Thursday, June 16, 2016

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.


கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு.


நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால் அதன் வெவ்வேறு பக்கங்களை பெரும்பாலும் பார்க்கத் தவறுகின்றோம், அல்லது மறைத்துவிடுகின்றோம். கனடிய தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய முற்படும் ஒருவருக்கு எவ்வாறான பிம்பத்தைக் காட்டி நிற்கின்றோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
எத்தனை சஞ்சிகைகள், எத்தனை பத்திரிகைகள், எத்தனை அமைப்புகள், நாடகக்குழுக்கள், பரதநாட்டிய பயிற்சிக்கூடங்கள், திரைப்பட முயற்சிகள், வானொலி,தொலைக்காட்சி நிறுவனங்கள், கலைஞர்கள் என்ற ஒரு பட்டியலும் அது சார்ந்த புகழுரைகளுமல்ல வரலாறு. அதற்கு அப்பாலும் பல கோணங்கள் இருக்கின்றன.

இந்த அப்பாலிருக்கும் கோணங்கள் என்பவை சமரசங்களின் குவியல்களாகவும், பொருட்படுத்தாத, அல்லது உதாசீனம் செய்யப்பட்ட, சாட்சிகளைக் கொண்டிராதவையாகவும் இருக்கின்றன. 

இவற்றைப்பற்றிப் பேசினால் நட்பில் பிரிவு வந்துவிடும், ஒதுக்கப்பட்டுவிடுவோம், மிகுந்த மன நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். என்ற வகையிலேயே இவற்றைப்பற்றி பலரும் பேசுவதில்லை. இலக்கியச் சூழலில் இருக்கும் பலரின் ‘நட்பு’ என்பது சமரசத்தின் கொள்ளிடம்தான்.

இவ்விடயங்களைப்பற்றிப் பேசினால் ‘தனிமனிதத் தாக்குதல்’, தூற்றுதல், பொறாமை, காழ்ப்புணர்வு, மண்டைப்பழுது, எனும் சொற்களைக்கொண்டு பேசுபவர்  ஒடுக்கப்படலும், வேறு சக்திகளோடு இணைத்துப் பேசப்படலும் நடைமுறையில் உள்ள விடயம்தான்.

இவ்வாறான விடயங்களைப் பேசுவதற்கு ஆட்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசினால் அப்பேச்சு முறை ‘கிசுகிசுப் பாணியாக’ அமைந்துவிடும். புனைவுக்குள் வைத்தால் ‘புனைவுத்தன்மையைக் கெடுத்துவிடும்’ என்றெல்லாம் வடிவச் சுத்தங்கள் பற்றிய அபிப்பிராயங்களும் உண்டு. அத்தோடு இவ்வாறான எழுத்தை அநாகரீக எழுத்து என்று மிக இலகுவாகப் புறம்தள்ளவும் நம்முடைய ‘நாகரீகம் பற்றிய மிகப்பழய பார்வை’ வழிவகுக்கலாம்.

இவ்வாறு யோசித்து பேசப்படாத காரணிகளே சிலரது சதுரங்கக் காய்கள். இக்காய்களை மிக நாசூக்காய் அரக்கி இச்சூழலின் இலக்கிய ஜாம்பவான்கள் ஆகும் தம் ஆசையை இவர்கள் நிறைவேற்றிக்கொள்கின்றனர். இலக்கியவாதி, அரசியல் ஆய்வாளர் என்கின்ற பெயர்கள் வியாபாரிகளின் ‘மக்கள் தொடர்புச் செயல்கள்’ ஆக மாறி நிற்பதும் இந்த நிலத்தில் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றது.

ஒரு பத்திரிகையின் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு வியாபாரி எழுந்து பேசினார் ‘இனி எழுத்தாளர்களெல்லாம் வியாபாரப் பெருந்தகைகள் பற்றி எழுத வேண்டும்’ என்று. பிற்காலத்தில் அவரே அரசியலிலும் குதித்து வேட்பாளரானார். வீக்கமுற்றிருக்கும் இச்சமூகத்தின் மேல்தெரியும் முகங்களில் அவர் முகமும் முக்கியமானது. ஆனால் அவரைப் போன்றவர்களை கோமாளிகள் என்றே என்னால் உணர முடிகிறது.

கனடிய இலக்கியச் சூழலில் இயங்கும் கலைஞர்களை வகைப்படுத்திப் பார்க்கலாம். அவை
1    ‘ஜனரஞ்சக எழுத்தாளர் இணையம் என்றும்
   ‘வெள்ளாள, பார்ப்பனிய, பல்கலைக்கழக கூட்டுமுகாம்.’ என்றும்    வகைப்படுத்தலாம்.                                               

 இந்த அணிகள் இரண்டையும் அனுசரித்துப் போகின்றவர்கள் என்றும் , எல்லாக் கூட்டங்களிலும் தலைகாட்டி ‘செய்கடன்’ செய்பவர்கள் என்றும் சிலர் இருக்கின்றனர். அத்தோடு உதிரிகளாய் இயங்கிக்கொண்டிருக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த உதிரிகள் முன்னரெல்லாம் விமர்சிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இப்போது களைப்போ,சலிப்போ, தனிமைப்படுத்தப்பட்டதோ காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் ஒத்தோடுவதற்கு தயாரானவர்கள் என்பதுபோலவே நடந்துகொள்கிறார்கள். அதற்கு தத்துவார்த்தமான காரணமொன்றையும் தயாரித்தும் கொள்கின்றனர்.

நான் குறிப்பிட்ட இலக்கிய அணிகளில் முதலாவது அணி மிகப் பெலவீனமான சமூகப்பார்வையும், இலக்கிய அணுகுமுறையும் கொண்டது. அது ஒரு ஆளைப்பற்றி தெரியாமலே அவரைப்பற்றி அவரிடமே கேட்டு அவரைப் புகழக்கூடிய நிலைக்கு வளர்ந்துள்ளது.
 ஆனால் இரண்டாவது அணியோ ‘சமூகத்திற்கான கருத்தியல் உருவாக்கத்தைச் செய்யக்கூடிய பீடம்’ எனும் முகத்தோற்றத்தைக் காட்டிநிற்கும் தோத்துப்போன சமூகமொன்றின் அழுக்குத்தொடர்ச்சி என்று சொல்லக்கூடியதாய் இருப்பதோடு, மிக நாசூக்காய் காய் நகர்த்தியும் வருகிறது. அதன் நகர்வுகளை அவதானித்து புரிந்துகொள்வதும், வெளிப்படுத்தலும் இன்றைக்குள்ள சமூகப் பொறுப்பு என்றே கருதுகின்றேன்.
00
பல்கலைக்கழகத்தை இலக்கியவாதிகளின் கோட்டையாகப் பாவிக்கும் மன நிலையொன்று நம் இலக்கியவாதிகளிடம் இருக்கிறது. கனடிய தமிழ் இலக்கியச்சூழலில் அக்கோட்டையை ‘ஆதிக்கசமூகம்’ நாசூக்காக கைப்பற்றியிருக்கிறது.
இயல்விருது வினியோகஸ்தர்கள் இக்களத்தில் பொங்கித்திரட்சியுற்ற தமிழன்னையின் மூத்த புதல்வர்கள்தான். இங்கே பிரபாகரன் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு இயங்குபவர்களும் இணைந்திருக்கின்றனர். நாம் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாய் உற்றுநோக்கினால் மிகத் துல்லியமாய் தெரிந்துவிடும். 

முன்னர் ஒருமுறை இச்சூழலில் இயங்கும் ஒருவரோடு நான் உரையாடியபோது ‘நமது இலக்கிய, அரசியல் சூழலில் சாதி ஆதிக்க மன நிலைதான் வேற்றுருக் கொண்டிருக்கிறது’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘சமூகத்தில் மேல் சாதியினர்தானே அதிகமாக கல்விகற்றவர்களாகவும், அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள் இது அவர்களின் குற்றமல்லவே’ என்றார். நான் அவர்கள் கல்வி கற்றது குற்றமென்று சொல்லவில்லை. அவர்களின் இயங்குமுறைகள் சாதி ஆதிக்க மனநிலையில் அமைந்திருக்கிறதென்பதாலேயே அவர்களை விமர்சிக்கிறேன்.
கல்வி என்பதையோ, அல்லது மொழியறிவையோ அதிகாரத்தின் துணைக்கருவியாகப் பாவிக்கின்றனர். பதுக்கப்பட்டிருக்கும் சாதி ஆதிக்க மனநிலையைச் சுற்றி வெவ்வேறு உப மையங்களால் அரணமைக்கின்றனர்.
அவர்கள் நடத்தும் தமிழிலக்கியம் பற்றிய கூட்டங்கள் பல ஆங்கிலத்தில் அமைந்திருக்கின்றன. சபை நிறைந்த தமிழர்கள் இருந்தாலும் ஒரு தமிழ்தெரியாதவருக்கு புரியவைப்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவது தவறல்ல. ஆனால் சபைமுழுதும் தமிழர்கள் இருந்தும் ஆங்கிலத்தில் பேசவேண்டியிருக்கிறது இவர்களுக்கு.  ‘குண்டி’ என்று தமிழில் சொன்னால் அருவருப்பு. ஆங்கிலத்தில் ‘Buttock’ என்றால் அவ்வருவருப்பு வராது. இந்த மன நிலைதான் முன்னர் ‘இழிசனர் இலக்கியம்’ என்று ஒடுக்கப்பட்டமக்களுக்குச் சார்பான இலக்கியத்தை இழிவுசெய்தது.

இன்னும்கொஞ்சம் மேலே போனால் இந்த இலக்கியக்குழு இந்தியாவில் இருந்து பி.ஏ. கிருஷ்ணனையோ, ஜெயமோகனையோ அழைத்து தம் மன மகிழ்ச்சியை வளர்த்துக்கொள்ளும். ஒருமுறை பி.ஏ. கிருஷ்ணன் வந்திருந்தபோது அக்கூட்டம் அக்கிரகாரத்தில் நடப்பதுபோலவே இருந்தது. அதில் பெரியாரை போகிறபோக்கில் தாக்கிவிட்டுப்போகும் எத்தனங்களும் நிகழ்ந்தன.
நாம் இவர்களை விமர்சிக்கிறோம் என்றால் நமக்கு எதிர்வினையாற்றும் கோட்பாட்டாளர்களைக்கூட இவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களின் கோட்பாட்டாளர்கள் இவர்களின் நட்பிலும்,இவர்கள் நம்பும் நாகரீகத்திலும் வளர்ந்தவர்கள்தான். பெரும்பாலும் அப்பாவிகள். அல்லது அப்பாவி வேடதாரிகள்.
இச்சூழல் சாதிய,ஆணாதிக்க மனநிலைகளால் திரட்சியுற்று நிற்பதுதான். இதனைப் புரிந்துகொண்ட சில பெண் எழுத்தாளர்கள் ‘இது அவங்கட இலக்கியம், அவங்கட அரசியல் இதுக்க நமக்கு என்ன வேலை’ என்று சலித்துக்கொண்டதை பலதடவைகள் கேட்டிருக்கிறேன். இன்னும் சில பெண் எழுத்தாளர்கள் இந்த ‘அவங்கட’ இலக்கியத்துக்குள்ளேயே வெற்றிக்கொடிகட்ட ஆசைப்படுகிறார்கள். ‘இனியெல்லாம் சும்மா பெண்ணியம் கதைக்கிறத்தில எனக்கு ஆர்வமில்ல’ என்றும் பேசிக்கொள்கிறார்கள். இந்த அபாயமான சூழலை தொடர்ந்து சகித்துக்கொள்வதுதான் எப்படியென்று தெரியவில்லை.

