'பிரண்டையாறு' பற்றி தர்மினி

தர்மினி
பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன.
1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து   இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன்?பெயரிலும்தான் அக்கிராமத்தையும் கடலின்கதைகளையும் இத்தனை வருடங்களானாலும் தன்னோடு சுமந்துவாழும் மென்மனதுடைய கதை சொல்லியாக, பிரண்டையாறின் மனிதர்களோடு ஒருவராக, நம்முடன் உரையாடிக்கொண்டு வரும் குரலாகவென்று, மெலிஞ்சிமுத்தன் இப்பன்னிருகதைகளோடு அலைகிறார்.
இந்தப் புத்தகத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஏற்பட்ட  கேள்வி பிரண்டையாறு என்றொரு ஆறு இலங்கைத்தீவில் ஓடுகிறதா?அதுவும் யாழ்ப்பாணத்தில் வறண்டு போன ‘வழுக்கியாறு’ மட்டுமே இருந்ததாக அறிந்திருக்கிறேன். இதென்ன புது ஆறு? இதைப்பற்றி மெலிஞ்சிமுத்தனிடம் கேட்டபோது எனக்கு விளக்கம்கொடுத்தார். ஊர்காவற்றுறைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நரையான்பிட்டி என்ற குட்டித்தீவுண்டு.இந்த நரையான்பிட்டி என்ற பெயரிற்கும் அர்த்தமிருக்கிறது.மார்கழி-சித்திரை மாத காலப்பகுதியில் சைபீரியநாரைகள் வந்து தங்கிச்செல்வதால் உருவானதென்கிறார்கள்.அங்குள்ள அந்தோனியார் ஆலயத்திருவிழாவிற்காக மெலிஞ்சிமுனைக் கிராம மக்கள் சென்று வருவார்கள்.ஏழாத்துப் பிரிவெனச் சொல்லப்படும் ஏழுகடலாறுகள் அங்கு ஓடுவதைத் தீவுப்பகுதி மீனவர்கள் அனைவருமே நன்கறிவார்கள். ஏழாத்துப்பிரிவின் ஒரு கூறு பிரண்டையாறு.இந்த ஆறுகளில் கீழ்நீர்வாடு-சோநீர்வாடு என இருவகை நீரோட்டங்களுண்டு.  அதைப் போல் மக்களின் வாழ்க்கையின் வலிகள் இக்கதைகளுள் உள்ளோடுகின்றன.
மீனவமக்களிடம் பல சொற்கள்,பழமொழிகள் பாவனையிலுள்ளன.அவற்றைப் பதிவு செய்யும் வகையில் இத் தொகுப்பில் அவர்களின் வாழ்வும் உலைவும் இயல்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில , கவிதைகளைப் போல் மாறி அவை தம் போக்கில் ஒரு சுகமான நடையோடு போகின்றன.இன்னும் சில தத்துவங்களைத் தம்முடன் இழுத்துச் செல்கின்றன. மற்றும் சில அரைக்கண்களை மூடியபடி கதைப்பதைப் போன்றதொரு பாவனையைச் செய்கின்றன. கவித்துவமான சொற்கள் ஊடாடிக் கொண்டிருக்க அலையும் மனிதரும் உள்ளோடும் அரசியலும் தன்னையறிதலுமான கதைகளாயிருக்கின்றன.
சிறுகதை இப்படித்தொடங்கி இப்படிமுடியுமென நாம் ஊகித்துவிடுமாறு இவையில்லை.உண்மைத்தன்மை உடையனவாகவும் உயிர்ப்பான எளிமையான மனிதர்களின் நடமாட்டமாகவும் கதைகள் அமைந்துள்ளன. இவற்றை வாசிக்கும்போது ஒரு தொடர்ச்சியோடு இருப்பதாகவும் தோன்றும். இத்தொகுப்பைச் சிறுநாவலின் அத்தியாயங்களாகப் படிக்கக்கூடியவாறு மாணங்கியும் கதைசொல்லியும் ஊடாடித்திரிகிறார்கள். ஏன் அரசாங்கமும் இயக்கங்களும் கூடத்தான் இவற்றில் ஊடாடுகின்றன.
