அணிசேராப் படிமங்கள்
Monday, 29 January 2007 வரலாறெங்கிறது ஆளுறவர்களுக்குச் சாதகமா எழுதப் படுகிறதெண்டு ஆச்சி சொன்னாள். அவளே தான் ஏழுமலைகளையும், ஏழுகடல்களையும் தாண்டிப்போய் ஒரு மரப்பொந்தில இருக்கிற கிளியின்ர இறக்கையைக் கிழிச்சா(ல்) மந்திரவாதிகள் சாவானுகள் எண்ட கதையையும் சொன்னாள். நான் ஏழுமலைகளையும், ஏழு கடல்களையும் தாண்டினன். இருந்த மரப்பொந்துகளில எல்லாம் தேடினன். ஒரு பொந்திலயும் கிளி இருக்கேல. ஆச்சியெட்ட காட்டுக்கத்தல் கத்திச் சொன்னன்- கிளியில்லயெண எண்டு. அட மோனே நீ வெத்தில வாங்கித்தருவாய் எங்கிறத்துக்காக சும்மா சொன்ன உவகதயெடா எண்டு சொன்னாள் ஆச்சி. ஆச்சி இப்ப ஊர் முழுக்கையும் வெத்திலயால துப்பீற்றுத் திரியிறாளாம். வெத்திலைக்கொரு கதை, புகையிலைக் கொரு கதையெண்டு அவளெட மடிப்பெட்டிக்க நிறையக் கதையள் வச்சிருக்கிறாளாம். கதை கேட்க ஆருங் கிடைக்க மாட்டீனமா வெண்டு தேடியிருப்பாள். இருந்து வாற காலத்தில இப்ப நான் கதையெழுதத் தொடங்கீற்றன். ஆச்சியின்ர கதையளில எனக்கு நம்பிக்கயத்துப் போச்சு. என்ர கொப்பி ஒற்றைக்கு மேல ஒரு குருசு போட்டன். அடிக்கடி சிலுவ நித்தம் பூச கல்லற கிட்ட கபால மல தூர சுத்தி வர சம்மனசு தூரப்போகும் சத்திராதி...