Thursday, June 16, 2016

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.


கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு.


நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால் அதன் வெவ்வேறு பக்கங்களை பெரும்பாலும் பார்க்கத் தவறுகின்றோம், அல்லது மறைத்துவிடுகின்றோம். கனடிய தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய முற்படும் ஒருவருக்கு எவ்வாறான பிம்பத்தைக் காட்டி நிற்கின்றோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
எத்தனை சஞ்சிகைகள், எத்தனை பத்திரிகைகள், எத்தனை அமைப்புகள், நாடகக்குழுக்கள், பரதநாட்டிய பயிற்சிக்கூடங்கள், திரைப்பட முயற்சிகள், வானொலி,தொலைக்காட்சி நிறுவனங்கள், கலைஞர்கள் என்ற ஒரு பட்டியலும் அது சார்ந்த புகழுரைகளுமல்ல வரலாறு. அதற்கு அப்பாலும் பல கோணங்கள் இருக்கின்றன.

இந்த அப்பாலிருக்கும் கோணங்கள் என்பவை சமரசங்களின் குவியல்களாகவும், பொருட்படுத்தாத, அல்லது உதாசீனம் செய்யப்பட்ட, சாட்சிகளைக் கொண்டிராதவையாகவும் இருக்கின்றன. 

இவற்றைப்பற்றிப் பேசினால் நட்பில் பிரிவு வந்துவிடும், ஒதுக்கப்பட்டுவிடுவோம், மிகுந்த மன நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். என்ற வகையிலேயே இவற்றைப்பற்றி பலரும் பேசுவதில்லை. இலக்கியச் சூழலில் இருக்கும் பலரின் ‘நட்பு’ என்பது சமரசத்தின் கொள்ளிடம்தான்.

இவ்விடயங்களைப்பற்றிப் பேசினால் ‘தனிமனிதத் தாக்குதல்’, தூற்றுதல், பொறாமை, காழ்ப்புணர்வு, மண்டைப்பழுது, எனும் சொற்களைக்கொண்டு பேசுபவர்  ஒடுக்கப்படலும், வேறு சக்திகளோடு இணைத்துப் பேசப்படலும் நடைமுறையில் உள்ள விடயம்தான்.

இவ்வாறான விடயங்களைப் பேசுவதற்கு ஆட்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசினால் அப்பேச்சு முறை ‘கிசுகிசுப் பாணியாக’ அமைந்துவிடும். புனைவுக்குள் வைத்தால் ‘புனைவுத்தன்மையைக் கெடுத்துவிடும்’ என்றெல்லாம் வடிவச் சுத்தங்கள் பற்றிய அபிப்பிராயங்களும் உண்டு. அத்தோடு இவ்வாறான எழுத்தை அநாகரீக எழுத்து என்று மிக இலகுவாகப் புறம்தள்ளவும் நம்முடைய ‘நாகரீகம் பற்றிய மிகப்பழய பார்வை’ வழிவகுக்கலாம்.

இவ்வாறு யோசித்து பேசப்படாத காரணிகளே சிலரது சதுரங்கக் காய்கள். இக்காய்களை மிக நாசூக்காய் அரக்கி இச்சூழலின் இலக்கிய ஜாம்பவான்கள் ஆகும் தம் ஆசையை இவர்கள் நிறைவேற்றிக்கொள்கின்றனர். இலக்கியவாதி, அரசியல் ஆய்வாளர் என்கின்ற பெயர்கள் வியாபாரிகளின் ‘மக்கள் தொடர்புச் செயல்கள்’ ஆக மாறி நிற்பதும் இந்த நிலத்தில் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றது.