நானுமொரு தீவாளாக இருப்பதாலும் கதைகளில் எழுதப்பட்ட புலம் பெயர்ந்தோடும் சனங்களோடு அதேகாலத்தில் அந்தத் தெருக்களில் ஓடியதாலும் வீடுகளைத் தேடித்தேடி அலைந்ததாலும் இதிலுள்ள சில கதைகள் எனக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன போலுள்ளது.
‘புலம்பெயரும் சாமங்களின்கதை’யில் எழுதப்பட்டிருக்கும் ‘உளைவு மிக்க இரவுகளை அவன் கடக்க முடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்து போயின’ என்ற வரிகள் மாணங்கி கிளாலிக்கடனீரேரியூடாக அக்கரைக்கும் இக்கரைக்கும் உயிரைப் பிடித்துக் கொண்டு மாடுகளை , தேங்காய் மூட்டைகளை ஏற்றிப்பறிக்கும் வேதனையை மட்டும்சொல்கிறதா? நாட்கணக்கில் கரையில் காவலிருந்து முண்டியடித்து பயணச்சீட்டுகளை வாங்கிய சனங்கள் அடுத்த நாளிரவு தாம் பிணங்களாவதை அறியாமல் மறுகரை சேர்வதன் அவசியங்களை நினைத்துப் படகேறுகின்றனர். ‘மரணம் ஒரு அதிகாரியைப் போல இருந்து அவர்களின் முடிவுத்திகதியை த்தீர்மானித்திருக்கிறது’  உண்மைதான். ஆனாலும், மக்கள் அடுத்தநாள் தம்தேவைகளுக்காக படகுகளில் இருட்டில் ஏறிவிடுகிறார்கள். அன்றைய இரவில் எவரெவரோ சாத்தண்ணீரில் மூழ்கும் போது தாம் தப்பித்ததை நினைத்து நிம்மதியடைந்து மறுநாள் பயணச்சிட்டுக்கு முண்டியடிப்பார்கள் என்பது துயரமான யதார்த்தம்.மறுகரையை மீதியானவர்கள் அடைந்துவிடுகிறார்கள் .அடுத்தவரின் சாவை ஏற்றுக்கொண்டு அடுத்தநாள்வாழப் பழகிவிடத்தானே வேண்டும் .  //பிணங்களைஅள்ளிப்போர்த்தித்தன்உயிரைக்காப்பாற்றபிணம்போலகிடந்தான்மாணங்கி.// யாழ்தீபகற்பத்திலிருந்து போக்குவரத்துவழிகள் அடைபட்டு ஊரியான், கொம்படி ,கிளாலி என இடங்களை மாற்றிமாற்றி அந்த நீரேரியைக்கடந்து போகும் போது சிறிலங்காக்கடற்படை சுட்டுக் கொன்ற பொதுமக்களின் இரத்தம் எவரையும் கேள்வி கேட்காமலே தண்ணீரோடு போய்த்தான் விட்டது.
