Thursday, February 28, 2013

பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்.

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம்
எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”
என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன்.
உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால் எவ்வளவு நல்லது என்று யோசித்தேன். அல்லது அனானியாகப் பேசுவதற்கும் விருப்பம்தான். வெகு விரைவில் அப்படி ஒரு வசதியையும் இந்த தொழிநுட்பங்களில் வளர்ச்சியைக்  கொண்டு கண்டுபிடிப்பதன் மூலம் அர்த்தமும்,உணர்வுகளும் கூடிய இதைப் போன்று கூட்டங்கள் நிகழ்த்தி உரையாடுகின்ற சாத்தியங்களைக் உலகம் கொன்றுவிடுமென்றுதான் நினைக்கிறேன்.
புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு விசயம் தான். அது தமிழீழத் தேசியக்கொடியாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கொடி. அதற்குள் ஒரு புலி கண்ணை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் துவக்குகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். துவக்குகளை நிமிர்த்திப் பிடித்தால் அவர்களை விடத் துவக்குகள் உயரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அட்டைப்படத்தில் அவர்களுடைய முதுகுகளின் நிழல் மட்டும்தான் தெரிகிறது. முதுகுகளிடம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லம். அந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிவது என்ன உணர்ச்சி என்று அந்தக் கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம். இப்போது நான் அந்தக் கண்களில் தெரிவது பயமென்றோ,வீரமென்றோ,இல்லை அவை செத்துப்போய்க் கிடக்கிற கண்களென்றோ சொல்லப்போக செத்த புலிகளைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்றோ அல்லது பசித்த புலிகள் என்னைத் தின்னட்டும் என்பதான விசனங்கள் வரலாம் என்பதால் புத்தகத்தின் அட்டையைத் திருப்பி உள்ளே போய்விடலாம்.
கதைகளைப் படித்த பிறகு தீட்டப்படப்போகிற வார்த்தைக் கத்திகளை நிதானப்படுத்த மெலிஞ்சிமுத்தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார். “இவற்றை எழுதிய நான் எவற்றுடனும் நேரெதிரே நின்று போரிட்டு வென்றவனில்லை. தப்பித்தலின் சாத்தியங்களை நீதியென்று தோற்றம் கொண்டவற்றுக்கு குந்தகம் வராத தருணம் பார்த்து பயன்படுத்தி வந்தவன்தான்” எனக்கு உடனடியாகவே சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது அடடா என்னைப்போல ஒருவன்.
உரையாடலின் அவசியம் குறித்து தமிழ்ச்சூழலில்,தமிழ்த்தேசியச் சூழலில் அதீதமான அக்கறையோடும் கரிசனையோடும் அணுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமகாலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட உரையாடலின் சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது தொழிநுட்பம். உரையாடலை விரல்நுனிக்கு கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில்  இணையம் எவ்வளவு நெருக்கமாக அதனை எளிமைப்படுத்தியிருக்கிறதோ அத்தனை தூரம் அதனை மர்மப்படுத்தியும் இருக்கிறது. எல்லோருடைய இரண்டாம் முகங்களும் அல்லது அவதாரங்களும் இணையவெளியெங்கும் இறைந்து கிடக்கிறது. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் மாறி மாறிப் பிறருடைய மனங்களுக்குள் பின்கதவுக்குள்ளால் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியிருக்கிறது. ஒரு நண்பர் பதின்நான்கு face book ஐடிகளை வைத்திருக்கிறார்  என்பதை எனக்கு வேறொரு நண்பர் Facebook ல் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் பதின்நான்கில் எட்டு பெயர்களுக்கு நான் பேஸ்புக்கில் நண்பராயிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிக் கதைக்கிறதை விட்டுவிட்டு face book ஐடிகளைப் பற்றிய கிசுகிசுக்களை பேசுகிறேன் என்று நீங்கள் எரிச்சலமையக்கூடும். இந்தத் தொகுப்பில் மெலிஞ்சி முத்தன் இருக்கிறார், அவரது இன்னொரு ஐடியும் இருக்கிறார் அவருக்குப் பெயர் மாணங்கி. இன்னும் பல ஐடிக்களும் மெலிஞ்சி முத்தனுக்கு உண்டு. ஆனால் அவர் அதிகமாகப் பாவிக்கிற ஐடி மாணங்கி. அது தவிரவும் உரையாடல்கள் பற்றி நான் பேச இன்னொரு காரணமும் உண்டு. இக்கதைப்புத்தகத்தில் இடம் பெறுவது உரையாடல்கள் என்பதாயே நான் உணர்கிறேன்.  தனது மனக்கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித்தீர்த்துவிடுகிற வேட்கைதான் இங்கே மெலிஞ்சியால் கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும், வாழ்வில் நிலையின்மையும் நண்பர்களை நம்மிடமிருந்து துரத்தியபடியிருக்க தனக்குத்தானே ஐடிகளைக் கிரியேட்பண்ணியபடி பேசிக்கொண்டிருக்கிறார் மெலிஞ்சி முத்தன் இந்தக் கதைத்தொகுதி நெடுகிலும்.
இந்தக் கதைகள் முழுவதும் மாணங்கி வந்துகொண்டேயிருக்கிறார். உண்மையில் இந்தச் சிறுகதைகளில் மெலிஞ்சி முத்தன் தான் கடந்து வந்திருக்கிற மனிதர்கள் குறித்தும், அவரது வாழ்வின் தேங்கிநிற்கிற நினைவுகளைப் பற்றியும் அவருடன் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்  கடற்கரையில் அமர்ந்து மாணங்கியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துக்கொள்ளக்கூடிய கடலின் மகனாக அவர் இருக்கிறார். அவர் விளையாடும் பருவத்தில் புதினமான பொருட்களைப் பரிசளித்த கடல் அவருக்குத் துயரத்தையும் பரிசளிக்கிறது. அவரால் கடலை நம்பமுடியாமலும் இருக்கிறது அதே நேரம் கடலைக் கைவிடவும் முடியாமலிருக்கிறது. அவர் அந்தக் கடலை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.
