பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்.





”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம்
எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”
என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன்.
உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால் எவ்வளவு நல்லது என்று யோசித்தேன். அல்லது அனானியாகப் பேசுவதற்கும் விருப்பம்தான். வெகு விரைவில் அப்படி ஒரு வசதியையும் இந்த தொழிநுட்பங்களில் வளர்ச்சியைக்  கொண்டு கண்டுபிடிப்பதன் மூலம் அர்த்தமும்,உணர்வுகளும் கூடிய இதைப் போன்று கூட்டங்கள் நிகழ்த்தி உரையாடுகின்ற சாத்தியங்களைக் உலகம் கொன்றுவிடுமென்றுதான் நினைக்கிறேன்.
புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு விசயம் தான். அது தமிழீழத் தேசியக்கொடியாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கொடி. அதற்குள் ஒரு புலி கண்ணை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் துவக்குகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். துவக்குகளை நிமிர்த்திப் பிடித்தால் அவர்களை விடத் துவக்குகள் உயரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அட்டைப்படத்தில் அவர்களுடைய முதுகுகளின் நிழல் மட்டும்தான் தெரிகிறது. முதுகுகளிடம் கண்கள் இருந்தால் எவ்வளவு நல்லம். அந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிவது என்ன உணர்ச்சி என்று அந்தக் கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம். இப்போது நான் அந்தக் கண்களில் தெரிவது பயமென்றோ,வீரமென்றோ,இல்லை அவை செத்துப்போய்க் கிடக்கிற கண்களென்றோ சொல்லப்போக செத்த புலிகளைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்றோ அல்லது பசித்த புலிகள் என்னைத் தின்னட்டும் என்பதான விசனங்கள் வரலாம் என்பதால் புத்தகத்தின் அட்டையைத் திருப்பி உள்ளே போய்விடலாம்.
கதைகளைப் படித்த பிறகு தீட்டப்படப்போகிற வார்த்தைக் கத்திகளை நிதானப்படுத்த மெலிஞ்சிமுத்தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார். “இவற்றை எழுதிய நான் எவற்றுடனும் நேரெதிரே நின்று போரிட்டு வென்றவனில்லை. தப்பித்தலின் சாத்தியங்களை நீதியென்று தோற்றம் கொண்டவற்றுக்கு குந்தகம் வராத தருணம் பார்த்து பயன்படுத்தி வந்தவன்தான்” எனக்கு உடனடியாகவே சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது அடடா என்னைப்போல ஒருவன்.
உரையாடலின் அவசியம் குறித்து தமிழ்ச்சூழலில்,தமிழ்த்தேசியச் சூழலில் அதீதமான அக்கறையோடும் கரிசனையோடும் அணுகப்பட்டுக்கொண்டிருக்கிற சமகாலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட உரையாடலின் சாத்தியங்களைப் பெருக்கியிருக்கிறது தொழிநுட்பம். உரையாடலை விரல்நுனிக்கு கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில்  இணையம் எவ்வளவு நெருக்கமாக அதனை எளிமைப்படுத்தியிருக்கிறதோ அத்தனை தூரம் அதனை மர்மப்படுத்தியும் இருக்கிறது. எல்லோருடைய இரண்டாம் முகங்களும் அல்லது அவதாரங்களும் இணையவெளியெங்கும் இறைந்து கிடக்கிறது. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் மாறி மாறிப் பிறருடைய மனங்களுக்குள் பின்கதவுக்குள்ளால் நுழைவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியிருக்கிறது. ஒரு நண்பர் பதின்நான்கு face book ஐடிகளை வைத்திருக்கிறார்  என்பதை எனக்கு வேறொரு நண்பர் Facebook ல் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் பதின்நான்கில் எட்டு பெயர்களுக்கு நான் பேஸ்புக்கில் நண்பராயிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிக் கதைக்கிறதை விட்டுவிட்டு face book ஐடிகளைப் பற்றிய கிசுகிசுக்களை பேசுகிறேன் என்று நீங்கள் எரிச்சலமையக்கூடும். இந்தத் தொகுப்பில் மெலிஞ்சி முத்தன் இருக்கிறார், அவரது இன்னொரு ஐடியும் இருக்கிறார் அவருக்குப் பெயர் மாணங்கி. இன்னும் பல ஐடிக்களும் மெலிஞ்சி முத்தனுக்கு உண்டு. ஆனால் அவர் அதிகமாகப் பாவிக்கிற ஐடி மாணங்கி. அது தவிரவும் உரையாடல்கள் பற்றி நான் பேச இன்னொரு காரணமும் உண்டு. இக்கதைப்புத்தகத்தில் இடம் பெறுவது உரையாடல்கள் என்பதாயே நான் உணர்கிறேன்.  தனது மனக்கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித்தீர்த்துவிடுகிற வேட்கைதான் இங்கே மெலிஞ்சியால் கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும், வாழ்வில் நிலையின்மையும் நண்பர்களை நம்மிடமிருந்து துரத்தியபடியிருக்க தனக்குத்தானே ஐடிகளைக் கிரியேட்பண்ணியபடி பேசிக்கொண்டிருக்கிறார் மெலிஞ்சி முத்தன் இந்தக் கதைத்தொகுதி நெடுகிலும்.
இந்தக் கதைகள் முழுவதும் மாணங்கி வந்துகொண்டேயிருக்கிறார். உண்மையில் இந்தச் சிறுகதைகளில் மெலிஞ்சி முத்தன் தான் கடந்து வந்திருக்கிற மனிதர்கள் குறித்தும், அவரது வாழ்வின் தேங்கிநிற்கிற நினைவுகளைப் பற்றியும் அவருடன் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்  கடற்கரையில் அமர்ந்து மாணங்கியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துக்கொள்ளக்கூடிய கடலின் மகனாக அவர் இருக்கிறார். அவர் விளையாடும் பருவத்தில் புதினமான பொருட்களைப் பரிசளித்த கடல் அவருக்குத் துயரத்தையும் பரிசளிக்கிறது. அவரால் கடலை நம்பமுடியாமலும் இருக்கிறது அதே நேரம் கடலைக் கைவிடவும் முடியாமலிருக்கிறது. அவர் அந்தக் கடலை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.
தாங்கள் நம்புகிற பெருங்கடலை நம்பவும் முடியாத,அதே சமயம்  நம்பாமலிருக்கவும் முடியாத சாதாரணர்களின் கதைகள் தான் இந்தப் புத்தகத்தில் இருப்பவை. அறிவை நிராகரித்த ஆயுதம் பற்றிய கதைகளும், பிறகொரு நாள் சுயநலம் மிக ஆயுதங்களுக்கு ஆலாபனை பாடிய அறிவும் என்று இது வரைக்கும் கதைகள் சொல்லும் உரிமையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த கதைகளை இப்போது வரத்தொடங்கியிருக்கிற இவை இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு இந்த இரண்டு எதிர்நிலைகளுக்கிடையேயும்  நசிபட்ட சனங்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. நம்பியும் நம்பாமலும் விரும்பியும் விரும்பாமலும் பொதுவெளியின் அரசியலோடு இழுபட்டுச் சென்ற சனங்களில் குரல்கள் கதைகளில் இருக்கிறது.
இல்ஹாம் என்கிற கதையில் இப்படி எழுதுகிறார்.
“எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவையல்ல. எங்கள் குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல. சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளையே எங்கள் நம்பிக்கைகளாக் கொண்டிருந்தோம்…………………….. கூப்பன் கடைகளில் சந்தித்துக்கொள்ளும் போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வோம்”
கூப்பன் கடைகளோடு சேர்ந்து தங்களையும் இடம்பெயர்த்திக்கொண்டேயலைந்த, சமூகத்தின் பெரும்போக்காகவுள்ள அரசியலையே தங்களுடைய அரசியலாகவும் வரித்துக்கொள்ள நேர்ந்த மனிதர்களின் கதைகளாக இக்கதைகள் எழுதப்படுகின்றன. இல்ஹாம் என்கிற கதையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வீட்டில் வாழநேர்ந்த  ஒரு மனிதன் அது குறித்து சங்கடப்பட்டு குற்றவுணர்வுக்குள்ளாகிறான் பிறகு அதே குற்றவுணர்வு ஏன் இத்தனை தாமதமாக எனக்கு ஏற்படுகிறது என்று வெட்கமடைகிறான். இந்தக் குற்றவுணர்வு சாதாரணமான சனங்களின் மனவுணர்களைப் பிரதிபலிக்கிறது. இந்தக் குற்றவுணர்வும் வெட்கமும் கதைசொல்லும் வெளிகளை இது வரை ஆக்கிரமித்திருந்த பிரகிருதிகளிடமிருந்து வரவில்லை. அவர்கள் இதற்கும் ஒரு விளக்கமும் சொல்லிக் கடந்து போவார்கள். ஆனால் சாதாரணிகளால் அவற்றைக் கடக்க இலகுவில் முடிவதில்லை.
உண்மையில் மனிதர்களின் மிகப்பெரிய சாபமே குற்றவுணர்வுதான்.  குற்றவுணர்வை எப்படிக் கடப்பதென்பதுதான் மனித ஆன்மாவை அலைக்களித்தபடியிருக்கும் பெருங்கடல். பாவமன்னிப்பு கேட்பதைப் போல, கோவில் திருவிழாவில் உபயகாரராய் இருப்பதைப்போல, பிச்சைக்காரர்களின் சில்லரைத் தட்டில் நாணயங்களை வீசியெறிவதைப்போல குற்றவுணர்வுகளைக் கடக்கும் எளிய சூத்திரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும்  மனித ஆன்மாவைத் திருப்தி செய்துவிடுவதில்லை. அரசியல் சார்ந்த தமிழர்களின் குற்றவுணர்வு ஒரு பெரும் வெளியாய் விரிந்திருக்கிறது. அதனால் போர்க்கடவுள்களின் உண்டியல்கள் நிறைந்ததன்றி வேறெதுவும் நடந்ததாயில்லை.
ஒரு படைப்பாளியாக மெலிஞ்சு முத்தனின் ஆற்றாமைகள் இந்தக் கதைகளிலே பதிவு செய்யப்படுகிறது.  உண்மையில் ஊரைப்பிரிய நேர்கிற எல்லோரிடமும் நினைவு மூட்டைகள் இருக்கின்றன. அந்த மூட்டைகளுக்குள் காலத்தின் புன்னகையிருக்கிறது,தப்பித்தலின் கண்ணி ஒழித்துவைக்கப்பட்டிருக்கிறது, இடம்விட்டு இடம்தாவித் தன்னைக் தகவமைத்துக்கொள்ளும் உடலொன்றிருக்கிறது, கூடவே பாவங்களும், துயரங்களும், கண்ணீரும் அந்த மூட்டைக்குள் இருக்கின்றன. இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் நினைவின் சுமைகள் உரையாடலைக் கோருகின்றன, பகிர்தலை யாசிக்கின்றன. ஆனால் துரதிருஸ்ட வசமாக எல்லோரிடமும் மூட்டைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மூட்டைகளை அவிழ்க்கவேண்டிய அவஸ்தையும் பெருத்த தயக்கங்களும் உண்டு.  எனக்கும் கூட. ஆனால் அடுத்தவரின் மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்பது  பற்றி அறியும் ஆவல் அதனைவிடப் பன்மடங்காககப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. மூட்டைகளை அவிழ்ப்பதில் இருக்கிற தயக்கமும் அவஸ்தையும் மெய்யான உரையாடலின் சாத்தியமான வெளிகளை அறைந்து சாத்துகிறது.
