மலையைச் சுற்றிய கன்றுக் குட்டி

(முருகையன் பற்றிய நினைவுக் குறிப்பு)



மரணத்தை எப்படி எழுதுவதென்று யாரும் எனக்கு சொல்லித் தந்ததில்லை.
சொல்லித் தந்தவர்களின் நுட்பங்களெல்லாம் வாழ்க்கைக்குள் மட்டுமே நின்று
சுழன்றிருக்கின்றன. நான் மரண இருட்டைக் குடைய ஆசைப்படும் சுயம்பு.

கடந்துபோய்க்கொண்டிருக்கும் காலம் வீசியெறிந்திருக்கும் மரணப் புத்தகங்களின்
குவியல் என் நுண்ணுணர்வின் மீது அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கையில்
முருகையனென்ற கவிஞர் மரணமடைந்தார் என்ற செய்தியும் எனக்கு எதையோ
குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கிறது. குறியீடுகளோடு பரீட்சயமான மனிதர்கள்
குறியீடுகளாகவே மாறுதலில் ஒன்றும் புதுமை இல்லைதான்.
மரணம் பற்றி அவரோடு
உரையாடியிருக்கிறேன். எப்போதுமே அவர் தனது சிந்தனை ஊன்றியெழுகின்ற தொடக்கப் புள்ளியை
விட்டுத்தூரம் போவதில் நாட்டமிருந்தாலும் தான் தொடங்கிய புள்ளியை யாருடைய விவாதமும்
உடைத்துவிடக் கூடாதென்பதில் அக்கறையாக இருப்பார்.
இராமுப்பிள்ளை முருகையன்
என்ற கவிஞர் – ஈழத்துக் கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவர்,சிறந்த மொழி
பெயற்பாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர், தாயகம்சஞ்சிகையின் ஆசிரியர்
குழுவில் அங்கம் வகித்தவர்,நாடகப் பிரதிகளை உருவாக்கியவர், என்றெல்லாம் நீண்டுகொண்டு
போகும் அவர்பற்றிய பட்டியலொன்றைப் பதிய நான் தேவை யில்லையென்றே நினைக்கிறேன்.
நான் எழுத முயல்வதெல்லாம் எனக்குத் தெரிந்த முருகையன் பற்றியதே. நீர்வேலி ‘கந்தசுவாமி
கோவில்” சந்தியில் இறங்கி மாக்சியவாதியென்று பலரால் புரிந்துகொள்ளப்பட்ட அந்த மனிதருடனான
உரையாடல்களை மீட்டுப் பார்த்தபடி நடந்த நடைக்குள் ஏற்பட்ட புரிதல்கள் பற்றியதே.

முருகையன் ஒரு நல்ல ஓவியன். அவரது வீட்டின் மறைவிடமொன்றில் நீர் வர்ணங்கள்,
தையல்நூல், குருகுமண் என்பவற்றால் உருவாக்கப் பட்ட பாரதியின் ஓவியமொன்று இருந்தது.
அதனை அவரே வரைந்திருந்தார். அவரது வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தபோது மிகுந்த
கூச்சத்தோடு அதனை எனக்குக்காட்டினார். பாரதியின் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில்
உங்கள் கண்களை வரைந்திருக்கிறீர்கள் என்றேன் சிரித்தார். அவர் பாரதியை மிகவும் நேசித்தார்.
பாரதி,பாரதிதாசன் அவர்களின் அறுந்துபோகாத தொடர்ச்சியாகத் தாம் இருக்கிறோமென்ற தலைக்கனமற்ற
தன்னிறைவொன்று அவருக்குள் இருந்தது. ‘நீங்கள் எங்கு போனாலும் கவிஞனாக இருங்கள்”
என்ற வாசகத்தை எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். இலக்கியச் சர்ச்சையொன்றில் நான்
மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்த காலத்தில் எனக்கு தைரியத்தைத் தந்தவை அவரது கடிதங்களே,
இந்த நிலையற்ற அரசியல் சூழல்களுக்குள் கவிதையை அடகு வைத்து விடாதீர்கள், என்று சொல்பவர்
தனது அனுமதியின்றியே தனது பெயரினைப் பாவித்த அரசியல் கட்சிகளுக்கு தான் கொடுத்த
பதிலடிகளைச் சொல்லிச் சிரிப்பார். வெளியே தன்னைப் பரத்தி வைத்திருந்த முருகையனின்
சிந்தனை மூலத்தை துருவியபடியே கதை கேட்பேன். முருகையனிடம் போலித்தனத்தை நான் கண்டதில்லை
தனது ஆளத்தில் தான் கண்டடைந்த முடிவுகளை கொஞ்சம் எழிமையாக்கியே வெளியிடுவார்,
ஆனால் அந்த எழிமை புறச் சூழலில் கலைந்து போகாததாக இருக்கும்.
ஆரம்பங்களில் நவீன
கவிதைகளின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த முருகையனின் விமர்சனப் போக்கு
பிற்காலங்களில் தளர்வடைந்தபோது அவருக்குள் ஏற்பட்டிருந்த அகமாற்றம் அவதானிக்கப் பட
வேண்டியது. அவர் சில தளர்வுகளோடு கடக்கத் தொடங்கினார், ஆயினும் அந்தரத்தில் இலக்கியத்தை
கட்ட முடியாதென்று சொல்லிவந்த முருகையன், விஞ்ஞானத்தின் அடுத்த கட்டக் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிந்தித்தவர்,
ஓவியங்களுக்குள்ளும்,கணிப்பொறியில் கலவை செய்து கடந்து போய்க்கொண்டிருக்கும் புகைப்படங்களை
அவதானித்தவருமான அந்த மனிதர் தனக்குள் இருந்த ஆத்மீகத்திற்கு என்ன பெயர் வைத்திருந்தார்
என்பதுதான் கடைசிவரைஎனக்குப் புரியாத ஒன்று.
முருகையன் எனக்கு முன்னால் நின்ற பெருமலைதான் ஆனால்
நானோ இளங்கன்று.என்னுடைய சுயசிந்தனைக் கட்டுமானத்தில் நின்றவாறே அவரை அணுகியிருக்கிறேன்.
எங்களின் உரையாடலில் அவருக்கு உடன்பாடற்ற பக்கங்கள் வரும்போதெல்லாம் அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருக்கும் ஒரு கவிஞரின் பக்கம் கையைக் காட்டிவிட்டு அமைதியாகி விடுவார்.