தாங்கள் நம்புகிற பெருங்கடலை நம்பவும் முடியாத,அதே சமயம்  நம்பாமலிருக்கவும் முடியாத சாதாரணர்களின் கதைகள் தான் இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அறிவை நிராகரித்த ஆயுதம் பற்றிய கதைகளும், பிறகொரு நாள் சுயநலம் மிக ஆயுதங்களுக்கு ஆலாபனை பாடிய அறிவும் என்று இது வரைக்கும் கதைகள் சொல்லும் உரிமையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கதைகளை இப்போது வரத்தொடங்கியிருக்கிற இவை இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு இந்த இரண்டு எதிர்நிலைகளுக்கிடையேயும்  நசிபட்ட சனங்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நம்பியும் நம்பாமலும் விரும்பியும் விரும்பாமலும் பொதுவெளியின் அரசியலோடு இழுபட்டுச் சென்ற சனங்களில் குரல்கள் கதைகளில் இருக்கிறது.
இல்ஹாம் என்கிற கதையில் இப்படி எழுதுகிறார்.
“எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவையல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளையே எங்கள் நம்பிக்கைகளாக் கொண்டிருந்தோம்…………………….. கூப்பன் கடைகளில் சந்தித்துக்கொள்ளும் போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம்”
கூப்பன் கடைகளோடு சேர்ந்து தங்களையும் இடம்பெயர்த்திக்கொண்டேயலைந்த, சமூகத்தின் பெரும்போக்காகவுள்ள அரசியலையே தங்களுடைய அரசியலாகவும் வரித்துக்கொள்ள நேர்ந்த மனிதர்களின் கதைகளாக இக்கதைகள் எழுதப்படுகின்றன. இல்ஹாம் என்கிற கதையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வீட்டில் வாழநேர்ந்த  ஒரு மனிதன் அது குறித்து சங்கடப்பட்டு குற்றவுணர்வுக்குள்ளாகிறான் பிறகு அதே குற்றவுணர்வு ஏன் இத்தனை தாமதமாக எனக்கு ஏற்படுகிறது என்று வெட்கமடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சாதாரணமான சனங்களின் மனவுணர்களைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குற்றவுணர்வும் வெட்கமும் கதைசொல்லும் வெளிகளை இது வரை ஆக்கிரமித்திருந்த பிரகிருதிகளிடமிருந்து வரவில்லை. அவர்கள் இதற்கும் ஒரு விளக்கமும் சொல்லிக் கடந்து போவார்கள். ஆனால் சாதாரணிகளால் அவற்றைக் கடக்க இலகுவில் முடிவதில்லை.
உண்மையில் மனிதர்களின் மிகப்பெரிய சாபமே குற்றவுணர்வுதான்.  குற்றவுணர்வை எப்படிக் கடப்பதென்பதுதான் மனித ஆன்மாவை அலைக்களித்தபடியிருக்கும் பெருங்கடல். பாவமன்னிப்பு கேட்பதைப் போல, கோவில் திருவிழாவில் உபயகாரராய் இருப்பதைப்போல, பிச்சைக்காரர்களின் சில்லரைத் தட்டில் நாணயங்களை வீசியெறிவதைப்போல குற்றவுணர்வுகளைக் கடக்கும் எளிய சூத்திரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும்  மனித ஆன்மாவைத் திருப்தி செய்துவிடுவதில்லை. அரசியல் சார்ந்த தமிழர்களின் குற்றவுணர்வு ஒரு பெரும் வெளியாய் விரிந்திருக்கிறது. அதனால் போர்க்கடவுள்களின் உண்டியல்கள் நிறைந்ததன்றி வேறெதுவும் நடந்ததாயில்லை.
ஒரு படைப்பாளியாக மெலிஞ்சு முத்தனின் ஆற்றாமைகள் இந்தக் கதைகளிலே பதிவு செய்யப்படுகிறது.  உண்மையில் ஊரைப்பிரிய நேர்கிற எல்லோரிடமும் நினைவு மூட்டைகள் இருக்கின்றன. அந்த மூட்டைகளுக்குள் காலத்தின் புன்னகையிருக்கிறது,தப்பித்தலின் கண்ணி ஒழித்துவைக்கப்பட்டிருக்கிறது, இடம்விட்டு இடம்தாவித் தன்னைக் தகவமைத்துக்கொள்ளும் உடலொன்றிருக்கிறது, கூடவே பாவங்களும், துயரங்களும், கண்ணீரும் அந்த மூட்டைக்குள் இருக்கின்றன. இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நினைவின் சுமைகள் உரையாடலைக் கோருகின்றன, பகிர்தலை யாசிக்கின்றன. ஆனால் துரதிருஸ்ட வசமாக எல்லோரிடமும் மூட்டைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மூட்டைகளை அவிழ்க்கவேண்டிய அவஸ்தையும் பெருத்த தயக்கங்களும் உண்டு.  எனக்கும் கூட. ஆனால் அடுத்தவரின் மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்பது  பற்றி அறியும் ஆவல் அதனைவிடப் பன்மடங்காககப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. மூட்டைகளை அவிழ்ப்பதில் இருக்கிற தயக்கமும் அவஸ்தையும் மெய்யான உரையாடலின் சாத்தியமான வெளிகளை அறைந்து சாத்துகிறது.
மெய்யான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறைந்த இப்படியான ஒரு சூழலில் மெய்யான உரையாடலை யாசிக்கும் மெலிஞ்சிமுத்தனின் படைப்பு மனம் தன்னோடு உரையாட ஒரு பிரகிருதியைக் உருவாக்குகிறது. அதன்பெயர்  மாணங்கி. மெலிஞ்சி முத்தன் தான் சுமந்துகொண்டிருக்கும் நினைவுகளாலான மூட்டையை அவருக்கும் மாணங்கிக்குமான உரையாடல்களாக சிறுகதைகளாக இந்தப்புத்தகத்தில் அவிழ்க்கிறார். அந்த உரையாடல்கள் நம்மையும் ஒரு உரையாடல் வெளிக்கும் நமது மூட்டைகளை அவிழ்ப்பதற்கான தூண்டுதலையும் நமக்களிக்கின்றன.
