ஐயாவின் ஆர்மோனியப் பெட்டி
சிறுவயதில் ‘குப்பாயம்’ கட்டிக்கொண்டு மன்னார்,அரிப்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் போய் ‘சென். பற்றிக்ஸில்’ படித்தவராம் அப்பப்பா. பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வரும் படகுகளை கண்காணிக்கும் அரசு வேலையில் இருந்தபடி, ஆங்கில- தமிழ் மொழிபெயர்பாளராகவும், ஓர் ‘ஆயுர்வேத வைத்தியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அதன்பின் அரிப்புத்துறையிலேயே ‘உபதபாலதிபர் ’ வேலையை எடுத்துக்கொண்டு வீட்டின் ஒருபகுதியையே தபாற்கந்த்தோராக மாற்றிக்கொண்டார். அவருடைய ஆங்கில அறிவு அவருக்குப் பல முக்கிய அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்றுக்கொடுத்திருந்ததோடு, ஒரு கைராசியான வைத்தியராகவும், அரிப்புத்துறை தேவாலயத்தின் ‘சங்கித்தன் ’ ஆகவும், அத்தேவாலயத்திலேயே ஆர்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார். கேரளாவிலிருந்து வந்த ஒரு வித்தைக்காரரிடம் ‘வர்மக்கலை’ பயின்றார், கிராமத்துக் கலைஞர்களுக்கு ‘வாசகப்பா பயிற்றுவிப்பவராகவும் மன்னாரில் இருந்த யாழ்ப்பாணப்பாங்குக் கூத்துகளைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தன் ஆயுட்காலத்தில் எவற்றையெல்லாம் கற்றுவிட முடியுமோ அவற்றையெல்லாம் கற்றுவிட வேண்டுமென்ற பேராசையோடு தன் மரணகா...