ஒரு பத்திரிகையின் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு வியாபாரி எழுந்து பேசினார் ‘இனி எழுத்தாளர்களெல்லாம் வியாபாரப் பெருந்தகைகள் பற்றி எழுத வேண்டும்’ என்று. பிற்காலத்தில் அவரே அரசியலிலும் குதித்து வேட்பாளரானார். வீக்கமுற்றிருக்கும் இச்சமூகத்தின் மேல்தெரியும் முகங்களில் அவர் முகமும் முக்கியமானது. ஆனால் அவரைப் போன்றவர்களை கோமாளிகள் என்றே என்னால் உணர முடிகிறது.

கனடிய இலக்கியச் சூழலில் இயங்கும் கலைஞர்களை வகைப்படுத்திப் பார்க்கலாம். அவை
1    ‘ஜனரஞ்சக எழுத்தாளர் இணையம் என்றும்
   ‘வெள்ளாள, பார்ப்பனிய, பல்கலைக்கழக கூட்டுமுகாம்.’ என்றும்    வகைப்படுத்தலாம்.                                               

 இந்த அணிகள் இரண்டையும் அனுசரித்துப் போகின்றவர்கள் என்றும் , எல்லாக் கூட்டங்களிலும் தலைகாட்டி ‘செய்கடன்’ செய்பவர்கள் என்றும் சிலர் இருக்கின்றனர். அத்தோடு உதிரிகளாய் இயங்கிக்கொண்டிருக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த உதிரிகள் முன்னரெல்லாம் விமர்சிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இப்போது களைப்போ,சலிப்போ, தனிமைப்படுத்தப்பட்டதோ காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் ஒத்தோடுவதற்கு தயாரானவர்கள் என்பதுபோலவே நடந்துகொள்கிறார்கள். அதற்கு தத்துவார்த்தமான காரணமொன்றையும் தயாரித்தும் கொள்கின்றனர்.

நான் குறிப்பிட்ட இலக்கிய அணிகளில் முதலாவது அணி மிகப் பெலவீனமான சமூகப்பார்வையும், இலக்கிய அணுகுமுறையும் கொண்டது. அது ஒரு ஆளைப்பற்றி தெரியாமலே அவரைப்பற்றி அவரிடமே கேட்டு அவரைப் புகழக்கூடிய நிலைக்கு வளர்ந்துள்ளது.
 ஆனால் இரண்டாவது அணியோ ‘சமூகத்திற்கான கருத்தியல் உருவாக்கத்தைச் செய்யக்கூடிய பீடம்’ எனும் முகத்தோற்றத்தைக் காட்டிநிற்கும் தோத்துப்போன சமூகமொன்றின் அழுக்குத்தொடர்ச்சி என்று சொல்லக்கூடியதாய் இருப்பதோடு, மிக நாசூக்காய் காய் நகர்த்தியும் வருகிறது. அதன் நகர்வுகளை அவதானித்து புரிந்துகொள்வதும், வெளிப்படுத்தலும் இன்றைக்குள்ள சமூகப் பொறுப்பு என்றே கருதுகின்றேன்.
00
பல்கலைக்கழகத்தை இலக்கியவாதிகளின் கோட்டையாகப் பாவிக்கும் மன நிலையொன்று நம் இலக்கியவாதிகளிடம் இருக்கிறது. கனடிய தமிழ் இலக்கியச்சூழலில் அக்கோட்டையை ‘ஆதிக்கசமூகம்’ நாசூக்காக கைப்பற்றியிருக்கிறது.
இயல்விருது வினியோகஸ்தர்கள் இக்களத்தில் பொங்கித்திரட்சியுற்ற தமிழன்னையின் மூத்த புதல்வர்கள்தான். இங்கே பிரபாகரன் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு இயங்குபவர்களும் இணைந்திருக்கின்றனர். நாம் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாய் உற்றுநோக்கினால் மிகத் துல்லியமாய் தெரிந்துவிடும். 

