அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால் அதன் வெவ்வேறு பக்கங்களை பெரும்பாலும் பார்க்கத் தவறுகின்றோம், அல்லது மறைத்துவிடுகின்றோம். கனடிய தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய முற்படும் ஒருவருக்கு எவ்வாறான பிம்பத்தைக் காட்டி நிற்கின்றோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எத்தனை சஞ்சிகைகள், எத்தனை பத்திரிகைகள், எத்தனை அமைப்புகள், நாடகக்குழுக்கள், பரதநாட்டிய பயிற்சிக்கூடங்கள், திரைப்பட முயற்சிகள், வானொலி,தொலைக்காட்சி நிறுவனங்கள், கலைஞர்கள் என்ற ஒரு பட்டியலும் அது சார்ந்த புகழுரைகளுமல்ல வரலாறு. அதற்கு அப்பாலும் பல கோணங்கள் இருக்கின்றன. இந்த அப்பாலிருக்கும் கோணங்கள் என்பவை சமரசங்களின் குவியல்களாகவும், பொருட்படுத்தாத, அல்லது உதாசீனம் செய்யப்பட்ட, சாட்சிகளைக் கொண்டிராதவையாகவும் இருக்கின்றன. இவற்றைப்பற்றிப் பேசினால் நட்பில் பிரிவு வந்துவிடும், ஒதுக்கப்பட்டுவிடுவோம், மிகுந்த மன நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். என்ற வகையிலேயே இவற்றைப்பற்றி பலரும் பேசுவதில்லை. இலக்கியச் சூழலில்...