 கிராமச் சங்கங்கள் எனும் பெயரில் சாதிச்சங்கங்களும், பெருகிவரும் கோயில் கட்டுமானங்களும் சாதி மன நிலையை நிலைநிறுத்தும் காத்திரமான வேலைகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. நாமோ தீவிரசிந்தனையாளர்கள் எனும் நினைப்போடு முப்பது, நாற்பதுபேர் கூடுகிறோம். கேட்டால் ‘எங்களுக்கு தலைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல தலைகளுக்குள் என்ன இருக்கின்றது என்பதுதான் முக்கியம்’ என்போம். ஆனால் நம் புத்தகம் வெளியிடப்படும்போது நமக்கு ‘வரலாற்றில் எங்கும் கண்டிராத சனத்திரள்’ தேவையாய் இருக்கிறது.
00
புலம்பெயர் சூழலில் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் வெளிவந்தன. அவற்றில் பல தொடர்ந்து வெளிவராததன் காரணங்களில் ஒன்று பொருளாதார நெருக்கடி, அடுத்தது அவை பேசிய நேரடியான அரசியல். இவை இரண்டுக்குள்ளும் அகப்படாமல் வருகின்ற எழுத்தூடகங்களும் இருக்கின்றன.
 இவை மிக நாசூக்காய் பல விடயங்களை தவிர்த்துக்கொண்டு ‘யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளை மன நிலையோடு’ வெளிவருகின்றன. அரசியல் உரையாடல்கள் வளர்த்துச்செல்லப்பட வேண்டிய சமூகத்தின் பொறுப்புமிக்க எந்த ஊடகமும் இச்சாயலில் வெளிவராது. இப்பத்திரிகைகள் விக்கினமற்றவற்றை தெரிவுசெய்வதாய் கூறிக்கொண்டு தமக்கென்றிருக்கும் அரசியல்சார்புகளை வலுப்படுத்துகின்றன. இவை தொடர்ந்து இவ்வாறே வெளிவருவதை வரலாற்றின் முக்கிய பங்களிப்பாக முன்னிறுத்துவது அபத்தமான செயலன்றி வேறில்லை.

நாம் ‘சமூகநலச்செயற்பாடு’ எனும் பெயரில் செய்யும் பலவிடையங்கள் ‘பண அனுசரணைகளைப்’ பெற்றே செய்யப்படுகின்றன. நம் சமூகநலச் செயற்பாட்டிற்குள் அரைப்பங்கு ‘ வியாபாரத்திற்கான விளம்பர நோக்கம்’ பொதிந்திருக்கிறது. நம்முடைய ஒட்டுமொத்த சமூகநலச் செயற்பாடுகளையும் கணக்குப்போட்டாலும் ஐம்பதிற்கு ஐம்பது எனும் கணக்கே கிடைக்கும்.
 நம் கலை இலக்கியம் எல்லாவற்றிற்குள்ளும் இந்த விளம்பரதாரர்கள் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில் அவர்கள் எழுதும் குப்பைகளைக்கூட பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடவேண்டியிருக்கிறது.
 சமூகத்தில் வெற்றியடைந்த பக்கங்கள் பலவற்றையும் உள்வாங்கி வெளிவரும் இப்பத்திரிகைகள் சமூகத்தின் அதிகாரமையங்களை வளைத்துப்போட்டதோடு, எல்லோரையும் லாவகமாக உள்வாங்குவதற்கு அவற்றின் நேரடி அரசியலற்ற தன்மையே காரணம் எனலாம்.
அவற்றின் வளர்ச்சியை திறந்த மனதோடு வாழ்த்த வேண்டியநாம். அவை கொண்டிருக்கும் பெரிய நிறுவனமாதலுக்கான தாகத்தில் உருவியெடுக்கப்பட்ட சமூக அரசியலையும் கொஞ்சம் அவதானிக்க வேண்டும் என்பதே என் மொழிவு.
00
அதிகாரத்தை எள்ளல் செய்வதற்கும், சனங்களை எள்ளல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தன்னைத்தானே எள்ளல் செய்வதென்பது ஒரு வகை ஞான நிலை. ஆனால் தன்னை ஒரு ஞானியாக காட்டிக்கொள்ளவும் அவ்வாறு எள்ளல் செய்யலாம்.
 தோத்துப்போன சமூகமொன்றில் எள்ளல், கேலி, கிண்டல் என்று செய்வதற்கு பல விடயங்கள் நிறையவே கிடைக்கக்கூடியதாக இருக்கும். நிறையவே கிடைக்கக்கூடிய எள்ளலுக்கான அம்சங்களை எடுத்துப் பேசும் மன நிலை என்பது ஒரு வகையில் சமூகத்திலிருந்து தன்னை உயர்த்திக்காட்டும் குறிக்கோளைக்கொண்டது. அல்லது துயரத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கும் முனைப்பாகவும் நிற்கமுடியும்.

 முன்னர் இலங்கை அரசியல் பேசிய பல கூட்டங்கள் இப்போது ‘கொசிப்பு’ கதை பேசும் கூட்டங்களாக மாறியிருப்பதை கனடாச் சூழலில் அதிகமாகவே காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் ‘கொசிப்பு’ என்பது மேற்கூறிய எள்ளல் மனநிலையிலிருந்து வடிந்து வந்திருக்கும் மண்டிதான். இதனை நியாயம் கேட்கும் தொனியில் பேசுவது ஒரு புதியபாணிபோல ஆகிவருகிறது. ஆனால் இது சமூக முன்னேற்றத்துக்கான உரையாடல்களை வளர்த்தெடுக்கும் தெம்பற்றது என்பதே உணரக்கூடியதாயிருக்கிறது.
 அதுமட்டுமல்லாமல் நம் இலக்கிய விமர்சகர்கள் பலருக்கு எள்ளல், கேலி, கிண்டல், அங்கதம் என்பவற்றிற்கெல்லாம் வித்தியாசம் தெரியாது. எல்லாச் சரக்குச்சாமான்களையும் ஒரே குவியலாய் போட்டு ஒரு விலை சொல்லி வித்தால் போதும் எனும் மன நிலைதான் இவர்களுடையது.

இச்சூழல்பற்றிய என்னுடைய மனக்கணக்கு இவ்வாறுதான் இருக்கிறது. 

கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

கனடாவில் நடந்த இலக்கியச்சந்திப்பில் ‘பேராசிரியர் பாலசுந்தரம்’ வாசித்த கூத்துப்பற்றிய கட்டுரையில் கூத்துக்கலையை கட்டிவளர்த்தவர்களாக பேராசிரியர்களின் பட்டியல் ஒன்றே இருந்தது. அந்த இடத்தில் வைத்தே அதை நான் சுட்டிக்காட்டியும் இருந்தேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வரலாறு இப்படித்தான் நகர்கிறது. இந்த வரலாற்றுக்கு மறுபக்க வரலாற்றை நாம் எழுதவேண்டியுள்ளது.
 இந்த இலக்கியச் சூழலில் புகழ் பூத்துவரும் இலக்கியப் போக்கின் ‘உட்பெட்டி’ அல்லது ‘மேசைக்குக்கீழ்’ நிகழ்த்துதல்களை வெளிப்படுத்தினால் புறமொதுக்கப்படுவோம் என்று நினைப்பவர்களே இவர்களிடமிருந்து நாம் புறப்பட்டால்தான் மானுடத்தின் மனச்சாட்சியின் குரலாய் நம் இலக்கியத்தை நகர்த்தமுடியும்.

மெலிஞ்சிமுத்தன்.Monday, July 6, 2015

அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.
                                            அமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா


மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்கும் என்பதற்கு அந்தக் குண்டுப் பூனை நல்லதொரு உதாரணம். அது பதுங்கியதை நான் கண்டதில்லை. எப்போதுமே ராஜநடையும் கம்பீரமான தோற்றமுமாகவே அது இருந்தது. யாரோ வீட்டில் வாய்வைத்து  விழுந்த அடியில் அதன் கண்ணொன்று சிவந்து வீங்கிய கட்டியொன்று நிரந்தரமாகிப்போனது. பிற்காலத்தில் அது பெரியம்மா வீட்டின் பின்புறக் காணியிலேயே தங்கிக்கொண்டது. அந்தக் குண்டுப்பூனையின் பசிக்கு பெரியம்மாவீட்டில் நல்ல தீனி கிடைத்தது. தன்னை பெரியம்மாவீட்டின் ஒரு உறுப்பினராக மாற்றிக்கொள்ள ஒரு நல்ல பிள்ளையாய் நடந்துகொண்டிருந்தது. பெரியம்மா அந்தப் பூனைக்கு சாப்பாடு வைத்து உண்ணுமளவுக்கு அந்த வீட்டில் இடம்பிடித்துக் கொண்டது.

பூனைக்குப் பயந்த தாயின் வீர புத்திரன் நான். பூனைப்பயம் ஒரு பழக்கமாய் என்னிடமும் தொற்றிக்கொண்டது.  அதுதான் என்னை பெரியம்மா வீட்டிற்கு அடிக்கடி போகாமல் தடுத்தது. பயம் இருந்தாலும் குட்டிப்பூனைகளின் மகத்தான உயிர்கள் என் நேசத்துக்குரியனவாக இருந்தன. ஆனாலும் பெரியம்மா வீட்டின் குண்டுப்பூனை............ எனக்குப்பிடிக்கவில்லை, பிடிக்கவே இல்லை.
பெரியய்யா வழிச்சல்வலை கொண்டு கடலுக்குப்போய் சாமத்தில்தான் வருவார். சாமத்தில் கொண்டுவரும் நண்டுகளை ஒரு பெரிய பானையில் போட்டு அவியல் நடக்கும். எனக்கு நண்டு அவித்த தண்ணீரின் சுவை மிகவும் பிடிக்கும். அவித்த நண்டும்,பாணும் பின் இஞ்சித் தேநீரும் என்று அந்தச் சாமம் அற்புதமாக இருக்கும். அந்த அற்புத இரவுகளுக்காய் நானும் பல இரவுகள் பெரியம்மாவீட்டில் போய் படுத்திருக்கிறேன். எங்களோடு புள்ளைகுட்டிகள் பலரும் அந்தச் சாமத்தில் சேர்வதுண்டு சில வேளைகளில் பெரியம்மாவே வீட்டுக்கு கொண்டுவந்து தருவதுமுண்டு.

என் அம்மம்மாவுக்கு அம்மா கடைசிப்பிள்ளை. பெரியம்மாவின் மூத்த மகளுக்கும், அம்மாவுக்கும் அதிக வயசு வித்தியாசம் இல்லை. பெரியம்மா அம்மாவை தன் மூத்த மகளாகவே நடத்திவந்தார். அம்மாவுக்கு ஆறு பிள்ளைகள் நாங்கள் ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும்போதும் பெரியம்மாதான் மருத்துவமனையும் வீடுமாய் திரிவார். சின்ன வயதில் நானொரு நோஞ்சான் பிள்ளையாம். அடிக்கடி எனக்கு வருத்தம் வந்து உயிர்வாழ்வது கடினம் என்று சொல்லப்பட்டபோதெல்லாம் பெரியம்மா என்னைத் தூக்கிக்கொண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஓடுவாராம். நான் வளர்ந்து இருபத்தைந்து வயதான பிறகும் உனக்கேன் அடிக்கடி வருத்தம் வருகுது என்றபடி ‘வெளிக்கிடு எனக்குத்தெரிஞ்ச டொக்டரெட்ட ஒருக்கா போய்ற்று வருவம்’ என்று கொழும்பு கொச்சிக்கடை வீதியில் பெரியம்மா நடந்த அந்த நடை இப்போதும் நெஞ்சில் படர்கிறது.

எங்கள் கிராமத்தில் எந்தத் திசையில் மருத்துவப் பூண்டுகள் கிடைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்த பெரியம்மா கீழ்காய்நெல்லி, ஆடாதோடை போன்றவற்றின் மருத்துவ குணங்களை நன்றாகப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டிருந்தார். குழந்தைகளுக்கான கிராமத்து வைத்திய முறைகளில் பெரியம்மா ஆர்வமாய் இருந்தார் என்பதும் பெரியம்மா பற்றிய என் அறிதலாக இருக்கிறது.

பெரியம்மா பெரியய்யாமீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அது மூன்றாவது மனிதர்களுக்கு அனாவசியமாக தெரியப்படுத்தாத ஒரு அரூபமான காதல். பெரியய்யா இறந்தபோது பெரியம்மாவின் வாயிலிருந்து வந்த ஒப்பாரி அந்த நேசத்தையும் பெரியம்மாவுக்குள் பதுங்கிக்கிடந்த கலை ஆழுமையையும் வெளிப்படுத்தியது. பெரியய்யாவின் மரணத்தின் பின்னர் பெரியய்யா பாடிய அகவலை பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டிருப்பார். கணவரின் மரணத்தின் பின் பெரியம்மாவின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்த்திருந்தாலும் எல்லோரின் குடும்பத்திற்கும் முன்நின்று வழி நடத்தும் ஒரு ஆழுமை மிக்க தலைவியாகவே பெரியம்மா இருந்தார்.