முன்னர் ஒருமுறை இச்சூழலில் இயங்கும் ஒருவரோடு நான் உரையாடியபோது ‘நமது இலக்கிய, அரசியல் சூழலில் சாதி ஆதிக்க மன நிலைதான் வேற்றுருக் கொண்டிருக்கிறது’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘சமூகத்தில் மேல் சாதியினர்தானே அதிகமாக கல்விகற்றவர்களாகவும், அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள் இது அவர்களின் குற்றமல்லவே’ என்றார். நான் அவர்கள் கல்வி கற்றது குற்றமென்று சொல்லவில்லை. அவர்களின் இயங்குமுறைகள் சாதி ஆதிக்க மனநிலையில் அமைந்திருக்கிறதென்பதாலேயே அவர்களை விமர்சிக்கிறேன்.
கல்வி என்பதையோ, அல்லது மொழியறிவையோ அதிகாரத்தின் துணைக்கருவியாகப் பாவிக்கின்றனர். பதுக்கப்பட்டிருக்கும் சாதி ஆதிக்க மனநிலையைச் சுற்றி வெவ்வேறு உப மையங்களால் அரணமைக்கின்றனர்.
அவர்கள் நடத்தும் தமிழிலக்கியம் பற்றிய கூட்டங்கள் பல ஆங்கிலத்தில் அமைந்திருக்கின்றன. சபை நிறைந்த தமிழர்கள் இருந்தாலும் ஒரு தமிழ்தெரியாதவருக்கு புரியவைப்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவது தவறல்ல. ஆனால் சபைமுழுதும் தமிழர்கள் இருந்தும் ஆங்கிலத்தில் பேசவேண்டியிருக்கிறது இவர்களுக்கு.  ‘குண்டி’ என்று தமிழில் சொன்னால் அருவருப்பு. ஆங்கிலத்தில் ‘Buttock’ என்றால் அவ்வருவருப்பு வராது. இந்த மன நிலைதான் முன்னர் ‘இழிசனர் இலக்கியம்’ என்று ஒடுக்கப்பட்டமக்களுக்குச் சார்பான இலக்கியத்தை இழிவுசெய்தது.

இன்னும்கொஞ்சம் மேலே போனால் இந்த இலக்கியக்குழு இந்தியாவில் இருந்து பி.ஏ. கிருஷ்ணனையோ, ஜெயமோகனையோ அழைத்து தம் மன மகிழ்ச்சியை வளர்த்துக்கொள்ளும். ஒருமுறை பி.ஏ. கிருஷ்ணன் வந்திருந்தபோது அக்கூட்டம் அக்கிரகாரத்தில் நடப்பதுபோலவே இருந்தது. அதில் பெரியாரை போகிறபோக்கில் தாக்கிவிட்டுப்போகும் எத்தனங்களும் நிகழ்ந்தன.
நாம் இவர்களை விமர்சிக்கிறோம் என்றால் நமக்கு எதிர்வினையாற்றும் கோட்பாட்டாளர்களைக்கூட இவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களின் கோட்பாட்டாளர்கள் இவர்களின் நட்பிலும்,இவர்கள் நம்பும் நாகரீகத்திலும் வளர்ந்தவர்கள்தான். பெரும்பாலும் அப்பாவிகள். அல்லது அப்பாவி வேடதாரிகள்.
இச்சூழல் சாதிய,ஆணாதிக்க மனநிலைகளால் திரட்சியுற்று நிற்பதுதான். இதனைப் புரிந்துகொண்ட சில பெண் எழுத்தாளர்கள் ‘இது அவங்கட இலக்கியம், அவங்கட அரசியல் இதுக்க நமக்கு என்ன வேலை’ என்று சலித்துக்கொண்டதை பலதடவைகள் கேட்டிருக்கிறேன். இன்னும் சில பெண் எழுத்தாளர்கள் இந்த ‘அவங்கட’ இலக்கியத்துக்குள்ளேயே வெற்றிக்கொடிகட்ட ஆசைப்படுகிறார்கள். ‘இனியெல்லாம் சும்மா பெண்ணியம் கதைக்கிறத்தில எனக்கு ஆர்வமில்ல’ என்றும் பேசிக்கொள்கிறார்கள். இந்த அபாயமான சூழலை தொடர்ந்து சகித்துக்கொள்வதுதான் எப்படியென்று தெரியவில்லை.

