Monday, August 16, 2010

சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம்.

அப்போது நான் நடந்துகொண்டிருந்தேன்.
அன்றிரவு நான் கனவில்கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள் அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும்அங்குமிங்குமாய் பயணித்துக் கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்தபடியே நடந்துகொண்டிருந்தேன். அநேக முகங்களில் நேரம் குறித்த பயம் இருந்தது. சில முகங்களோ வீதியோரத்து இருக்கைகளில்
தொங்கிக் கிடந்தன. ஆயினும் வீதிகளில் நடந்து செல்லும் மனிதர்கள் குறைவுதான். உடல்முழுதும் காற்றை வாங்கிக் கொண்டு. நிலத்தை ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது. அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகின்றன. வாகனத்துக்குள்ளேயே வெம்மையும்,குழிருமான காற்று, வானொலி, படக்காட்சி, தொலைபேசியென்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள். வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம்.இவற்றையெல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஓரத்தால் விசுக்கு,விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தது நறுமணம்.
பூங்கா ஓரத்து வீதியில் நடந்துகொண்டிருந்த எனது நாசியிலும் ஒரு நறுமணச் சுழி புகுந்தது. காற்று அடர்த்தியாய் இருந்தது. நறுமணச் சுழிக்குள் மெல்லிய இசையின் நெளிவுகள் இருந்தன. இது இசையின் நறுமணமா? நறுமணத்தின் இசையா? என்பதையறிய நான் காற்றை நீவியபடி பூங்காவுள் நுளைந்தேன். வயலின் கம்பிகளிலிருந்து இசையை இழுத்து காற்றில் தூவியபடி அமர்ந்திருந்தாள் அவள். மேகநீலத்தில் மெல்லிய ஆடையை உடுத்தியிருந்தாள். முன்னே அமர்ந்தபடி அவள் முகத்தையேபார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு பிரமை பிடித்தவனைப்போல. என் பார்வை பட்டு அவள் சலனமடைந்திருக்கவேண்டும் இசையின் சந்துகளில் மனசை நெழியவிட்டு தலையைச் சாய்த்து என்னை உற்று நோக்கினாள். ஒரு கண அமைதிக்குப் பின்னால் 'ஓ... நான் வரைந்த அதே கோடுகளில் சதை முளைத்திருக்கிறது என்றாள். அதே நீளமூக்கு, லாவகமான சுருள் முடி, உதட்டோர என் வரைதற் பிழை... ஆமாம் உன்னை நான் என்றோ வரைந்திருக்கின்றேன். நான் வரையும்போது என் மனதின் வேர் ஒருகணமேனும் பிரபஞ்சமூலத்தில் கலந்திருக்கிறது." என்றபடி என் அசைவுகளை அவதானித்தாள், நான் சிரிக்கும்போதெல்லாம்
தன் ஓவியம் சட்டகத்தை உடைக்கின்றது என்றாள். நானோ எதுவும் புரியாதவனாகவே அமர்ந்திருந்தேன். அவளோ எனது நெஞ்சிற்கு மிகவும் அருகிலுள்ள மெல்லிசையை மீட்டி,மீட்டி ஓர் ஆத்தும பாசையை என்னுடன் பேசுகின்றாள். 'மேல் ஸ்தாயி" அவளாகவும்,'கீள் ஸ்தாயி" நானாகவும் இரண்டு இசைத் திண்மங்கள் வெளிமுழுதும்கட்டவிழ்ந்தபடி இருக்கின்றன.

00 அவளின் வீடு
...................................
பின்னர் சிலநாட்களும் அவ்விடத்தையே சுற்றி அலைந்தபடியிருந்தேன். அவளில்லாமல் அந்தப்பூங்கா வாடிக்கிடந்தது. நானோ அவளைத் தேடியலைந்து தோற்றபடி இருந்தேன். உண்மையில் அதுபிரமைதானோ என்று எண்ணிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத விதமாக எனை வழி மறித்தாள்.சிறிது நேர உரையாடலின் பின் என்னை ஒரு முறையேனும் தன் வீட்டிற்கு வந்து செல்லுமாறு கேட்டதற்கிணங்க நானும் அவளுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டேன். அவள் ஒரு நதிக்கரையோரத்துபழங்காலத்து அடுக்குமாடியில் இருந்தாள். அவள் பின்னே மாடிப் படிகளில் ஏறிச்சென்று அவளது முப்பத்தி நான்காம் இலக்க அறையினுள் நுழைந்தேன்.
ஈழத்தின்,உதடுகள்,கண்கள்,காதுகள் என்று ஏராளமான முகங்களுக்கான
சேகரிப்புகள் தன் மனதில் படிந்து கிடப்பதாக அவள் சொன்னாள். எல்லையற்றவற்றின் கேள்மைகள்,எல்லையற்றவைகள்மீதான நோக்குதல்கள்,எல்லையற்றவற்றின் சுவாசிப்புகள் என்று தனக்குள் வளர்ந்து
வருவதாகவும் அவள் சொன்னாள். அவள் முகங்களை மனிதர்களின் அடையாளங்களாகக் காணவில்லை.கடலுக்குள் இருக்கும் மலையின் சிறு முனை கடல் மட்டத்தின் மேலால் தெரிவதைப் போலவே முகங்களைப்
பார்த்தாள். ஒவ்வொரு மனித முகத்தினதும் அடிவாரங்களைச் சென்றடைந்து அடையாளங்களைப் பதிவு செய்ய அவள் முனைந்துகொண்டிருந்தாள். முக அடிவாரங்களுக்குச் செல்லும் அவளது பயணத்தை
தனக்குள் சிதைத்துப் போட்டிருந்த முகக்கூறுக் குவியலுக்குள் இருந்தே தொடங்கியிருந்தாள்.என் சிந்தனையைக் கலைத்தவள் 'என்ன பார்க்கிறீர்கள்?
நான் தனியே இல்லை.. என் அறைக்குள் எப்போதுமே அலையடித்துக்கொண்டிருக்கும் ஒரு கடலும், குருவிகொண்டுவந்து தரும் வானமும் இருக்கின்றது" என்று சிரித்தபடியே தேநீர்க் குவளையொன்றை
நீட்டினாள். அவள் வயலினை எடுத்து தனது வித்தையைத் தொடர்ந்தபோது எனக்கு முன்னால் அந்தக் கடல் குமுறத் தொடங்கியது. அவளது வயலின் இசை அந்த அலைகளிற்குள் மிகுந்த சோகமாய் நீந்திக்கொண்டிருந்தது. எனது கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுக்கத்தொடங்கியது.
என் கண்ணீரைக் கண்ட அவள் பதறிப்போய் என் அருகில் வந்தமர்ந்து ' உங்களுக்குள்ளும் ஒரு கடல் இருக்கின்றது என்பது எனக்கு தெரியும் " என்றாள். நான் எதுவுமே பறையவில்லை. எனக்குள் இறந்தகாலத்தின்
இரவுகளெல்லாம் குழுமத்தொடங்கின .
00 கடல்
. ..................................
அவள் தான் வரைந்த எனது ஓவியத்தின் மேலே சிவப்பு வர்ணத்தை அள்ளி தெளிக்கத்தொடங்கினாள் கண்களைச் சுற்றி கறுப்பு வளையங்களிட்டாள், என் ஓவியத்தின் முக ரேகைகளை முகத்திற்கு வெளியே வரையத் தொடங்கினாள் கன்னங்கள் ஒட்டி பற்கள் வெளித்தள்ளியபடி இருந்தது. அது பசி பசியென்று முனகத்தொடங்கியது. ' ஓ எல்லாக் காலத்துக்குமான என் முகமே "என்று நான் முனகத் தொடங்கினேன். முற்றத்தில் மொழியை அளைந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றின் சித்திரம் என் நினைவுக்கு வந்தது. அது நான்தான், அதுவும் நான்தான் உனக்குத் தெரியுமா பெண்ணே
என் அம்மா ஒரு குழந்தை பெற்றாள், அந்தக் குழந்தைக்கு என் பெயரையிட்டாள், அப்போதெல்லாம் எனக்குள் இப்போதிருக்கும் நான் இருக்கவில்லை. நான் மிகவும் சோத்தியானவனாக இருந்தேன் துயரத்தின் கனம் தெரியாமலே ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது எனது வாழ்க்கை. ஊஞ்சல்கள் பயணிப்பதில்லை என்பது புரிந்தபோது நான் கடற் கரைகளில் நடக்கத் தொடங்கினேன். எங்களின் குடிசை கடலோரத்தில்தான் இருந்தது. நீ அலைச் சத்தத்திற்குள் வாழ்ந்திருக்கின்றாயா? நாவில் எச்சில் ஊறிக்கொண்டிருப்பதைப்போல எனது செவிகளில் அலைச் சத்தம் ஊறிக்கொண்டிருந்தது என்று என் கடந்த காலத்தின் நினைவுகளை அவளுக்கு சொல்லத் தொடங்கினேன்.

காலையில் எழுந்ததுமே வெறும்மேலுடன் குண்டிப்பக்கம் தேய்ந்ததொரு
காற்சட்டையைப் போட்டபடி நடக்கத் தொடங்கி விடுவேன். பொத்தான் அறுந்த அந்தக் காற்சட்டைக்கு ஒரு நாகதாழி முள்ளைப் பிய்த்து குத்தியபடி ஏதோ பெரிதாய் கண்டு பிடித்துவிட்டோம் என்ற நினைப்போடு
கடற்கரையில் இறங்குவேன். கடற்கரை முழுவதும் என்ன இன்று அடைந்து வந்திருக்கிறது என்று பார்த்தபடி அலைந்து திரிவேன். ஒவ்வொரு நாளும் அடைந்து வரும் விசித்திரமான பொருட்களை எதிர் கொள்வதில்
இருக்கின்ற சுவாரஸ்யத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? கடலுக்கும் எனக்குமிருந்த ஒப்பந்தத்தின்படியே கடல்தான் ஒவ்வொரு நாளும் நான் விளையாட பொருட்களையும் கொண்டுவந்து தந்தது. பெரும்பாலும்
வீடு திரும்பும்போதெல்லாம் அடைந்துவந்த பெரிய பெரிய கணவாய் ஓடுகளைச் சேகரித்தபடியே குடிசைக்குத் திரும்புவேன். ஏன் தெரியுமா? கணவாய் ஓடுகளில் எனக்குப் பிடித்தமான உருவங்களைச் செதுக்க.
ஒருமுறை கணவாய் ஓட்டில் நான் செதுக்கிய வேளாங்கன்னி மாதாவின் உருவம் எவ்வளவு அளகாயிருந்தது தெரியுமா? அம்மாதான் சொன்னாள் வேளாங்கன்னி மாதாவை வெடுக்கில் செதுக்கக்கூடாதடா என்று.