இத்தொகுப்பில் இருக்கிற கூட்டிச்செல்லும் குரல் என்கிற சிறுகதையில் மாணங்கியும் ஒரு குழந்தையைச் சுமக்கிறார். அந்த குழந்தையை இறக்கிவிடுவதற்காக அலைகிறார். குழந்தை அழுகிறது அதைச் சமாதானப்படுத்த ஒரு தென்மோடிக் கூத்துப்பாடலொன்றைப் பாடுகிறார் மாணங்கி அந்தப்பாடலில் பாடுபொருளே பிரண்டையாறு தொகுப்வு முழுவதும்  இழையோடுகிறது.  அந்தப் பாடல் இதுதான் .
நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத் தின்று பாதியாகும்
காற்றினிலே ஓலக்குரல்
கரைமுழுதும் பரவிவிடும்.
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை
பரந்த சிறைப் பட்டணங்கள்
பாவம் இந்தக் கேடயங்கள்.
எல்லோருக்குமான அரசியலைத் தமக்கான அரசியலாகக் கொள்ள நேர்கிறவர்கள் கேடயங்களாக்கப்படுவதை. கூட்டத்திலும் தனித்திருக்க நேர்கிற படைப்பு மனத்தின் அவாவுதலை கதைகள் பேசிச் செல்கின்றன.
‘மொழியின் எளிமையான குழந்தை சிறுகதை’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்தக் கூற்றோடு என்னளவில் உடன்படவும் செய்கிறேன். இவரது கதைகளில் எங்கும் குறியீடுகள் நிரம்பியிருக்கிறது. கதைகளைப் படித்து முடித்த பின்னர் அட்டைப்படம் குறித்த இன்னுமொரு யோசனையும் எனக்கு வந்தது. இந்தப்பக்கம் புலிக்கொடியிருக்கிறது. இந்தக் கொடியின் எதிர்த்திசையில் ஒரு வாளேந்திய சிங்கத்தின் கொடியும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இழுபட்டுக்கொண்டிருக்கும் சனங்களில் வாழ்வு மெலிஞ்சி முத்தனால் எழுதப்பட்டிருக்கிறதாக நினைத்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கொடிகளுக்கும் இடையில் நிற்கிறார்களே என்கிற பார்வையும் எனக்கும் தோன்றியது. இது குறியீட்டின் சாத்தியம். சில சமயங்களில் படைப்பு பேச வருகிற அரசியலையும் தவிர்த்து நமக்கு விருப்பமான அரசியலைப் பொருத்திப்பார்க்கச் செய்துவிடுகிற அபத்தங்களுக்கான சாத்தியங்களும் நிரம்பியிருக்கிற வெளி இந்தக் குறியீட்டு மொழி.
குறியீடுகள் எழுத்தை பல்வேறு விதமான வாசிப்பின் சாத்தியங்களுக்குள் அழைத்துப்போகக் கூடியவை. ஒரு பிரதியின் மீதான பல்வேறு வாசிப்புக்கள் என்பது மொழியின் பலவீனமா? பலமா? என்கிற ஆய்வுகளுக்கெல்லாம் அப்பால், இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகள் குறித்த எழுத்துக்களை, அல்லது தமிழ் மற்றும் சிங்கள அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பத்திரிகைகளை,புத்தகங்களை துப்பாக்கிகளின் கண்கள் வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எங்களுடைய மொழிப்பயன்பாட்டின் நேரடித்தன்மை குறைந்து வந்திருக்கிறதை அவதானிக்கலாம். அது ஒரு நழுவல் மொழியை, அச்சமூட்டப்பட்ட சொற்களை, உண்மையைத் தயக்கத்துடன் எட்டிப்பார்த்தபடியிருக்கும் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சூழ்நிலை எழுத்தின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கிறது.எழுத்தின் இந்தநேரடித் தன்மையின்மையை எழுத்தின் பலவீனமாக நான் உணர்கிறேன். அரசர்களின் நிர்வாணத்தை சிலசமயங்களில் குறியீடுகள் ஆடைகளாகத் தோற்றம்பெறச் செய்துவிடுகின்றன.
