அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.

அமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்கும் என்பதற்கு அந்தக் குண்டுப் பூனை நல்லதொரு உதாரணம். அது பதுங்கியதை நான் கண்டதில்லை. எப்போதுமே ராஜநடையும் கம்பீரமான தோற்றமுமாகவே அது இருந்தது. யாரோ வீட்டில் வாய்வைத்து விழுந்த அடியில் அதன் கண்ணொன்று சிவந்து வீங்கிய கட்டியொன்று நிரந்தரமாகிப்போனது. பிற்காலத்தில் அது பெரியம்மா வீட்டின் பின்புறக் காணியிலேயே தங்கிக்கொண்டது. அந்தக் குண்டுப்பூனையின் பசிக்கு பெரியம்மாவீட்டில் நல்ல தீனி கிடைத்தது. தன்னை பெரியம்மாவீட்டின் ஒரு உறுப்பினராக மாற்றிக்கொள்ள ஒரு நல்ல பிள்ளையாய் நடந்துகொண்டிருந்தது. பெரியம்மா அந்தப் பூனைக்கு சாப்பாடு வைத்து உண்ணுமளவுக்கு அந்த வீட்டில் இடம்பிடித்துக் கொண்டது. பூனைக்குப் பயந்த தாயின் வீர புத்திரன் நான். பூனைப்பயம் ஒரு பழக்கமாய் என்னிடமும் தொற்றிக்கொண்டது. அதுதான் என்னை பெரியம்மா வீட்டிற்கு அடிக்கடி போகாமல் தடுத...