இன்னமும் சொல்லலாம் பெண்ணே என் தந்தையார்
சாதி வெறியர்களால் மிகுந்த அவமானங்களை அனுபவித்த மனிதர். அவருக்கு எப்போதுமே தனது முதுகில் ஒரு மீன் செதில் ஒட்டியிருக்கும் உணர்வு இருந்துகொண்டேயிருந்தது. அவர் என்னை படிப்பிக்க வேண்டுமென்று
ஆசைப்பட்டார். ஆனால் நான் பள்ளிக்கூடம் போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோதுகூட என் கண்ணீரில் வெடுக்கு மணத்தபடியிருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்துபோனேன்.
எனது பள்ளிக்கூடம் அந்தக் கடல்தான். அந்த அலைகள்தான்
எனது சங்கீத ஆசிரியர்கள், கலைகளையும் , தத்துவங்களையும் எனக்குச் சொல்லித்தந்தவை அந்த மீன்கள்தான், உனக்குத் தெரியுமா கணவாய்மீன் வர்ணங்களால் பேசுமென்பது? அதுதான் கடலுக்குள் மைபீச்சி இருட்டிற்குள்
இருக்கும் வித்தையை எனக்குக் காட்டித் தந்தது. கடலிலிருந்து அதனைப் பிடித்து தோணியில் போட்டதுமே அதன் முதுகில் பச்சைநிற வட்டங்கள்தோன்றும்போதெல்லாம் அது அந்த மீனின் கோபமா? அல்லது துயரமா?
எனும் கேள்வி எனக்குள் எளத்தொடங்கிவிடும். கரையில் வர்ணங்களுக்கிருக்கின்ற குண இயல்பு கடலில் மாறுபடுகின்றனவா? அப்படியானால் பச்சை வர்ணத்தின் உண்மையான இயல்பு என்ன? என்று யோசிப்பேன், மீன்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவான விடயமில்லையென்பது உனக்குத் தெரிந்திருக்கும் ஆனால் நமது மூளை நமக்குப்போட்டிருக்கும் சட்டகத்தைக் களற்றிவிட்டு பரந்த கடலுக்குள் வாழும் மீன்களோடு உறவாட நாம் தயாராக இல்லை. ஓங்கில்கள் அழுவதை நீ பார்த்திருக்கிறாயா? புரட்டிப் போடப்பட்ட ஆமைகளின் தவிப்பை எப்போதென்றாலும் நீ உணர்ந்திருக்கிறாயா? துயரத்தை கண்ணீரால் வெளிப்படுத்துகின்ற உயிர்களைத்தானே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது? ஆனால் எந்தெந்த உயிர்கள் எந்தெந்த வழிகளில் தமது துயரங்களை
வெளிப் படுத்துகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் பேசுவது சற்று மிகையாகத் தெரியலாம் உனக்கு. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் நீதி தேவையல்லவா? அதற்காய் ஒவ்வொரு உயிரையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவையொன்று இருக்கிறதல்லவா? அதனால்தான் இதனைப் பேசுகின்றேன்.

நாம் நிலத்தில் வாழுகின்ற சாதி. அதனால்தான் கடலில் வாழுகின்ற சாதிக்கு பாரபட்சமான நீதியைக் காட்டுகின்றோம். அந்த உயிர்களுக்கு நாம் பெயரிடும்போதுகூட நிலத்தில் நாம் கண்ட உருவங்களை மனதில் வைத்துக்
கொண்டேபெயர்களை வைக்கின்றோம். உனக்கு சப்பாத்து மீனைத் தெரியுமா? பார்ப்பதற்கு பாதணியின் தடம்போன்று இருப்பதால் அதனை அவ்வாறு நம்மவர்கள் அழைக்கின்றனர். இதற்கு எங்கழூரில் ஒரு கதைகூட
இருக்கிறது. ஒருமுறை அந்தோனியார் மீன்களையெல்லாம் வரும்படி கூப்பிட்டாராம். எல்லா மீனும் அவரிடம் போக இந்தமீன் மட்டும் போகவில்லையாம் அதனால் அந்தோனியார் போட்ட சாபம்தான் இந்தமீன் இந்த உருவம் கொள்ளக் காரணம் என்று சொல்வார்கள். இன்னுமொன்றையும் உனக்குச் சொல்ல வேண்டும். ஜோனியின் பெயரில்கூட மீனொன்று இருக்கிறது உனக்குத் தெரியுமா? என்று நான் கூற முகம் மாறியவளாய் இதுகூட ஒருவித ஆண்மனவக்கிரத்தின் இறக்கி வைப்புத்தானே? என்றவள். ஏன் பெண்கள் யாருமே கடலுக்கு தொழில் செய்வதற்கு
சென்றதில்லையா? என்று கேட்டாள் . ஏனில்லை ஆண்களில்லாத வீடுகளில் சில பெண்களும் போயிருக்கின்றார்கள் எங்கழூரிலும் 'லுமினா" எனும் ஒருத்தி இருந்தாள் என்று நான் லுமினாவின் கதையினை சொல்லத் தொடங்கினேன்.
00 லுமினாவின் கதை
......................................................
'லுமினா" அவளும் ஒரு வகை மீன்தான். ஊரிலிருந்த பெண்களிலேயே வித்தியாசமாவள். தகப்பன் வயோதிபத்தின்
இறுக்கமான பிடிக்குள் போனபோது ஒரு தனியனாய் கடலில் இறங்கி தொழில் செய்த விசித்திரப் பெண். ஆமாம்
எங்கழூரின் இயல்போடு ஒட்டாத மனிதர்கள் யாராக இருந்தாலும் விசித்திரமானவர்கள்தான். தோணியின் கடையாலுக்குள் நின்றபடி 'லுமினா" மரக்கோலால் தாங்கியபோதெல்லாம் கடல் விரிந்து கொடுத்தது. அலைகளின்
ஒவ்வொரு வளைவுகளையும் அவள் இசைந்து கடந்தாள். எப்போதுமே மீன் கிளைக் கறுப்புகளை அவளது தோணி தேடியபடி பயணித்தது.
அடுப்படியில் அடைந்து கிடந்த பெண்களுக்குள் இவள்மட்டும் பழசாகிப்போன சோத்துப்பானையில்
'குங்கிலியம்" காய்ச்சி தோணியை 'கலப்பத்து" பார்க்கும் பெண்ணாக இருந்தாள். அவளது தொழிலுக்கு உற்றதுணையாக
கிழவனாகிப் போன அவளது தகப்பன் இருந்தார். இருந்தாலும் அவருக்குள் பெண் பிள்ளையை வருத்தி உயிர் வாழ்கின்றேனே என்ற மனவருத்தமொன்றும் இருந்துகொண்டே இருந்தது. கடலில் தனது போர்க் குணத்தைக் காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண் கரையில் தோத்துப் போனாளென்றே நினைக்கிறேன். மரக்கோல் தாங்கி அவளது கைகள் மரத்து மென்மையிழந்தவையாக
இருந்தன. செம்பாடு பிடித்த தனது ஒரு சாண் கூந்தலை நல்லெண்ணை வைத்து கறுக்கவைப்பதில் பிரயத்தனம்
மிகுந்தவளாக இருந்தாள். 'லக்ஸ்" சவர்காரத்தை ஒன்றுக்கும் மேல்பட்டதரம் முகத்திற்குப் போட்டுவிட்டு ஓலைச் செத்தையில் சொருகி வைப்பாள். மறுநாள் முகம் கழுவும்போது பெரும்பாலும் அது தொலைந்திருக்கும்.

எங்கழூர் காகங்கள் சவர்க்காரம்
தின்பதில் விருப்பமுள்ளவை என்பது உனக்குத் தெரியுமா? இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன். லுமினாவை நினைவில் வைத்துக்கொள்ள என்னிடம் அவளது இன்னொரு விடயமும் நினைவில் இருக்கிறது. அது என்னவென்றால் அவளது சட்டையின் முன் பக்கம் எப்போதும் ஊசிகளால் நிறைந்திருக்கும் என்பதுதான். கழுத்திலிருந்து வயிறுவரை
சுமார் இருபது ஊசிகளையாவது அவள் குத்தி வைத்திருப்பாள். கடற்கரையில் யாருக்காவது முள்ளுக் குத்திவிட்டால் உடனேயே லுமினாவைத்தான் தேடுவார்கள். ஆனால் ஒரு ஊசியை இரவல் கொடுப்பதென்றால் அவளுக்கு பெரிய வருத்தமாக இருக்கும். அந்த ஊசியை திரும்பப் பெறும்வரை அந்த இடத்திலேயே நாண்டுகொண்டு நிற்பாள். ஊசிகள்
தொலைந்து விடக்கூடியன என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. ஆட்டு இடையர்கள் ஆடுகளோடு திரிவது போல அவள் ஊசிகளோடு திரிந்தாள்.
அவள் ஏன் ஊசிகளைக் குத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாள்? என்ற
கேள்வியை திரும்பத் திரும்ப யோசித்திருக்கிறேன். தன்னை கற்பில் சிறந்தவளாகக் காட்டுவதற்கான முயற்சியே அது என்றே முடிவெடுக்க முடிந்தது. இல்லாவிடில் மரக்கோல் போட்டுத் தாங்கும்போது சட்டையால் நீக்கல்கள் தெரியாமல் இருப்பதற்காய் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சிறுவயதில் லுமினா மிகுந்த கண்டிப்போடு வளர்க்கப்பட்டிருப்பாள்
என்றே நினைக்கிறேன். அவளது தாயை 'கரி நாக்குக் கிழவி" என்றே ஊரில் சொன்னார்கள். குழந்தைகள் குழப்படி செய்யும்போதெல்லாம் 'கரி நாக்குக் கிழவி வாறாள்- பிடிக்கப் போறாள்" என்றே பயமுறுத்துவார்கள். நானும் சின்ன
வயதில் அவளது நாக்கை முழுமையான கறுப்பு நாக்கு என்றே கற்பனை செய்திருந்தேன். பல இரவுகள் அவளின் காணியை கனவில்கூட கண்டிருக்கிறேன். பெரும்பாலும் நான் பந்து விளையாடுவதாகவும் அந்தப் பந்து அவளின் காணிக்குள் போய் விழுவதாகவும் அதை எடுக்க நான் ஒழிந்து ஒழிந்து போவதாகவுமே அக்கனவுகள் அமைவதுண்டு. அவை எவ்வளவு பயங்கரமான கனவுகள் என்பது உன்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வளர்ந்ததன் பின்னர்தான் அவளது நாக்கு அப்படி இல்லையென்று கண்டு கொண்டேன். அவளது நாக்கில் நான்கைந்து கறுப்புப் பொட்டுகள்
மட்டுமே கிடந்தன. மிகுதிக் கறுப்பை அவள் வார்த்தைகளால் வளர்த்து எடுத்திருக்கிறாள் என்று தோணிற்று. ஆனால் கிழவி ஒரு நாள் சொன்னாள் 'பேரா என்ர நாக்கில சரஸ்வதி குடியிருக்கிறாள் எங்கிறது இந்த விசர் சனத்துக்கு விளங்கிறதில்ல" என்று. ஆனால் சண்டை ஏதாவது வந்தால் 'ஆடாத் திருக்கை அடித்துப் பிரழுவாய்,சுங்கான் முள்ளுக்குத்தி
கிடப்பாய்,தெண்டல் வந்துகடலோட போவாய் என்று சாபம்போடத் தொடங்கிவிடுவாள். அவள் சாகும்வரை ஊரையே பயமுறித்தினேன் என்ற பெருமை அவளுக்குள் இருந்தது. அவள் செத்தபின்னும் 'கரிநாக்குக் கிழவியின் ஆவி திரியிது" என்ற பயம் ஊராரிடம் இருந்தது.
மனைவியின் மரணத்தோடு கிழவனும் மூலையில் ஒடுங்கிவிட்டான்.
லுமினா தனது தனிமை குறித்து கவலைப்படுபவளாக இருந்தாள். அவளே பல தடவை என் அம்மாவிடம் வந்து 'அக்கா எனக்கு எங்கையாகிலும் மாப்பிள்ளை பாரக்கா"என்று தன் வாயாலேயே கேட்டிருக்கிறாள். ஆனால் அம்மா
சில இடங்களில் தட்டிப்பார்த்தும் எதுவும் சரிவரவில்லை. லுமினாவின் சவர்க்காரம் தேய்ந்தபடியே இருந்தது.........சமூகம் உற்பத்தி செய்து வைத்திருந்த பெண்களுக்குள் அவள் தனியனாகவே திரிந்தாள். ஒருநாள் கடலுக்குப் போனவள் திரும்பி வரவே இல்லை.
லுமினா கடலின் மகளே
எங்கே போனாய்?
சோழகத்தின் இறுமாப்போடு
யுத்தம் செய்தவளே
உனது அம்பறாக் கூடு
சோபையிழந்து போனதென்ன?
என்று புலம்பியவாறே வாசலில் காத்துக்கிடந்தான் கண் தெரியாத அவளின் தந்தைக் கிழவன். அவள் வரவேயில்லை. பின்னர் இடம்பெயர்வுகள் வந்தன எங்கள் கிராமமே சிதறியது அந்தச் சுழியில் கிழவன் என்ன ஆனான் என்பது
எனக்குத் தெரியாமலே போனது. எல்லாவற்றையும் கேட்ட நீயே இதையும் கேட்டுவிடு பெண்ணே. என் சிறு வயதில் நான் விளையாட விளையாட்டுப்பொருட்கள் கொண்டு வந்த அந்தக் கடலே பின்னர் பிணங்களையும் கொண்டு வந்தது. நாங்கள் காட்டு மதிபார்த்து பறிக் கூடுகளை வைத்த அதே கடலின் அடியில்தான் எந்த மதியுமில்லாமல்
யார் யாரோ எல்லாம் மனித எலும்புக் கூடுகளை பரத்தி வைத்தனர். அதன் பின் கடலோடு நான் ஒரு போதும் விளையாடியதில்லை. அலைகள் எனக்கு ஒப்பாரிகளை மட்டுமே சொல்லித் தந்தபடியிருந்தன என்று சொன்னேன்.
அவளது கண்களும் கலங்கியிருந்தன.
00
பின்னர் இருட்டு வந்து விட்டது நான் புறப்பட வேண்டுமென்றேன். அவள் சிரித்தாள் ' இருட்டுக்குள் இருக்கும் வித்தையை கணவாய் மீனிடமிருந்து கற்றுக் கொண்டவரே ஏன் இப்போது இருட்டைக் கண்டு
பயந்து ஓடுகின்றீர்? இங்கே நான் இருட்டை வசிப்பிடமாக்கியிருக்கும் என் அறையைப் பார்த்தீர்களல்லவா? நாம் இருவரும் இதுவரை நேரமும் பேசிக்கொண்டிருந்தபோதும் இருட்டு இங்கேதானே இருந்தது? அதற்குள்
எங்கே போனது உங்களின் அறிவு? என்று அவள் நையாண்டி செய்தாள். எனக்கோ மிகுந்த வெட்கமாக
இருந்தது. இல்லையில்லை அது இல்லை மிக அண்மையில் நானொரு கனவு கண்டேன் அதில் ஒரு கிராமத்தின்
சிரிப்பொலி இருந்தது. விடிந்து எழும்பியதும் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கிராமத்தை எப்படியாவது
தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிடவே வீட்டை விட்டு புறப்பட்டு வந்து
விட்டேன். இந்த இருட்டு இன்னொரு கனவை எனக்குள் தருவதற்குள் அந்தக் கிராமத்தை நான் கண்டு பிடித்துவிட வேண்டும். ஆயினும் அந்தக் கனவு முழுதாய் என் நினைவிலிருந்து அகன்று விடாது" என்று பதில் சொன்னேன்.
அவளும் தலையசைத்தாள். பின்னர் அவள் தானும் என்னுடன் வருவதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறினாள்.
கையிலொரு குப்பி விளக்கையும் எடுத்துக்கொண்டு என்னுடன் புறப்பட்டாள்.