இந்தக் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெலிஞ்சி முத்தன் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டுமே! என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா? எப்போதும் ஒரு சில பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. அந்தப் பெயர்களை முன்வைத்தே கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஈழத்து தமிழ் அரசியல்ச் சூழலில் ஏற்பட்ட இரண்டு எதிர்நிலைகளுக்கிடையில் நின்ற எல்லாப் படைப்புக்களும் பேசப்படாமலேபோயின. ஏதோ ஒரு நிலையெடுத்த, ஏதோ ஒன்றைத் தூக்கிப்பிடித்த  படைப்புக்களே விவாதிக்கவும் ஆராதிக்கவும் பட்டன. எதிர் எதிர் அந்தங்களின் அழிவுகள் உணரப்படுகிற காலமாய் சமகாலம் இருக்கிறது. எப்போதும் மைய ஆழுமைகளைக் கட்டமைத்தபடி சுழன்றுகொண்டிருக்கும் இலக்கியச்சக்கரத்தில் எல்லாப் படைப்புகளும், படைப்பாளுமைகளும் கவனத்தை பெறுவதற்கான இலக்கியச் சூழலை நாங்கள் உருவாக்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கிறதாக நான் கருதுகிறேன். சந்தைப்படுத்தல் லாவகங்கள் தெரிந்தவர்களும், நமக்கு நாமே திட்டங்களை முன்னெடுப்பவர்களிடமிருந்தும் இலக்கியத்தின் பிரதிநிதித்துவங்களையும் கூட எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
மெலிஞ்சி முத்தனின் இந்தக் கதைகள் என்னை கடலுக்கு அழைத்துப்போயின. அந்தகடலின் கொந்தளிப்பை, அழுகையை, தழுவலை ,மௌனத்தை இந்தப் பயணத்தின் போது நான் உணர்ந்தேன். உங்களுடைய பயணஅனுபவங்களும் இப்படியேதான் இருக்கவேண்டுமென்றில்லை பயணங்கள் ஒன்றெனினும் பயணிகளைப் பொறுத்து அனுபவங்கள் வேறாகின்றன…
நன்றி: எதுவரை இதழ் 3

பிரண்டையாறு சிறுகதைப் புத்தகம் பற்றி மீராபாரதி

பிரண்டையாறு: ஆழ்மனதில் ஓடுகின்ற … எண்ணங்கள் …
ஒரு முறை திருகோணமலை துறை முகத்திலிருந்து மூதூருக்கு கடல் கடந்து சென்று கொண்டிருந்தோம். இக் கடல் பாதையின் குறுக்காகதான் மாகாவலி கங்கை வந்து கடலில் சேருகின்றது என நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அந்த கங்கையானது, இக் கடலின் அடியில், மிகவேகமாக பாய்ந்து செல்கின்றது. கடலின் அடியில் ஒடும் ஆறு என அதை அன்று புரிந்து கொண்டேன். இது நடந்து 22 வருடங்களின் பின்பு, இவ்வாறான பல ஆறுகள் கடலில் அடியில் ஓடுகின்ற எனவும், அதற்கு ஒரு பெயர் உண்டு எனவும் நண்பர் மெலிஞ்சி முத்தனின் விளக்கத்தினுடாக அறிந்து கொண்டேன். அவரின் சிறுகதை தொகுதியின் தலைப்பான “பிரண்டையாறு”தான் அதற்கான பெயர். பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகள், கடலின் அடியில் ஓடும் ஆறுபோல, நம் ஆழ் மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் என்றால் மிகையல்ல.
பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகளுக்குள் சின்னஞ் சிறு கதைகளும் உள்ளன. அதேவேளை, இதில் உள்ள எல்லாக் கதைகளுக்குள்ளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற… தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கின்ற… அதனால் பாதிக்கப்பட்ட உணர்வுகளைக் கொண்ட ஒரு மனிதர், மாணங்கி, மற்றும் ஆசிரியர் என மூவர் தொடர்ச்சியாக பயணிக்கின்றனர் என்பதையும் அவதானிக்கலாம். இதனால் இதனை சிறுகதைகளைக் கொண்ட ஒரு குறு நாவல் (?) என்று கூட கூறலாம். ஆகவே இவை வெறுமனே சிறுகதைகளின் தொகுப்பு அல்ல
இச் சிறு கதைகளின் தொகுப்பானது, மனிதர்களின் ஆழ் மனங்களில் ஒடுகின்ற எண்ணங்களின் பதிவுகள் என்பதை ஆசிரியரும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார் . உதாரணமாக இரு இடங்களில், “என் மனப் பதிவுகள் போல ஓடிக் கொண்ருக்கின்ற நதி” என்றும் “எண்ணங்களின் திரட்சி” எனவும் உறுதி செய்கின்றார் (25, 58). இவ்வாறான எண்ணங்கள், தமக்குள் முரண்பட்டும், தெளிவற்றும், தொடர்பற்றும் ஒருவரின் ஆழ்மனதில் ஓடிக் கொண்டிருப்பவை. இவ்வாறான எண்ணங்களை, ஒரு முகப்படுத்தி, ஒழுங்குபடுத்தி சிறுகதைகளாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் ஆழ் மனதில் இவ்வாறு ஓடுகின்ற எண்ணங்களைப் பற்றி கவனியாது, அறியாது இருக்கும் எங்களுக்கு இவரது கதைகளுடன் அடையாளப்படுத்துவது என்பது கஸ்டமானதுதான். ஆனால் அவ்வாறு கவனிக்க ஆரம்பிப்போமாயின், நமது சமூகம், தேசம், அரசியல் என்பன பற்றி மட்டுமல்ல  நம்மைப் பற்றியும்,  பல உண்மைகளையும் மற்றும் மனிதர்களின் ஆழமான உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம் என்றால் மிகையல்ல.
பொதுவாக மனிதர்கள் மூளையால் அல்லது மனதால்தான் சிந்திப்பதாக அறிகின்றோம். அல்லது ஜப்பானியர்களைப் போல பொக்குள் பகுதியில்தான் இருந்துதான் சிந்தனை பிறக்கின்றது என நம்பப்படுகின்றது. இன்னும் சிலர், ஏகிப்தியர்கள், இதயத்தால் சிந்திப்பதாகவும் அறிய முடிகிறது. இதைப் போல, இன்னும் வித்தியாசமாக, தான் நடக்கும் பொழுது,  “கால்களினுடாகவும் சிந்திக்கின்றார்” (51) இவ(ர்)ரது பிரதான பாத்திரம். இது சிந்தனை அல்லது எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் என்பது நம் உடலின் ஒவ்வொரு செல்களிலும் இருக்கின்றது என்ற உளவியல் முன்மொழிவொன்றுடன் ஒன்றுபடுகின்றது. இதனால்தான் பிரக்ஞைபூர்வமான ஆழமான புனைவுகள் என்பது பிரபஞ்ச  உண்மைக்கு அருகாமையில் பயணிக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.  இவ்வாறான பயணமானது இவரை இன்னுமொரு தளத்திற்கு கொண்டு செல்கின்றதோ என சிந்திக்க வைக்கின்றது.