மெய்யான உரையாடலுக்கான சாத்தியங்கள் குறைந்த இப்படியான ஒரு சூழலில் மெய்யான உரையாடலை யாசிக்கும் மெலிஞ்சிமுத்தனின் படைப்பு மனம் தன்னோடு உரையாட ஒரு பிரகிருதியைக் உருவாக்குகிறது. அதன்பெயர்  மாணங்கி. மெலிஞ்சி முத்தன் தான் சுமந்துகொண்டிருக்கும் நினைவுகளாலான மூட்டையை அவருக்கும் மாணங்கிக்குமான உரையாடல்களாக சிறுகதைகளாக இந்தப்புத்தகத்தில் அவிழ்க்கிறார். அந்த உரையாடல்கள் நம்மையும் ஒரு உரையாடல் வெளிக்கும் நமது மூட்டைகளை அவிழ்ப்பதற்கான தூண்டுதலையும் நமக்களிக்கின்றன.
இத்தொகுப்பில் இருக்கிற கூட்டிச்செல்லும் குரல் என்கிற சிறுகதையில் மாணங்கியும் ஒரு குழந்தையைச் சுமக்கிறார். அந்த குழந்தையை இறக்கிவிடுவதற்காக அலைகிறார். குழந்தை அழுகிறது அதைச் சமாதானப்படுத்த ஒரு தென்மோடிக் கூத்துப்பாடலொன்றைப் பாடுகிறார் மாணங்கி அந்தப்பாடலில் பாடுபொருளே பிரண்டையாறு தொகுப்வு முழுவதும்  இழையோடுகிறது.  அந்தப் பாடல் இதுதான் .
நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத் தின்று பாதியாகும்
காற்றினிலே ஓலக்குரல்
கரைமுழுதும் பரவிவிடும்.
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை
பரந்த சிறைப் பட்டணங்கள்
பாவம் இந்தக் கேடயங்கள்.
எல்லோருக்குமான அரசியலைத் தமக்கான அரசியலாகக் கொள்ள நேர்கிறவர்கள் கேடயங்களாக்கப்படுவதை. கூட்டத்திலும் தனித்திருக்க நேர்கிற படைப்பு மனத்தின் அவாவுதலை கதைகள் பேசிச் செல்கின்றன.
‘மொழியின் எளிமையான குழந்தை சிறுகதை’ என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்தக் கூற்றோடு என்னளவில் உடன்படவும் செய்கிறேன். இவரது கதைகளில் எங்கும் குறியீடுகள் நிரம்பியிருக்கிறது. கதைகளைப் படித்து முடித்த பின்னர் அட்டைப்படம் குறித்த இன்னுமொரு யோசனையும் எனக்கு வந்தது. இந்தப்பக்கம் புலிக்கொடியிருக்கிறது. இந்தக் கொடியின் எதிர்த்திசையில் ஒரு வாளேந்திய சிங்கத்தின் கொடியும் இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இழுபட்டுக்கொண்டிருக்கும் சனங்களில் வாழ்வு மெலிஞ்சி முத்தனால் எழுதப்பட்டிருக்கிறதாக நினைத்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கொடிகளுக்கும் இடையில் நிற்கிறார்களே என்கிற பார்வையும் எனக்கும் தோன்றியது. இது குறியீட்டின் சாத்தியம். சில சமயங்களில் படைப்பு பேச வருகிற அரசியலையும் தவிர்த்து நமக்கு விருப்பமான அரசியலைப் பொருத்திப்பார்க்கச் செய்துவிடுகிற அபத்தங்களுக்கான சாத்தியங்களும் நிரம்பியிருக்கிற வெளி இந்தக் குறியீட்டு மொழி.