 கிராமச் சங்கங்கள் எனும் பெயரில் சாதிச்சங்கங்களும், பெருகிவரும் கோயில் கட்டுமானங்களும் சாதி மன நிலையை நிலைநிறுத்தும் காத்திரமான வேலைகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. நாமோ தீவிரசிந்தனையாளர்கள் எனும் நினைப்போடு முப்பது, நாற்பதுபேர் கூடுகிறோம். கேட்டால் ‘எங்களுக்கு தலைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல தலைகளுக்குள் என்ன இருக்கின்றது என்பதுதான் முக்கியம்’ என்போம். ஆனால் நம் புத்தகம் வெளியிடப்படும்போது நமக்கு ‘வரலாற்றில் எங்கும் கண்டிராத சனத்திரள்’ தேவையாய் இருக்கிறது.
00
புலம்பெயர் சூழலில் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் வெளிவந்தன. அவற்றில் பல தொடர்ந்து வெளிவராததன் காரணங்களில் ஒன்று பொருளாதார நெருக்கடி, அடுத்தது அவை பேசிய நேரடியான அரசியல். இவை இரண்டுக்குள்ளும் அகப்படாமல் வருகின்ற எழுத்தூடகங்களும் இருக்கின்றன.
 இவை மிக நாசூக்காய் பல விடயங்களை தவிர்த்துக்கொண்டு ‘யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளை மன நிலையோடு’ வெளிவருகின்றன. அரசியல் உரையாடல்கள் வளர்த்துச்செல்லப்பட வேண்டிய சமூகத்தின் பொறுப்புமிக்க எந்த ஊடகமும் இச்சாயலில் வெளிவராது. இப்பத்திரிகைகள் விக்கினமற்றவற்றை தெரிவுசெய்வதாய் கூறிக்கொண்டு தமக்கென்றிருக்கும் அரசியல்சார்புகளை வலுப்படுத்துகின்றன. இவை தொடர்ந்து இவ்வாறே வெளிவருவதை வரலாற்றின் முக்கிய பங்களிப்பாக முன்னிறுத்துவது அபத்தமான செயலன்றி வேறில்லை.

நாம் ‘சமூகநலச்செயற்பாடு’ எனும் பெயரில் செய்யும் பலவிடையங்கள் ‘பண அனுசரணைகளைப்’ பெற்றே செய்யப்படுகின்றன. நம் சமூகநலச் செயற்பாட்டிற்குள் அரைப்பங்கு ‘ வியாபாரத்திற்கான விளம்பர நோக்கம்’ பொதிந்திருக்கிறது. நம்முடைய ஒட்டுமொத்த சமூகநலச் செயற்பாடுகளையும் கணக்குப்போட்டாலும் ஐம்பதிற்கு ஐம்பது எனும் கணக்கே கிடைக்கும்.
 நம் கலை இலக்கியம் எல்லாவற்றிற்குள்ளும் இந்த விளம்பரதாரர்கள் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில் அவர்கள் எழுதும் குப்பைகளைக்கூட பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடவேண்டியிருக்கிறது.
 சமூகத்தில் வெற்றியடைந்த பக்கங்கள் பலவற்றையும் உள்வாங்கி வெளிவரும் இப்பத்திரிகைகள் சமூகத்தின் அதிகாரமையங்களை வளைத்துப்போட்டதோடு, எல்லோரையும் லாவகமாக உள்வாங்குவதற்கு அவற்றின் நேரடி அரசியலற்ற தன்மையே காரணம் எனலாம்.
அவற்றின் வளர்ச்சியை திறந்த மனதோடு வாழ்த்த வேண்டியநாம். அவை கொண்டிருக்கும் பெரிய நிறுவனமாதலுக்கான தாகத்தில் உருவியெடுக்கப்பட்ட சமூக அரசியலையும் கொஞ்சம் அவதானிக்க வேண்டும் என்பதே என் மொழிவு.
00
அதிகாரத்தை எள்ளல் செய்வதற்கும், சனங்களை எள்ளல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தன்னைத்தானே எள்ளல் செய்வதென்பது ஒரு வகை ஞான நிலை. ஆனால் தன்னை ஒரு ஞானியாக காட்டிக்கொள்ளவும் அவ்வாறு எள்ளல் செய்யலாம்.
 தோத்துப்போன சமூகமொன்றில் எள்ளல், கேலி, கிண்டல் என்று செய்வதற்கு பல விடயங்கள் நிறையவே கிடைக்கக்கூடியதாக இருக்கும். நிறையவே கிடைக்கக்கூடிய எள்ளலுக்கான அம்சங்களை எடுத்துப் பேசும் மன நிலை என்பது ஒரு வகையில் சமூகத்திலிருந்து தன்னை உயர்த்திக்காட்டும் குறிக்கோளைக்கொண்டது. அல்லது துயரத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கும் முனைப்பாகவும் நிற்கமுடியும்.

