புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)

[நாள்- ஒன்று]
ஒரு சொட்டுப் பூலோகம் தன்காலடியிற் கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தான் மாணங்கி. படர்ந்துகிடந்த மேகங்களைக்கிழித்துக்கொண்டு எந்தப்பேரொளியும் பூலோகத்தைத் தொடுவதாய் தெரியவில்லையே என முணுமுணுத்தான். ‘நொருங்குண்ட இந்த இரவுகளைக் கடக்க நீர் தந்த குப்பிவிளக்குகள் போதவில்லையே என் பரமபிதாவே” என்று அவன் கண்ணீர் வடித்தான். உளைவுமிக்க இரவுகளை அவன் கடக்கமுடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்துபோயின. ‘எண்ணெய்ப்பீப்பாய்களை உருட்டிக்கொண்டு பகல் ஒரு வேட்டைநாயைப்போல வருகிறது எழுந்திரு மாணங்கி, எழுந்திரு” என்று உலுப்பியெழுப்பினான் கிழவன். படுக்கையை விட்டெழுந்து சோம்பல்முறித்து கிளிநொச்சியிலிருந்து இறைச்சிக்கெனக் கொண்டுவந்து பிணமாகி வயிறூதிய உருண்டை மாடுகளைச் சளியச், சளிய வண்டிலிலேற்றி குருகுமணலில் கால்புதைய இழுத்திழுத்து மாய்ந்தான் மாணங்கி. கொழுத்திய வெயிலில் கொப்பளித்துப்போனது அவர்களின்
கால்கள்.
‘வாழ்க்கை மிகவும் பாரமானது தாத்தா… அதைக்கடக்க நம்மை விடவும் பாரமான பலவற்றைச் சுமக்கவேண்டியிருக்கிறது…. இதோ பார்த்தாயா பசியிலும் பார்க்க வலிகூடிய கொப்பழங்கள்” என்றான் மாணங்கி. கிழவன் எதுவுமே பேசாமல் நடந்தான். அவனிடம் பெருமூச்சைத்தவிர அந்தக்கணங்களில் எதுவுமே இருக்கவில்லை. நீளநடந்தவர்களின் வாழ்க்கையின் முன்னே வாலைச் சுருட்டியபடி ஊளையிட்டுக்கொண்டு கிடந்தது பகல்நாய்.
[நாள்-இரண்டு]
இரவிரவாக தேங்காய் மூடைகள் ஏற்றிப்பறித்துவிட்டு வாடியிலேயே கண்ணயர்ந்தனர். பிணங்களுக்குப் பக்கத்தில் படுத்திருந்த கிழவன் எண்ணெய்ப்பீப்பாய்கள் உருட்டிய சத்தத்தில் துடித்துப் பதைத்து எழுந்து குருதியொட்டியிருந்த தனது சட்டையைக் கழற்றி பகலின்முகத்தில் விசுக்கியெறிந்துவிட்டே அரட்டினான். ‘எழுந்திரு மாணங்கி…. எழுந்திரு…. வண்டில் காத்துக்கிடக்கிறது…. பிணங்களும்… எழுந்திரு…. எழுந்திரு…. ” ஆவென வாய்விரித்து, முழிபிதுங்கி கடலுக்குள் உயிரைக் கக்கிவிட்டுப் படுத்திருந்த பிணங்களை ‘ஏமலித்துப்பார்த்தான்” மாணங்கி. ‘பிணங்களைச் சுமப்பதற்கு வெறும் உயிர்மட்டும் போதுமா தாத்தா? கொப்பழங்கள் இம்முறை நெஞ்சுக்குள் உடைந்து ஒழுகுகின்றனவே” என்றான். இருவருமாக எழுந்து வெளியேவந்தனர்.