குறியீடுகள் எழுத்தை பல்வேறு விதமான வாசிப்பின் சாத்தியங்களுக்குள் அழைத்துப்போகக் கூடியவை. ஒரு பிரதியின் மீதான பல்வேறு வாசிப்புக்கள் என்பது மொழியின் பலவீனமா? பலமா? என்கிற ஆய்வுகளுக்கெல்லாம் அப்பால், இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகள் குறித்த எழுத்துக்களை, அல்லது தமிழ் மற்றும் சிங்கள அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பத்திரிகைகளை,புத்தகங்களை துப்பாக்கிகளின் கண்கள் வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எங்களுடைய மொழிப்பயன்பாட்டின் நேரடித்தன்மை குறைந்து வந்திருக்கிறதை அவதானிக்கலாம். அது ஒரு நழுவல் மொழியை, அச்சமூட்டப்பட்ட சொற்களை, உண்மையைத் தயக்கத்துடன் எட்டிப்பார்த்தபடியிருக்கும் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சூழ்நிலை எழுத்தின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கிறது.எழுத்தின் இந்தநேரடித் தன்மையின்மையை எழுத்தின் பலவீனமாக நான் உணர்கிறேன். அரசர்களின் நிர்வாணத்தை சிலசமயங்களில் குறியீடுகள் ஆடைகளாகத் தோற்றம்பெறச் செய்துவிடுகின்றன.
இந்தக் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெலிஞ்சி முத்தன் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டுமே! என்று எனக்குத் தோன்றியது. அவர் இரண்டு கவிதைத் தொகுகளையும் வெளியிட்டிருக்கிறாராம் என்று அவர் சொல்லிப் பிறகு அறிந்தேன். அந்தப் புத்தகங்களைப்பற்றி அறியாமலிருந்தது குறித்து வெட்கமாயிருந்தது. ஆனால் புலப்பெயர்வும்,போரும், இலக்கியச் சந்தையும் எல்லாமுகங்களையும் எங்களுக்கு காட்டினவா? எப்போதும் ஒரு சில பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. அந்தப் பெயர்களை முன்வைத்தே கதையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஈழத்து தமிழ் அரசியல்ச் சூழலில் ஏற்பட்ட இரண்டு எதிர்நிலைகளுக்கிடையில் நின்ற எல்லாப் படைப்புக்களும் பேசப்படாமலேபோயின. ஏதோ ஒரு நிலையெடுத்த, ஏதோ ஒன்றைத் தூக்கிப்பிடித்த  படைப்புக்களே விவாதிக்கவும் ஆராதிக்கவும் பட்டன. எதிர் எதிர் அந்தங்களின் அழிவுகள் உணரப்படுகிற காலமாய் சமகாலம் இருக்கிறது. எப்போதும் மைய ஆழுமைகளைக் கட்டமைத்தபடி சுழன்றுகொண்டிருக்கும் இலக்கியச்சக்கரத்தில் எல்லாப் படைப்புகளும், படைப்பாளுமைகளும் கவனத்தை பெறுவதற்கான இலக்கியச் சூழலை நாங்கள் உருவாக்கவேண்டிய ஒரு அவசியம் இருக்கிறதாக நான் கருதுகிறேன். சந்தைப்படுத்தல் லாவகங்கள் தெரிந்தவர்களும், நமக்கு நாமே திட்டங்களை முன்னெடுப்பவர்களிடமிருந்தும் இலக்கியத்தின் பிரதிநிதித்துவங்களையும் கூட எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
மெலிஞ்சி முத்தனின் இந்தக் கதைகள் என்னை கடலுக்கு அழைத்துப்போயின. அந்தகடலின் கொந்தளிப்பை, அழுகையை, தழுவலை ,மௌனத்தை இந்தப் பயணத்தின் போது நான் உணர்ந்தேன். உங்களுடைய பயணஅனுபவங்களும் இப்படியேதான் இருக்கவேண்டுமென்றில்லை பயணங்கள் ஒன்றெனினும் பயணிகளைப் பொறுத்து அனுபவங்கள் வேறாகின்றன…
நன்றி: எதுவரை இதழ் 3

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)