பெரியம்மாவின் மகன் வெளிநாடு வந்து அனுப்பிய முதற்பணத்தை பெரியம்மா தன் சகோதரங்களின் குடும்பங்களுக்கும் சிறு சிறு பரிசுகளாய் தந்தது பகிர்தலின் முன்மாதிரிகை என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெரியம்மா கொழும்பில் வசித்த காலத்திலும் பல சொந்தங்களும் வந்து தங்கிச்செல்லும் வீடாகவே பெரியம்மாவின் வீடு இருந்தது. ஆனாலும் பெரியம்மாவுக்குள் சில கவலைகள் இருந்தன அவற்றில் முக்கியமான ஒன்று தன் ஒன்றைவிட்ட சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மாரோடு உறவாட முடியாமற்போன துயரமே அது. பெரியம்மா தன் மரணப்படுக்கையில் இருந்தபடி தன் பிள்ளையொன்றின்மூலம் உறவாடமுடியாமற்போன தன் எல்லாச் சொந்தங்களையும் தான் நேசிப்பதாகவும் தன் எல்லாச் சொந்தங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான சூழலை ஏற்படுத்துமாறும் சொல்லிக்கொண்டார். பெரியம்மாவின் அந்தக் கடைசி ஆசையின் பெரும்பகுதி இன்று நிறைவேறியிருக்கிறது. பல சொந்தங்களின் இணைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

 பெரியம்மாவின் மரணம் பெரியதொரு இடைவெளியாய் எங்கள் குடும்பங்களுக்குள் இன்று ஏற்பட்டிருக்கிறது. பெரியம்மா தன் வாழ்நாளில் பல மரணங்களையும்,இழப்புகளையும் கண்டார் ஆனாலும் தளராதவராகவே வாழ்ந்தார் அந்த முன்மாதிரிகையே வாழ்க்கைக்கான பாடமென்று என் சொந்தங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.  எதை எழுதினாலும்,பாடினாலும்,அழுதாலும் பெரியம்மாவுக்கு தீர்க்கமுடியாத கடன்காரராய் நானும் என் அம்மாவின் குடும்பமும் இருக்கிறோம். பெரியம்மாவின் குடும்பத்தோடு அன்புகசிய உறவாடுதலே எம்மால் இயலுமானது. அதுவே பெரியம்மாவுக்குச் செய்யும் நற்காரியமுமாகும்.
என் பெரியதாயாருக்கு என் இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                                         -மெலிஞ்சிமுத்தன்.

Saturday, April 5, 2014

கதை வீடுபிரதிக்குள் குடிபுகல்
 நான் வார்த்தைகளால் கட்டப்பட்ட கதைவீடு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பெயர் சனாதனன். இந்தக் கதைவீட்டின் கீழ்த்தட்டில் மூன்று அறைகள். அவற்றில் ஒன்றில் நான்,மற்றதில் கவிஞர் பைரவன், மற்றதில் என்னுடைய தம்பி தங்கியிருக்கிறோம். இது ஒரு வாடகை வீடுதான்.

எங்கள் அறைகளுக்கு தனித்தனியே குழியலறைகள் இருக்கின்றன. சமையலறை மட்டும் பொது.அனாலும் நாங்கள் மூவரும் வேறுவேறு நேரத்தில் வேலைக்குச் செல்வதால் ஒரே நேரத்தில் சமையலறையில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பமில்லை.
எங்கள் மூவரின் வருமானத்தில் ஒவ்வொரு பங்கையும் இந்தக் கதைவீட்டின் உரிமையாளராகிய மிஸ்டர் எழுத்தாளருக்கு தவறாமல் கொடுத்துவருகிறோம். எழுத்தாளரும் நிரந்தரமாக வீட்டில் குந்தமுடியாதவாறு இந்தப் பொருளாதார உலகத்துள் உழல்பவர்தான்.

நீங்கள் வாருங்கள் விறாந்தைக்குள் வந்ததும் முன்னால் இருப்பது என்னுடைய அறை. இந்த அறைக்கு நீல வர்ணம் பூசியிருக்கிறேன். என் கடலின் மீதான நேசத்தில் இவ்வாறு செய்தேன்.வீட்டுக்கு வருபவர்கள் உண்பதற்கும்,குடிப்பதற்கும் கதைகளையே கொடுப்பது எங்கள் வழக்கம் நீங்களும் கொஞ்சம் ‘கதை’சாப்பிடுங்கள்.

அகன்று விரிந்த கடல், கரைகள் தூரம், ஒரு சிறிய கட்டுமரம் அதில் மேற்சட்டையை இடுப்பில் கட்டியபடி ஒரு சிறுவன் அது நான். அப்போதைய நான். இந்தக் காட்சியை முதலில் உங்கள் கற்பனைக் கண்ணில் கொண்டுவாருங்கள்.......................................,

எப்போதென்றாலும் ஒரு புயல் வரலாம் இந்தப் பெருங்கடலின் திமிங்கிலமொன்று மேலெழுந்து தற்செயலாய் வாயை ஆவெனும்போது நான் விழுங்கப்படலாம். என்னிடம் இருந்தது ஒரு மரக்கோலும், தற்செயல்களை கடந்துபோக வேண்டுமென்ற மன நிலையும்தான். அது மன உறுதியென்று சொல்லமாட்டேன்.
முன்னரெல்லாம் என்னோடு அப்பா இருந்தார். அப்பா எனக்கு ஒரு உறையைப் போலத்தான் இருந்தார், புயல்வந்தாலும்,திமிங்கிலம் வந்தாலும் அப்பாவைக் கடந்தே என்னிடம் வரமுடியும் என்பதுபோன்ற எண்ணமொன்று இயல்பாகவே என்னிடத்தில் வளர்ந்திருந்தது. அப்பா கடலை நம்பிக்கையோடு பார்ப்பார்,அவரே கடலை நேசிக்கவும் கற்றுத்தந்தார். நானும்,அப்பாவுமாய் கடலை அள்ளி எறிந்து விளையாடுவோம். ‘ஒரு எற்றல் நீர் எத்தனை சுகம்” கடல் காலம் முழுதும் எற்றிக்கொண்டே இருக்கிறது. சுகம்,சுகம்,சுகம்.

எனது அறையின் அருகில் இருப்பது பைரவனின் அறை.பைரவனை எனக்கு 14 வருடங்களுக்கு முன்னரே தெரியும்.
14 வருடங்களின் முன்னர் ஒரு இரவில் இரண்டு மோட்டார் பூட்டிய படகில் எங்கள் அரிப்புத்துறைக் கரையில் வந்திறங்கிய விடுதலைப்புலிகளில் ‘பைரவனும்’ ஒருவர்.  அப்போ அவருக்கு வேறு பெயர் இருந்தது. மன்னார்த் தீவில் இருந்த இராணுவத்தை உளவுபார்க்கவும்,அரசாங்கத்தின் சலுகைகளால் விடுதலைப் போராட்ட எண்ணங்களிலிருந்து மக்கள் விலகாமல் இருக்கவும் புலிகள் அரிப்புத்துறைப் பகுதிக்கு வந்துபோவது அவசியமாக இருந்தது. ஆரம்பத்தில் இரவுகளில் வந்துபோனவர்கள் பின் நாட்களில் பகல்களிலும் தங்கினார்கள். மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டிருந்ததால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இராணுவத்தினர் அரிப்புத்துறைக்கு வரமாட்டார்கள் என்று புலி இயக்கத்தினர் நம்பினார்கள்.
ஆனால் ஒரு பகலில் திடீரென்று இராணுவ டாங்கிகள் அரிப்புத்துறைக்குள் நுழைந்தபோது அதனை எதிர்பாராத புலிப்போராளிகள் கடலை நோக்கி ஓடவேண்டியிருந்தது அவ்வாறு ஓடும்போதுதான் எங்கள் வீதியில் பைரவனை ராணுவத்தினர் கண்டார்கள். எங்கள் சந்தியால் ஓடிவந்த பைரவனை ராணுவத்தினர் சுட்டபோது அந்தக் குண்டுதான்  சைக்கிளில் தண்ணீர்கட்டிவந்த எங்கள் அப்பாவின் மார்பில் ஏறித் துளைத்தது.

எங்கள் கண்முன் அப்பா சுருண்டுவிழுவதைக் கண்டு எங்கள் முற்றத்தில் நின்று ஓடிய என்னையும் தம்பியையும் அப்பாவுக்கு அருகில் போகவிடாமல் ராணுவத்தினர் அடித்தார்கள். எங்கள் காணியால் ஓடிய பைரவனை சுற்றி மறைத்தபடி எங்கள் பெண்கள் கத்திக் குளறியபடியிருக்க. காணியின் வெவ்வேறு மூலைகளிலெல்லாம் அவனைத் தேடித்திரிந்த ராணுவத்தினருக்கு. ‘இந்தா கிடக்கிறான் இவனாலதான் எங்கிட அப்பா செத்தவர் ‘ என்று என்னுடைய தம்பிதான் பைரவனைக் காட்டிக் கொடுத்தான்.
எங்கள் செங்கோல்மாதாகோவிலுக்குள் ஊர்ச்சனமெல்லாம் கூடியிருக்க இரண்டு ஓட்டைகள் போட்ட வெள்ளைச் சறத்தால் முகம் மூடப்பட்ட பைரவன் அன்று பலரைக் காட்டிக்கொடுத்தான்.
அதன் பின் வந்த நாட்களில் அப்பா இல்லாத வாழ்க்கையை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருந்த கலகலப்பு, எங்கள் எதிர்காலம்பற்றிய கற்பனைகள் எல்லாமே தொலைந்துபோயின. ராணுவத்தினர் பிடித்துப்போன ஆண்கள் விடுதலை செய்யப்பட்டு வீடுதிரும்பினார்கள் அப்பாமட்டும் திரும்பமுடியாத இடத்திற்குச் சென்றிருந்தார். அப்பா இறந்த நாளில் அவர் தண்ணீர் நிரப்பிக்கொண்டுவந்த ‘பிளாஸ்ரிக் கான்’ உடைந்த நிலையில் எங்கள் வேலியோரம் கிடந்து அந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

நான் மூத்த பிள்ளையாக இருந்ததால் குடும்பப் பொறுப்பை நானே எடுக்கவேண்டியிருந்தது.என்னாலும்,தம்பியாலும் படிக்கமுடியவில்லை ஆனாலும் தங்கைகளை நன்றாக வளர்க்கவேண்டுமென்று நாங்கள் கடலில் இறங்கி உழைத்தோம். கனடாவில் இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் எங்கள் குடும்பத்தின் நிலையைப்பார்த்து எனக்கு கலியாணம் பேசி இங்கு வரவைத்தார். 

கனடாவுக்கு வந்து கடுமையாக உழைத்து தங்கைகளுக்கு கலியாணமும் செய்துவைத்து ,தம்பியையும் இங்கு கூப்பிட்டுவிட்டேன். ஆண்டுகள் பலவாகிப் போனபின்னர் இங்கு நடந்ததொரு அரசியற்கூட்டத்தில்தான் பைரவனைச் சந்திக்க நேர்ந்தது.
அரிப்புத்துறையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட பைரவன் சில ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு வவுனியாவில் மனப்பிறழ்வோடு அலைவதாய் கேள்விப்பட்டேன்.அதன் பின் பல ஆண்டுகள் கடந்து கனடாவில் சந்தித்தபோது மிகவும் சாதாரணமான நிலையில் அவர் இருந்ததை அவதானித்தேன்.
பின் வந்த நாட்களில் பைரவனோடு கதைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பைரவன் என்னுடன் பேசும்போது அவருக்குள் குற்ற உணர்வு இருப்பதை அவதானித்தேன். அதனைப் போக்குவதற்கு நான் விரும்பினேன்,அது என்னால் மட்டுமே ஆகக்கூடிய செயலாகவும் இருந்தது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களில் அரைவாசிப்பேராவது குற்ற உணர்வு என்ற இந்த பெருவியாதியோடே அலைகிறார்கள். குற்ற உணர்விலிருந்து விடுதலையாகிய சமூகம் புதிய சிந்தனைகளை நோக்கி முன்னேறவேண்டுமென்றே கருதினேன், அதற்கான தனிமனித முயல்வாகவே பைரவனுக்கும் எனக்குமான உறவு வளர்ந்து வந்தது.அவ்வாறே நானிருக்கும் இந்த வீட்டில் பைரவனும் குடியேறும் சூழல் ஏற்பட்டது.