மெலிஞ்சி தனது ஆழ் மன எண்ணங்களை கவனித்து, அதனைப் படைப்பாக்குவதன் மூலமாக, தனது ஆன்மாவைத் தேடும் முயற்சியில் இருக்கின்றாரோ என்றே உணர்கின்றேன். ஏனெனில் இவ்வாறன படைப்பினுடான இவர், தனது “மனசைக் கடந்து” செல்ல முற்சிக்கின்ற தருணங்களும் வருகின்றன. இது மட்டுமல்ல, தனது எண்ணங்களுக்கு இடையிலான வெளியின் (“ஷணங்கள்”) (7) அர்த்தங்களையும் தேடிப் பயணிக்கின்றார். இது படைப்பிலக்கியத்தினுடாக “தன்னாத்மாவை தேடுகின்ற” அல்லது பிரபஞ்ச உண்மையை உணர்கின்ற இன்னுமொரு வழியோ எனவும் உணர்கின்றேன். இவ்வாறான ஒரு முயற்சியில், மு.தளையசிங்கமும் எஸ்.பொன்னுத்துரையும் தமது படைப்பிலக்கியத்தினுடாக ஈடுபட்டதாக அறிகின்றேன். இது தொடர்பாக இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.
மெலிஞ்சியின் இவ்வாறன ஒரு பயணிப்பின் உச்சமாகத்தான் இவரது “இல்ஹாம்” (17) என்ற சிறு கதை இருப்பதாக உணர்கின்றேன். இக் கதை தொடர்பாக தேவகாந்தன் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, யாரோ ஒரு பெயர் பெற்ற சிறந்த ஒரு எழுத்தாளரின் கதையைப் பற்றிதான் அவர் கூறுகின்றார் என முதலில் நினைத்தேன். ஆனால் அது மெலிஞ்சியின் கதை என அறிந்தபோது அவர் மீதான அவரது படைப்பின் மீதான மதிப்பு மேலும் அதிகமானது. இக் கதையில் தனது ஆன்மாவிற்கும் மற்றவரது ஆன்மாவிற்குமான இடைவெளியேத் தேடுகின்றார். தேடுவது மட்டுமல்ல அதனுடாக தனது அரசியலையும் அழகாகவும் ஆணித்தரமாகவும் முன்வைக்கின்றார்.
இச் சிறுகதைத் தொகுதிக்கான எனது விமர்சனங்கள் எனின், இக் கதைகளின் இடையிடையே ஆசிரியர் வந்து பல இடங்களில் இடையூடு செய்வதைக் (16, 58, 59, 64) குறிப்பிடலாம். இது வாசகர்களுக்கு அல்லது ஆக்க் குறைந்த்து எனக்கு ஒரு தடைகல்லாகவே இருந்தது.
மெலிஞ்சியின் பிரண்டையாறு மட்டுமல்ல வேருலகும் நம் ஆழ் மனங்கிளில் ஓடுகின்ற நமது எண்ணங்கள் தான் என்றால் மிகையல்ல…. இவை இலங்கையின் தமிழ் தேசத்தையும் அங்கு வாழ்கின்ற, வாழ்ந்த மனிதர்களையும், அவர்களின் போராட்டத்தையும், அதன் அரசியலையும், இதன் விளைவாக உருவான புலம் பெயர்ந்த மனிதர்களின் அவலங்களையும் பல பாத்திரங்களினுடாக படைத்திருக்கின்றது. ஆனால் அவை நேரடியாகவோ வெளிப்படையாக கூறப்படவில்லை. மாறாக சமூகத்தில் சாதாரண மனிதர்களாக வலம் வரும் பாத்திரங்களின் வாழ்வினுடாக, அவர்களது உணர்வுகளினுடாக, உணர்ச்சிகளினுடாக, எண்ணங்களினுடாக வெளிப்படுகின்றது.
மெலிஞ்சியின் இவ்வாறான சிறுகதைகளின் தொகுதியான ஒரு குறுநாவல் (?), சயந்தனின் குறுநாவலான ஆறாவடு போல் ஏன் பேசப்படவில்லை? என்ற கேள்விக்கான எனது பதிலை, ஆறாவடு குறுநாவலுக்கான விமர்சனக் கூட்டத்தில் மேலோட்டமாக முன்வைத்திருந்தேன்.  அதனை  இக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் விளக்கமாக எழுதுகின்றேன்.
மீராபாரதி

'பிரண்டையாறு' பற்றி தர்மினி

தர்மினி
பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன.
1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து   இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன்?பெயரிலும்தான் அக்கிராமத்தையும் கடலின்கதைகளையும் இத்தனை வருடங்களானாலும் தன்னோடு சுமந்துவாழும் மென்மனதுடைய கதை சொல்லியாக, பிரண்டையாறின் மனிதர்களோடு ஒருவராக, நம்முடன் உரையாடிக்கொண்டு வரும் குரலாகவென்று, மெலிஞ்சிமுத்தன் இப்பன்னிருகதைகளோடு அலைகிறார்.
இந்தப் புத்தகத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஏற்பட்ட  கேள்வி பிரண்டையாறு என்றொரு ஆறு இலங்கைத்தீவில் ஓடுகிறதா?அதுவும் யாழ்ப்பாணத்தில் வறண்டு போன ‘வழுக்கியாறு’ மட்டுமே இருந்ததாக அறிந்திருக்கிறேன். இதென்ன புது ஆறு? இதைப்பற்றி மெலிஞ்சிமுத்தனிடம் கேட்டபோது எனக்கு விளக்கம்கொடுத்தார். ஊர்காவற்றுறைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நரையான்பிட்டி என்ற குட்டித்தீவுண்டு.இந்த நரையான்பிட்டி என்ற பெயரிற்கும் அர்த்தமிருக்கிறது.மார்கழி-சித்திரை மாத காலப்பகுதியில் சைபீரியநாரைகள் வந்து தங்கிச்செல்வதால் உருவானதென்கிறார்கள்.அங்குள்ள அந்தோனியார் ஆலயத்திருவிழாவிற்காக மெலிஞ்சிமுனைக் கிராம மக்கள் சென்று வருவார்கள்.ஏழாத்துப் பிரிவெனச் சொல்லப்படும் ஏழுகடலாறுகள் அங்கு ஓடுவதைத் தீவுப்பகுதி மீனவர்கள் அனைவருமே நன்கறிவார்கள். ஏழாத்துப்பிரிவின் ஒரு கூறு பிரண்டையாறு.இந்த ஆறுகளில் கீழ்நீர்வாடு-சோநீர்வாடு என இருவகை நீரோட்டங்களுண்டு.  அதைப் போல் மக்களின் வாழ்க்கையின் வலிகள் இக்கதைகளுள் உள்ளோடுகின்றன.
