சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம்.

அப்போது நான் நடந்துகொண்டிருந்தேன்.
அன்றிரவு நான் கனவில்கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள் அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும்அங்குமிங்குமாய் பயணித்துக் கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்தபடியே நடந்துகொண்டிருந்தேன். அநேக முகங்களில் நேரம் குறித்த பயம் இருந்தது. சில முகங்களோ வீதியோரத்து இருக்கைகளில்
தொங்கிக் கிடந்தன. ஆயினும் வீதிகளில் நடந்து செல்லும் மனிதர்கள் குறைவுதான். உடல்முழுதும் காற்றை வாங்கிக் கொண்டு. நிலத்தை ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது. அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகின்றன. வாகனத்துக்குள்ளேயே வெம்மையும்,குழிருமான காற்று, வானொலி, படக்காட்சி, தொலைபேசியென்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள். வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம்.இவற்றையெல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஓரத்தால் விசுக்கு,விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தது நறுமணம்.
பூங்கா ஓரத்து வீதியில் நடந்துகொண்டிருந்த எனது நாசியிலும் ஒரு நறுமணச் சுழி புகுந்தது. காற்று அடர்த்தியாய் இருந்தது. நறுமணச் சுழிக்குள் மெல்லிய இசையின் நெளிவுகள் இருந்தன. இது இசையின் நறுமணமா? நறுமணத்தின் இசையா? என்பதையறிய நான் காற்றை நீவியபடி பூங்காவுள் நுளைந்தேன். வயலின் கம்பிகளிலிருந்து இசையை இழுத்து காற்றில் தூவியபடி அமர்ந்திருந்தாள் அவள். மேகநீலத்தில் மெல்லிய ஆடையை உடுத்தியிருந்தாள். முன்னே அமர்ந்தபடி அவள் முகத்தையேபார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு பிரமை பிடித்தவனைப்போல. என் பார்வை பட்டு அவள் சலனமடைந்திருக்கவேண்டும் இசையின் சந்துகளில் மனசை நெழியவிட்டு தலையைச் சாய்த்து என்னை உற்று நோக்கினாள். ஒரு கண அமைதிக்குப் பின்னால் 'ஓ... நான் வரைந்த அதே கோடுகளில் சதை முளைத்திருக்கிறது என்றாள். அதே நீளமூக்கு, லாவகமான சுருள் முடி, உதட்டோர என் வரைதற் பிழை... ஆமாம் உன்னை நான் என்றோ வரைந்திருக்கின்றேன். நான் வரையும்போது என் மனதின் வேர் ஒருகணமேனும் பிரபஞ்சமூலத்தில் கலந்திருக்கிறது." என்றபடி என் அசைவுகளை அவதானித்தாள், நான் சிரிக்கும்போதெல்லாம்
தன் ஓவியம் சட்டகத்தை உடைக்கின்றது என்றாள். நானோ எதுவும் புரியாதவனாகவே அமர்ந்திருந்தேன். அவளோ எனது நெஞ்சிற்கு மிகவும் அருகிலுள்ள மெல்லிசையை மீட்டி,மீட்டி ஓர் ஆத்தும பாசையை என்னுடன் பேசுகின்றாள். 'மேல் ஸ்தாயி" அவளாகவும்,'கீள் ஸ்தாயி" நானாகவும் இரண்டு இசைத் திண்மங்கள் வெளிமுழுதும்கட்டவிழ்ந்தபடி இருக்கின்றன.

00 அவளின் வீடு
...................................
பின்னர் சிலநாட்களும் அவ்விடத்தையே சுற்றி அலைந்தபடியிருந்தேன். அவளில்லாமல் அந்தப்பூங்கா வாடிக்கிடந்தது. நானோ அவளைத் தேடியலைந்து தோற்றபடி இருந்தேன். உண்மையில் அதுபிரமைதானோ என்று எண்ணிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத விதமாக எனை வழி மறித்தாள்.சிறிது நேர உரையாடலின் பின் என்னை ஒரு முறையேனும் தன் வீட்டிற்கு வந்து செல்லுமாறு கேட்டதற்கிணங்க நானும் அவளுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டேன். அவள் ஒரு நதிக்கரையோரத்துபழங்காலத்து அடுக்குமாடியில் இருந்தாள். அவள் பின்னே மாடிப் படிகளில் ஏறிச்சென்று அவளது முப்பத்தி நான்காம் இலக்க அறையினுள் நுழைந்தேன்.