00 கிழவன்
.................................
நாங்கள் நடந்துகொண்டிருந்த வீதியில் ஒரு கிளவனைக் கண்டோம். அவன் கவளம்,கவளமாய் வயதுகளை
உருட்டித் தின்றபடியிருந்தான். அவனது கொடுப்புப் பற்களுக்குள் யுகம்,யுகமாய் அரைபட்டுக்கொண்டிருந்த
கதைகள் இருந்தன. அவன் 'ஈஈ" என்று எங்களைப் பார்த்து சிரித்தபடி இருந்தான். அவனருகில் நான் சென்றபோது என்னோடு வந்தவள் என்னை எச்சரித்தாள். 'தள்ளி நட சில வேளைகளில் உனது கடலில் பிணங்களை அடைய விட்டவன் இவனாக இருக்கலாம்" என்று. அப்போதுதான் என் மண்டைக்குள் ஒரு கேள்வி எழுந்தது இவள் எங்கிருந்து தோன்றினாள்? ஒரு படைப்பிற்கும், படைப்பாளிக்கும் இடையில் இருக்கும்
தொடர்புதானா இது? அப்படியானால் எங்களில் யார் யாரை வழி நடத்துகிறோம்? ஆமாம் இவளது பெயர் என்ன?
அவளிடமே கேட்டேன். அவள் சிரித்தவாறே நீதான் வைக்க வேண்டும் என்றாள் அவளுக்கு நான் மனம்நிறைந்தவனாய்
'பூரணி" என்று பெயர் வைத்தேன். பூரணி சிரித்த முகத்தோடே என்னுடன் கூட நடந்தாள். விசாரிப்பதற்கு யாருமே இல்லை என்பதால் நான் கண்ட கனவைச்சொல்லி கிழவனிடமே விசாரித்தோம். கிழவன் ஒரு நமட்டுச் சிரிப்போடே தன் ஆட்காட்டி விரலால் கடலைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்த ஒரு தீவைக் காட்டினான். கடற்கரைக்குச்
செல்லும் வழியில் ஒரு சவக்காலை இருந்தது. அமைதியாய்க்கிடந்த அந்தச் சவக்காலையை தோண்டியபடியிருந்தான்
ஒல்லியாக நீண்டு வளர்ந்திருந்த 'பாவட்டை" எனும் ஒருவன். 'அவன் அழுவதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாயா" என்று சொல்லியபடியே என்கையைப் பிடித்து நடந்தாள் பூரணி. அவள் சொன்னது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும் ஒரு வெறி பிடித்தவனைப் போல எங்களிடத்தில் ஓடி வந்த அவன் 'நீங்கள் மட்டும் இல்லாத இடத்தில் தேடலாமோ"என்றான். இவனுக்கு எப்படி எங்கள் பயணம்பற்றித் தெரிகிறது? எல்லாமே ஆச்சரியமாகவே நடக்கிறது. என்று எண்ணியபடியே கரையில் கிடந்த படகொன்றில் ஏறி நானும் பூரணியுமாக மரக்கோல் போட்டு தாங்கத் தொடங்கினோம். ஆனால் ஓர் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது மரக்கோல்கள் எட்டாமல் திரும்பவும் கரைக்கே வரவேண்டி இருந்தது.
கடலுள் ஓடும் ஆற்றில் கீள்நீர்வாடு அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் தாங்கித் தாங்கி தோல்வியடைந்து கரைக்கே திரும்பி வந்தபடி இருந்தோம் மிகுந்த களைப்பும், வேதனையும் நெஞ்சை அழுத்தியபடி இருந்தது. சந்தோசத்தைத் தேடிப்போகும் இடங்களெல்லாம் அதைவிடவும் இரட்டிப்பான துயரங்களே சுமைகளாக வந்து அடைத்துக்கொண்டு நிற்கிறது பூரணி. என்று
நான் வேதனைப் பட்டுக்கொண்டேன். சரி சரி அதையெண்ணி இன்னொருமடங்கு துயரத்தைக் கூட்டப் போகிறாயா? என்றாள் பூரணி.
உண்மையில் அந்தக்கனவு எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா?
நான் அவளுக்கு கனவைச் சொல்ல அவள் நாடியில் கையை ஊண்டியபடி 'ம்"கொட்டத் தொடங்கினாள்.
00 கனவு
.................................
கடல் 'ஓ" வென்று இரைந்து கொண்டிருந்தது. நல்ல காற்றுத்தான். உடம்பு நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது. உடல்கள் நிறையவும் உயிர் நெருப்பு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பைச் சுமந்துகொண்டுதான்
நீருக்குள்ளால் பயணித்தோம் எங்களின் தந்தைபூமிக்கு. காத்திருந்து கிடைத்ததொரு படகில் பயணித்து தமிழ்நாட்டில் எங்களின் உயிரை தக்க வைத்துக்கொள்ளப் போகிறோம் என்கின்ற கற்பனை எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்தது. 'உயிரை' தீராத சோழகத்திற்குள் ஒரு குப்பி விளக்கைக் கொழுத்திச் செல்வது போலத்தான் கொண்டு போனோம்.
ஆனால் சோழகம் பெருத்தது.... எங்கள் குழந்தைகளின் பற்கள் குழிரால் கடகடக்க கடல் குளிப்பாட்டியது. ஆடைகளை பிளிந்து பிளிந்து போர்த்தினோம் அவர்களின்மேல். ஆனால் அலைகள்..... அலைகள்........
கொள்ள முடியாத அலைகளெல்லாம் எம்முடன் வந்து குழுமிக்கொண்டன. தாங்களும் அலைந்து திரிபவர்கள்தானே என்று எங்கள் தோழ்களில் கைகள் போட்டன. ஜயோ கொட்டுண்டு போனது ஒரு சனக்கூட்டம். என் கண்முன்னே
கை கால்களை அசைத்தபடி எத்தனை குழந்தைகள் நீருக்குள் போயினர்..... அம்மாக்கள்... ஜயாக்கள்... சொந்தங்கள்... எல்லாக் கண்களும் எனக்கு எதையோ வல்லமையோடு உச்சரித்து விட்டுத்தான் போயின. அந்தக் கண்களில் கொழுந்து விட்டெரிந்த கடைசி நெருப்பினை நான் கண்டேன். நெருப்பால் நிறைந்தவனாய் நான் நீந்தினேன் உயிர்கள் கொட்டுண்ட அந்த இடத்தை உயிர்களாலேயே குறிப்பு வைத்துவிட்டு நான் நீந்தினேன். கடல் அழித்துவிட்டது என் உயிர்க் குறிப்புகளை......
என் மனம் போன போக்கில் நீந்தினேன்.