பைரவன் சில மாதங்கள் இந்த அறையில் இருந்தார். பின்பு வந்த ஒரு நாளில்,யாருமற்ற நேரத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தார். அவருடைய மரணம் என்னை மிகவும் பாதித்திருந்தது. ஆரம்பத்தில் பைரவனை இந்த வீட்டில் கொண்டுவந்து இருத்தியது என்னுடைய தம்பிக்கு பிடிக்கவில்லைதான். அவன் பைரவனோடு முகம் கொடுத்து பேசியதில்லை.ஆனாலும் பைரவனின் மரணத்தால் அவனும் பாதிக்கப்பட்டான். ‘உயிரின் பெறுமதியை உணராமலே பிடிவாதங்களால் பின்னப்பட்டிருக்கிறோமே’ என்று அவன் அடிக்கடி வேதனைப்பட்டான். குற்ற உணர்ச்சி இடம் மாற்றப்படுவதை அப்போது நான் அவதானித்தேன்.

தம்பியின் அறை
தம்பியின் அறைக்குள் அப்பாவின் படம் பெருப்பித்து மாட்டப்பட்டிருக்கிறது. தன் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துக்கொள்ள அவன் இன்னொரு வீட்டிற்கோ,அல்லது ‘வெளிச்சவீட்டிற்கோ’ இடம் மாறலாம்.
பைரவனின் கொலை தொடர்பான விசாரணைகளால் என்னுடையதும்,தம்பியுடையதும் வாழ்க்கை மிகவும் சீர்குலைந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானோம். பொலிசாரின் தீவிரமான தேடலில் கொலையாளி கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்தான் எங்கள் தலைகள் தப்பியுள்ளன.
இந்தக் கதை வீட்டை பொலிசார் வந்து உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது ‘கொலையாளி மிஸ்டர் எழுத்தாளர்’ என்று. ஏனெனில் இந்தக் கதைவீடு பிணங்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது.
இது கதைவீடுகளை உடைத்துப் பார்க்கவேண்டிய காலம். “புனைபுத்தி” எவரையும் கொலைசெய்யக்கூடியது என்பதை நான் விளக்கவேண்டுமா என்ன?

மெலிஞ்சிமுத்தன்.

('மகுடம்' இதழ் -06ல் பிரசுரமானது) 


Thursday, November 21, 2013தனிமையோடு இருக்கிறான் தனியன்.

தனிமைக்கு இரண்டு வாசல். ஒன்று துயருக்கு,

அடுத்தது எபோதுமே புதிராய் இருக்கிறது.

புதிரின் மீது மொழியை விரிக்கிறான்.

மொழிச்சுருள் கலைந்து புதிருக்குள் போகிறது.

ஒருகால் தன்னில் ஊன்றி, மறுகால் உயர்த்தி

புதிரில் தேடுகிறான் தான் விரிய தக்கது கிடைக்குமென்று.

மொழிவிரிப்பு புதிரோடு தாக்கமுறுகிறது

காலால் கோலி கவிதையெனச் சொல்கிறான்.

மறுகதவால் யார்,யாரோ வருகிறார்கள்,போகிறார்கள்.

தனிமை ஸ்தம்பிப்பதற்காக அல்ல என்கிறான் இவன்.

எப்போதுமே சாத்தப்படக்கூடிய கதவுகளுக்குள் நின்றபடிதான்

எத்தனை வாதங்கள்!

தனிமைக்கு இன்னமும் எத்தனை கதவுகளை

எவரெவர் காண்கின்றனரோ.

Monday, October 28, 2013

திரைப்பட ரசனைக் குறிப்பு.


நம் சமூகம் என்ற கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன் அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும் துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும் இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு நாம் இன்னமும் வரவில்லை.

நமதுமொழி கதைகளின் கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க கதைசொல்லிகள் பலரை ஈன்றபடியிருக்கிறாள் நம் மொழித்தாய். ஈரத்தில் நனைந்த எறும்புகள் ஊர்வதைப்போலத்தான் நாம் கதைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். இறக்கிவைத்து இளைப்பாற ஒரு நாடு கிடைத்திருக்கிறது,அவகாசமும் கிடைத்திருக்கிறது. கொண்டுவந்த கதைகளோடு வந்த இடக்கதைகளும் பின்னிக்கொள்கின்றன.
                     மொழி என்பதன் அடிப்படைக் குணம் அசைதல்தான் அந்த அசைதலின் லாவகத்தை உணர்ந்தவர்களே கலைஞர்கள். அசைதல் ஓர் அனுபவம். கலையும் அவ்வாறே.
                                          ‘துப்பாக்கியும்,கணையாழியும்’ திரைப்படத்தை நான் ஒருமுறை மட்டுமே பார்த்தேன். ஒருமுறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் ஒன்றை முன்வைப்பது எனக்கு கடினமாகவே இருக்கின்றது. ஆதலால் இது விமர்சனமல்ல ‘ரசனைக் குறிப்பு’ என்று கருதுக. பல விருதுகளையும்,பாராட்டுகளையும் பெற்ற படம் என்கின்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டே அப்படத்தைப் பார்த்தேன். எனக்கு லெனின் எம் சிவத்தின் ஆற்றலில் இருந்த நம்பிக்கையும் கூட இருந்தது என்றும் சொல்லலாம்.  
மனிதர்களின் சுவைப்புத்திறனின் அழகியமுன்னெடுப்பே ரசனை என்பதால் நீங்கள் கொஞ்சம் வாசிக்கக்கூடியதே எனது இந்தக்குறிப்பு. எனக்குப் பிடித்தவற்றையும்,பிடிக்காதவற்றையும் பட்டியலிட்டுள்ளேன்.

 1."jaffna town" என்ற பாடலோடு தொடங்குகிறது படம். நிலவு ஒரு பந்துபோல துள்ளிக்கொண்டிருக்க பொருத்தமான இசை கவர்ச்சியாகவே இருந்தது.
  
2.விசாரணை செய்யும் ஒருவரின் தொப்பி போட்ட பிடரியை கமறா பார்த்துக்கொண்டிருக்க சிறப்புத்தேர்ச்சி மிக்க மூக்கைக்கொண்ட ஒரு சிறுவன் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகபாவமும், வியர்வையும்,கமறா நகர்ந்த விதமும் அருமையாக இருந்தது.
  
3.கதைக்குள் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள் அவள் பின்னால் ரசிக மனமும் பயணித்துக்கொண்டிருந்தது. ஆனால் ரசிக மனம்காட்சியோடு ஒன்றிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. இப்படத்தில் இது போன்று ஒன்றிக்கப் போதுமான அவகாசம் கொடுக்கப்படாமை ஒரு பெலவீனமாகவே தெரிந்தது.

4.பியாணோவில் அமர்ந்திருந்த பாரதியின் மெளனத்தை படம் பிடித்திருந்த போதும் அந்த முகத்தில் கலவரம் இருந்தது அழகு.

 5.ஆறு விதமான கதைக்கூறுகள் என்று நினைக்கிறேன். அவற்றைப் பின்னி ஒரு முடிவுக்கு வரும் ஆற்றல் பாராட்டத்தக்கதே. ஆனால் ஒரு கலைப்படைப்பு உருவாக்கவேண்டிய ஒட்டுமொத்த மன நிலைக்கு அப்பின்னல் தடையாகவே இருந்தது.

 6.லெனினுக்கு துப்பறியும் கதைப்போக்கு கைதேர்ந்ததாய் இருக்கின்றது அப்போக்கினை சமூகத்தின் வெவ்வேறு தளக்கதைகளைச் சொல்ல வரும்போது ஒரு ‘புதுசு’ கிடைக்கின்றது அப்புதுசு நம் கலைப்போக்கிற்கு கட்டாயத் தேவையாகவே இருக்கின்றது. படம் முழுவதும் ‘டென்சனை’ தக்கவைத்தபடியே இருந்தது வெற்றியே.

7.மனைவியால் விட்டுச் செல்லப்பட்ட அந்தமனிதன் ‘உங்க ரெண்டுபேரையும் கொல்லாமல் விடமாட்டன்’ என்ற வசனத்தை வெளிப்படுத்திய விதத்தில் போதாமையை உணர்ந்தேன். அத்தோடு முக்கியமான பிரச்சினையாக இருந்தது ஆடைத்தெரிவுகளே.அந்த மனிதர் புது உடுப்புகளும்,புதுப் பாதணியுமாகவே படத்தில் தோன்றினார்.அது மட்டுமன்றி கெங்காதரன் கட்டியிருந்த சறமும் புதுசாகவே இருந்திருக்கலாம் போலும் புதுச்சறம் ரீசேட்டின் கீழால் நட்டுக்கொண்டு நின்றது,அவரும் பதுங்கிப்,பதுங்கி நடக்கும்போது கமறாவுக்கு பயந்த தனமும் தென்பட்டது. குறிப்பாக தன் வீட்டில் தேனீர் வைக்கும் காட்சி, வேலை செய்யும் இடத்தில் கையை வெட்டிவிட்டு வந்து வீட்டுப் படியால் ஏறும் காட்சி என்பவற்றைக் கூறலாம். ஆனால் கட்டிலில் அமர்ந்தபடி தடியில் கையூண்டி மூக்குக்கண்ணாடியுள்ளால் ‘இரும்பனாய்’ பார்த்த காட்சித்துண்டும்,அவர் குரலை ஆண்ட விதமும் நன்றாய் இருந்தது.

 8.துப்பாக்கி வாங்குவதற்காக வந்த இடத்தில் ‘EXIT’ குறியீட்டின் அருகில் உயரத்திலும், கம்பிவலையின் பின்னாலும், கமராவை வைத்திருந்ததும் கலை நயமாக இருந்தது. படம் முடியும்போது கமரா மேலிருந்து பார்த்து மேல்நோக்கிப் பயணிப்பதும் சிறப்பாக இருந்தது.

  9.முகத்தில் இரண்டு உண்ணியுள்ள நம் அழகிய கதாநாயகி அறிமுகமாகியவிதமும்,அவரின் அபாரமான நடிப்புத்திறமையும், மதிவாசன்,சேகர்,சூடான் நாட்டவர், துப்பறியும் துறைசார்ந்த அந்தக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டவர். போன்றோரின் பக்குவமான நடிப்புத்திறமையும், வசன அமைப்பும் படத்திற்கு வலுச்சேர்த்திருக்கின்றன.

10.கதாநாயகி பையைத்தூக்கிக்கொண்டு புது இடத்தில் தங்கப் போனபோது அவள் முகத்திலிருந்த வியர்வையும்,வாழ்க்கைக்கான விடையை விவிலியத்துக்குள் தேடிய விதமும் லெனின்சிவத்தின் ஆற்றலைச் சொல்லும் வெவ்வேறு இடங்களாக இருந்தன.

 11.எனக்குள்ளும் நிறபேதம் வந்துபோனதை உணர்ந்து திகைத்த தருணம் அந்தச் சூடான் நாட்டு மனிதரோடு  நாயகி சந்தித்தபோது ஏற்பட்டது. நான் அந்தக் கணத்தில் வெட்கப்பட்டேன். அந்த மனிதர் விட்ட கண்ணீர் எனக்கு பாடம் புகட்டியது. நம் கதைகளை மற்றைய சமூகத்தினருக்கு கொண்டோடிச் சொல்ல வேண்டும் என்று எண்ணும் நாம் இந்த பல்கலாச்சார நாட்டில் வாழ்வதற்கான பக்குவம் பெறவேண்டியிருக்கின்றது என்பதையும் லெனின் நம் காதுகளில் சொல்லியிருக்கிறார் அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

12.சொந்தமண்ணில் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மன நிலையை புலம்பெயர்ந்தவர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும்,போராட்டத்துள் இருந்த இயலாமை,சுயநலம் என்பவற்றைப் பேசுவதோடு. வன்முறையின் உறக்க நிலையையும் பேசுவதன் மூலம் ஒரு சமூக விமர்சனத்தையும் இப்படம் முன்வைக்கின்றது.