ஈழத்தின்,உதடுகள்,கண்கள்,காதுகள் என்று ஏராளமான முகங்களுக்கான
சேகரிப்புகள் தன் மனதில் படிந்து கிடப்பதாக அவள் சொன்னாள். எல்லையற்றவற்றின் கேள்மைகள்,எல்லையற்றவைகள்மீதான நோக்குதல்கள்,எல்லையற்றவற்றின் சுவாசிப்புகள் என்று தனக்குள் வளர்ந்து
வருவதாகவும் அவள் சொன்னாள். அவள் முகங்களை மனிதர்களின் அடையாளங்களாகக் காணவில்லை.கடலுக்குள் இருக்கும் மலையின் சிறு முனை கடல் மட்டத்தின் மேலால் தெரிவதைப் போலவே முகங்களைப்
பார்த்தாள். ஒவ்வொரு மனித முகத்தினதும் அடிவாரங்களைச் சென்றடைந்து அடையாளங்களைப் பதிவு செய்ய அவள் முனைந்துகொண்டிருந்தாள். முக அடிவாரங்களுக்குச் செல்லும் அவளது பயணத்தை
தனக்குள் சிதைத்துப் போட்டிருந்த முகக்கூறுக் குவியலுக்குள் இருந்தே தொடங்கியிருந்தாள்.என் சிந்தனையைக் கலைத்தவள் 'என்ன பார்க்கிறீர்கள்?
நான் தனியே இல்லை.. என் அறைக்குள் எப்போதுமே அலையடித்துக்கொண்டிருக்கும் ஒரு கடலும், குருவிகொண்டுவந்து தரும் வானமும் இருக்கின்றது" என்று சிரித்தபடியே தேநீர்க் குவளையொன்றை
நீட்டினாள். அவள் வயலினை எடுத்து தனது வித்தையைத் தொடர்ந்தபோது எனக்கு முன்னால் அந்தக் கடல் குமுறத் தொடங்கியது. அவளது வயலின் இசை அந்த அலைகளிற்குள் மிகுந்த சோகமாய் நீந்திக்கொண்டிருந்தது. எனது கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுக்கத்தொடங்கியது.
என் கண்ணீரைக் கண்ட அவள் பதறிப்போய் என் அருகில் வந்தமர்ந்து ' உங்களுக்குள்ளும் ஒரு கடல் இருக்கின்றது என்பது எனக்கு தெரியும் " என்றாள். நான் எதுவுமே பறையவில்லை. எனக்குள் இறந்தகாலத்தின்
இரவுகளெல்லாம் குழுமத்தொடங்கின .
00 கடல்
. ..................................
அவள் தான் வரைந்த எனது ஓவியத்தின் மேலே சிவப்பு வர்ணத்தை அள்ளி தெளிக்கத்தொடங்கினாள் கண்களைச் சுற்றி கறுப்பு வளையங்களிட்டாள், என் ஓவியத்தின் முக ரேகைகளை முகத்திற்கு வெளியே வரையத் தொடங்கினாள் கன்னங்கள் ஒட்டி பற்கள் வெளித்தள்ளியபடி இருந்தது. அது பசி பசியென்று முனகத்தொடங்கியது. ' ஓ எல்லாக் காலத்துக்குமான என் முகமே "என்று நான் முனகத் தொடங்கினேன். முற்றத்தில் மொழியை அளைந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றின் சித்திரம் என் நினைவுக்கு வந்தது. அது நான்தான், அதுவும் நான்தான் உனக்குத் தெரியுமா பெண்ணே
என் அம்மா ஒரு குழந்தை பெற்றாள், அந்தக் குழந்தைக்கு என் பெயரையிட்டாள், அப்போதெல்லாம் எனக்குள் இப்போதிருக்கும் நான் இருக்கவில்லை. நான் மிகவும் சோத்தியானவனாக இருந்தேன் துயரத்தின் கனம் தெரியாமலே ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது எனது வாழ்க்கை. ஊஞ்சல்கள் பயணிப்பதில்லை என்பது புரிந்தபோது நான் கடற் கரைகளில் நடக்கத் தொடங்கினேன். எங்களின் குடிசை கடலோரத்தில்தான் இருந்தது. நீ அலைச் சத்தத்திற்குள் வாழ்ந்திருக்கின்றாயா? நாவில் எச்சில் ஊறிக்கொண்டிருப்பதைப்போல எனது செவிகளில் அலைச் சத்தம் ஊறிக்கொண்டிருந்தது என்று என் கடந்த காலத்தின் நினைவுகளை அவளுக்கு சொல்லத் தொடங்கினேன்.