-கொழுக்கட்டைக் கள்வர்கள்- கதையில் யேசு இறந்த பெரியவெள்ளியில் கொழுக்கட்டை செய்வதைச் சம்பிரதாயமாகக் கொண்ட அவ்வூர்க்கத்தோலிக்க மக்களின் பின்னணியில் கதை எழுதப்பட்டுள்ளது.கிறிஸ்தவக்கடமைகளில் அக்கறையான சவீனா ரீச்சரின் வீட்டில் ஒவ்வொரு பெரியவெள்ளியும் ருசியான அக்கொழுக்கட்டைகள் களவு போய்விடுகின்றன. அதைச் செய்யும் இளைஞர்கள் “ஊருக்குள் நடக்கும் தீமைகளுக்கு எதிராக இயங்குவது” எனத்தீர்மானம் செய்து சாமர்த்தியமாக மதில் பாய்பவர் தலைவனாகவும் பலகைகளைத் திருடி துவக்குகளைச் செய்வதும் என அவரவர் திறமைக்கேற்ப வேலைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டனர். ‘ரீச்சர் வீட்டில் திருடிய அடுப்பூதும் குழல் யாருக்குச் சொந்தம் என்ற இருவருக்கிடையிலான சண்டையில இயக்கம் பிரிஞ்சுபோச்சு” என இயக்கங்களை நக்கல் செய்கின்ற கதையா  என்று கடைசிப் பந்தியைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். அது இப்படியாக…  ‘சவீனா ரீச்சர் இடம்பெயர்ந்த போது கொழுக்கட்டைக்கள்வர்களும் இடம் பெயர்ந்தார்கள். பெரியவியாழக்கிழமை அல்லாத நாட்களிலும் யேசுநாதர்கள் பிடிபட்டுக்கொண்டிருந்தார்கள்.சிலுவைகளுக்குப் பதிலாக சன்னங்களால் துளையுண்டு கிடந்தார்கள்.நீண்டதொரு தபசு காலத்தில் கொழுக்கட்டைக்கள்வர்கள் பசியோடு கிடந்தார்கள். அவர்களின் வயிறுகள் பசாம் வாசித்தன. பிரேதப்பெட்டிகளுக்கு ஒட்டும் மாவு கூடக்கிடையாமல் கொழுக்கட்டைக்கள்வர்களின் சடலங்களை ஓலைப்பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள்.டக்ளஸ் மட்டும் -உயிர்த்த ஞாயிறைக் கொண்டாடிக் கொண்டு கொழும்பில் இருந்தான்”
தொகுப்பின் மூன்றாவது கதையான -இல்ஹாம்- பனிகொட்டும் ஒரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் மனச்சாட்சி துரத்த வாழும் ஒருவன் சொல்லும் கதை. ஆம், இல்ஹாம் மனச்சாட்சி உள்ளவர்களைத் தொந்தரவு செய்வான்.இடம்பெயர்ந்து செல்லும் தீவுப்பகுதி மக்கள் யாழ்நகரை நோக்கிச் செல்கின்றனர். அறிந்தவர்கள் ,உறவினர்கள், பள்ளிக்கூடங்கள் ,தேவாலயங்கள் என ஒதுங்க இடந்தேடி அலைந்தனர்.ஊர்கள் இடம்பெயருதல் பிறர் சொல்லிக் காண முடியாத அவலம்.எல்லாம் கைவிட்டு தூக்க முடிந்தவைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் ஒதுங்க இன்னொரு இடத்துக்கு அலைதல் கொடுமை.இவர்களைப் போலவே சில மணிநேரக்கெடுவில் வரையறுக்கப்பட்டளவு பணமும் மாற்று உடுப்புகளுமாக ஓர் இனத்தையே குறிப்பட்ட மாவட்டங்களிலிருந்து புலிகளினால் வெளியேறச் சொல்லப்பட்ட கொடுமை அதற்கும் சில மாதங்களின் முன்னர் தான் நடந்தது. சொத்துகள் பறிக்கப்பட்டு குடும்பங்குடும்பமாக அகதிகளாக எங்காவது போய் அலையும்படி விடப்பட்ட சனங்களின் வீடுகளில் லாசர் குடும்பமும் குடியேறுகிறது. அதற்கும் புலிகளின் அலுவலகங்கள் ஏறிஇறங்கி அனுமதிபெறவேண்டும்.அடுப்படியும் அடிவளவும் கொத்திக் கிளறி முடிந்த பின் சிறிலங்கா அரசாங்கத்தால் அகதிகளாக்கப்பட்ட இந்தச்சனங்களுக்கு முன்னுரிமை பார்த்து அவை வழங்கப்பட்டது. ‘அந்த வீடு முழுவதும் பெருமூச்சுகள் அமுங்கிக் கிடந்தன” என்ற வரி துரத்தப்பட்ட அந்த முஸ்லிம் மக்களின் வலியுணர்ந்த மற்றுமொரு அகதியின் வார்த்தைகள்.