 முன்னர் இலங்கை அரசியல் பேசிய பல கூட்டங்கள் இப்போது ‘கொசிப்பு’ கதை பேசும் கூட்டங்களாக மாறியிருப்பதை கனடாச் சூழலில் அதிகமாகவே காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் ‘கொசிப்பு’ என்பது மேற்கூறிய எள்ளல் மனநிலையிலிருந்து வடிந்து வந்திருக்கும் மண்டிதான். இதனை நியாயம் கேட்கும் தொனியில் பேசுவது ஒரு புதியபாணிபோல ஆகிவருகிறது. ஆனால் இது சமூக முன்னேற்றத்துக்கான உரையாடல்களை வளர்த்தெடுக்கும் தெம்பற்றது என்பதே உணரக்கூடியதாயிருக்கிறது.
 அதுமட்டுமல்லாமல் நம் இலக்கிய விமர்சகர்கள் பலருக்கு எள்ளல், கேலி, கிண்டல், அங்கதம் என்பவற்றிற்கெல்லாம் வித்தியாசம் தெரியாது. எல்லாச் சரக்குச்சாமான்களையும் ஒரே குவியலாய் போட்டு ஒரு விலை சொல்லி வித்தால் போதும் எனும் மன நிலைதான் இவர்களுடையது.

இச்சூழல்பற்றிய என்னுடைய மனக்கணக்கு இவ்வாறுதான் இருக்கிறது. 

கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

கனடாவில் நடந்த இலக்கியச்சந்திப்பில் ‘பேராசிரியர் பாலசுந்தரம்’ வாசித்த கூத்துப்பற்றிய கட்டுரையில் கூத்துக்கலையை கட்டிவளர்த்தவர்களாக பேராசிரியர்களின் பட்டியல் ஒன்றே இருந்தது. அந்த இடத்தில் வைத்தே அதை நான் சுட்டிக்காட்டியும் இருந்தேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வரலாறு இப்படித்தான் நகர்கிறது. இந்த வரலாற்றுக்கு மறுபக்க வரலாற்றை நாம் எழுதவேண்டியுள்ளது.
 இந்த இலக்கியச் சூழலில் புகழ் பூத்துவரும் இலக்கியப் போக்கின் ‘உட்பெட்டி’ அல்லது ‘மேசைக்குக்கீழ்’ நிகழ்த்துதல்களை வெளிப்படுத்தினால் புறமொதுக்கப்படுவோம் என்று நினைப்பவர்களே இவர்களிடமிருந்து நாம் புறப்பட்டால்தான் மானுடத்தின் மனச்சாட்சியின் குரலாய் நம் இலக்கியத்தை நகர்த்தமுடியும்.

மெலிஞ்சிமுத்தன்.அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...