காலையில் எழுந்ததுமே வெறும்மேலுடன் குண்டிப்பக்கம் தேய்ந்ததொரு
காற்சட்டையைப் போட்டபடி நடக்கத் தொடங்கி விடுவேன். பொத்தான் அறுந்த அந்தக் காற்சட்டைக்கு ஒரு நாகதாழி முள்ளைப் பிய்த்து குத்தியபடி ஏதோ பெரிதாய் கண்டு பிடித்துவிட்டோம் என்ற நினைப்போடு
கடற்கரையில் இறங்குவேன். கடற்கரை முழுவதும் என்ன இன்று அடைந்து வந்திருக்கிறது என்று பார்த்தபடி அலைந்து திரிவேன். ஒவ்வொரு நாளும் அடைந்து வரும் விசித்திரமான பொருட்களை எதிர் கொள்வதில்
இருக்கின்ற சுவாரஸ்யத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? கடலுக்கும் எனக்குமிருந்த ஒப்பந்தத்தின்படியே கடல்தான் ஒவ்வொரு நாளும் நான் விளையாட பொருட்களையும் கொண்டுவந்து தந்தது. பெரும்பாலும்
வீடு திரும்பும்போதெல்லாம் அடைந்துவந்த பெரிய பெரிய கணவாய் ஓடுகளைச் சேகரித்தபடியே குடிசைக்குத் திரும்புவேன். ஏன் தெரியுமா? கணவாய் ஓடுகளில் எனக்குப் பிடித்தமான உருவங்களைச் செதுக்க.
ஒருமுறை கணவாய் ஓட்டில் நான் செதுக்கிய வேளாங்கன்னி மாதாவின் உருவம் எவ்வளவு அளகாயிருந்தது தெரியுமா? அம்மாதான் சொன்னாள் வேளாங்கன்னி மாதாவை வெடுக்கில் செதுக்கக்கூடாதடா என்று.

இன்னமும் சொல்லலாம் பெண்ணே என் தந்தையார்
சாதி வெறியர்களால் மிகுந்த அவமானங்களை அனுபவித்த மனிதர். அவருக்கு எப்போதுமே தனது முதுகில் ஒரு மீன் செதில் ஒட்டியிருக்கும் உணர்வு இருந்துகொண்டேயிருந்தது. அவர் என்னை படிப்பிக்க வேண்டுமென்று
ஆசைப்பட்டார். ஆனால் நான் பள்ளிக்கூடம் போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோதுகூட என் கண்ணீரில் வெடுக்கு மணத்தபடியிருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்துபோனேன்.
எனது பள்ளிக்கூடம் அந்தக் கடல்தான். அந்த அலைகள்தான்
எனது சங்கீத ஆசிரியர்கள், கலைகளையும் , தத்துவங்களையும் எனக்குச் சொல்லித்தந்தவை அந்த மீன்கள்தான், உனக்குத் தெரியுமா கணவாய்மீன் வர்ணங்களால் பேசுமென்பது? அதுதான் கடலுக்குள் மைபீச்சி இருட்டிற்குள்
இருக்கும் வித்தையை எனக்குக் காட்டித் தந்தது. கடலிலிருந்து அதனைப் பிடித்து தோணியில் போட்டதுமே அதன் முதுகில் பச்சைநிற வட்டங்கள்தோன்றும்போதெல்லாம் அது அந்த மீனின் கோபமா? அல்லது துயரமா?
எனும் கேள்வி எனக்குள் எளத்தொடங்கிவிடும். கரையில் வர்ணங்களுக்கிருக்கின்ற குண இயல்பு கடலில் மாறுபடுகின்றனவா? அப்படியானால் பச்சை வர்ணத்தின் உண்மையான இயல்பு என்ன? என்று யோசிப்பேன், மீன்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவான விடயமில்லையென்பது உனக்குத் தெரிந்திருக்கும் ஆனால் நமது மூளை நமக்குப்போட்டிருக்கும் சட்டகத்தைக் களற்றிவிட்டு பரந்த கடலுக்குள் வாழும் மீன்களோடு உறவாட நாம் தயாராக இல்லை. ஓங்கில்கள் அழுவதை நீ பார்த்திருக்கிறாயா? புரட்டிப் போடப்பட்ட ஆமைகளின் தவிப்பை எப்போதென்றாலும் நீ உணர்ந்திருக்கிறாயா? துயரத்தை கண்ணீரால் வெளிப்படுத்துகின்ற உயிர்களைத்தானே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது? ஆனால் எந்தெந்த உயிர்கள் எந்தெந்த வழிகளில் தமது துயரங்களை
வெளிப் படுத்துகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் பேசுவது சற்று மிகையாகத் தெரியலாம் உனக்கு. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் நீதி தேவையல்லவா? அதற்காய் ஒவ்வொரு உயிரையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவையொன்று இருக்கிறதல்லவா? அதனால்தான் இதனைப் பேசுகின்றேன்.