மனசுக்கு ஒரு கரை தேவையாய் இருந்தது. அந்தக் கரைதான்..... அந்தக் கரைதான்....... இப்போதும் நான் தேடிக்கொண்டிருக்கும் எனது இலட்சிய பூமி. அதில்தான் அந்த சிரிப்புச் சத்தங்கள் பூத்திருந்தன. கரைமுழுவதும் வாழ்க்கையின் நறுமணம் பரவியிருந்தது.. அதேதான்.
நான் கரையொதுங்கியதும் ஓடி வந்து என்னைத் தூக்க கைகள் இருந்தன. என்னைக் குழிப்பாட்டி வெள்ளை ஆடைகளை உடுத்திவிட்டு இளைப்பாறுதலைத் தர உறவுகள் இருந்தன. தமிழ் அவர்கழுக்கு உணவாக இருந்தது. நான் கண்ட அந்த மனிதர்களுக்கு பலவர்ணங்களாலான
சிறகுகள் இருந்தன. அவர்களின் உடல்களெங்கும் மீன்களைப்போன்று செகிள்கள் இருந்தன. அவர்கள் பறப்பதிலும் நீந்துவதிலும் கெட்டிக் காரர்களாக இருந்தனர். எனது நிலத்தின் மனிதர்களும் இவ்வாறே இருந்தால் விமானத்
தாக்குதல்களிலும் கடல் அனர்த்தங்களிலுமிருந்து தப்பியிருப்பார்களல்லவா? என்று நினைத்துக்கொண்டேன். உண்மையில் நான் கனவில் கண்டவர்கள் அதி மனிதர்கள்தான். பூரண சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்க வல்ல பரிணாமமடைந்த மனிதர்களின் குறியீடுகள்தான். ஆனால் அந்தக் கனவு .....அந்தக் கனவு .... இந்த அளவோடு மறந்து போனது.
நான் சொல்லும் அந்தக் கனவு உனக்கு ஒரு மிகு புனைவாகத் தெரியலாம். ஆனால் அந்த மனிதர்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும்
இருந்தார்கள் தெரியுமா? இது கனவுதானே என்று நான் விட்டுவிட விரும்பவில்லை. ஏனெனில் இந்த நிலம்தான் நீ கண்டடைய வேண்டியது" என்று எனக்குள் ஒரு குரல் கேட்டபடியே இருந்தது. இதை எல்லோரும் நம்பப் போவதில்லை ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா? உன்னைக் காண்பதற்கு சுமார் நான்கு இரவுகளுக்கு முன்னரே உன்னைக் கனவில் கண்டு விட்டேன் தெரியுமா? உன்னை முதன் முதலில் பூங்காவில் கண்டபோது எந்த ஆடையை நீ உடுத்தியிருந்தாயோ அதே மெல்லிய நீல ஆடையுடன்தான் அந்தக் கனவிலும் வந்திருந்தாய். தெரியுமா? என்றேன்
அவள் ஆச்சரியமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
00

நாங்கள் இருவரும் கரை மணலில் படுத்திருந்தபோது கிழவனின் சிரிப்பொலி நளினமாய் நையாண்டியாய் கேட்டபடியிருந்தது. சவக்காலையில்
பிணங்களைத் தோண்டிக்கொண்டிருந்தவனைத் தின்ற வயிறு பெருத்த நரிகளின் ஏப்ப ஊழையும் அதில் கலந்திருந்தது.
கடற்கரையிலேயே உறங்கிப்போன எங்களை
கிழவன்தான் தட்டி எழுப்பினான். அவனது கையில் பிணக்குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்த 'பாவட்டை"என்ற மனிதனின்
ஆடைகளடங்கிய பொட்டலமொன்று இருந்தது. அதை அவன் என்னிடம் நீட்டி மகனே ,தன் உரிமையாளன் உயிரோடு இருந்த
போது பிணக்குளிகளைத் தோண்டுவதிலேயே தன் சக்தியை விரயம் செய்தான். அவனிடம் இறந்து போன அவனது
உறவுகளின் பட்டியலொன்று இருந்தது. அவன் அந்தப் பட்டியலை வாசித்து வாசித்து இறந்தவர்களின் ஆத்துமாவை தேடிக்கொண்டிருந்தான். ஆனால் நேற்று இரவு அவனும் மரணமடைந்துவிட்டான். என்றான் கிழவன்.
மேலும் எங்களது பயணத்தைத் தொடர 'சிங்கமலைக் குகையே" பொருத்தமானதென்று ஆலோசனைகூறி வழியனுப்பி விட்டான். நாங்களிருவரும் 'சிங்க மலைக்" குகையைத்தேடி நடக்கத் தொடங்கினோம். எங்கள் இருவரின் மனதிலும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த கிராமம் இலக்காகியிருந்தது. அவள்கைகோத்திருந்தது எனக்கு பலமாக இருந்தது.
'முடிந்தது"

Monday, August 2, 2010

கொழுக்கட்டைக் கள்வர்கள்

நேசனே உம் கைகளில்
நீண்ட இரும்பாணிகள்
நிட்டூரமாயறய
நேசக் கண்ணீர் சொரிந்து
பலி ஆனீர்.........

' பதின் நான்காம் ஸ்தலம்" முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை
நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத செபம் ஒன்றைத் தொடங்கி
புதுசாய் ஒரு குறுக்குப் பாதையை தொடங்கிக் கொண்டிருப்பார் 'சங்கித்தன்".
சங்கித்தன் எவ்வளவுதான் கெட்டிக் காரனாய் இருந்தாலும் பழய செபங்களையும்
புதுச்செபங்களையும் பொருத்துவது என்றால் கொஞ்சம் கடினமான வேலைதான்.
இருந்தாலும் எல்லாத்துக்கும் இடையில் கொஞ்சம் 'பரமண்டல
மந்திரத்தையும்"கொஞ்சம் பிரியத்த மந்திரத்தையும் கலந்துகட்டி
ஒப்பேற்றினால் கால வித்தியாசம் தெரியாது. கால வித்தியாசம்
தெரியவில்லையென்றாலும் 'கால்" வித்தியாசம் தெரியும். எனக்கு முழங்கால்
மடக்கி இருப்பதென்றாலே சரிவராததொரு வேலை. ஆனாலும் கோயிலுக்குள் நான்
எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை எனக்குப் பின்னால் இருந்து 'சவீனா
ரீச்சர்" கண்குத்திப் பார்த்துக்கொண்டிருப்பாள். நான் முழங்காலில்
இருக்கவில்லை என்றாலோ, பக்கத்திலிருக்கிற சளிப்பயல் இன்பராசைச் சுறண்டிக்
கதைத்தாலோ பின்னால் நசியாமல் வந்து மண்டையில 'டொங்" என்று குட்டும்
மனிசி. சவீனா ரீச்சருக்கு முழங்கால் மடித்து இருப்பதென்றால் சரியான
விருப்பம் போல... 'கறாத்தே" பளகும் ஆட்கள் குத்துகிற கைகளின் மொளிகள
நிலத்தில் ஊண்டி சமன் செய்வது போல மனிசி முழங்கால செய்து
வைத்திருப்பாபோல.


சவீனா ரீச்சர் கிறிஸ்தவக் கடமைகளை தவறாமல் கடைப்பிடிக்கின்ற ஒரு
மனிசியென்று சொல்லலாம். எப்போதுமே கோயிற் காரியமென்றால் ரீச்சர்தான்
முன்னால் நிற்பார். 'பெரியகிழமை வருகுதென்றால் " முதற்கிழமையே ஊரில்
ஆயத்தங்கள் தொடங்கிவிடும். 'பெரிய சிலுவைப் பாதை" வரப்போகும்
வீதிகளெல்லாம் சிரமதானங்கள் உசாராக நடக்கும். அரிசிமாவு இடிப்பதற்கும்
அனேகமாக ரீச்சர் வீட்டு உலக்கைதான் ஊரைச் சுற்றி வரும். சிலுவை சுற்றாத
இடமெல்லாம் ரீச்சர் வீட்டு உலக்கை சுற்றி வரும்.
கோயிலில் துண்டுறுட்டிப் போட்டு 'பெரிய சிலுவைப் பாதைக்கு" ஆட்களை
எடுப்பார்கள். பெரிய சிலுவைப்
பாதையில் சிலுவை சுமப்பவர்கள் நாற்பது நாளும் 'ஒறுத்தல்" செய்து வெள்ளை
உடுப்போடு வருவார்கள். ஒவ்வொரு
'ஸ்தலத்திற்கும்" ஒவ்வொருவர் சிலுவையைக் கைமாற அவர்களின் தலைகளுக்கு
ஈச்சம் முள்ளில் செய்த 'முள்முடி"
வைக்கப்படும். முள்முடியை வைத்துக்கொண்டு தலையை சாய்த்து சாந்த
சொரூபிகளாக அவர்கள் நிற்க. அநேகமானவர்களின்
வீட்டுப் பெண்களின் கண்களிலிருந்து பொலு பொலுவென கண்ணீர்க் கால்வாயொன்று
ஓடிக்கொண்டிருக்கும்.

எங்கே சுமந்து போறீர்
சிலுவையை நீர்
எங்கே சுமந்து போறீர்
பொங்கும் பகைவராலே
அங்கம் நடு நடுங்க
எங்கே போறீர்......

என்ற பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க காணி காணியாய்க் கடந்து
கொண்டிருப்பார்கள் யேசுநாதர்கள். பெரிய வெள்ளிக்
கிழமை கண்ட யேசுநாதர்கள 'உயிர்த்த ஞாயிறு "காண வேண்டுமென்றால்
நம்பிக்கையோடு இறைச்சிக் கடைக்கோ,
கள்ளுத் தவறணைக்கோ போனால் கண்டு கொள்ளலாம். அநேகமான கரையோரக்
கிராமங்களில் யேசுநாதர்கள் இப்படித்தான்
நடந்துகொள்கிறார்கள். சங்கித்தன்களும், சவீனா ரீச்சர்போன்ற ஆட்களும்தான்
எங்களைப்போன்ற 'குழந்தை யேசுக்களை"
வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
00
பெரிய வெள்ளிக்கிழமை இரவு வந்தால் தவறாமல் ரீச்சர்
வீட்டில் களவுபோவது வளக்கம். ரீச்சர் வியாழக் கிழமையே பூசைக்கு முதல்
'காகுவின் மகள் லுமினாவைக்" கூப்பிட்டு அரிசிமா
இடித்து வறுத்து தயாராக வைத்து விடுவாள். வெள்ளிக் கிளமை பூசைக்கு
போவதற்கு முன்னரே பயறெல்லாம் குளைத்து
கொழுக்கட்டை பிடித்து ஓர் இசத்துக்குள் மூடி வைத்துவிடுவாள். ரீச்சர்
எப்ப கோயிலுக்குப் போவாள் என்று பார்த்தபடியே
அஞ்சாறு இழந்தாரிப் பொடியள் பார்த்துக்கொண்டிருப்பானுகள். ரீச்சர்
போறாவாம் எங்க இவனுகள் 'கொழுக்கட்டை வேட்டையில்"
இறங்கி விடுவான்கள். ரீச்சர் வீட்டுக் கொழுக்கட்டையில் தவறாமல் ரீச்சரின்
(குட்டுகிற)கை விரல்கள் நான்கும் பதிந்து
இருக்கும்.
அனேகமாக எங்களோட்டப் பெடியளுக்கு 'சவீனா ரீச்சர்தான்" அச்சசிற்ற சிலுவ
அடையாளத்தினாலே என்று சொல்லித்
தந்திருப்பாள். ரீச்சர்தான் என்ர கடைசித் தம்பிக்கும் சொல்லிக்
கொடுத்தாள். நாங்கள் வளர வளர ரீச்சர் வீட்டில் கொழுக்கட்டைக்
களவும் ஒரு சம்பிரதாயமாகவே மாறிப்போனது.
கூடிக் களவு செய்தல் என்பது களவின் தன்மையையே கெடுத்து விடக்கூடியது.
உண்மையில் களவு என்பதும் ஒருவிதத்தில் மென்மையானது என்று 'கொழுக்கட்டைக்
களவின்" தன்மையை வைத்தே புரிந்து
கொண்டேன். அதைவிட சுடச் சுட களவெடுப்பதுதான் எவ்வளவு ஆனந்தமான விடயம்...
அது மட்டுமன்றி களவு இரகசியத்தை
விரும்புகிறது,அது இன்னொரு களவுக்கான ஆயத்தத்தை முதற்களவிலேயே
நிகழ்த்திவிடுகிறது. இரகசியம் கசியும்போது
களவு அதன் அழகை இழக்கிறது.
ரீச்சர் வீட்டில் கொழுக்கட்டைகளை சுடச்சுட அள்ளி சறத்தினுள் போட்டுக்
கொண்டு 'மதகடியில்"
போயிருந்து பங்கு பிரிப்பதில் சிலவேளைகளில் சண்டை வந்துவிடும்.
உருந்துண்ட கொழுக்கட்டைகள் சறக்காறனுக்குப் போக மிகுதி
பிரிக்கப்படும். ஆளுக்கொரு 'ஏவறைகளோடு" கொழுக்கட்டைக் காரர்கள் பிரிந்து
போகும்போது அனேகமாக பூசை முடிந்து சனங்கள்
வீடு திரும்பிக்கொண்டு இருப்பார்கள்.