13.இப்படத்தில் நதிக்கரையோரம் நாயகி தன் கதையை சூடான் நாட்டு மனிதனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது நாமும் அவள் உணர்வோடு பயணிக்கக் கூடியதாய் இருந்தது ஆனால் திடீரென்று ‘கட்’ பண்ணி வேறு கோணத்தில் காட்டியபோது அது பெரும் தவறாகவே தெரிந்தது. அத்தோடு ‘லைற்றிங்’ யதார்த்தத் தனமற்று மிகவும் மோசமாகவே இருந்தது. (குறிப்பாக பிள்ளையாருக்கான வெளிச்சம், கலர்க்கோர்வை வெளிச்சங்கள்) ஆடை வடிவமைப்பையும் கவனித்திருக்கலாம்.

14.ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்குள் விடையை காண்பது நல்ல முடிவு,அழகானதும்,அறிவுபூர்வமானதும் கூட. ஆனால் ரசிகர்கள் பலர் செயற்கைத் தனமாகவும் இருப்பதாய் சொன்னார்கள். எனக்கு அந்த முடிவு பிடித்தே இருந்தது.


இந்தப் படத்தில் நான் பலவற்றை தவற விட்டிருக்கலாம்,என் பார்வைகளில்கூட சில தவறுகள் இருக்கலாம் எனது வளர்ச்சிக்கும், துப்பாக்கியும்,மோதிரமும் படக்கலைஞர்களின் வளர்ச்சிக்கும் இக்குறிப்பு ஒரு சிறு காரணியாகக்கூட அமையலாம் என்று கருதுவதால் இதனை பிரசுரிக்கின்றேன். 

Thursday, September 19, 2013

ஒழுக்கக் கோர்வை.


காலையில் வேலைக்கு கூட்டிச் செல்வதற்காக தியாகு வாகனம் கொண்டுவந்திருந்தான். நான் வாகனத்தில் ஏறும்போது அவதானித்தேன் எங்கள் வீதியில் எங்கள் வீட்டிலிருந்து நான்காவதாய் தள்ளியிருந்த அந்த வீட்டின் முன்புறம் குந்தியிருந்து அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். நேற்று வேலை முடிந்து வரும்போதும் அவள் அங்கேதான் இருந்தாள்,இரவு அவளுடைய வீட்டிற்கு காவற்துறையினரின் வாகனம் வந்துபோனதையும் அவதானித்தேன்.
அவளைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாகவே இருந்தது, ஆனால்/ அவளுடைய கணவன் மிகவும் மோசமானவன்,யாழ்ப்பாணத்தை அப்படியே பிரட்டிக்கொண்டுவந்து கனடாவில் வாழ்பவன். எப்போது பார்த்தாலும் வெள்ளை,சிவப்பு இனத்தினரைத்தவிர மஞ்சள்,கறுப்பு இனத்தினரோடு கொஞ்சம் கடுகடுப்பாகவே நடந்துகொள்பவன். அதிலும் தமிழர்கள் யாரேனும் அவன் வீட்டுக்குப் போனால் ஊரையும் குறிச்சியையும் விசாரிக்கத் தொடங்கிவிடுவான். மாவீரர் தினம் ஒன்றிற்கு காசு சேர்க்கச் சென்றபோது என்னுடனும் அப்படித்தான் நடந்துகொண்டான். எனக்கு அவன்மீது கொஞ்சமும் மரியாதை இல்லை. அவனுடைய ஒருவகை கோணல் பார்வையை பார்க்கும்போதே முகத்தினில் குத்தவேண்டும்போல இருக்கும். ஆனாலும் அவனுடைய மனைவியின் கண்ணீர் என்னை வருத்தியது.
நானும் தியாகுவும் பல வருடங்களாய் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறோம்,என் வாகனத்தை என் துணைவி வேலைக்கு கொண்டுசெல்வதால் சில நாட்களாய் தியாகுவுடன்தான் போய்வருகிறேன்.எங்கள் பயணவேளைகளில் நாங்கள் பலவற்றைப் பேசிக்கொள்வோம்,பெரும்பாலும் எங்கள் பிள்ளைகளைப்பற்றியே பேசுவோம்,
பல்கலாச்சாரச் சமூகத்தில் ‘நீங்கள் உலகத்தின் பிள்ளைகள்’ என்று அவர்களை அப்படியே விட்டுவிட முடிவதில்லை. அவர்களின் பாடசாலை நேரம் தவிர்ந்து அவர்களுக்கு ஈடுபாடு வரத்தக்க பக்கமொன்றில் அவர்களைச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒருவகையில் பெரும்பாலான குடும்பங்களில் இவ்விடயம் ஒருவகை ‘பராக்குக் காட்டலாகவே’ அமைந்துவிடுகிறது.
ஆனால் என் மகனை ‘எந்தவகையிலும் நான் திட்டமிட்டு மேற்கூறியபடி வளர்க்க முற்படவில்லை’ அவனுக்குள் இயல்பாகவே ஒரு விடயம் உருவாகிக் கொண்டது. அதுதான் “தன் மூதாதேயர்களின் நிலத்தின் மீதான பற்று”. அதற்கு என்னை அவன் குருவாக உணர்ந்துகொண்டது காரணமாக இருக்கலாம்.
கனடாவில் நடந்த ‘ஈழத்தமிழ் உரிமைக்கான’ அனேக கூட்டங்களில் அவன் ஆர்வத்தோடு கலந்துகொண்டான். அவனிடம் ஒருவகை ஒழுக்கத்தை நான் உணர்ந்தேன். அந்த ஒழுக்கத்தின் பின்னால் ஒரு ‘தமிழ் மனோநிலையின் தாக்கம் இருப்பதையும் நான் அறியாமலில்லை.
நான் நேரில் அனுபவித்த பல விடயங்களை அவன் செய்திகளாய் அறிந்து வைத்திருந்தான் ‘அனுபவத்திற்கும்,செய்திக்குமான வித்தியாசம் ஒன்று’ என்னிடமும் அவனிடமும் இருப்பதையும் நான் உணராமல் இல்லை.
சின்னவயதில் தாயுடன் கோயிலுக்குச் சென்றுவருவான். தாய்க்கு அவனை மத ஈடுபாடுள்ளவனாய் ஆக்கிவிடவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அவன் ஓரளவு வளரும்போது கடவுள் பற்றிய கேள்விகளைக் கேட்பான்...இப்போதெல்லாம் கோயில் பக்கமே போவதில்லை. என் மனைவியோ என்னால்தான் அவன் கடவுள் நம்பிக்கையை இழந்தான் என்று குறை கூறுகிறாள்.
எங்கள் வீடுபோலத்தான் தியாகுவீட்டிலும் கதைகள் இருக்கின்றன. புலம்பெயர்வு வாழ்க்கையில் பெரும்பாலோர் கண்ட மிச்சம் பிள்ளைகள்தானே.
தியாகுவும் தன் பிள்ளைகள் பற்றியே அதிகநேரம் பேசுவான். ஆனாலும் இடையிடை  கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவான்,பாதுகாப்புப் பட்டியை மறந்துபோவான்,ஒருகையால் சாப்பிட்டபடி மறுகையால் ‘சேறிங்கைக்’ கையாள்வான். மிகவும் உதாசீனமான அவனுடைய சாரதித்தன்மை எனக்கு மிகவும் வெறுப்பானது, வேண்டுமென்றே வீதி ஒழுங்குகளை மீறுவதில் ஆர்வம் கொண்டவனைப் போலவே அவனை நான் பார்ப்பேன்.
இன்று காலை எனக்கிருந்த மனநிலையை அவனுடன் பகிர்ந்துகொள்வதா,இல்லையா என்று எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒழுக்கம் தொடர்பான முரண்கள் எனக்கும் அவனுக்குமிடையில் இருந்தாலும் தியாகு என்னுடன் நல்ல வகையில்தான் பளகுகிறான் அவனுடன் இந்த விடயம் பற்றி பேசிவிடலாம் ஆனால் அவன் வார்த்தைகளை நிதானமாகப் பேசுபவன் இல்லையே. ‘எந்த விசயத்தையேனும் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வதில் மன ஆர்வம் கொண்டவன் அவன் என்பதால் அமைதியாகவே வந்தேன்.
                             02
எரிபொருநிலையம் ஒன்றில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் கட்டுவதற்காக உள்ளே சென்ற தியாகு வாகனத்துக்கு வரும்போது ‘உன்னெட்ட காசிருந்தா ஒரு நூறு டொல்ர் தா‘ என்றான்  நான் இல்லையென்று சொன்னேன். அப்போது அவனுக்குப் பின்னால் உடல் திடகாத்திரமான குத்துச்சண்டை வீரன்போல ஒரு சிவலையன் வந்தான். வந்தவன் ‘என்ன எடுக்கிறாயா?,வேண்டுமா?’ என்று ஆங்கிலத்தில் தியாகுவிடம் கேட்டான். தியாகு அவன் அருகில்போய் அவனுடன் பேரம் பேசி 75டொலர்களுக்கு ஒரு மொத்தமான சங்கிலியையும்,25 டொலர்களுக்கு மோதிரமொன்றையும் வாங்கி வந்து வாகனத்தினுள் வைத்துவிட்டு வங்கி இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்றான். அந்தவேளை தன் சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டபடி என் அருகில்வந்த அந்த மனிதன் ‘உனக்கு வேணுமெண்டால் என்னிடம் இன்னொரு சங்கிலி இருக்கிறது எனக்கு 50 டொலர்கள் கொடுத்தால் போதும்’ என்றான். ‘என்னிடம் பணம் இல்லை வேண்டாம்’ என்றேன்.
தியாகு வாகனத்திலேறி அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருந்தோம். எனக்கு தியாகுமீது மிகுந்த வெறுப்பு வந்தது. ‘எந்த மனிதரைக் கொன்று இந்த நகையைத் திருடினானோ,இவற்றில் யாரின் கண்ணீரும்,இரத்தமும் தோய்ந்திருக்கிறதோ இந்தப் பழியை நீயேன் வாங்கினாய்?’என்று அவனிடம் கேட்டேன். இத நீ ஏன் அப்படி பார்க்கிறாய் நாம வாங்க இல்லையென்றால் வேறு யாருக்கோ அவன் விற்று காசாக்கியிருப்பான்’ என்றான். பின்னர் நாங்கள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. நான் ‘அறம்’ என்றால் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
இன்று பின்னேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் எங்கள் வீட்டின் நாலாவது வீட்டில் சனமாக இருந்தது.அதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த நெருடலாக இருந்தது. தமிழ் உணவகம் ஒன்றில் வாங்கிய கொத்துரொட்டிப் பொதியுடன் வீட்டுக்குள் போனேன். வீட்டுக்குள் யாரும் இல்லை என் துணைவியையும்,மகனையும்,மகளையும்  போன வருடம் வாங்கிய என்னுடைய மற்றவீட்டுக்கு காலையிலேயே அனுப்பிவைத்துவிட்டேன்.
கொத்துரொட்டிப் பொதியுடன் நிலவறைக்குள் போனேன் கதிரையில் இருத்தி கைகளும்,காலும் கட்டப்பட்டிருந்த அவனுடைய வாய்ச்சீலையை எடுத்துவிட்டேன். அவனுடைய வாயிலிருந்துவந்த கெட்டவார்த்தைகளுக்கு அளவே இல்லை, அவன் என் மகளை,மனைவியை,எங்கள் சாதியை எல்லாவற்றையும் இழுத்து மிக வக்கிரமான வார்த்தைகளால் திட்டினான்.
அவனை மிகவும் நேசமாய் தடவி, ‘எனக்கு இருக்கிறது ஒரேயொரு ஆம்பிளப் புள்ள அவன் ஏதோ தெரியாமல் உன்னக்கொண்டுவந்து கட்டிவச்சிற்றான் அவங்களோட நீ கதச்சதும்,நடந்துகொண்டதும் பிழை தானேதம்பி,நீ இப்படியெல்லாம் கதைச்சால் யாராக இருந்தாலும் கோபம் வரும்தானே. நான் உன்ன அவிழ்த்து விடுகிறன் வேறெதையாவது சொல்லி என்ர பிள்ளைய காப்பாற்று ராசா உனக்கு புண்ணியமாகப் போகும்’ என்று சொன்னேன். ஆனால் அவன் கேட்பதாய் இல்லை எங்கள் கிராமத்தில் எங்கள் மூதாதேயர்களை அவர்களின் மூதாதேயர்கள் எப்படியெல்லாம் அடக்கி,ஒடுக்கினார்களோ அவற்றையெல்லாம் அறிந்துவைத்திருப்பவனாய் பேசிக்கொண்டே இருக்கிறான். இன்னமும் புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் இந்த அரும்புகளுக்குள்கூட இவ்வாறான விசங்களை விதைக்கிறார்களே என்று கலங்கியபடி அமர்ந்திருந்தே.
அதுமட்டுமல்ல என்னுடைய மகனை எவ்வளவு நிதானமாக வளர்த்துவந்தேன்,அவனுக்குள் எப்படி இன்னொருவனை கட்டிவைத்து சித்திரவதை செய்யக்கூடிய மனநிலை வந்தது?......எங்கு தவறு நடக்கிறது? நாம் ஒழுக்கம் என்று கருதுகின்ற கோர்வைக்குள் எங்கெங்கோவெல்லாம் தவறுகள் மறைந்துகிடப்பதாகவே உணர்ந்தேன்.
நான் அவனுடைய வாயை மூடிவிட்டு சிறிதுநேரம் யோசித்தேன், பின்னர் காவல்துறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு காணாமற்போனவன் என் வீட்டில் இருக்கும் செய்தியை தெரிவித்தேன்.காவல்துறை என் மகனை பிடித்து செல்லட்டும்,ஆனாலும் இந்தச் சமூகத்தை மாற்றி உருவாக்க இவ்வாறான கைதுகள் எந்த அளவுக்கு உதவப்போகின்றன?
இப்போதுதான் தியாகு தொலைபேசியில் அழைத்தான். அந்தச் சிவலையனிடம் 100 டொலர்களுக்கு வாங்கிய நகைகளை மாற்றிச்செய்ய நகைக்கடைக்கு கொண்டுசென்றபோது அவர்கள் உரசிப்பார்த்ததில் அந்த நகைகள் பவுண் இல்லை என்று தெரியவந்ததாம்.
                                                    -மெலிஞ்சிமுத்தன்.
Friday, June 7, 2013