நாம் நிலத்தில் வாழுகின்ற சாதி. அதனால்தான் கடலில் வாழுகின்ற சாதிக்கு பாரபட்சமான நீதியைக் காட்டுகின்றோம். அந்த உயிர்களுக்கு நாம் பெயரிடும்போதுகூட நிலத்தில் நாம் கண்ட உருவங்களை மனதில் வைத்துக்
கொண்டேபெயர்களை வைக்கின்றோம். உனக்கு சப்பாத்து மீனைத் தெரியுமா? பார்ப்பதற்கு பாதணியின் தடம்போன்று இருப்பதால் அதனை அவ்வாறு நம்மவர்கள் அழைக்கின்றனர். இதற்கு எங்கழூரில் ஒரு கதைகூட
இருக்கிறது. ஒருமுறை அந்தோனியார் மீன்களையெல்லாம் வரும்படி கூப்பிட்டாராம். எல்லா மீனும் அவரிடம் போக இந்தமீன் மட்டும் போகவில்லையாம் அதனால் அந்தோனியார் போட்ட சாபம்தான் இந்தமீன் இந்த உருவம் கொள்ளக் காரணம் என்று சொல்வார்கள். இன்னுமொன்றையும் உனக்குச் சொல்ல வேண்டும். ஜோனியின் பெயரில்கூட மீனொன்று இருக்கிறது உனக்குத் தெரியுமா? என்று நான் கூற முகம் மாறியவளாய் இதுகூட ஒருவித ஆண்மனவக்கிரத்தின் இறக்கி வைப்புத்தானே? என்றவள். ஏன் பெண்கள் யாருமே கடலுக்கு தொழில் செய்வதற்கு
சென்றதில்லையா? என்று கேட்டாள் . ஏனில்லை ஆண்களில்லாத வீடுகளில் சில பெண்களும் போயிருக்கின்றார்கள் எங்கழூரிலும் 'லுமினா" எனும் ஒருத்தி இருந்தாள் என்று நான் லுமினாவின் கதையினை சொல்லத் தொடங்கினேன்.
00 லுமினாவின் கதை
......................................................
'லுமினா" அவளும் ஒரு வகை மீன்தான். ஊரிலிருந்த பெண்களிலேயே வித்தியாசமாவள். தகப்பன் வயோதிபத்தின்
இறுக்கமான பிடிக்குள் போனபோது ஒரு தனியனாய் கடலில் இறங்கி தொழில் செய்த விசித்திரப் பெண். ஆமாம்
எங்கழூரின் இயல்போடு ஒட்டாத மனிதர்கள் யாராக இருந்தாலும் விசித்திரமானவர்கள்தான். தோணியின் கடையாலுக்குள் நின்றபடி 'லுமினா" மரக்கோலால் தாங்கியபோதெல்லாம் கடல் விரிந்து கொடுத்தது. அலைகளின்
ஒவ்வொரு வளைவுகளையும் அவள் இசைந்து கடந்தாள். எப்போதுமே மீன் கிளைக் கறுப்புகளை அவளது தோணி தேடியபடி பயணித்தது.
அடுப்படியில் அடைந்து கிடந்த பெண்களுக்குள் இவள்மட்டும் பழசாகிப்போன சோத்துப்பானையில்
'குங்கிலியம்" காய்ச்சி தோணியை 'கலப்பத்து" பார்க்கும் பெண்ணாக இருந்தாள். அவளது தொழிலுக்கு உற்றதுணையாக
கிழவனாகிப் போன அவளது தகப்பன் இருந்தார். இருந்தாலும் அவருக்குள் பெண் பிள்ளையை வருத்தி உயிர் வாழ்கின்றேனே என்ற மனவருத்தமொன்றும் இருந்துகொண்டே இருந்தது. கடலில் தனது போர்க் குணத்தைக் காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண் கரையில் தோத்துப் போனாளென்றே நினைக்கிறேன். மரக்கோல் தாங்கி அவளது கைகள் மரத்து மென்மையிழந்தவையாக
இருந்தன. செம்பாடு பிடித்த தனது ஒரு சாண் கூந்தலை நல்லெண்ணை வைத்து கறுக்கவைப்பதில் பிரயத்தனம்
மிகுந்தவளாக இருந்தாள். 'லக்ஸ்" சவர்காரத்தை ஒன்றுக்கும் மேல்பட்டதரம் முகத்திற்குப் போட்டுவிட்டு ஓலைச் செத்தையில் சொருகி வைப்பாள். மறுநாள் முகம் கழுவும்போது பெரும்பாலும் அது தொலைந்திருக்கும்.

எங்கழூர் காகங்கள் சவர்க்காரம்
தின்பதில் விருப்பமுள்ளவை என்பது உனக்குத் தெரியுமா? இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன். லுமினாவை நினைவில் வைத்துக்கொள்ள என்னிடம் அவளது இன்னொரு விடயமும் நினைவில் இருக்கிறது. அது என்னவென்றால் அவளது சட்டையின் முன் பக்கம் எப்போதும் ஊசிகளால் நிறைந்திருக்கும் என்பதுதான். கழுத்திலிருந்து வயிறுவரை
சுமார் இருபது ஊசிகளையாவது அவள் குத்தி வைத்திருப்பாள். கடற்கரையில் யாருக்காவது முள்ளுக் குத்திவிட்டால் உடனேயே லுமினாவைத்தான் தேடுவார்கள். ஆனால் ஒரு ஊசியை இரவல் கொடுப்பதென்றால் அவளுக்கு பெரிய வருத்தமாக இருக்கும். அந்த ஊசியை திரும்பப் பெறும்வரை அந்த இடத்திலேயே நாண்டுகொண்டு நிற்பாள். ஊசிகள்
தொலைந்து விடக்கூடியன என்ற எண்ணம் அவளிடம் இருந்தது. ஆட்டு இடையர்கள் ஆடுகளோடு திரிவது போல அவள் ஊசிகளோடு திரிந்தாள்.
