்ட முடியாதென்று சொல்லிவந்த முருகையன், விஞ்ஞானத்தின் அடுத்த கட்டக் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிந்தித்தவர்,
ஓவியங்களுக்குள்ளும்,கணிப்பொறியில் கலவை செய்து கடந்து போய்க்கொண்டிருக்கும் புகைப்படங்களை
அவதானித்தவருமான அந்த மனிதர் தனக்குள் இருந்த ஆத்மீகத்திற்கு என்ன பெயர் வைத்திருந்தார்
என்பதுதான் கடைசிவரைஎனக்குப் புரியாத ஒன்று.
முருகையன் எனக்கு முன்னால் நின்ற பெருமலைதான் ஆனால்
நானோ இளங்கன்று.என்னுடைய சுயசிந்தனைக் கட்டுமானத்தில் நின்றவாறே அவரை அணுகியிருக்கிறேன்.
எங்களின் உரையாடலில் அவருக்கு உடன்பாடற்ற பக்கங்கள் வரும்போதெல்லாம் அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருக்கும் ஒரு கவிஞரின் பக்கம் கையைக் காட்டிவிட்டு அமைதியாகி விடுவார்.

முருகையன் வீட்டில் இன்னொரு கவிஞர் இருந்தார். அவர் முருகையனின் மரியாதைக்குரியவராக
இருந்தார், அவர் சு. வில்வரெத்தினம் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான இளங்கவிஞராய் இருந்தார்.
‘உரசல் ஓசைகள்” என்ற கவிதைத் தொகுப்பொன்றை அப்போது பவித்திரன் என்ற பெயரில் வெளியிட்
டிருந்தார், அவர் முருகையனுக்கு மகனாகவும் இருந்தார். முருகையனைத் தேடிப் போனதில் எனக்குக்
கிடைத்த ஒரு இனிய நண்பன் பவித்திரன் என்று அழைக்கப்படும் நாவலன். முருகையன்,நாவலன்,அம்மா
மூவரையும் கூட்டிக்குண்டு தீவகத் தெருக்களில் திரிந்த நாள் என்வாழ்க்கையில் மறக்கமுடியாதது.
அப்போதெல்லாம் முருகையனின் உதடுகளில், மஹாகவி,சில்லையூர் பற்றிய கதைகளே நிறைந்திருந்தது.
நாவலன் முருகையன்
வீட்டிற்குள் வளர்ந்த இன்னொரு கவிதைமுகம். தன்னிடமிருக்கும் ‘மனதின் மொழியை” எப்போதாவது
எழுத்துக்குள் வைத்துக் கொண்டிருப்பவன். அவர்களோடு பளகிய அடுத்த ஆண்டில் எனது வெளிநாட்டுப்
பயணமும் தீர்மானமானது. பயணம் சொல்லித் திரும்பும் போது நாவலன் எனது கையினுள் மரணம்
பற்றியதொரு இரகசியக் கடிதத்தை புதைத்துவிட்டான். அந்த சிவப்பு மை கையெழுத்துப் பிரதி தந்த
கனத்தோடே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். என் பயணத்தில் நான் நடுவழியில் நின்றபோது
முருகையன் சொல்லச்சொல்ல நாவலன் எழுதிய கடிதம் எனது பயணத்திற்கான மன உறுதியைத்
தந்தது. பின்னர் நாவலன் எழுதிய கடிதத்தில் ‘அப்பாவின் மீது வயோதிபத்தின் திரை விழத்தொடங்கி
விட்டது அவர் இப்போ மறதி மிக்கவராக மாறிவிட்டார்” என்று எழுதியிருந்தது.
எனது அடுத்தகட்டப்
பயணமொன்றில் ஆற்றைக் கடந்தபோது நாவலன் தந்த கடிதமும் ஆற்றோடு போனது. ஆயினும் அந்த
இனிய நண்பனின் சிவப்பெழுத்து இன்னமும் நெஞ்சுக்குள் பதியப்பட்டிருக்கிறது.

முரண்களோடு சதுரங்கமாடிக்கொண்டிருந்த முருகையனின் இழப்பு பெரிய வெற்றிடத்தைத் தோற்று
வித்திருக்கிறது. அருமையான சிந்தனையாளன் நம்மிடமிருந்து பயணித்துவிட்டார். ஆயினும்
அந்த வெள்ளைச் சிரிப்பு மட்டும் இன்னமும் நம்முன்னே சாந்தமாய் சினேகித்துக் கொள்கிறது.
2002ல் முருகையன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வருவதற்கான முயற்சியொன்று நடந்தது
இன்னமும் அது கொண்டுவரப்படாதது கவலைக்குரியதே. அதற்கான வெலைகளைச் செய்வதே
அந்தக் கவிஞனுக்கு நாம் இப்போ செய்யவேண்டிய மரியாதை என்று நினைக்கிறேன்.

மெலிஞ்சிமுத்தன்.