இப்னுபதூதாவும், இலக்கியக் கூட்டமும். ( முன்னுரை)

டொரன்ரோவில் தேவ அபிரா எழுதிய ‘இருள் தின்ற ஈழம்’ புத்தக வெளியீடுநிகழ்ந்தபோது. நான் அதில் பேசுவதற்காக கேட்கப்பட்டிருந்தேன்.புத்தகத்தை வாசித்தபோதுசில ஆண்டுகளின் முன்னர் என்னை ஈர்த்திருந்த தேவ அபிராவின் கவிதைகள் இம்முறை வாசித்தபோது எனக்கு எவ்வகைக் கலை அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு எழுத்தாளர் மட்டுமல்ல, காலமும், சூழலும்,வாசகரும் கூடத்தான் காரணம். ஆனால் அக்கவிதைகளை வாசித்தபோது அவை நவீன கவிதைகளாய் இருந்தபோதும் மரபை அறுத்துவிடாதவையாய் இருந்தன. ‘தமிழ்க்கவிதையின்’ அடையாளங்களாகவே அவற்றைப் பார்த்தேன். ஆனாலும் எனக்கு புதுமை வேண்டியிருக்கிறதே.
தேவஅபிரா நிதானமான ஒருகவிஞர்,சமூக அக்கறை அவருடைய கவிதைகளில் இருக்கின்றது. ஆனாலும் ஈழத்து நவீன கவிதையின் போக்கிலிருந்து விலகாதவை அவை.நவீன கவிதைப் போக்குக்குள் காத்திரமானவை என்றுகூடச் சொல்லலாம். சிங்களதீபத்தில் சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயகம்,போரின் விலை,தேர்தல்,சிங்களதேசம்,எலும்புக்கூடும் இரண்டுகனவுகளும்,விடுதலை, போரின் விலை, இவை புத்தகத்தில் வந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்புகள்.
கவிதைக்கான மொழி நம்மிடம் நமது நம் கிராமத்தின் பேச்சுவளக்கு மொழிபோல ஆகிவிட்டது.இரவுப்பாடல்களையும்,இலையுதிர்காலத்து மொட்டை மரங்களையும்,எத்தனை கவிதைகளில்தான் சொல்லுவோம்.இதே மனநிலை என்னிடம் ஏற்பட்டு என் கவிதைகளிலேயே எனக்கு திருப்தியீனம் ஏற்பட்டபோதுதான் நான் கவிதை எழுதுவதையே குறைத்துக்கொண்டேன்.

இப்போதெல்லாம் ‘கவிதைக்குள் வரும் பிணங்கள்’ எனக்கு எந்தச் சலனத்தையும் உண்டுபண்ணவில்லை. இவ்வாறான கவிதைகள் இன்று எந்தத் தாக்கங்களையும் உண்டுபண்ணவில்லை என்றாலும் இவற்றுக்குரிய மரியாதையுடன் இவற்றை அணுகவேண்டியே இருக்கின்றது. இவற்றை எழுதுகின்ற கவிஞர் மொழிவழி செய்துவந்தடைந்திருக்கும் முயல்வுகள் மதிக்கப்படவேண்டியவையே. இவ்வாறான மன நிலையில் சக கவிஞனை நேசத்தோடு வாழ்த்துவதே எனக்கு உவப்பாய் இருக்கிறது.

ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் சொற்களிலேயே தங்கி நிற்பதாய் உணரும் நான் குறிப்பிடத்தக்க சொற்கூட்டமொன்று நம் கவிதைப்போக்கை மய்யப்படுத்தி அதன் பயணிக்கும் குணத்தை இல்லாதாக்கியிருக்கின்றதாகவும் கருதுகின்றேன்.இன்று கவிதைக்கான புதிய களத்தேடல்கள் இலங்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன. சொற்களைத் தெரிவுசெய்யும் முன்னரே வடிவத்தைத் தீர்மானித்துவிட்டு நகர்த்தும் கவியகங்களைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.அது பெரியஅளவிலான புதுமைகளை நிகழ்த்தவில்லை என்றாலும் ஒரு தொடக்கம் என்று உணரத்தக்கதாகவே இருக்கிறது.

கவிதைக்கும் எனக்கும் இருக்கும் அந்தரங்க உறவை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதில் எனக்கு பிரச்சினை இருக்கின்றது.அதுமட்டுமல்லாமல் நான் ஒரு படைப்பாளி,எழுதுவதில் இருக்கும் ஆர்வம் அரங்கமொன்றில் விமர்சன உரை ஆற்றுவதில் இல்லை.
இந்த மனநிலையோடு இந்தக்கவிதைகளை விமர்சனம் செய்வதும்,அதுவும் ஒரேமாதிரியான பாணியில் செய்வதும் எனக்கு ஆர்வமுடையதாய் இருக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான மீராபாரதியிடமும்,தேவ அபிராவிடமும் என் மனநிலையை பகிர்ந்துகொண்டேன். ஒரு படைப்பாளியாய் நேசத்தோடு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் சொன்னேன்.
இலக்கியம் சமூக விரிவுக்கான பயணம் என்பதை வலியுறுத்த சிறந்த பயணியாகிய இப்னு பதூதாவை அனுப்பிவைத்தேன். அவர் அந்த நிகழ்வில் ஒர் ‘அரங்கக் கதையின்’ பாத்திரமாய் மாறி நின்றார். அவர் சொன்னதும்,சொல்லாததுமான அரங்கக்கதை’யின் விரிந்த எழுத்துவடிவமே இது.
..........................................................................................................................................................................................
இப்னு பதூதாவும் இலக்கியக் கூட்டமும் (கதை)

மொழியும்,மனமும் பினைய பேசமுனைகிறேன். காலமற்றதும்,கதைகளுக்கு அப்பாலானதுமானதொரு மெய் வரலாற்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. என்ற உணர்வுத்தனத்தோடு மனந்துருவித் தொன்மம் தேடுகிறேன்.நான் பயணி.இலக்கியத்தை மானுடச் சமூகத்தின் கூட்டுஅகவிரிவுக்கான கருவியாக எடுத்தியக்க முனைபவன். என் பெயர் ‘இப்னு பதூதா’ (1304-1369)  The Greatest Arab Traveller) 

மொரோக்கோ  நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தியை ஒட்டியதன்ஜித் ‘ என்ற கடற்கரை நகரத்திலிருந்து 75000 மைல்கள்(120,000 k.m) சுற்றிவந்தவன், மார்க்கோ போலோவிற்கு ஐம்பதாண்டுகளுக்கு முந்தியவன். இப்போது இங்கே மீண்டும் வந்திருக்கிறேன்.

ஒரு முறைக்குமேல்  ஒரே வழியில் செல்வதில்லை என்ற மனப்போக்குக்கொண்டவன் ஒரேமாதிரிக் கவிதை எழுதி,ஒரேமாதிரி விமர்சனங்கள் செய்யும் உங்கள் கூட்டங்களுக்கு வந்துபோகிறேன்.
நான் ஒரு எழுத்தாளனும்கூட ‘The Journey’ என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் எழுதியுள்ளேன். வாகன வசதி இல்லாத காலத்திலேயே  ஏறக்குறைய 44 நாடுகளுக்குமேல் சுற்றி பல்வேறு மக்கள்அரசர்கள்சூஃபிக்கள்முக்கிய பிரமுகர்கள் என இப்படி இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். இப்போது என் இலக்கியம் உங்களோடு தொடர்புகொள்ள வைத்திருக்கிறது.

ஆரியர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாமூலம் இலங்கைக்கும் வந்திருக்கிறேன்.அப்போது வடபகுதியை ஆண்ட ஆரியமன்னன் முத்துக்கள்பதித்த கிண்ணத்தில் பானம் பருகிக்கொண்டிருந்தான்.வடபகுதி செழிப்புமிக்கதாய் இருந்தது.
அப்போது வந்த நான் உங்கள் நாட்டின் முத்துக்களையும்,ஆனைத்தந்தங்களையும்,சங்குகளையும் பார்த்து பிரம்மித்துவிட்டுச் சென்றேன். கவிதையும் உங்கள் சொத்துத்தானே அதனாலேயே இங்கு இப்போது வந்தேன்.

நீங்கள் இலக்கியத்தை உங்கள்கொல்லைகளிலிருந்து போடப்பட்ட ஒற்றையடிப் பாதையாக உணர்ந்து வைத்திருப்பதை சுட்டவது என் பொறுப்பு என்று உணர்கிறேன்.

உங்கள் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்கின் பின்னால் ‘ஊளைச்சதைகள்’ ஆகிவிட்ட உங்கள் கோட்பாட்டுப் பார்வைகள் இருப்பதாய் நான் உணர்கிறேன். உங்கள் இலக்கிய மன்னர்கள் வெட்டிய கருத்தியற் குளங்களுக்குள் நீங்கள் இன்னமும் ‘உயிர்ப்புள்ள மீன்களைத் தேடுகிறீர்கள்,அல்லது மீன்கள் உயிர்ப்புடன் இருப்பதாய் பிரச்சாரம் செய்கிறீர்கள். நீங்கள் போடும் எல்லையை  யாரும் மீறிவிடக் கூடாது, உங்கள் அறிவுக்கு எட்டாத எவற்றையும் யாரும் பேசிவிடக் கூடாது. நீங்கள் கண்டுவைத்திருந்த இலக்கிய ஆய்வுக்கருவிகள் எல்லாம் மொட்டையாகிப் போய் விட்டபின்னும் நீங்கள் அதிகாரம் செலுத்தும் குழு மன நிலையில் உங்கள் குழுவின் பாணியில் பேசும்படி மறைமுகமான எச்சரிக்கைகளை விடுகிறீர்கள், உங்களை திருப்திப் படுத்துவதற்காக நான் வரவில்லை. என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
                                                                               நீங்கள் பிரச்சினைகள்பற்றி பேசுவீர்கள். ஆனால் உங்கள் பேச்சு வடிவத்தைக்கூட மாற்றமாட்டீர்கள்.ஏனெனில் நீங்கள் கண்டுவைத்திருக்கும் பேச்சுமுறை உங்கள் பலருக்கு வசதியாக அமைந்திருக்கிறது. இலக்கிய ஏஜண்டுகளுக்கும்,புகழ்ப் பண்டமாற்றுக்காரர்களுக்கும் அதுவே வசதியான வடிவம். முதலில் வெளியே வாருங்கள்.