அவள் ஏன் ஊசிகளைக் குத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாள்? என்ற
கேள்வியை திரும்பத் திரும்ப யோசித்திருக்கிறேன். தன்னை கற்பில் சிறந்தவளாகக் காட்டுவதற்கான முயற்சியே அது என்றே முடிவெடுக்க முடிந்தது. இல்லாவிடில் மரக்கோல் போட்டுத் தாங்கும்போது சட்டையால் நீக்கல்கள் தெரியாமல் இருப்பதற்காய் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சிறுவயதில் லுமினா மிகுந்த கண்டிப்போடு வளர்க்கப்பட்டிருப்பாள்
என்றே நினைக்கிறேன். அவளது தாயை 'கரி நாக்குக் கிழவி" என்றே ஊரில் சொன்னார்கள். குழந்தைகள் குழப்படி செய்யும்போதெல்லாம் 'கரி நாக்குக் கிழவி வாறாள்- பிடிக்கப் போறாள்" என்றே பயமுறுத்துவார்கள். நானும் சின்ன
வயதில் அவளது நாக்கை முழுமையான கறுப்பு நாக்கு என்றே கற்பனை செய்திருந்தேன். பல இரவுகள் அவளின் காணியை கனவில்கூட கண்டிருக்கிறேன். பெரும்பாலும் நான் பந்து விளையாடுவதாகவும் அந்தப் பந்து அவளின் காணிக்குள் போய் விழுவதாகவும் அதை எடுக்க நான் ஒழிந்து ஒழிந்து போவதாகவுமே அக்கனவுகள் அமைவதுண்டு. அவை எவ்வளவு பயங்கரமான கனவுகள் என்பது உன்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வளர்ந்ததன் பின்னர்தான் அவளது நாக்கு அப்படி இல்லையென்று கண்டு கொண்டேன். அவளது நாக்கில் நான்கைந்து கறுப்புப் பொட்டுகள்
மட்டுமே கிடந்தன. மிகுதிக் கறுப்பை அவள் வார்த்தைகளால் வளர்த்து எடுத்திருக்கிறாள் என்று தோணிற்று. ஆனால் கிழவி ஒரு நாள் சொன்னாள் 'பேரா என்ர நாக்கில சரஸ்வதி குடியிருக்கிறாள் எங்கிறது இந்த விசர் சனத்துக்கு விளங்கிறதில்ல" என்று. ஆனால் சண்டை ஏதாவது வந்தால் 'ஆடாத் திருக்கை அடித்துப் பிரழுவாய்,சுங்கான் முள்ளுக்குத்தி
கிடப்பாய்,தெண்டல் வந்துகடலோட போவாய் என்று சாபம்போடத் தொடங்கிவிடுவாள். அவள் சாகும்வரை ஊரையே பயமுறித்தினேன் என்ற பெருமை அவளுக்குள் இருந்தது. அவள் செத்தபின்னும் 'கரிநாக்குக் கிழவியின் ஆவி திரியிது" என்ற பயம் ஊராரிடம் இருந்தது.
மனைவியின் மரணத்தோடு கிழவனும் மூலையில் ஒடுங்கிவிட்டான்.
லுமினா தனது தனிமை குறித்து கவலைப்படுபவளாக இருந்தாள். அவளே பல தடவை என் அம்மாவிடம் வந்து 'அக்கா எனக்கு எங்கையாகிலும் மாப்பிள்ளை பாரக்கா"என்று தன் வாயாலேயே கேட்டிருக்கிறாள். ஆனால் அம்மா
சில இடங்களில் தட்டிப்பார்த்தும் எதுவும் சரிவரவில்லை. லுமினாவின் சவர்க்காரம் தேய்ந்தபடியே இருந்தது.........சமூகம் உற்பத்தி செய்து வைத்திருந்த பெண்களுக்குள் அவள் தனியனாகவே திரிந்தாள். ஒருநாள் கடலுக்குப் போனவள் திரும்பி வரவே இல்லை.
லுமினா கடலின் மகளே
எங்கே போனாய்?
சோழகத்தின் இறுமாப்போடு
யுத்தம் செய்தவளே
உனது அம்பறாக் கூடு
சோபையிழந்து போனதென்ன?