00

இயக்கக் காரர்கள் புதிது புதிதாக ஊருக்குள் வந்துபோய்க்கொண்டிருந்த
காலம். கொழுக்கட்டைக் கள்வர்கள்
ஒரு 'பெரியசனிக்கிழமை" கோயில் 'போட்டிக்கோவினுள்"ஒன்று கூடினார்கள்.
வெள்ளிக்கிளமை செத்த இயேசு
சனிக் கிழமை கல்லறைக்குள் இருப்பதால் கோயில் பூட்டிக் கிடந்தது. கூட்டம்
கூடிய'கொழுக்கட்டைக் கள்வர்கள்"
அன்று புதிதாக ஒரு தீர்மானம் எடுத்தார்கள். 'ஊருக்குள் நடக்கும்
தீமைகளுக்கு எதிராக ஒரு இரகசிய இயக்கத்தைக்
கூட்டி இயங்குவது" என்பதுதான் அந்தத் தீர்மானம். 'சாமர்த்தியமாக மதில்
பாய்ந்து கொழுக்கட்டை திருடி உருந்திண்டாமல்
கொண்டு வருவதில் கை தேர்ந்த ஒருவன்" தலைவனாக தெரிவுசெய்யப்பட்டான். அதன்
பின் சனங்களைப் பயப்படுத்த
நமக்கு 'துவக்குகள்"வேண்டுமென்றான் ஒருவன். துவக்குகள் செய்வதற்கான
பலகைகளை எடுப்பதற்கு 'வள்ளம் செய்யும்
சிமியோனின் பட்டறையில் பலகைதிருடுவது என்று முதல்நடவடிக்கை தீர்மானமானது.
அடுத்த தீர்மானம் பட்டாசுத் திரியில்
ஊதுபத்தியைக் கொழுத்தி விதானைவீட்டுப் பூவரசம் பொந்தினுள் வைத்து
விதானையை பயமுறுத்துவது என்பது.
திட்டமிட்டபடியே பலகைதிருடும் நடவடிக்கை ஒரு கிழமைக்குள் வெற்றிகரமாக
நிறைவேறியது. ஆனால் விதானை வீட்டுப்
பூவரசம் பொந்தினுள் பட்டாசு வைக்கப்போன 'பாதிக்குண்டி டக்கிளஸ்"
விதானையிடம் பிடிபட்டு தகப்பனிடம் விதானை
முறையிட்டதால் முற்றத்துப் பூவரசில் கட்டி அடிக்கப் பட்டதிலிருந்து அவன்
இயக்கத்துக்கு வாறதும் இல்லாமல் போனது.
பலகைகள் சேகரித்திருந்தாலும் துவக்கின் முன்னால் வரும் குழாய்களை
எடுப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.
ஒருவன் வலைகளின் கண்கோர்க்கும் குளாயினை தகப்பனுக்குத்தெரியாமல் எடுத்து
வெற்றிகரமாக பலகையில்மூட்டி ஒரு
அசலான துவக்குபோலவே செய்தான். இன்னொருவன் தன்னுடைய பாணியில் 'சைக்கிள்
போக்கினை"வெட்டி ஒன்றினைச்
செய்தான். யாருடைய துவக்கு வடிவானது என்ற விமர்சனங்கள்
நடந்துகொண்டிருக்கவே 'ரீச்சர்"வீட்டில் திருடிய
'அடுப்பூதும் குழல்" யாருக்குச் சொந்தம் என்ற இருவருக்கிடையிலான
சண்டையில் இயக்கம் பிரிந்துபோனது. அதன் பிறகு
அப்படியே சோர்ந்து கிடந்த பெடிகளை அதன்பின்வந்த 'பெரியவெள்ளிக்
கிழமையொன்று" உசுப்பேத்தியது. இம்முறை
ரீச்சர் வீட்டில் அரிசிமாவு இடிக்கவில்லை. ஆயினும் 'கோதுமை மாவுக் கொழுக்கட்டை".

கோதுமை மாவினை அங்கே பலர்
விரும்புவதில்லை. ஏனெனில் கொழுக்கட்டைக் கள்வர்களின் மூன்றாம்
தலைமுறையினர் அதனை 'சவப்பெட்டிக்கு பசை
கிண்டும் மாவு" என்றே அழைத்து வந்தனர். அதனை அவர்கள் கைகளில் தொடவே
கூச்சப்பட்டனர். அவர்களிடையில்
இருந்த மனநிலை கொழுக்கட்டைக் கள்வர்களிடமிருந்து முற்றுமுழுதாக
அகலாதபோதிலும் ரீச்சர் வீட்டுக் கொழுக்கட்டை
ருசியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் களவுசெய்யும் சம்பிரதாயம் அம்முறை
நடந்தேறியது. ஆனால் யார் யாரெல்லாம்
கொழுக்கட்டைக் களவில் ஈடுபட்டவர்கள் என்பதை டக்ளஸ் ரீச்சரிடமும் பாடகர்
குளாமிலிருந்த குமர்ப் பெட்டைகளிடமும்
சொல்ல கொழுக்கட்டைக் கள்வர்களுக்கு பெருத்த அவமானமாகிப் போனது.
அதன்பின்னர் கொழுக்கட்டைக் களுவும்
இல்லாது போனது.

00
சவீனா ரீச்சர் ஊரைவிட்டு இடம்பெயர்ந்த போது கொழுக்கட்டைக் கள்வர்களும்
இடம் பெயர்ந்தார்கள்
பெரிய வியாழக்கிளமை அல்லாத நாட்களிலும் யேசுநாதர்கள்
பிடிபட்டுக்கொண்டிருந்தார்கள்,
சிலுவைகளுக்குப் பதிலாக சன்னங்களால் துளையுண்டு கிடந்தார்கள். நீண்டதொரு
'தபசு காலத்தில்"
கொழுக்கட்டைக் கள்வர்கள் பசியோடு கிடந்தார்கள். அவர்களின்
வயிறுகள்'பசாம்" வாசித்தன.
பிரேதப் பெட்டிகளுக்கு ஒட்டும் மாவுகூடக் கிடையாமல் கொழுக்கட்டைக்
கள்வர்களின் சடலங்களை
ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்கிளஸ்
மட்டும் 'உயிர்த்த ஞாயிறைக்
கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்.

நிறைவடைந்தது.

மெலிஞ்சிமுத்தன்

கூட்டிச் செல்லும் குரல்.

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி......
சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத்
தெரியவில்லை. நடக்கும்போதில்கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்............
செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/

எங்கே நிற்கிறாய்?
நான் நடந்துகொண்டிருக்கிறேன்.....
யாரோடு போகிறாய்?
நானும்,நானும்,நானும்... நான்களோடு....
சரி.... எங்கே போகிறாய்?
என் தேசத்திலிருக்கும் என் கிராமத்தையும் தாண்டி....
என்னச் சந்திக்கிற விருப்பமேதாவது இருக்கோ?
நீ மையப்படுத்தப் பட்டிருக்கிற ஒன்றாய் தென்பட்டால்
உன்னை நான் காண விரும்ப இல்ல .....
நானும் உன்னப் போலதான் முடிஞ்சால் வா....
எங்க நிக்கிறாய்?
ஆற்றங்கரையில........

கரகரத்த குரல் செல்பேசியை வைத்துவிட்டது.... அந்தக் குரலுடன் உரையாடிய
பின்னர் கொஞ்சம் வார்த்தைகள் மிச்சமிருப்பதாய் உணர்ந்தான் குரல் சொன்ன இடம் தேடி புறங்கைக் கட்டோடு நடக்கலானான்.

வாழ்க்கை முழுவதும் அவன் உள்ளும் புறமுமான குரல்களை கேட்டபடிதான் இருக்கிறான்.
குரல்கள் அவனை அழைப்பதும் அவை அழைக்கும் திசை நோக்கி அவன் நடப்பதும்
தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அவனது பயணங்களெல்லாமே இதுவரையில் ஏதோ ஒரு
தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதற்காகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக்கொள்கிறான்.முன்னொருநாளில் பனங்காய்ப் பணிகாரம் தின்றுகொண்டிருந்த அவினாசி அக்காளை எச்சிப் பேய் ஏமாற்றிக் கூட்டிச்சென்ற கதையை அவன்
நினைத்துப் பார்க்கிறான் அவனது கிராமத்தில் பேய்கள் கூட்டிச் சென்று வீடுதிரும்பாத ஒவ்வொரு குமரியின் முகமும் அவனது நினைவில் வந்துபோக அவன் நடந்துகொண்டிருந்தான்.
00
அவன் நடக்க நடக்க காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன, கற்பனை வீதி
திறந்தபடியே இருந்தது...
அந்தத்தெருவில் ஒரு குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையோ கண்களால் நீர்வடிய
அவனைப் பார்த்தபடி நின்றது. அது கண்ணிமை உதிர்ந்து கண்ணுக்குள் விழுந்து
விட்டதாகச் சொல்லி அழுதபடி இருந்தது. அவன் அதன் கண்களை ஊதித் துடைத்தபோதும் அதன் கண்ணீரையோ கலங்கலையோ நிறுத்த முடியவில்லை. 'உனது வீட்டைக் காட்டினால் கொண்டுபோய் விடுவேன்' என்று அவன் குழந்தையிடம் கூறினான் குழந்தையோ வெவ்வேறு தெருக்களைக் காட்டியது.....
அந்தத் தெருக்களில் அவன் குழந்தையைக் கூட்டிச் சென்று வெவ்வேறு
நிறங்களையும், மொழிகளையும் கொண்ட மனிதர்களைக் கண்டு ஏமாற்றமடைந்தான் குழந்தையோ 'இந்தத் தெரு முன்னர் இதிலே இருக்கவில்லை' என்றும் ' இந்தவீடு முன்னர் இதிலே இருக்கவில்லை ' யென்றும் அவனைக் குளப்பியது. பின்னர் தன் தந்தைக்கும்,
தனக்கும் ஒரேமாதிரி 'தழும்பு' முதுகில் இருப்பதாகச் சொல்லியது. அவனோ எப்படியாவது குழந்தையை உரிய இடத்தில் சேர்த்துவிடலாமென்ற நம்பிக்கையோடு அதன் முதுகை உற்றுப்
பார்த்தான். இப்போ அவனது கண்கள் கலங்கின ஏனெனில் அது பார்ப்பதற்கு 'சிங்கள சிறியின்' உருவமாக இருந்தது.