நான் இங்கு சுமந்துவந்திருக்கும் என்னுடைய சாம்பல் நிறப் பை பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். நீங்கள் சாம்பல் இலக்கியம்பற்றி கேள்விப்படுவதற்கு முன்னரே இந்தப் பை இங்கு இருக்கிறது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இருள் ஈழத்தைத் தின்றபோது வடிந்த குருதியில் இந்தப்பை சிவப்பு நிறமாய் இருந்தது. சிவப்பு நிறம் எவரெவர்க்கெல்லாம் உவப்பானதோ அவர்களெல்லாம் இந்தப் பையை எடுத்துப் பாவித்தார்கள்,இன்று இது சாம்பல் நிறமாய் தெரிகிறது.

வெள்ளை,கறுப்பு என்ற இரண்டு துருவ நிலைகளுக்குள் நிற்பவர்களிலும் விட  துருவ நிலையில் இல்லாதவர்களிடம் ஒரு புதிய இலக்கிய முயல்வு தொடங்கியிருப்பதை அவதானிக்கிறேன், நீங்கள் காணவில்லையா?

இதோ பாருங்கள்.
இந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களால் சொல்ல முடிகிறதா...../
நான் சொல்கிறேன் இந்தப் பைக்குள் நான் ஒரு யானையைக் கொண்டுவந்திருக்கின்றேன். ம்....யானை/ நீங்கள் நம்பமாட்டீர்கள். நானும் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களுக்கு எதையெடுத்தாலும் நான் ஆதாரங்களையும்,வரைவிலக்கணங்களையும் சொல்லவேண்டியிருக்கிறது.

நான் இந்த யானையைக் காண்கிறேன். என் கற்பனையும்,பிரமையும்,கனவும்,உணர்வும் உங்களுக்குத் தெரிகிறதா? சமூகத்தின் கூட்டு அக விரிவுக்கு இவை அத்தனையும் தேவையானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.
நான் இங்கே பேசுவது குறியீட்டுத் தன்மை மிக்கதாய் இருக்கின்றது.நீங்கள் வந்திருப்பது இலக்கியக் கூட்டம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இதில் இப்படிப் பேசுதல்தான் எனக்கு உவப்பாய் தெரிகிறது.

நான் யானைபற்றிப் பேசும்போது உங்களுக்கு பல யானைகள் நினைவுக்கு வரலாம். பாரதிக்கு அடித்த யானை,அல்லது யூ.என்.பி கட்சியின் யானை,அல்லது தீப்பெட்டி யானையும்,ஜீ.ஜீ பொன்னம்பலமும் கூட நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு குணராசா எழுதிய ‘யானை’ கதை,அல்லது வைக்கம் முகம்மது பசீர் எழுதிய ‘என் உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது’ கதை நினைவுக்கு வரலாம். ஆனால் எனக்கு ஆனையிறவே பெரும்பாலும் நினைவுக்கு வரும்.

உங்களுக்குத்தெரியுமா? வடபகுதியில் ஆனையிறவுக்கு அருகில் ‘பர்பர்பிட்டி’ என்று ஓர் இடம் இருந்ததும்,என் இனத்தவரான பெர்பர்(beber) இன மக்கள் வாழ்ந்துவந்தார்கள் என்பதும்.?பின்னர் உசனிலும்,துரத்தப்பட்டு சாவகச்சேரியிலும்,நல்லூர் நாவாந்துறைப் பகுதிகளிலும் வாழ்ந்தார்கள் என்பதும்... உங்களுக்கு தெரியுமா?

யானை என்பது நம் எல்லோருக்குமே வேறு வேறு நினைவுகளை தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கிறதல்லவா. அந்த பன்முகத் தன்மையை ஒவ்வொரு படைப்பாளியும் உணர்ந்து வைத்திருக்கவேண்டும். விஞ்ஞானத்தோடும்,மெய்ஞானத்தோடும்,ஏனைய துறைகளோடும் கலவிகொள்ளும் இலக்கியப் போக்கை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
இதை விடுத்து நாம் சக்கையைச் சுற்றும் செக்குமாடுகள் ஆகவேண்டியதில்லையே  நான் பயணி என்னால் இப்படித்தான் பேச முடிகிறது. என்னை விமர்சிக்கவும்,என் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் உங்களுக்கு உரிமை இருக்கின்றது. என் அறிவை இந்தப் பூமியின் மனிதச் சமூகத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன் என்பதால் எனக்கு தலைக்கனம் வரப்போவதில்லை.

என் இலக்கியத் தோழர்களே ஒரு பயணிக்கான மன நிலையைப் பெற்றுக்கொள்ளுங்கள் நம் இலக்கியத்தைத் தேக்கமுறச்செய்யும் கட்டுக்களை உடையுங்கள்.

24 ஆண்டுகாலம்  சொந்த நாட்டுக்குத் திரும்பிச்செல்லாத பயண ஆர்வம் கொண்ட நான் உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பையையும் தூக்கிக்கொண்டு நான் புறப்படுகின்றேன்.
வணக்கம்.

 பி.கு. = இப்னுபதூதா சென்று இரண்டு நாட்களின் பின்னும் குசுகுசுப்புக்கள் இருந்தன.

(நன்றி- இலங்கையில் தமிழர்- ஒரு முழுமையான வரலாறு, விக்கிபீடியா.)Thursday, February 28, 2013

பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்.