அறிவு பேதலித்த இல்ஹாம் என்ற ஒரு மனிதன் மட்டும் யாழ்ப்பாணத்தில் நின்றுவிடுகிறான். ஆனால் உண்மையில் அப்படி ஒரு ஆள் கூட நின்றிருக்க வாய்ப்பில்லை. மனம்பேதலித்த இவன் உளவாளி என்ற சந்தேகத்தில் முதலில் சுடப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இது உண்மைகளும் புனைவுமாக எழுதப்பட்ட ஒரு கதை என்பதால் அது சொல்வதைப் பார்க்கலாம். ‘பஸ்மா உம்மா வீட்டில நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று பசியுடன் திரியும் இல்ஹாம் முஸ்லிம் கிழவியொருத்தியின் வீட்டில் வாழ்பவர்களைக் கேட்கிறான்.
‘பார் இல்ஹாம் உன்னைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன்” என்று காட்டலாம்.ஆனால் ‘இதை எழுத எதற்கு இத்தனை காலம் எடுத்தாய்? ’ என்று அவன் கேட்டால் ‘புலிகளை விமர்சிக்க இது நேரமில்லை என்று பார்த்திருந்தேன்’என்று சொல்லி தலை குனிய வேண்டி இருக்கும்.ஆதலால்…-என மெலிஞ்சிமுத்தன் கதையை முடிக்கிறார்.
-  பனிமூடிய நதி – பேர்த்தோக்கள் எப்போதாவது தான் வருகிறார்கள் – கூட்டிச்செல்லும்குரல் – அலாரக்கதவு – சிரிப்புச்சத்தம் கேட்ட கிராமம் – ஆகிய சிறுகதைகள் அகதியாகச் சென்று வாழும் நாட்டில் அமைதியாகப் பழையவற்றை மறந்து வாழமுடியாத மனிதர்கள் பலரும்.திரும்பத் திரும்ப நாடு, கிராமம், உறவுகள்,சிறுவயது வாழ்க்கை என அல்லாடிக் கொண்டிருக்கும் துயரை உள்ளோடும் உரையாடலாகவோ பிரமைகளாகவோ மெலிஞ்சிமுத்தன் எழுதியிருக்கிறார். ‘வெறும் ஒப்பாரி தான் புலம்பெயர்ந்தோர் படைப்புகள்’ என்றொரு குசுகுசுப்பு இருப்பதாக அறிவோம்.திடீர்திடீரென்று உடுப்புகளைத் தூக்கிக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி ஓடி புது ஊர், புதுப்பள்ளிக்கூடம்,புதிய நண்பர்கள் ,அறியாத அயலவர்கள், வருமானமற்ற குடும்பநிலை இப்படி ஓடிஓடிக் களைத்து வெளிநாடு போனால் அங்கும் அகதி என நிரூபிக்க ஏராளம் சிக்கல்கள். அவர்களால் தானொரு -பிடுங்கி நடப்பட்ட செடி- என்ற உணர்வின்றி வாழ இயலாமல் இருக்கிறது. இது என் இடம் என்ற உணர்வோடு பொருந்திப் போகமுடியாமல் பழைய வாழ்வு துரத்தும் நினைவுகளாகத் தொடருகின்றன.தனது கிராமத்து மனிதர்களோடு உரையாடுவதும் புலம்பெயர்ந்த நாட்டில் உலைவதுமாக இக்கதைகளில் மனப்போராட்டங்களும்  வாழுதலுக்கான போராட்டங்களுமாக மனிதர்கள்…மனிதர்கள்.