அவனுக்கு குழந்தையை எங்கே கூட்டிக் கொண்டுபோய் சேர்ப்பதென்று தெரியவில்லை. அவன் தெருக்களில் கோசமிட்டுச் செல்லும் மனிதர்கழுக்குள் அதன் தந்தையைத் தேடினான். தான் குழந்தையோடு மினக்கெடுவதால் குரல் சொன்ன திசைக்கு தன்னால் போக முடியவில்லையே எனும் துயரம் அவனுக்குள் மூண்டது...அவனோ
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் அதனைத் தூங்கவைக்கவும் தென்மோடிக் கொச்சக தருவொன்றை இசைக்கத் தொடங்கினான்..

நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத் தின்று பாதியாகும்/
காற்றினிலே ஓலக்குரல்
கரைமுழுதும் பரவிவிடும்/
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை/
பரந்த சிறைப் பட்டணங்கள்
பாவம் இந்த கேடயங்கள்/

ஆரோ மூட்டி வைத்த
அடுப்புகள் எரியுதடி - ஆரிராரிரோ
அதனிலே தினமெரியும்
விறகுகள் ஆனோமடி - ஆரிராரிரோ
- பனையடி நிழலிலே
கோடையில் மறைந்திருக்கும்
குடையற்ற மடையர்களோ- ஆரிராரிரோ

குழந்தை அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை தோழில் போட்டபடி அவன்
நடந்துகொண்டிருந்தான்......

00

நடக்க நடக்க பகல் தேய்ந்துகொண்டிருந்தது. அவனோ தேய்ந்து போன பகலின்
முகத்தைக் காட்டி 'பார் பறவைகள் தங்கள் கூடுகளுக்குச் செல்கின்றன..ஏதோ அவசர அலுவலாய் 'ஸ்கங்குகள்' கூட வீதிகளைக் கடந்து கொண்டிருக்கின்றன.. நானும்
நீயும்மட்டும்.........அலைந்து கொண்டிருக்கிறோம்' என்றான். பின்னர் குழந்தையோ தன் கண்ணை மூட முடியவில்லையென்றும், இரவிரவாகத் தான்
விழித்திருக்க கதை சொல்லுமாறும் அவனைப் பார்த்துக் கேட்டது. அவனும்

என் பிரியமான குழந்தையே/
பூவரசம் வேர்கள் பின்னிப் புரயோடிக் கிடக்கும் என் வரண்ட நிலதில் பல
ஆண்டுகளாய் கிளைவிரித்து கிராமத்து மனிதர்களின் ஆள்மனதின் ஓரங்களில் அச்சுறுத்தலை உண்டுபண்ணும் ஓர் ராட்ஸஸப் பூவரசு பற்றிச் சொல்கிறேன் கேள். என்று ஓர் கதையின் கிளையை விரிக்கத் தொடங்கினான்.

00

நாங்கள் பூவரசுகளுக்குள்தான் வளர்ந்தோம், கொழுத்தும் வெய்யில்காலத்தில்
பூவரசம் நிழல்தான் எங்கள் தஞ்சம். பூவரசம் மொட்டுகளைப் பிடுங்கித்தான் சுவர்களில் நாங்கள் ஓவியங்களை வரைந்து பளகினோம், எங்கள் கடற்கரையின் 'அந்தோனியார்' கோவில் திருநாளில் பொங்கிய பாற்சோறினை அகன்ற பூவரசம் இலைகளைப் பிடுங்கி உள்ளங் கையில் வாங்கித்தான் நாங்கள் உண்பது வளக்கம்.
சூடுபட்டுச் சோர்ந்த பூவரசம் இலைகளின் வாசம் பாற்சோற்றுடன் கலந்து
வரும்போது எவ்வளவு அருமையாக இருக்கும் தெரியுமா? பூவரசம் இலைகளில் காம்புகளைப் பிய்த்து'றபர் பான்ற்'ல் வைத்து அடித்து 'இயக்கமும் ஆமியும் விளையாட்டு' விளையாடுவோம். மழைகாலத்தில் பூவரசுகளில் மயிர்க்
கொட்டிகள் பற்றிக் கொள்வதால் விவசாயக் கிராமங்களிலிருந்து வரும்'ரக்டர்காரர்கள்' விலைபேசி பூவரசுகளை மொட்டையடித்துவிட்டுச் செல்வார்கள். பூவரசுகள் மொட்டயடிக்கப்
பட்ட பின்னர் ஊரே வெளிச்சமாகியிருக்கும் வெளிச்சமான அந்தக் கிராமத்தில் வீதியோரங்களில் வெட்டி விடப்பட்ட மழை வெள்ள நீரோட்டத்தில் நாங்களோ முள்முருக்கில் வள்ளங்கள் செய்து போட்டிக்கு ஓடவைப்போம். பூவரசங் 'குளைவெட்டுக்
காலத்தில்' மீனவர்கள் 'கண்பார்த்துவைத்த' நேர்த்தடிகளை 'மரக்கோல்களுக்கு
பாவிப்பார்கள்.


எனது கிராமத்தின் பிரபல்யமான பூவரசுகள் பலவற்றை நான் அறிந்து
வைத்திருந்தேன். எந்தப் பூவரசின் இலையில் குழல் சுருட்டினால் நல்ல சத்தம் வரும் என்று பார்த்திருக்கிறேன். பூவரசம் குழலில் நான் இசைத்த பாடல்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற கவலையே எனக்கு
அப்போதெல்லாம் இருந்தது. எனக்கு பூவரசுகளுடன் சினேகம் இருந்தபோதும் எங்கள் கிராமத்தின் 'ராட்ஸஸப் பூவரசு' ஒன்று எனக்கு அச்சம் தரக்கூடியதாக இருந்தது. அது எங்கள் கிராமத்தின் முன் மூலையில் நின்றது. அந்த மரத்தின் வெடித்தபட்டைமேனியில்
நான் பேயின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன். அந்த மரம் நான்
பிறப்பதற்கு முன்னரே அங்கு நின்றது. நான் அறிந்து துழிர்த்து வளர்ந்த மரங்கள் சில காய்ந்து பட்டுப் போகும் போதெல்லாம் இந்த மரம் மட்டும் இப்படி
முற்றி முறுகி வளர்கிறதே இதன் வளர்ச்சிக்குள் இருக்கும் இரகசியம் என்ன?
எந்த சக்தி இதனை வளர்க்கிறது என்று யோசிப்பேன்.... தடித்துப் புகை பிடித்த இலைகளோடு அது வளர்ந்தபடியே இருக்கிறது....
ஒருநாளும் அதன் இலைகளில் நான் இசைமீட்ட விரும்பியதில்லை ஏனெனில் அது
'சுடுகாட்டு மரம்'.

என் பிரியமான குழந்தையே /
எனது மண்ணின் சுடுகாட்டு மரங்கள் மட்டும் ஏனிப்படி நீண்டு
வளர்கின்றன?................................
அவற்றின் கிளைகளில் குடிகொண்டு பேய்கள் மீட்டும் அபஸ்வரங்கள் ஏனிவ்வளவு
உயர்ந்த ஸ்தாயியில் கேட்கின்றன....... பாவம் நீ/ உன்னிடம் நான் எதையும்
கேட்கவில்லை...

அந்தப் பூவரசின் அடியில் இரவுகளில் எரிந்துகொண்டிருக்கும் சென்னிறத்தீயை
பலமுறை கண்டிருக்கிறேன்.
அது நெருப்புக்குள்ளேயே வித்தியாசமான நெருப்பு.

00

அந்தச் சுடுகாடு எங்கள் கிராமத்தை ஒட்டி இருந்தாலும் அது எங்கள்
கிராமத்து மக்களின்மீது ஒடுக்குமுறையை
மேற்கொண்ட அயலூர் உயர் குடியினர் என்று சொல்லப்பட்ட மக்களினுடயதாக
இருந்தது.வறுமைப்பட்டிருந்த
எங்கள் கிராமத்தின் சனங்களை வைத்தே அவர்கள் தங்கள் சுடுகாட்டிற்கான
பாதையையும் போட்டார்கள்.
அங்கு வேலை செய்தவர்களுக்கு அவர்கள் ' மீன் பேணிகளைக்" கொடுத்தார்கள்.
அந்த வீதி என் கிராமத்தை
குறிச்சி பிரித்து முடக்கவே என்கின்ற உண்மை தெரிவதற்குள் காலம் எத்தனையோ
சூட்சிகளைச் செய்துவிட்டது..........
அந்த 'ராட்ஸஸமரம் ' அங்கேயே நிற்க நாங்கள்மட்டும் இடம் பெயர்ந்துவிட்டோம்.

என் பிரியமான குழந்தையே/
இவ்வாறான ஒடுக்குமுறைகளை எதிர்த்த ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார்.
அவர் சாதாராணமான
ஒருவரில்லை. 'வார்த்தைகளைக் கோர்த்து மெட்டுக்கட்டி மேடைகளை ஆண்ட ஓர் மகா கலைஞன்'
' மடுத்தீஸ்' என்ற அவர் பெயருக்கு முன்னோ,பின்னோ எந்தப் பட்டங்களும்
இருந்ததில்லை. பட்டங்களைக்
கடந்த மனிதர்களில் அவரும் ஒருவர். பெரும்பாலான மேடைகளில் 'மடுத்தீஸ் '
கோமாழி வேடமிட்டே
வருவார். எப்போதுமே கூத்துப் பிரதியையும் தாண்டி நிற்கும் அவரது நகைச்
சுவைக் கதைகள் இடங்களையும்,
காலத்தையும் இணைக்கும் சந்திகளகவே அமைந்திருப்பது வளக்கம். ஸ்பானிய அரசி
நீராடிவிட்டு
வரும்போது யாழ்ப்பாணத்து மடுத்தீஸ் நடு உச்சி கிளித்து 'பவுடர்' போட்டுக்
கொண்டு 'மானா மடுத்தீசுக்கு
சூனா சுகமில்லை' என்று பாடிய படியே வருவார். மடுத்தீஸ் மேடையில்
தோன்றுகிறார் என்றால் அவரது
மச்சாள்மாரின் முகங்களில் வெட்கம் வெண்ணையைப் போலத் திரண்டு வரத் தொடங்கிவிடும்.
மடுத்தீஸோ தன் மச்சாள்மாரின் பெயர்களை
காட்சிகளுக்குள்ளும்,பாடல்களுக்குள்ளும் சொருகி
மெட்டுக் கட்டத் தொடங்கிவிடுவார். அது உள்ளூர அவர்களுக்குள் ஓர்
இன்பத்தைத் தோற்றுவிக்கும்.

என் பிரியமான குழந்தையே/
கடலில் மீன்களைத் துரத்திச் செல்லும் மனிதர்களை நீ கண்டிருக்கிறாயா?
காடனும்,கயலும்,சிறையாவும்,
மணலையும், திருவனும்,முரலும் - 'ஏழாத்துப்பிரிவு' நீர் குவியும் கடலில்
குருத்துக் கயிற்றுடன்
பதுங்கியோடிவரும் மடுத்தீஸைக் கண்டு பயந்தன. பெரியபாரும்,
புளியடிப்பாரும், நாவட்டக் கல்லும்
அவருக்குப் பணிந்து நின்றன. சாட்டாமாறுகளையும், அறுகுகளையும்,வாட்டாளை,
ஆர்க்குகளையும்
அந்தக் கால்கள் பொருட்படுத்தாமல் கடலை அளந்தன. அவர் கடற்குதிரைகளையும்,
குட்டூறுகளையும்
கையிற்பிடித்து அவறிற்கும் கதைகள் சொல்வார்..... நாம் வேண்டுமென்றால்
'குட்டூறுக்கும் கதை சொன்ன
கூத்துக் காரன்' என்றோர் பட்டம் கொடுக்கலாம் அவருக்கு.