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம்
எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”
என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன்.
உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால் எவ்வளவு நல்லது என்று யோசித்தேன். அல்லது அனானியாகப் பேசுவதற்கும் விருப்பம்தான். வெகு விரைவில் அப்படி ஒரு வசதியையும் இந்த தொழிநுட்பங்களில் வளர்ச்சியைக்  கொண்டு கண்டுபிடிப்பதன் மூலம் அர்த்தமும்,உணர்வுகளும் கூடிய இதைப் போன்று கூட்டங்கள் நிகழ்த்தி உரையாடுகின்ற சாத்தியங்களைக் உலகம் கொன்றுவிடுமென்றுதான் நினைக்கிறேன்.
புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு விசயம் தான். அது தமிழீழத் தேசியக்கொடியாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கொடி. அதற்குள் ஒரு புலி கண்ணை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் துவக்குகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். துவக்குகளை நிமிர்த்திப் பிடித்தால் அவர்களை விடத் துவக்குகள் உயரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அட்டைப்படத்தில் அவர்களுடைய முதுகுகளின் நிழல் மட்டும்தான் தெரிகிறது. முதுகுகளிடம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லம். அந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிவது என்ன உணர்ச்சி என்று அந்தக் கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம். இப்போது நான் அந்தக் கண்களில் தெரிவது பயமென்றோ,வீரமென்றோ,இல்லை அவை செத்துப்போய்க் கிடக்கிற கண்களென்றோ சொல்லப்போக செத்த புலிகளைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்றோ அல்லது பசித்த புலிகள் என்னைத் தின்னட்டும் என்பதான விசனங்கள் வரலாம் என்பதால் புத்தகத்தின் அட்டையைத் திருப்பி உள்ளே போய்விடலாம்.
கதைகளைப் படித்த பிறகு தீட்டப்படப்போகிற வார்த்தைக் கத்திகளை நிதானப்படுத்த மெலிஞ்சிமுத்தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார். “இவற்றை எழுதிய நான் எவற்றுடனும் நேரெதிரே நின்று போரிட்டு வென்றவனில்லை. தப்பித்தலின் சாத்தியங்களை நீதியென்று தோற்றம் கொண்டவற்றுக்கு குந்தகம் வராத தருணம் பார்த்து பயன்படுத்தி வந்தவன்தான்” எனக்கு உடனடியாகவே சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது அடடா என்னைப்போல ஒருவன்.
உரையாடலின் அவசியம் குறித்து தமிழ்ச்சூழலில்,தமிழ்த்தேசியச் சூழலில் அதீதமான அக்கறையோடும் கரிசனையோடும் அணுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமகாலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட உரையாடலின் சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது தொழிநுட்பம். உரையாடலை விரல்நுனிக்கு கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில்  இணையம் எவ்வளவு நெருக்கமாக அதனை எளிமைப்படுத்தியிருக்கிறதோ அத்தனை தூரம் அதனை மர்மப்படுத்தியும் இருக்கிறது. எல்லோருடைய இரண்டாம் முகங்களும் அல்லது அவதாரங்களும் இணையவெளியெங்கும் இறைந்து கிடக்கிறது. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் மாறி மாறிப் பிறருடைய மனங்களுக்குள் பின்கதவுக்குள்ளால் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியிருக்கிறது. ஒரு நண்பர் பதின்நான்கு face book ஐடிகளை வைத்திருக்கிறார்  என்பதை எனக்கு வேறொரு நண்பர் Facebook ல் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் பதின்நான்கில் எட்டு பெயர்களுக்கு நான் பேஸ்புக்கில் நண்பராயிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிக் கதைக்கிறதை விட்டுவிட்டு face book ஐடிகளைப் பற்றிய கிசுகிசுக்களை பேசுகிறேன் என்று நீங்கள் எரிச்சலமையக்கூடும். இந்தத் தொகுப்பில் மெலிஞ்சி முத்தன் இருக்கிறார், அவரது இன்னொரு ஐடியும் இருக்கிறார் அவருக்குப் பெயர் மாணங்கி. இன்னும் பல ஐடிக்களும் மெலிஞ்சி முத்தனுக்கு உண்டு. ஆனால் அவர் அதிகமாகப் பாவிக்கிற ஐடி மாணங்கி. அது தவிரவும் உரையாடல்கள் பற்றி நான் பேச இன்னொரு காரணமும் உண்டு. இக்கதைப்புத்தகத்தில் இடம் பெறுவது உரையாடல்கள் என்பதாயே நான் உணர்கிறேன்.  தனது மனக்கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித்தீர்த்துவிடுகிற வேட்கைதான் இங்கே மெலிஞ்சியால் கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும், வாழ்வில் நிலையின்மையும் நண்பர்களை நம்மிடமிருந்து துரத்தியபடியிருக்க தனக்குத்தானே ஐடிகளைக் கிரியேட்பண்ணியபடி பேசிக்கொண்டிருக்கிறார் மெலிஞ்சி முத்தன் இந்தக் கதைத்தொகுதி நெடுகிலும்.
இந்தக் கதைகள் முழுவதும் மாணங்கி வந்துகொண்டேயிருக்கிறார். உண்மையில் இந்தச் சிறுகதைகளில் மெலிஞ்சி முத்தன் தான் கடந்து வந்திருக்கிற மனிதர்கள் குறித்தும், அவரது வாழ்வின் தேங்கிநிற்கிற நினைவுகளைப் பற்றியும் அவருடன் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்  கடற்கரையில் அமர்ந்து மாணங்கியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துக்கொள்ளக்கூடிய கடலின் மகனாக அவர் இருக்கிறார். அவர் விளையாடும் பருவத்தில் புதினமான பொருட்களைப் பரிசளித்த கடல் அவருக்குத் துயரத்தையும் பரிசளிக்கிறது. அவரால் கடலை நம்பமுடியாமலும் இருக்கிறது அதே நேரம் கடலைக் கைவிடவும் முடியாமலிருக்கிறது. அவர் அந்தக் கடலை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.
தாங்கள் நம்புகிற பெருங்கடலை நம்பவும் முடியாத,அதே சமயம்  நம்பாமலிருக்கவும் முடியாத சாதாரணர்களின் கதைகள் தான் இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அறிவை நிராகரித்த ஆயுதம் பற்றிய கதைகளும், பிறகொரு நாள் சுயநலம் மிக ஆயுதங்களுக்கு ஆலாபனை பாடிய அறிவும் என்று இது வரைக்கும் கதைகள் சொல்லும் உரிமையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கதைகளை இப்போது வரத்தொடங்கியிருக்கிற இவை இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு இந்த இரண்டு எதிர்நிலைகளுக்கிடையேயும்  நசிபட்ட சனங்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நம்பியும் நம்பாமலும் விரும்பியும் விரும்பாமலும் பொதுவெளியின் அரசியலோடு இழுபட்டுச் சென்ற சனங்களில் குரல்கள் கதைகளில் இருக்கிறது.
இல்ஹாம் என்கிற கதையில் இப்படி எழுதுகிறார்.
“எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவையல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளையே எங்கள் நம்பிக்கைகளாக் கொண்டிருந்தோம்…………………….. கூப்பன் கடைகளில் சந்தித்துக்கொள்ளும் போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம்”
கூப்பன் கடைகளோடு சேர்ந்து தங்களையும் இடம்பெயர்த்திக்கொண்டேயலைந்த, சமூகத்தின் பெரும்போக்காகவுள்ள அரசியலையே தங்களுடைய அரசியலாகவும் வரித்துக்கொள்ள நேர்ந்த மனிதர்களின் கதைகளாக இக்கதைகள் எழுதப்படுகின்றன. இல்ஹாம் என்கிற கதையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வீட்டில் வாழநேர்ந்த  ஒரு மனிதன் அது குறித்து சங்கடப்பட்டு குற்றவுணர்வுக்குள்ளாகிறான் பிறகு அதே குற்றவுணர்வு ஏன் இத்தனை தாமதமாக எனக்கு ஏற்படுகிறது என்று வெட்கமடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சாதாரணமான சனங்களின் மனவுணர்களைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குற்றவுணர்வும் வெட்கமும் கதைசொல்லும் வெளிகளை இது வரை ஆக்கிரமித்திருந்த பிரகிருதிகளிடமிருந்து வரவில்லை. அவர்கள் இதற்கும் ஒரு விளக்கமும் சொல்லிக் கடந்து போவார்கள். ஆனால் சாதாரணிகளால் அவற்றைக் கடக்க இலகுவில் முடிவதில்லை.
உண்மையில் மனிதர்களின் மிகப்பெரிய சாபமே குற்றவுணர்வுதான்.  குற்றவுணர்வை எப்படிக் கடப்பதென்பதுதான் மனித ஆன்மாவை அலைக்களித்தபடியிருக்கும் பெருங்கடல். பாவமன்னிப்பு கேட்பதைப் போல, கோவில் திருவிழாவில் உபயகாரராய் இருப்பதைப்போல, பிச்சைக்காரர்களின் சில்லரைத் தட்டில் நாணயங்களை வீசியெறிவதைப்போல குற்றவுணர்வுகளைக் கடக்கும் எளிய சூத்திரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும்  மனித ஆன்மாவைத் திருப்தி செய்துவிடுவதில்லை. அரசியல் சார்ந்த தமிழர்களின் குற்றவுணர்வு ஒரு பெரும் வெளியாய் விரிந்திருக்கிறது. அதனால் போர்க்கடவுள்களின் உண்டியல்கள் நிறைந்ததன்றி வேறெதுவும் நடந்ததாயில்லை.
ஒரு படைப்பாளியாக மெலிஞ்சு முத்தனின் ஆற்றாமைகள் இந்தக் கதைகளிலே பதிவு செய்யப்படுகிறது.  உண்மையில் ஊரைப்பிரிய நேர்கிற எல்லோரிடமும் நினைவு மூட்டைகள் இருக்கின்றன. அந்த மூட்டைகளுக்குள் காலத்தின் புன்னகையிருக்கிறது,தப்பித்தலின் கண்ணி ஒழித்துவைக்கப்பட்டிருக்கிறது, இடம்விட்டு இடம்தாவித் தன்னைக் தகவமைத்துக்கொள்ளும் உடலொன்றிருக்கிறது, கூடவே பாவங்களும், துயரங்களும், கண்ணீரும் அந்த மூட்டைக்குள் இருக்கின்றன. இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நினைவின் சுமைகள் உரையாடலைக் கோருகின்றன, பகிர்தலை யாசிக்கின்றன. ஆனால் துரதிருஸ்ட வசமாக எல்லோரிடமும் மூட்டைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மூட்டைகளை அவிழ்க்கவேண்டிய அவஸ்தையும் பெருத்த தயக்கங்களும் உண்டு.  எனக்கும் கூட. ஆனால் அடுத்தவரின் மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்பது  பற்றி அறியும் ஆவல் அதனைவிடப் பன்மடங்காககப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. மூட்டைகளை அவிழ்ப்பதில் இருக்கிற தயக்கமும் அவஸ்தையும் மெய்யான உரையாடலின் சாத்தியமான வெளிகளை அறைந்து சாத்துகிறது.
மெய்யான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறைந்த இப்படியான ஒரு சூழலில் மெய்யான உரையாடலை யாசிக்கும் மெலிஞ்சிமுத்தனின் படைப்பு மனம் தன்னோடு உரையாட ஒரு பிரகிருதியைக் உருவாக்குகிறது. அதன்பெயர்  மாணங்கி. மெலிஞ்சி முத்தன் தான் சுமந்துகொண்டிருக்கும் நினைவுகளாலான மூட்டையை அவருக்கும் மாணங்கிக்குமான உரையாடல்களாக சிறுகதைகளாக இந்தப்புத்தகத்தில் அவிழ்க்கிறார். அந்த உரையாடல்கள் நம்மையும் ஒரு உரையாடல் வெளிக்கும் நமது மூட்டைகளை அவிழ்ப்பதற்கான தூண்டுதலையும் நமக்களிக்கின்றன.
இத்தொகுப்பில் இருக்கிற கூட்டிச்செல்லும் குரல் என்கிற சிறுகதையில் மாணங்கியும் ஒரு குழந்தையைச் சுமக்கிறார். அந்த குழந்தையை இறக்கிவிடுவதற்காக அலைகிறார். குழந்தை அழுகிறது அதைச் சமாதானப்படுத்த ஒரு தென்மோடிக் கூத்துப்பாடலொன்றைப் பாடுகிறார் மாணங்கி அந்தப்பாடலில் பாடுபொருளே பிரண்டையாறு தொகுப்வு முழுவதும்  இழையோடுகிறது.  அந்தப் பாடல் இதுதான் .
நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத் தின்று பாதியாகும்
காற்றினிலே ஓலக்குரல்
கரைமுழுதும் பரவிவிடும்.
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை
பரந்த சிறைப் பட்டணங்கள்
பாவம் இந்தக் கேடயங்கள்.
எல்லோருக்குமான அரசியலைத் தமக்கான அரசியலாகக் கொள்ள நேர்கிறவர்கள் கேடயங்களாக்கப்படுவதை. கூட்டத்திலும் தனித்திருக்க நேர்கிற படைப்பு மனத்தின் அவாவுதலை கதைகள் பேசிச் செல்கின்றன.
‘மொழியின் எளிமையான குழந்தை சிறுகதை’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்தக் கூற்றோடு என்னளவில் உடன்படவும் செய்கிறேன். இவரது கதைகளில் எங்கும் குறியீடுகள் நிரம்பியிருக்கிறது. கதைகளைப் படித்து முடித்த பின்னர் அட்டைப்படம் குறித்த இன்னுமொரு யோசனையும் எனக்கு வந்தது. இந்தப்பக்கம் புலிக்கொடியிருக்கிறது. இந்தக் கொடியின் எதிர்த்திசையில் ஒரு வாளேந்திய சிங்கத்தின் கொடியும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இழுபட்டுக்கொண்டிருக்கும் சனங்களில் வாழ்வு மெலிஞ்சி முத்தனால் எழுதப்பட்டிருக்கிறதாக நினைத்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கொடிகளுக்கும் இடையில் நிற்கிறார்களே என்கிற பார்வையும் எனக்கும் தோன்றியது. இது குறியீட்டின் சாத்தியம். சில சமயங்களில் படைப்பு பேச வருகிற அரசியலையும் தவிர்த்து நமக்கு விருப்பமான அரசியலைப் பொருத்திப்பார்க்கச் செய்துவிடுகிற அபத்தங்களுக்கான சாத்தியங்களும் நிரம்பியிருக்கிற வெளி இந்தக் குறியீட்டு மொழி.
குறியீடுகள் எழுத்தை பல்வேறு விதமான வாசிப்பின் சாத்தியங்களுக்குள் அழைத்துப்போகக் கூடியவை. ஒரு பிரதியின் மீதான பல்வேறு வாசிப்புக்கள் என்பது மொழியின் பலவீனமா? பலமா? என்கிற ஆய்வுகளுக்கெல்லாம் அப்பால், இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகள் குறித்த எழுத்துக்களை, அல்லது தமிழ் மற்றும் சிங்கள அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பத்திரிகைகளை,புத்தகங்களை துப்பாக்கிகளின் கண்கள் வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எங்களுடைய மொழிப்பயன்பாட்டின் நேரடித்தன்மை குறைந்து வந்திருக்கிறதை அவதானிக்கலாம். அது ஒரு நழுவல் மொழியை, அச்சமூட்டப்பட்ட சொற்களை, உண்மையைத் தயக்கத்துடன் எட்டிப்பார்த்தபடியிருக்கும் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சூழ்நிலை எழுத்தின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கிறது.எழுத்தின் இந்தநேரடித் தன்மையின்மையை எழுத்தின் பலவீனமாக நான் உணர்கிறேன். அரசர்களின் நிர்வாணத்தை சிலசமயங்களில் குறியீடுகள் ஆடைகளாகத் தோற்றம்பெறச் செய்துவிடுகின்றன.
இந்தக் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெலிஞ்சி முத்தன் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டுமே! என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா? எப்போதும் ஒரு சில பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. அந்தப் பெயர்களை முன்வைத்தே கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஈழத்து தமிழ் அரசியல்ச் சூழலில் ஏற்பட்ட இரண்டு எதிர்நிலைகளுக்கிடையில் நின்ற எல்லாப் படைப்புக்களும் பேசப்படாமலேபோயின. ஏதோ ஒரு நிலையெடுத்த, ஏதோ ஒன்றைத் தூக்கிப்பிடித்த  படைப்புக்களே விவாதிக்கவும் ஆராதிக்கவும் பட்டன. எதிர் எதிர் அந்தங்களின் அழிவுகள் உணரப்படுகிற காலமாய் சமகாலம் இருக்கிறது. எப்போதும் மைய ஆழுமைகளைக் கட்டமைத்தபடி சுழன்றுகொண்டிருக்கும் இலக்கியச்சக்கரத்தில் எல்லாப் படைப்புகளும், படைப்பாளுமைகளும் கவனத்தை பெறுவதற்கான இலக்கியச் சூழலை நாங்கள் உருவாக்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கிறதாக நான் கருதுகிறேன். சந்தைப்படுத்தல் லாவகங்கள் தெரிந்தவர்களும், நமக்கு நாமே திட்டங்களை முன்னெடுப்பவர்களிடமிருந்தும் இலக்கியத்தின் பிரதிநிதித்துவங்களையும் கூட எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
மெலிஞ்சி முத்தனின் இந்தக் கதைகள் என்னை கடலுக்கு அழைத்துப்போயின. அந்தகடலின் கொந்தளிப்பை, அழுகையை, தழுவலை ,மௌனத்தை இந்தப் பயணத்தின் போது நான் உணர்ந்தேன். உங்களுடைய பயணஅனுபவங்களும் இப்படியேதான் இருக்கவேண்டுமென்றில்லை பயணங்கள் ஒன்றெனினும் பயணிகளைப் பொறுத்து அனுபவங்கள் வேறாகின்றன…
நன்றி: எதுவரை இதழ் 3

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...