‘கடந்துபோன இரவின் தொடக்கத்தில் இதே இடத்திற்தான் யார் முன்னுக்குப் போவதென்று முண்டியடித்து கடவுச்சீட்டு வாங்கினார்கள்…… இதோ இந்த அலுவலகத்தினுள்ளேதான் நேற்று யாருக்கும் தெரியாமலே ‘மரணம்” ஒரு அதிகாரியைப்போல இருந்து அவர்களின் முடிவுத் திகதியைத் தீர்மானித்திருக்கிறது.” என்று பெருமூச்சுவிட்டான் கிழவன். வண்டிலில் ஏற்ற முடியாத அளவு பிணங்களை கடல் அள்ளிவந்து கரையிற்கொட்ட வீணி வடித்துக்கொண்டே பகல்நாய் அவர்களின் வெறித்தப்போன முகங்களைப் பார்த்தது.
[நாள்-மூன்று]
கிளாலிச் சந்தியோகுமையோரின் குதிரைக்கால் லாடம் தொலைந்த அந்நாளில் கரையிலொதுங்கிய பிணங்கள் எவற்றிலேனும் வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டியிருக்கின்றதாவென தேடித்திரிந்தான் கிழவன். பிணங்கள் எல்லாமே அவனுக்கு ஒரேமுகபாவத்தையே காட்டின. பருவங்களின் வித்தியாசங்களைக்கடந்த மரணத்தின் ஒரே வயதுப் பிரேதங்களென அவன் வாய்க்குள் முணுமுணுத்தான். தனக்குள் ஏதோ முடிவெடுத்தவனாய் புளியமரங்களில் அடித்துவைத்த ஆணிகளை பிடுங்கத்தொடங்கினான்.
மஞ்சவண்ணா இலையில் காய்ச்சிய புக்கையில் பத்துப் போட்டு படுத்திருந்தான் மாணங்கி. கடந்த இரவு தூக்கிய தேங்காய்களைப் போலவே கட்டி கட்டியாய் வீங்கியிருந்தது அவனது முதுகு. புளியமரங்களில் ஆணியடித்துக்கட்டி வைத்த பேய்களெல்லாம் அவனைச் சுற்றியிருந்து குசு குசுத்தன. அவை அவனது உடலை வர்ணித்துக்கொண்டே அவனைத்தின்னக் காத்திருந்தன. ‘தாத்தா… ஓடியா… தாத்தா…. ஓடியா…” என்று அவன் கத்தினான். கிழவன் தான் சேர்த்த ஆணிகளை மடிப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டே ஓடிவந்தான். தனக்கான சவப்பெட்டியில் அறையவே அவற்றைப் பிடுங்கியதாகவும் கூறினான். சவப்பெட்டிக்குள் தான் தூங்கியபின்னர் பகலென்ற வேட்டைநாய் தன்னைப்பார்த்து வீணியூற்ற முடியாது என்றும், உன்னை நான் எழுப்பியதுபோல நீ என்னை எழுப்பமுயலாதே என்றும் பலமுறை இறந்து உயிர்த்த கிழவன் கூறினான். அவன் பேய்களையும் கூட்டிக்கொண்டே இருண்ட காட்டுக்குள் மறைந்தான்.
[நாள்-நான்கு]
கடலின் போக்கிற்கு எதிராய் பயணிக்கமுடியாத கயிற்றுக்கோர்வைப் படகுகள் கிளாலிக் கரையைத்தேடி அடைந்துகொண்டிருந்தன. குபீர், குபீரென வழிந்துகொண்டிருந்த குருதிப் பெருக்கிற்குள் பிணங்களை அள்ளிப் போர்த்திக்கொண்டே தானும் ஒரு பிணத்தைப்போல பாவனை செய்துகொண்டு கிடந்தான் மாணங்கி. படகுகள் கரையொதுங்கியபோது பிணங்களிடம் தான் பெற்ற அமைதியின் முகச்சாயலோடு எழுந்து நடந்தான் அவன்.
… வண்டிலை இழுத்துக்கொண்டிருந்தான் மாணங்கி,
யார் முதலில் கடலுக்குள் இறங்குவதென்று கடவுச்சீட்டிற்கு முண்டியடித்துக்கொண்டிருந்தனர் பயணிகள்,
பகல் நாய் வாடியின் முன்னே வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடந்தது,
கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்துக்கிடந்தது ‘மறுகரை”.
* தற்போது மாணங்கி யாழ்தீவகத்தின் புளியங்கூடல் என்ற கிராமத்தில் வசித்து வருகிறான்.

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்