அயலூராரின் ஒடுக்கு முறைகளை எதிர்த்தவர்களில் மடுத்தீஸ் பிரதானமானவர்.
அவர்களை எதிர்த்ததால் எங்கள்
கிராமத்தின் தெருவில் முழங்காலில் இருத்தப்பட்டு ஈச்சங்கம்பால்
அடிக்கப்பட்டார் அந்த அற்புதமான கலைஞன்.
ஆயினும் இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அரச பதவியொன்றிலிருந்த
பிரபாகரனின் தகப்பனார் வேலுப்பிள்ளையிடம்
முறையிடப் பட்டபோது அந்த மனிதர் நீதியின் பக்கம் நின்று எடுத்த முடிவு
ஒடுக்கப் பட்ட மக்கழுக்கு ஆறுதலாய் இருந்தது.
ஆயினும் மடுத்தீஸ் போன்றவர்களின் மரணத்தின் பின்னும் அந்த 'ராட்ஸஸ மரம்'
வாழ்ந்துகொண்டே இருக்கிறது.

00
கிராமத்தில் இருந்தபோது நானும் என் நண்பன் ஒருவனுமாக ஓர் இரவு நேரம்
அந்தச் சுடுகாட்டிற்குப் போனோம்
கையில் கொண்டுபோன 'காகோலைகளை' அந்த மரப்பொந்தில் திணித்தோம் கொஞ்சம் மண்ணெண்ணெயை
அதன்மேல் ஊற்றியபோது 'கொள்கலன்' சுருங்கி விரிந்தது போல எங்கள்
இதயங்கழும் சுருங்கி விரிந்தபடி இருந்தன.
நாங்கள் நெருப்பு வைத்தபோது காகோலை சடசடக்க .மரத்திலிருந்த பறவைகள்
கீசிப் பறக்க, குதிகால் குண்டியில்முட்ட
ஓடி வீட்டிற்கு வந்தோம். எனக்கோ இரவிரவாக நித்திரை இல்லை கண்களை மூடினால்
பேய்கள் வந்து கதவைத்
தட்டுகின்றனவோ என்ற பயம். கடற்காகங்கழுக்கு வவ்வால்சிறகு முளைத்த
கனவு...... ஓ கடவுளே காப்பாற்றுங்கள்
என்று முணுமுணுத்தபடியே படுத்திருந்தேன். விடிந்தெழும்பி நண்பனிடம்
போனால் அவன் 'குலப்பன் காய்ச்சலுடன்'
வாய்புலம்பிக் கிடந்தான். நானோ சிறிது தூரம் நடந்துபோய் அந்த 'ராட்சஸ
மரத்தைப்' பார்த்தேன் அது ஓர் அரக்கனைப்போல
நிமிர்ந்து நின்றது. ''நாம் இந்தச் சுடுகாட்டு மரங்களை இல்லாது செய்ய ஒரு
பெரும் தீயை மூட்ட வேண்டும்'' என்று
நினைத்துக் கொண்டேன்.

இப்படியாக என் பிரியமான குழந்தையே/
ஒடுக்கப்படும் மக்களின் கதைகள் நீண்டுகொண்டே வருகின்றன. என்றபடி
நடந்துகொண்டிருந்தான்..................................

00

மீண்டும் குரல் அவனை அழைத்தது.....
ஓ மாணங்கி எங்கே நிற்கிறாய்?
நடந்து கொண்டிருக்கும் கதைக்கு நடுவில்? கதையில் இப்போ ' அனாதையாய்
உலகின் முற்றத்தில் விடப்பட்ட
குழந்தையொன்றும் வருகிறது.... அதை தோழில் தூக்கிக் கொண்டு நடக்கிறேன் வர
வர குழந்தையின் கனமும்
அதிகமாகிக் கொண்டே வருகிறது.................
சரி, சரி வந்து சேர்.....


மாணங்கி குரல்வந்த இடத்தை அடைந்தபோது 'ஆறு பெருக்கெடுத்திருந்தது'
மனசிலும் தண்மை......../
சிறிது அமைதியின் பின்னர் மாணங்கிதான் வாய் திறந்தான்.

உன்னோடு பேச வேண்டும்போல இருந்தது... நடந்து வந்தேன்.... நான் நடக்க
நடக்க வார்த்தைகள்
கொட்டுண்டு போயின. இப்போ உன்னிடம் பேச வார்த்தைகள் எவையும் இல்லை ஆதலால் நான்
எனது பயணத்தை தொடரவேண்டி இருக்கிறது. ஆயினும் என்னால் இனி நடக்க முடியவில்லை
ஏனெனில் நான் வார்த்தைகளாலேயே நடந்து வந்தேன். இப்போது நான் பேருந்திலேறிப் புறப்பட
நீயே 3.00 டோலர்கள் தரவேண்டும்... ஆயினும் அவை என் வார்த்தைகளின்
பெறுமதியென்று நினைத்து
விடாதே..... நான் பேருந்தில் இருக்கும்போது எனக்குள் வார்த்தைகள்
சுரந்தால் மீண்டும் நடக்கத்
தொடங்கி விடுவேன் . இனி வரும் எனது நடை ' மஹா சக்தி ' ஓம் அவளை
நோக்கியதாகவே இருக்கும்.

என்றான்........
குரல் சிரித்தது தன்னிடமிருந்த 3.00 டொலர்களை 'அருளியது' பின்னர்
குழந்தையின் முதுகிலிருந்த
தழும்பைப் பார்த்துவிட்டு
' அடடா இது உனது முதுகிலிருக்கும் தழும்பைப்
போலல்லவா இருக்கிறது"
என்றது. மாணங்கி தன் முதுகைப் பார்த்தபோது குழந்தை மறைந்துபோனது.


மெலிஞ்சிமுத்தன்

அலாரக் கதவு

என் அருமையான வாசகரே /
யாரோ என்னைக் கூட்டிச் சென்றார்கள். அவர்கள் யாரோ வீட்டில் விட்டார்கள்.
நான் யாரென்ற புற அடையாளத்திற்குத் தொலைவில் நின்றபோது ‘நீங்கள் யார்” என்று யாரோ கேட்டார்கள். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன் நான். அந்த ஒற்றைச் சாளர அறையில் என்னை தனியே விட்டு
அவர்கள் மறைந்து போனார்கள். மறைவதற்கு முன்னர் ‘பிடிபட்டு விடாதே’
என்று சொல்லிச் சென்றார்கள்……………………………………………….
மனதின் சூக்குமமான வேர் துயரச் சுனையில் விழுந்துவிட்டாற்போல்…… அறிவுக் கண் அடைத்துக்கொண்டிருக்கும் இந்த மந்தாரமான வெளியில் ‘சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நான் தனியனில்லையெனும் மனநிலையைத் தோற்றுவிக்கும் பாசாங்கு மிகுந்த முயற்சியில் இறங்கியிருக்கும் நான் என்னைமுந்திக் கடந்துவந்த சொற்களைக் கூட்டியள்ளி
உங்களோடு பேச முயல்கிறேன்……………………………………..

என் தலைமாட்டில் சவக்காலை யொன்று திறந்து கிடப்பதையும், செழும்பு பிடித்த பிணைச்சல்களோடு அதன் பழமையான கதவுகள் ஒரு அலாரத்தைப் போல கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் உங்களுக்குச் சொல்லவேண்டும். சவக்காலையின் அலாரம் கணிக்கமுடியாததொரு காலத்தில் இரைந்து கொண்டிருப்பதையும், தலைமாட்டில் சவக்காலையை வைத்துக் கொண்டு உறங்கும் அனுபவத்தையும் உங்களுக்கு உணர்த்தவேண்டும்…………………………………….

நேற்றுக் காலையும் ஒரு மனிசியின் உடலைக் கொண்டுவந்து புதைத்தார்கள்,
புதைக்கும் முன்னர் குழியில் வைத்து கடைசியாய் திறந்து பார்த்தார்கள். சீவன் போனதன் பின்னர் அர்த்தம் குறைந்த அடயாளமாய்க் கிடந்த அந்த முகத்தைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்தார்கள். பின்னர் கண்ணீரையும் சேர்த்து மண்ணால் மூடிவிட்டுப் போனார்கள். அந்த மனிசியோடு கலவிகொண்டவனின் கண்ணீரின் சாரத்தை நான் கூர்ந்து அவதானிப்பவனாய் இருந்தேன். அவன் விம்மி, விம்மி அழுதபோது அவனது நினைவுப் பரப்பில் கசிந்தபடி வெளிவந்துகொண்டிருந்தது கண்ணீர்.
மூடிய குழியின் மேலே பூச் செண்டுகளை வைத்தார்கள் அந்தப் பூக்களின் வாசம் காற்றில் பரவி என் சாளரத்துக்கு வந்தபோது அதில் பிணவாடையும் கலந்திருப்பதை நான் உணர்ந்தேன். மண்ணால் மூடிக்கிடந்த அந்த மனிசியின் நித்திரையை யோசித்தபடியே நான் நித்திரையாகிப் போனேன். அந்த மனிசியும் உடல் மைத்தாலும் பறவாயில்லை யென்று நித்திரையாகிக் கிடந்தாள். அவளது உடல் மைத்திருக்கும் என்று நான் கருதிய ஒரு காலத்தில் அவன் மீண்டும் வந்தான் கொஞ்சக் கண்ணீரை கல்லறையில் உதிர்த்தான், பின்னர் பூச்செண்டுகளை அங்கே நட்டபடி நினைவுப் பரப்பில் நகர்ந்தான். அவள் உடல் மைத்த பின்னும் மனங்களுக்குள்
நடந்துகொண்டிருந்தது கலவி.
நான் அவனோடு பேச ஆசைப் பட்டேன் அவன்
சவக்காலைக் கதவுகள் கிறீச்சிட வெளியே வந்தான். நான் எதிர் பாராத கணத்தில் என் சாளரத்தைப் பார்த்தான் அதனூடு என் வெளிறிய முகத்தை
குறுகுறுவெனப் பார்த்துவிட்டு நடக்கத்தொடங்கினான்.. நான் வீட்டிலிருந்து
இறங்கி அவனிடம் போவதற்குள் ஏதோவொரு குறுக்கு வீதியில் நுளைந்து
மறைந்து போனான்.
00
சவக்காலையிலிருந்த அழகிய பூச்செடியொன்றை என் அறையிலும் வளர்த்துவந்தேன் . ஒரு நாள் எனது அறைக் கதவை எதிர்பாராத விதமாக வந்து அவன் தட்டினான். நான் கதவைத் திறந்தபோது ஒரு பயித்தியக் காரனைப் போல காட்சியளித்த அவன் எனது அனுமதியின்றியே என் அறைக்குள் வந்து குந்தினான், சிரித்தபடியே கேட்டான் ‘துயரம் அழகானதா’ …… என்று. அன்பு அழகானது அதன் அடியில் ஊடுபாவி இருப்பதால் துயரமும் அழகானது என்றேன். வாய்க்குள் சிரித்தபடியே அதே குறுகுறு பார்வையைப் பார்த்துவிட்டு ‘முள்ளுக் கம்பிகளை அறுக்கும் ஆயுதங்களேதும் உன்னெட்ட இருக்கோ’ என்று கேட்டான் பின்னர் ‘இந்தப் பூச்செடியை நான் கொண்டுபோறன்” என்றபடி எனது அறையிலுள்ள பூச்செடியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.. அவன் அதைக் கொண்டுபோய் மீண்டும் அந்தச் சவக்காலையில் நட்டுவைத்தான் பின்னர் வெளியேறி நடக்கத் தொடங்கினான்.அவனுக்குத் தெரியாமலே நான் அவனைப் பின்தொடர்ந்தபடி இருந்தேன்.
கிராமத்தின் ஓர் ஒதுக்குப் புறமான இடத்திலிருந்தது
அவனது வீடு.ஓர் பெருவீதியிலிருந்து கிளைபிரிந்த ஒற்றையடிப் பாதையின்
வழி அவனைப் பின்தொடர்ந்தபோது அவன் எனைக் கண்டுகொண்டான்.
‘என் பின்னே எதற்கு வருகிறாய்’ என்று எனைக் கேட்டான். காலத்தில் சுருங்கி
விரியும் என் நிழலைப் பற்றி யோசிப்பதற்காக என்றேன் அவனிடம். ஆமாம்
மேடுகளிலும்,பழ்ழங்களிலும் நெழிந்து பயணிக்கும் உனது நிழல் ஒளிபடாத
உன் பக்கமொன்றிலிருந்து தோன்றுவதை அவதானிக்கிறாயா? என்றுகேட்டான்
நானும் தலையசைத்துக் கொண்டேன். ‘சரி சரி என்வீடு பக்கத்தில்தான் இருக்கிறது வந்துவிட்டுச் செல் என்றான்.
அவன் வீட்டில் தேனீர் அருந்தியபடி
இருக்கும்போது ‘நீ யாருடைய சாயல்’ என்று கேட்டான் எனக்கோ பதில்
தெரியவில்லை அவன் சிரித்தபடி உனது சாயலில் எனக்கோர் நண்பனைத்
தெரியும் என்று தன் நண்பன் பற்றிய கதையொன்றைச் சொல்லத் தொடங்கினான்.