என்று புலம்பியவாறே வாசலில் காத்துக்கிடந்தான் கண் தெரியாத அவளின் தந்தைக் கிழவன். அவள் வரவேயில்லை. பின்னர் இடம்பெயர்வுகள் வந்தன எங்கள் கிராமமே சிதறியது அந்தச் சுழியில் கிழவன் என்ன ஆனான் என்பது
எனக்குத் தெரியாமலே போனது. எல்லாவற்றையும் கேட்ட நீயே இதையும் கேட்டுவிடு பெண்ணே. என் சிறு வயதில் நான் விளையாட விளையாட்டுப்பொருட்கள் கொண்டு வந்த அந்தக் கடலே பின்னர் பிணங்களையும் கொண்டு வந்தது. நாங்கள் காட்டு மதிபார்த்து பறிக் கூடுகளை வைத்த அதே கடலின் அடியில்தான் எந்த மதியுமில்லாமல்
யார் யாரோ எல்லாம் மனித எலும்புக் கூடுகளை பரத்தி வைத்தனர். அதன் பின் கடலோடு நான் ஒரு போதும் விளையாடியதில்லை. அலைகள் எனக்கு ஒப்பாரிகளை மட்டுமே சொல்லித் தந்தபடியிருந்தன என்று சொன்னேன்.
அவளது கண்களும் கலங்கியிருந்தன.
00
பின்னர் இருட்டு வந்து விட்டது நான் புறப்பட வேண்டுமென்றேன். அவள் சிரித்தாள் ' இருட்டுக்குள் இருக்கும் வித்தையை கணவாய் மீனிடமிருந்து கற்றுக் கொண்டவரே ஏன் இப்போது இருட்டைக் கண்டு
பயந்து ஓடுகின்றீர்? இங்கே நான் இருட்டை வசிப்பிடமாக்கியிருக்கும் என் அறையைப் பார்த்தீர்களல்லவா? நாம் இருவரும் இதுவரை நேரமும் பேசிக்கொண்டிருந்தபோதும் இருட்டு இங்கேதானே இருந்தது? அதற்குள்
எங்கே போனது உங்களின் அறிவு? என்று அவள் நையாண்டி செய்தாள். எனக்கோ மிகுந்த வெட்கமாக
இருந்தது. இல்லையில்லை அது இல்லை மிக அண்மையில் நானொரு கனவு கண்டேன் அதில் ஒரு கிராமத்தின்
சிரிப்பொலி இருந்தது. விடிந்து எழும்பியதும் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கிராமத்தை எப்படியாவது
தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிடவே வீட்டை விட்டு புறப்பட்டு வந்து
விட்டேன். இந்த இருட்டு இன்னொரு கனவை எனக்குள் தருவதற்குள் அந்தக் கிராமத்தை நான் கண்டு பிடித்துவிட வேண்டும். ஆயினும் அந்தக் கனவு முழுதாய் என் நினைவிலிருந்து அகன்று விடாது" என்று பதில் சொன்னேன்.
அவளும் தலையசைத்தாள். பின்னர் அவள் தானும் என்னுடன் வருவதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறினாள்.
கையிலொரு குப்பி விளக்கையும் எடுத்துக்கொண்டு என்னுடன் புறப்பட்டாள்.

00 கிழவன்
.................................
நாங்கள் நடந்துகொண்டிருந்த வீதியில் ஒரு கிளவனைக் கண்டோம். அவன் கவளம்,கவளமாய் வயதுகளை
உருட்டித் தின்றபடியிருந்தான். அவனது கொடுப்புப் பற்களுக்குள் யுகம்,யுகமாய் அரைபட்டுக்கொண்டிருந்த
கதைகள் இருந்தன. அவன் 'ஈஈ" என்று எங்களைப் பார்த்து சிரித்தபடி இருந்தான். அவனருகில் நான் சென்றபோது என்னோடு வந்தவள் என்னை எச்சரித்தாள். 'தள்ளி நட சில வேளைகளில் உனது கடலில் பிணங்களை அடைய விட்டவன் இவனாக இருக்கலாம்" என்று. அப்போதுதான் என் மண்டைக்குள் ஒரு கேள்வி எழுந்தது இவள் எங்கிருந்து தோன்றினாள்? ஒரு படைப்பிற்கும், படைப்பாளிக்கும் இடையில் இருக்கும்
தொடர்புதானா இது? அப்படியானால் எங்களில் யார் யாரை வழி நடத்துகிறோம்? ஆமாம் இவளது பெயர் என்ன?