மீனவமக்களிடம் பல சொற்கள்,பழமொழிகள் பாவனையிலுள்ளன.அவற்றைப் பதிவு செய்யும் வகையில் இத் தொகுப்பில் அவர்களின் வாழ்வும் உலைவும் இயல்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில , கவிதைகளைப் போல் மாறி அவை தம் போக்கில் ஒரு சுகமான நடையோடு போகின்றன.இன்னும் சில தத்துவங்களைத் தம்முடன் இழுத்துச் செல்கின்றன. மற்றும் சில அரைக்கண்களை மூடியபடி கதைப்பதைப் போன்றதொரு பாவனையைச் செய்கின்றன. கவித்துவமான சொற்கள் ஊடாடிக் கொண்டிருக்க அலையும் மனிதரும் உள்ளோடும் அரசியலும் தன்னையறிதலுமான கதைகளாயிருக்கின்றன.
சிறுகதை இப்படித்தொடங்கி இப்படிமுடியுமென நாம் ஊகித்துவிடுமாறு இவையில்லை.உண்மைத்தன்மை உடையனவாகவும் உயிர்ப்பான எளிமையான மனிதர்களின் நடமாட்டமாகவும் கதைகள் அமைந்துள்ளன. இவற்றை வாசிக்கும்போது ஒரு தொடர்ச்சியோடு இருப்பதாகவும் தோன்றும். இத்தொகுப்பைச் சிறுநாவலின் அத்தியாயங்களாகப் படிக்கக்கூடியவாறு மாணங்கியும் கதைசொல்லியும் ஊடாடித்திரிகிறார்கள். ஏன் அரசாங்கமும் இயக்கங்களும் கூடத்தான் இவற்றில் ஊடாடுகின்றன.
நானுமொரு தீவாளாக இருப்பதாலும் கதைகளில் எழுதப்பட்ட புலம் பெயர்ந்தோடும் சனங்களோடு அதேகாலத்தில் அந்தத் தெருக்களில் ஓடியதாலும் வீடுகளைத் தேடித்தேடி அலைந்ததாலும் இதிலுள்ள சில கதைகள் எனக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன போலுள்ளது.
‘புலம்பெயரும் சாமங்களின்கதை’யில் எழுதப்பட்டிருக்கும் ‘உளைவு மிக்க இரவுகளை அவன் கடக்க முடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்து போயின’ என்ற வரிகள் மாணங்கி கிளாலிக்கடனீரேரியூடாக அக்கரைக்கும் இக்கரைக்கும் உயிரைப் பிடித்துக் கொண்டு மாடுகளை , தேங்காய் மூட்டைகளை ஏற்றிப்பறிக்கும் வேதனையை மட்டும்சொல்கிறதா? நாட்கணக்கில் கரையில் காவலிருந்து முண்டியடித்து பயணச்சீட்டுகளை வாங்கிய சனங்கள் அடுத்த நாளிரவு தாம் பிணங்களாவதை அறியாமல் மறுகரை சேர்வதன் அவசியங்களை நினைத்துப் படகேறுகின்றனர். ‘மரணம் ஒரு அதிகாரியைப் போல இருந்து அவர்களின் முடிவுத்திகதியை த்தீர்மானித்திருக்கிறது’  உண்மைதான். ஆனாலும், மக்கள் அடுத்தநாள் தம்தேவைகளுக்காக படகுகளில் இருட்டில் ஏறிவிடுகிறார்கள். அன்றைய இரவில் எவரெவரோ சாத்தண்ணீரில் மூழ்கும் போது தாம் தப்பித்ததை நினைத்து நிம்மதியடைந்து மறுநாள் பயணச்சிட்டுக்கு முண்டியடிப்பார்கள் என்பது துயரமான யதார்த்தம்.மறுகரையை மீதியானவர்கள் அடைந்துவிடுகிறார்கள் .அடுத்தவரின் சாவை ஏற்றுக்கொண்டு அடுத்தநாள்வாழப் பழகிவிடத்தானே வேண்டும் .  //பிணங்களைஅள்ளிப்போர்த்தித்தன்உயிரைக்காப்பாற்றபிணம்போலகிடந்தான்மாணங்கி.// யாழ்தீபகற்பத்திலிருந்து போக்குவரத்துவழிகள் அடைபட்டு ஊரியான், கொம்படி ,கிளாலி என இடங்களை மாற்றிமாற்றி அந்த நீரேரியைக்கடந்து போகும் போது சிறிலங்காக்கடற்படை சுட்டுக் கொன்ற பொதுமக்களின் இரத்தம் எவரையும் கேள்வி கேட்காமலே தண்ணீரோடு போய்த்தான் விட்டது.