கதை
……………….

வாழ்க்கையை துடுக்குத் தனமாக அணுகிய காலமொன்றில் எனக்கொரு
நண்பன் இருந்தான். என்னைப்போலவே பலவற்றைத் தொலைத்துவிட்டு
இடம் பெயர்ந்தோர் முகாமொன்றில் என்ன தொழில் செய்யலாமென்று
யோசித்துக் கொண்டிருந்தான். அவனது கையில் கூப்பன் கடையில் உடைத்துக்
களவாடிய பலகைத் துண்டொன்று இருந்தது, முகாம் கொட்டில்கள் போடுவதற்கு வெட்டிய தடியொன்றினை எடுத்து ஒரு மரச்சுத்தியல்
செய்துகொண்டான். கொட்டில்களுக்கு குந்துவைக்கும் தொழிலாழியென்று
தன்னை ஆக்கிக்கொண்டான்.
பின்னர் ஓரிடத்திற்கு இடம்பெயர்ந்தபோதும்
அவனிடம் தொழில் இருந்தது. கடலை அண்டிய அந்தப் பிரதேசத்தில்
கடலட்டைகள் எடுத்து கொழும்புக்கு அனுப்பக்கூடிய சூழல் இருந்தது
ஆனால் சுழியோடும் பாதணிமட்டும் கொழும்பிலிருந்து கொண்டுவருவதற்கு
தடையிருந்தது தொழிலாழிகளோ தோசைச்சட்டியில் ஓட்டைகளிட்டு
சைக்கிள் ‘ரியூப்’ துண்டால் கட்டிக்கொண்டு சுழியோடினார்கள். அந்தவேளை
நம்மாள் தனது வித்தையைக் காட்டத் தொடங்கினான்… ‘பிளாஸ்ரிக்” பீப்பாய்களை சிறகுபோல வெட்டி பந்து தைக்கும் ஊசியொன்றின் உதவியோடு ‘மோட்டார் சைக்கிள் ரியூப்’ துண்டுகளை மேலே பொருத்தி சுழியோடிகளின்
பாதணி 300 ரூபாயென விற்றான். இடங்கள் பெயரப் பெயர அவனது
தொழில்களும் மாறிக்கொண்டிருந்தன. அவன் வேறிடமும், நான்வேறிடமுமாய்
பெயர்ந்துபோனோம்.
சமாதான காலமொன்றில் மீண்டும் ஊர்திரும்பியபோது
மனிதர்கள் வித்தியாசமாக இருந்தார்கள். வன்னியில் இருந்து வந்தவர்களுக்கும், கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கும், யாழ்ப்பாணத்தில்
இருந்தவர்களுக்கும் வித்தியாசம் இருந்தது. ஒட்டாத மூன்று குழுக்களாய்
அவர்கள் இருந்தார்கள். அவர்களின் கதைகளும்,நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருந்தன. கொழும்பிலிருந்து வந்த பெண்கள் கல்லுவீதிகளில்
குதிகால் உயர்ந்த பாதணிகளோடு நொடுக்குநொடுக்கென்று அந்தரப் பட்டு
நடந்தார்கள், வன்னியிலிருந்து வந்தவர்கள் போர்த்து மூடிக்கொண்டு திரிந்தார்கள், யாழ்ப்பாணத்திலிருந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை
சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.
பலரது வீடுகளில் தலை கீழான திறப்போட்டைகள் இருந்தன, தீராந்திகளால் மூத்திரக் கொல்லைகள் அடைக்கப்
பட்டிருந்தன…. பலவீடுகளின் சிதறிய துண்டுகள் பொருந்திய ஒற்றைவீடுகள்
நிறைந்திருந்தன.
நண்பன் அயலூரில்தான் இருந்தான். நான் வந்திருப்பது தெரிந்தும் அதை அவன் பெரிதுபடுத்தவில்லை. அவனைக்காண நான்முயற்சித்தபோதும் அவன் எனக்கு ஒழித்துத் திரிபவனாகவே இருந்தான். ஒருநாள் அவனது நெற்றிக்கு முன்னே நான் நின்றபோது எதுவும் செய்யமுடியாதவனாய் விம்மி,விம்மி அழத் தொடங்கினான்.
நண்பன் மிகவும் மென்மையானவன். நடப்பதுகூட
பெண்களை ஒத்திருக்கும், சாரத்தின் உள்ளே எப்போதுமே காற்சட்டை போட்டு
இறுக்கி முடிந்திருப்பான், அரியல் சாரத்தால் யாரும் எதையும் கண்டுவிடக் கூடாதென்ற அவதானம் அவனிடம் இருந்தது. எப்போது பார்த்தாலும் அவனது ஓரல் முகத்தில்சிரிப்பும் இருந்தது. ஆயினும் அவன்பேரில் ஒரு திருட்டுக் குற்றமும்,கொலைக் குற்றமும் இருந்தது, அந்தக்கொலைக் குற்றவாளி நிற்சயமாக அவனில்லையென்பது எனக்குத் தெரியும். ஆதலால் அந்தக் கொலையைச் சுற்றியிருந்த மாயங்களோடே அவனது நட்பை ஏற்றுக் கொண்டேன்.ஆனால் ஒருநாள் பனங்கூடல் வழியாக வேலைக்குச் சென்றுவந்த
அவனது மனைவி வீதியின் அருகில் பெரியவாகனச் சில்லுப் பள்ளமொன்றில் தேங்கிக் கிடந்த மழைநீரில் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். மூன்றுமாதக் கருவைச் சுமந்த அவளது உடல்முழுதும் சேறாயிருந்தது.
கொலையாளியோடு போராடியிருக்கிறாள் என்பது அவளது கோலத்தில் தெரிந்தது. பனையிலிருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கொலையாளி
மிகுந்த பிரயாசைப்பட்டு இக்கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றிருக் கிறான் என்று சனங்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் கண்டுபிடிக்கப்படாத
கொலையாளிகளால் அந்தச் சூழல் நிரம்பிக் கிடந்தது என்பதுமட்டும் அப்போது
உணரக் கூடியதாக இருந்தது. ‘கொலைகளை நியாயப் படுத்துபவர்களைவிட
கொலைகளை இரகசியப் படுத்துபவர்கள் கெட்டிக்காரர்கள் போலும்’ என்று
நினைத்துக் கொண்டேன்.
சேற்றில் மூழ்கடிக்கப்பட்ட அவன் மனைவியின் முகம் அவனது கனவுகளில் வந்து அழுதுவிட்டுப் போனபடியிருந்தது.
பின்னர் பிரச்சினை தொடங்கியபோது அவன் வன்னிக்கு இடம் பெயர்ந்ததாகவும்,துணைப் படையில் இணைந்து கொண்டதாகவும் அறிந்தேன்
என்றான்/
அவனது நண்பனின் கதை தந்த சுமையோடே எழுந்து நடக்கத்
தொடங்கினேன்……………….

அந்தத் தெருவில் அப்போது வியாகுலம் நிறைந்ததொரு காட்சியைக் கண்டேன்
செழுமையான பச்சைப் புற்தரையிலிருந்து தார் வீதியில் விழுந்த புழுவொன்று
வெய்யிலில் அவதியுற்றபடி கிடந்ததைக் கண்டேன். நான் அதை காப்பாற்ற நினைந்து ஒரு சிறிய ஈக்கிற் குச்சியை அதனருகில் கொண்டுபோனேன்
புழு அதன் மேலே ஏறினால் அந்த புற்தரையில் அதனை கொண்டு சேர்க்கலாம் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த ஈக்கிற் குச்சி அருகிற் சென்றதும் புழுவோ அதன் தலையிலிருந்து ஓர் குமிழியை வெளியேற்றி விட்டு சுருண்டு கொண்டது புழுவுக்கு என்மீது நம்பிக்கை யில்லை, அதற்கு அந்த வேளையில் என்ன தேவையென்பதைப் புரிந்து கொள்ளவும் என்னால் முடியவில்லை மிகுந்த தோல்வியும்,துயரமும் என்னை ஆட்கொண்டது சற்று நான் தலையைச் சாய்த்து நீண்டுகிடந்த அந்தத் தெருவைப் பார்த்தபோது என்னால் தாங்க முடியவில்லை. கைகளில் உணவுத் தட்டுகளுடனும், உடல் முழுதும் வடிந்த குருதியுடனும் ஆயிரமாயிரம் புழுக்களைக் கண்டேன்.. ‘ஐயோ இது என்ன நீதி’ என்று தலையில் கை வைத்துக் குளறியபடி நடக்கத் தொடங்கினேன்……..

யாராவது என்னைத்தேடலாம், ‘நாடுகடந்த அரசுபற்றி’ பேச என் நண்பர்கள் என்னையும் அழைக்கலாம்.என் பிரியமான வாசகர்களே உங்களிடமிருந்தும்
இப்போது பிரிந்து செல்கிறேன். எனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும்
புணரும் மனநிலைகொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறதென்றால். இப்போதிருக்கும் நாம் யாருடைய சாயலாய் இருக்கிறோம் என்று நான் கொங்சம் யோசிக்கவேண்டும்/


முடிந்தது

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...