அவளிடமே கேட்டேன். அவள் சிரித்தவாறே நீதான் வைக்க வேண்டும் என்றாள் அவளுக்கு நான் மனம்நிறைந்தவனாய்
'பூரணி" என்று பெயர் வைத்தேன். பூரணி சிரித்த முகத்தோடே என்னுடன் கூட நடந்தாள். விசாரிப்பதற்கு யாருமே இல்லை என்பதால் நான் கண்ட கனவைச்சொல்லி கிழவனிடமே விசாரித்தோம். கிழவன் ஒரு நமட்டுச் சிரிப்போடே தன் ஆட்காட்டி விரலால் கடலைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்த ஒரு தீவைக் காட்டினான். கடற்கரைக்குச்
செல்லும் வழியில் ஒரு சவக்காலை இருந்தது. அமைதியாய்க்கிடந்த அந்தச் சவக்காலையை தோண்டியபடியிருந்தான்
ஒல்லியாக நீண்டு வளர்ந்திருந்த 'பாவட்டை" எனும் ஒருவன். 'அவன் அழுவதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாயா" என்று சொல்லியபடியே என்கையைப் பிடித்து நடந்தாள் பூரணி. அவள் சொன்னது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும் ஒரு வெறி பிடித்தவனைப் போல எங்களிடத்தில் ஓடி வந்த அவன் 'நீங்கள் மட்டும் இல்லாத இடத்தில் தேடலாமோ"என்றான். இவனுக்கு எப்படி எங்கள் பயணம்பற்றித் தெரிகிறது? எல்லாமே ஆச்சரியமாகவே நடக்கிறது. என்று எண்ணியபடியே கரையில் கிடந்த படகொன்றில் ஏறி நானும் பூரணியுமாக மரக்கோல் போட்டு தாங்கத் தொடங்கினோம். ஆனால் ஓர் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது மரக்கோல்கள் எட்டாமல் திரும்பவும் கரைக்கே வரவேண்டி இருந்தது.
கடலுள் ஓடும் ஆற்றில் கீள்நீர்வாடு அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் தாங்கித் தாங்கி தோல்வியடைந்து கரைக்கே திரும்பி வந்தபடி இருந்தோம் மிகுந்த களைப்பும், வேதனையும் நெஞ்சை அழுத்தியபடி இருந்தது. சந்தோசத்தைத் தேடிப்போகும் இடங்களெல்லாம் அதைவிடவும் இரட்டிப்பான துயரங்களே சுமைகளாக வந்து அடைத்துக்கொண்டு நிற்கிறது பூரணி. என்று
நான் வேதனைப் பட்டுக்கொண்டேன். சரி சரி அதையெண்ணி இன்னொருமடங்கு துயரத்தைக் கூட்டப் போகிறாயா? என்றாள் பூரணி.
உண்மையில் அந்தக்கனவு எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா?
நான் அவளுக்கு கனவைச் சொல்ல அவள் நாடியில் கையை ஊண்டியபடி 'ம்"கொட்டத் தொடங்கினாள்.
00 கனவு
.................................
கடல் 'ஓ" வென்று இரைந்து கொண்டிருந்தது. நல்ல காற்றுத்தான். உடம்பு நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது. உடல்கள் நிறையவும் உயிர் நெருப்பு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பைச் சுமந்துகொண்டுதான்
நீருக்குள்ளால் பயணித்தோம் எங்களின் தந்தைபூமிக்கு. காத்திருந்து கிடைத்ததொரு படகில் பயணித்து தமிழ்நாட்டில் எங்களின் உயிரை தக்க வைத்துக்கொள்ளப் போகிறோம் என்கின்ற கற்பனை எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்தது. 'உயிரை' தீராத சோழகத்திற்குள் ஒரு குப்பி விளக்கைக் கொழுத்திச் செல்வது போலத்தான் கொண்டு போனோம்.
ஆனால் சோழகம் பெருத்தது.... எங்கள் குழந்தைகளின் பற்கள் குழிரால் கடகடக்க கடல் குளிப்பாட்டியது. ஆடைகளை பிளிந்து பிளிந்து போர்த்தினோம் அவர்களின்மேல். ஆனால் அலைகள்..... அலைகள்........
கொள்ள முடியாத அலைகளெல்லாம் எம்முடன் வந்து குழுமிக்கொண்டன. தாங்களும் அலைந்து திரிபவர்கள்தானே என்று எங்கள் தோழ்களில் கைகள் போட்டன. ஜயோ கொட்டுண்டு போனது ஒரு சனக்கூட்டம். என் கண்முன்னே
கை கால்களை அசைத்தபடி எத்தனை குழந்தைகள் நீருக்குள் போயினர்..... அம்மாக்கள்... ஜயாக்கள்... சொந்தங்கள்... எல்லாக் கண்களும் எனக்கு எதையோ வல்லமையோடு உச்சரித்து விட்டுத்தான் போயின. அந்தக் கண்களில் கொழுந்து விட்டெரிந்த கடைசி நெருப்பினை நான் கண்டேன். நெருப்பால் நிறைந்தவனாய் நான் நீந்தினேன் உயிர்கள் கொட்டுண்ட அந்த இடத்தை உயிர்களாலேயே குறிப்பு வைத்துவிட்டு நான் நீந்தினேன். கடல் அழித்துவிட்டது என் உயிர்க் குறிப்புகளை......
என் மனம் போன போக்கில் நீந்தினேன்.