-கொழுக்கட்டைக் கள்வர்கள்- கதையில் யேசு இறந்த பெரியவெள்ளியில் கொழுக்கட்டை செய்வதைச் சம்பிரதாயமாகக் கொண்ட அவ்வூர்க்கத்தோலிக்க மக்களின் பின்னணியில் கதை எழுதப்பட்டுள்ளது.கிறிஸ்தவக்கடமைகளில் அக்கறையான சவீனா ரீச்சரின் வீட்டில் ஒவ்வொரு பெரியவெள்ளியும் ருசியான அக்கொழுக்கட்டைகள் களவு போய்விடுகின்றன. அதைச் செய்யும் இளைஞர்கள் “ஊருக்குள் நடக்கும் தீமைகளுக்கு எதிராக இயங்குவது” எனத்தீர்மானம் செய்து சாமர்த்தியமாக மதில் பாய்பவர் தலைவனாகவும் பலகைகளைத் திருடி துவக்குகளைச் செய்வதும் என அவரவர் திறமைக்கேற்ப வேலைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டனர். ‘ரீச்சர் வீட்டில் திருடிய அடுப்பூதும் குழல் யாருக்குச் சொந்தம் என்ற இருவருக்கிடையிலான சண்டையில இயக்கம் பிரிஞ்சுபோச்சு” என இயக்கங்களை நக்கல் செய்கின்ற கதையா  என்று கடைசிப் பந்தியைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். அது இப்படியாக…  ‘சவீனா ரீச்சர் இடம்பெயர்ந்த போது கொழுக்கட்டைக்கள்வர்களும் இடம் பெயர்ந்தார்கள். பெரியவியாழக்கிழமை அல்லாத நாட்களிலும் யேசுநாதர்கள் பிடிபட்டுக்கொண்டிருந்தார்கள்.சிலுவைகளுக்குப் பதிலாக சன்னங்களால் துளையுண்டு கிடந்தார்கள்.நீண்டதொரு தபசு காலத்தில் கொழுக்கட்டைக்கள்வர்கள் பசியோடு கிடந்தார்கள். அவர்களின் வயிறுகள் பசாம் வாசித்தன. பிரேதப்பெட்டிகளுக்கு ஒட்டும் மாவு கூடக்கிடையாமல் கொழுக்கட்டைக்கள்வர்களின் சடலங்களை ஓலைப்பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள்.டக்ளஸ் மட்டும் -உயிர்த்த ஞாயிறைக் கொண்டாடிக் கொண்டு கொழும்பில் இருந்தான்”
தொகுப்பின் மூன்றாவது கதையான -இல்ஹாம்- பனிகொட்டும் ஒரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் மனச்சாட்சி துரத்த வாழும் ஒருவன் சொல்லும் கதை. ஆம், இல்ஹாம் மனச்சாட்சி உள்ளவர்களைத் தொந்தரவு செய்வான்.இடம்பெயர்ந்து செல்லும் தீவுப்பகுதி மக்கள் யாழ்நகரை நோக்கிச் செல்கின்றனர். அறிந்தவர்கள் ,உறவினர்கள், பள்ளிக்கூடங்கள் ,தேவாலயங்கள் என ஒதுங்க இடந்தேடி அலைந்தனர்.ஊர்கள் இடம்பெயருதல் பிறர் சொல்லிக் காண முடியாத அவலம்.எல்லாம் கைவிட்டு தூக்க முடிந்தவைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் ஒதுங்க இன்னொரு இடத்துக்கு அலைதல் கொடுமை.இவர்களைப் போலவே சில மணிநேரக்கெடுவில் வரையறுக்கப்பட்டளவு பணமும் மாற்று உடுப்புகளுமாக ஓர் இனத்தையே குறிப்பட்ட மாவட்டங்களிலிருந்து புலிகளினால் வெளியேறச் சொல்லப்பட்ட கொடுமை அதற்கும் சில மாதங்களின் முன்னர் தான் நடந்தது. சொத்துகள் பறிக்கப்பட்டு குடும்பங்குடும்பமாக அகதிகளாக எங்காவது போய் அலையும்படி விடப்பட்ட சனங்களின் வீடுகளில் லாசர் குடும்பமும் குடியேறுகிறது. அதற்கும் புலிகளின் அலுவலகங்கள் ஏறிஇறங்கி அனுமதிபெறவேண்டும்.அடுப்படியும் அடிவளவும் கொத்திக் கிளறி முடிந்த பின் சிறிலங்கா அரசாங்கத்தால் அகதிகளாக்கப்பட்ட இந்தச்சனங்களுக்கு முன்னுரிமை பார்த்து அவை வழங்கப்பட்டது. ‘அந்த வீடு முழுவதும் பெருமூச்சுகள் அமுங்கிக் கிடந்தன” என்ற வரி துரத்தப்பட்ட அந்த முஸ்லிம் மக்களின் வலியுணர்ந்த மற்றுமொரு அகதியின் வார்த்தைகள்.
அறிவு பேதலித்த இல்ஹாம் என்ற ஒரு மனிதன் மட்டும் யாழ்ப்பாணத்தில் நின்றுவிடுகிறான். ஆனால் உண்மையில் அப்படி ஒரு ஆள் கூட நின்றிருக்க வாய்ப்பில்லை. மனம்பேதலித்த இவன் உளவாளி என்ற சந்தேகத்தில் முதலில் சுடப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இது உண்மைகளும் புனைவுமாக எழுதப்பட்ட ஒரு கதை என்பதால் அது சொல்வதைப் பார்க்கலாம். ‘பஸ்மா உம்மா வீட்டில நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று பசியுடன் திரியும் இல்ஹாம் முஸ்லிம் கிழவியொருத்தியின் வீட்டில் வாழ்பவர்களைக் கேட்கிறான்.
‘பார் இல்ஹாம் உன்னைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன்” என்று காட்டலாம்.ஆனால் ‘இதை எழுத எதற்கு இத்தனை காலம் எடுத்தாய்? ’ என்று அவன் கேட்டால் ‘புலிகளை விமர்சிக்க இது நேரமில்லை என்று பார்த்திருந்தேன்’என்று சொல்லி தலை குனிய வேண்டி இருக்கும்.ஆதலால்…-என மெலிஞ்சிமுத்தன் கதையை முடிக்கிறார்.