முருகையன் வீட்டில் இன்னொரு கவிஞர் இருந்தார். அவர் முருகையனின் மரியாதைக்குரியவராக
இருந்தார், அவர் சு. வில்வரெத்தினம் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான இளங்கவிஞராய் இருந்தார்.
‘உரசல் ஓசைகள்” என்ற கவிதைத் தொகுப்பொன்றை அப்போது பவித்திரன் என்ற பெயரில் வெளியிட்
டிருந்தார், அவர் முருகையனுக்கு மகனாகவும் இருந்தார். முருகையனைத் தேடிப் போனதில் எனக்குக்
கிடைத்த ஒரு இனிய நண்பன் பவித்திரன் என்று அழைக்கப்படும் நாவலன். முருகையன்,நாவலன்,அம்மா
மூவரையும் கூட்டிக்குண்டு தீவகத் தெருக்களில் திரிந்த நாள் என்வாழ்க்கையில் மறக்கமுடியாதது.
அப்போதெல்லாம் முருகையனின் உதடுகளில், மஹாகவி,சில்லையூர் பற்றிய கதைகளே நிறைந்திருந்தது.
நாவலன் முருகையன்
வீட்டிற்குள் வளர்ந்த இன்னொரு கவிதைமுகம். தன்னிடமிருக்கும் ‘மனதின் மொழியை” எப்போதாவது
எழுத்துக்குள் வைத்துக் கொண்டிருப்பவன். அவர்களோடு பளகிய அடுத்த ஆண்டில் எனது வெளிநாட்டுப்
பயணமும் தீர்மானமானது. பயணம் சொல்லித் திரும்பும் போது நாவலன் எனது கையினுள் மரணம்
பற்றியதொரு இரகசியக் கடிதத்தை புதைத்துவிட்டான். அந்த சிவப்பு மை கையெழுத்துப் பிரதி தந்த
கனத்தோடே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். என் பயணத்தில் நான் நடுவழியில் நின்றபோது
முருகையன் சொல்லச்சொல்ல நாவலன் எழுதிய கடிதம் எனது பயணத்திற்கான மன உறுதியைத்
தந்தது. பின்னர் நாவலன் எழுதிய கடிதத்தில் ‘அப்பாவின் மீது வயோதிபத்தின் திரை விழத்தொடங்கி
விட்டது அவர் இப்போ மறதி மிக்கவராக மாறிவிட்டார்” என்று எழுதியிருந்தது.
எனது அடுத்தகட்டப்
பயணமொன்றில் ஆற்றைக் கடந்தபோது நாவலன் தந்த கடிதமும் ஆற்றோடு போனது. ஆயினும் அந்த
இனிய நண்பனின் சிவப்பெழுத்து இன்னமும் நெஞ்சுக்குள் பதியப்பட்டிருக்கிறது.

முரண்களோடு சதுரங்கமாடிக்கொண்டிருந்த முருகையனின் இழப்பு பெரிய வெற்றிடத்தைத் தோற்று
வித்திருக்கிறது. அருமையான சிந்தனையாளன் நம்மிடமிருந்து பயணித்துவிட்டார். ஆயினும்
அந்த வெள்ளைச் சிரிப்பு மட்டும் இன்னமும் நம்முன்னே சாந்தமாய் சினேகித்துக் கொள்கிறது.
2002ல் முருகையன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வருவதற்கான முயற்சியொன்று நடந்தது
இன்னமும் அது கொண்டுவரப்படாதது கவலைக்குரியதே. அதற்கான வெலைகளைச் செய்வதே
அந்தக் கவிஞனுக்கு நாம் இப்போ செய்யவேண்டிய மரியாதை என்று நினைக்கிறேன்.

மெலிஞ்சிமுத்தன்.

Comments