ஒரு மீனவக்கிராமத்து சனங்களின் வாழ்வு இந்த இயக்கங்கள் அரசாங்கம் என்பவற்றால் எப்படிஎப்படியெல்லாம் எத்துப்படுகிறது.கிராமத்துச் சுடுகாட்டுப்பாதையைப் போடும் ஒடுக்குமுறை செய்த அயலூரவர்களின் சூழ்ச்சி கூட குறிச்சியாக மீனவக்கிராமத்தைப் பிரித்துவிடத் தான் போடப்படுகிறது என்ற சமூகஒடுக்குதலும் சிலேடைகளும் பெரும்பாலோரால் பாவிக்கப்படாத சொற்களும் இங்கு பதிவிடப்பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போதில் கவிதையையொத்த   வரிகளும் ஏராளம். அவை படிக்கும் போது இனிய அனுபவங்களை எனக்குத் தருகிறது.’நான் தனியே இல்லை…என் அறைக்குள் எப்போதுமே அலையடித்துக்கொண்டிருக்கும் ஒரு கடலும் குருவி கொண்டு வந்து தரும் வானமும் இருக்கிறது’ என்பதைப் போன்ற வரிகளுண்டு.
தத்துவங்களைப் பேசுவது போல கதை சொல்லி பேசிக் கொண்டு செல்வது சில நேரங்களில் சலிக்கவும் செய்கிறது.தனக்குள்ளே கேள்விகள், தன்பாட்டில் கதைத்தல், தன்னை அலசுதல் என அகவயப்பட்ட கதைகள் கனதியாயிருக்கின்றன. இன்னொருவரைக் கற்பனை செய்து கொண்டு உரையாடலை நிகழ்த்துவதைப் படிக்கும் போது அந்த ஆள் நானோ என்று தோன்றுகிறது. வழமையான சிறுகதைகளைப் போலன்றி வித்தியாசமான நடை அல்லது ஓட்டம் இல்லை பாய்ச்சல்களையுடைய கதைகளிவை எனக் குறிப்பிடலாம்.
‘மொட்டாக்கு’ -’ ராணி’ ஆகிய கதைகளும் போரினால் சீரழிந்தலையும் சனங்களின் துயரங்கள். அவை எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது மனச்சாட்சியுள்ளவர்கள் சொல்ல ஏராளம் கதைகள் உள்ளன எனத்தோன்றும்.போராடப் போனவர்களின் கனவுகள் குலைந்து அன்றாட வாழ்வுக்காகக் கூட போராட வேண்டியவர்களாக அழிந்தவர்களாக தங்கள் காலத்தை வீணாக்கி விட்டு நிற்பவர்கள் இப்போதும் எங்கேயோ எவருக்கோ ஒழிந்தோடுபவர்களாகப் பலருண்டு.சில கதைகள் நிறுத்தப்பட்டுவிடுமிடத்திலிருந்து தொடர்ந்து சிந்திக்கவும் முடிவென்ன என நாம் தேடவும் விடப்படுகின்றன.-ராணி -என்ற கதையை முன்னிட்டு நண்பரொருவர் சொன்னார் அந்த ராணியின் இடத்திலிருந்து கதை சொல்லப்பட்டிருந்தால் வேறு மாதிரி இந்தக்கதை போகலாமென்று.
மெலிஞ்சிமுத்தனின் அகவுரையாடலை இத்தொகுப்பில் படிக்கமுடிகிறது.மீனவக்கிராமத்து மனிதர்களின் எள்ளல், எளிமையான பேச்சுகள்-,வாழ்தலுக்கான போராட்டங்கள் எனவொரு உலகும் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுச் சூழலில் வேறொரு மனிதனாக வாழும் அழிக்கமுடியாத நினைவுகளுடன் மனச்சாட்சியின் பின்தொடர தீவாகியும் தனித்தும் கரைந்தும் உள்ளோடிக் கிடக்கும் மனிதர்களைப் பிரண்டையாறு இழுத்துச்செல்கிறது.
பிரண்டையாறு(சிறுகதைகள்)
பக்கங்கள் 86
முதற்பதிப்பு:டிசம்பர் 2011
வெளியீடு:கருப்புப்பிரதிகள் ,                                                                   உயிர்மெய்
 விலை:ரூ.65.00

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)