-  பனிமூடிய நதி – பேர்த்தோக்கள் எப்போதாவது தான் வருகிறார்கள் – கூட்டிச்செல்லும்குரல் – அலாரக்கதவு – சிரிப்புச்சத்தம் கேட்ட கிராமம் – ஆகிய சிறுகதைகள் அகதியாகச் சென்று வாழும் நாட்டில் அமைதியாகப் பழையவற்றை மறந்து வாழமுடியாத மனிதர்கள் பலரும்.திரும்பத் திரும்ப நாடு, கிராமம், உறவுகள்,சிறுவயது வாழ்க்கை என அல்லாடிக் கொண்டிருக்கும் துயரை உள்ளோடும் உரையாடலாகவோ பிரமைகளாகவோ மெலிஞ்சிமுத்தன் எழுதியிருக்கிறார். ‘வெறும் ஒப்பாரி தான் புலம்பெயர்ந்தோர் படைப்புகள்’ என்றொரு குசுகுசுப்பு இருப்பதாக அறிவோம்.திடீர்திடீரென்று உடுப்புகளைத் தூக்கிக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி ஓடி புது ஊர், புதுப்பள்ளிக்கூடம்,புதிய நண்பர்கள் ,அறியாத அயலவர்கள், வருமானமற்ற குடும்பநிலை இப்படி ஓடிஓடிக் களைத்து வெளிநாடு போனால் அங்கும் அகதி என நிரூபிக்க ஏராளம் சிக்கல்கள். அவர்களால் தானொரு -பிடுங்கி நடப்பட்ட செடி- என்ற உணர்வின்றி வாழ இயலாமல் இருக்கிறது. இது என் இடம் என்ற உணர்வோடு பொருந்திப் போகமுடியாமல் பழைய வாழ்வு துரத்தும் நினைவுகளாகத் தொடருகின்றன.தனது கிராமத்து மனிதர்களோடு உரையாடுவதும் புலம்பெயர்ந்த நாட்டில் உலைவதுமாக இக்கதைகளில் மனப்போராட்டங்களும்  வாழுதலுக்கான போராட்டங்களுமாக மனிதர்கள்…மனிதர்கள்.
ஒரு மீனவக்கிராமத்து சனங்களின் வாழ்வு இந்த இயக்கங்கள் அரசாங்கம் என்பவற்றால் எப்படிஎப்படியெல்லாம் எத்துப்படுகிறது.கிராமத்துச் சுடுகாட்டுப்பாதையைப் போடும் ஒடுக்குமுறை செய்த அயலூரவர்களின் சூழ்ச்சி கூட குறிச்சியாக மீனவக்கிராமத்தைப் பிரித்துவிடத் தான் போடப்படுகிறது என்ற சமூகஒடுக்குதலும் சிலேடைகளும் பெரும்பாலோரால் பாவிக்கப்படாத சொற்களும் இங்கு பதிவிடப்பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போதில் கவிதையையொத்த   வரிகளும் ஏராளம். அவை படிக்கும் போது இனிய அனுபவங்களை எனக்குத் தருகிறது.’நான் தனியே இல்லை…என் அறைக்குள் எப்போதுமே அலையடித்துக்கொண்டிருக்கும் ஒரு கடலும் குருவி கொண்டு வந்து தரும் வானமும் இருக்கிறது’ என்பதைப் போன்ற வரிகளுண்டு.
தத்துவங்களைப் பேசுவது போல கதை சொல்லி பேசிக் கொண்டு செல்வது சில நேரங்களில் சலிக்கவும் செய்கிறது.தனக்குள்ளே கேள்விகள், தன்பாட்டில் கதைத்தல், தன்னை அலசுதல் என அகவயப்பட்ட கதைகள் கனதியாயிருக்கின்றன. இன்னொருவரைக் கற்பனை செய்து கொண்டு உரையாடலை நிகழ்த்துவதைப் படிக்கும் போது அந்த ஆள் நானோ என்று தோன்றுகிறது. வழமையான சிறுகதைகளைப் போலன்றி வித்தியாசமான நடை அல்லது ஓட்டம் இல்லை பாய்ச்சல்களையுடைய கதைகளிவை எனக் குறிப்பிடலாம்.
‘மொட்டாக்கு’ -’ ராணி’ ஆகிய கதைகளும் போரினால் சீரழிந்தலையும் சனங்களின் துயரங்கள். அவை எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது மனச்சாட்சியுள்ளவர்கள் சொல்ல ஏராளம் கதைகள் உள்ளன எனத்தோன்றும்.போராடப் போனவர்களின் கனவுகள் குலைந்து அன்றாட வாழ்வுக்காகக் கூட போராட வேண்டியவர்களாக அழிந்தவர்களாக தங்கள் காலத்தை வீணாக்கி விட்டு நிற்பவர்கள் இப்போதும் எங்கேயோ எவருக்கோ ஒழிந்தோடுபவர்களாகப் பலருண்டு.சில கதைகள் நிறுத்தப்பட்டுவிடுமிடத்திலிருந்து தொடர்ந்து சிந்திக்கவும் முடிவென்ன என நாம் தேடவும் விடப்படுகின்றன.-ராணி -என்ற கதையை முன்னிட்டு நண்பரொருவர் சொன்னார் அந்த ராணியின் இடத்திலிருந்து கதை சொல்லப்பட்டிருந்தால் வேறு மாதிரி இந்தக்கதை போகலாமென்று.
மெலிஞ்சிமுத்தனின் அகவுரையாடலை இத்தொகுப்பில் படிக்கமுடிகிறது.மீனவக்கிராமத்து மனிதர்களின் எள்ளல், எளிமையான பேச்சுகள்-,வாழ்தலுக்கான போராட்டங்கள் எனவொரு உலகும் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுச் சூழலில் வேறொரு மனிதனாக வாழும் அழிக்கமுடியாத நினைவுகளுடன் மனச்சாட்சியின் பின்தொடர தீவாகியும் தனித்தும் கரைந்தும் உள்ளோடிக் கிடக்கும் மனிதர்களைப் பிரண்டையாறு இழுத்துச்செல்கிறது.
பிரண்டையாறு(சிறுகதைகள்)
பக்கங்கள் 86
முதற்பதிப்பு:டிசம்பர் 2011
வெளியீடு:கருப்புப்பிரதிகள் ,                                                                   உயிர்மெய்
 விலை:ரூ.65.00

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...