மனசுக்கு ஒரு கரை தேவையாய் இருந்தது. அந்தக் கரைதான்..... அந்தக் கரைதான்....... இப்போதும் நான் தேடிக்கொண்டிருக்கும் எனது இலட்சிய பூமி. அதில்தான் அந்த சிரிப்புச் சத்தங்கள் பூத்திருந்தன. கரைமுழுவதும் வாழ்க்கையின் நறுமணம் பரவியிருந்தது.. அதேதான்.
நான் கரையொதுங்கியதும் ஓடி வந்து என்னைத் தூக்க கைகள் இருந்தன. என்னைக் குழிப்பாட்டி வெள்ளை ஆடைகளை உடுத்திவிட்டு இளைப்பாறுதலைத் தர உறவுகள் இருந்தன. தமிழ் அவர்கழுக்கு உணவாக இருந்தது. நான் கண்ட அந்த மனிதர்களுக்கு பலவர்ணங்களாலான
சிறகுகள் இருந்தன. அவர்களின் உடல்களெங்கும் மீன்களைப்போன்று செகிள்கள் இருந்தன. அவர்கள் பறப்பதிலும் நீந்துவதிலும் கெட்டிக் காரர்களாக இருந்தனர். எனது நிலத்தின் மனிதர்களும் இவ்வாறே இருந்தால் விமானத்
தாக்குதல்களிலும் கடல் அனர்த்தங்களிலுமிருந்து தப்பியிருப்பார்களல்லவா? என்று நினைத்துக்கொண்டேன். உண்மையில் நான் கனவில் கண்டவர்கள் அதி மனிதர்கள்தான். பூரண சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்க வல்ல பரிணாமமடைந்த மனிதர்களின் குறியீடுகள்தான். ஆனால் அந்தக் கனவு .....அந்தக் கனவு .... இந்த அளவோடு மறந்து போனது.
நான் சொல்லும் அந்தக் கனவு உனக்கு ஒரு மிகு புனைவாகத் தெரியலாம். ஆனால் அந்த மனிதர்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும்
இருந்தார்கள் தெரியுமா? இது கனவுதானே என்று நான் விட்டுவிட விரும்பவில்லை. ஏனெனில் இந்த நிலம்தான் நீ கண்டடைய வேண்டியது" என்று எனக்குள் ஒரு குரல் கேட்டபடியே இருந்தது. இதை எல்லோரும் நம்பப் போவதில்லை ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா? உன்னைக் காண்பதற்கு சுமார் நான்கு இரவுகளுக்கு முன்னரே உன்னைக் கனவில் கண்டு விட்டேன் தெரியுமா? உன்னை முதன் முதலில் பூங்காவில் கண்டபோது எந்த ஆடையை நீ உடுத்தியிருந்தாயோ அதே மெல்லிய நீல ஆடையுடன்தான் அந்தக் கனவிலும் வந்திருந்தாய். தெரியுமா? என்றேன்
அவள் ஆச்சரியமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
00

நாங்கள் இருவரும் கரை மணலில் படுத்திருந்தபோது கிழவனின் சிரிப்பொலி நளினமாய் நையாண்டியாய் கேட்டபடியிருந்தது. சவக்காலையில்
பிணங்களைத் தோண்டிக்கொண்டிருந்தவனைத் தின்ற வயிறு பெருத்த நரிகளின் ஏப்ப ஊழையும் அதில் கலந்திருந்தது.
கடற்கரையிலேயே உறங்கிப்போன எங்களை
கிழவன்தான் தட்டி எழுப்பினான். அவனது கையில் பிணக்குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்த 'பாவட்டை"என்ற மனிதனின்
ஆடைகளடங்கிய பொட்டலமொன்று இருந்தது. அதை அவன் என்னிடம் நீட்டி மகனே ,தன் உரிமையாளன் உயிரோடு இருந்த
போது பிணக்குளிகளைத் தோண்டுவதிலேயே தன் சக்தியை விரயம் செய்தான். அவனிடம் இறந்து போன அவனது
உறவுகளின் பட்டியலொன்று இருந்தது. அவன் அந்தப் பட்டியலை வாசித்து வாசித்து இறந்தவர்களின் ஆத்துமாவை தேடிக்கொண்டிருந்தான். ஆனால் நேற்று இரவு அவனும் மரணமடைந்துவிட்டான். என்றான் கிழவன்.
மேலும் எங்களது பயணத்தைத் தொடர 'சிங்கமலைக் குகையே" பொருத்தமானதென்று ஆலோசனைகூறி வழியனுப்பி விட்டான். நாங்களிருவரும் 'சிங்க மலைக்" குகையைத்தேடி நடக்கத் தொடங்கினோம். எங்கள் இருவரின் மனதிலும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த கிராமம் இலக்காகியிருந்தது. அவள்கைகோத்திருந்தது எனக்கு பலமாக இருந்தது.
'முடிந்தது"

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)