இன்னமும் இருக்கும் மூக்கங்கி .
கட்டடத் தொழிலாளியாகிய நான் ஒவ்வொரு புதிய வீட்டு வேலை வரும்போதும் அந்த வீட்டின் மனிதர்களை நிதானமாக எதிர் நோக்கி ஒரு சிறிய புன்னகையோடு கடந்து வருவது வழக்கம் . சிலரின் முன்னால் 'மூக்கங்கி' போட்டுக் கொள்வதும் வசதிஎன்று கருதுவேன் . சில நேரங்களில் சுவரைப் பார்த்து பல மனிதர்களை நினைந்து தனிமையில் சிரிப்பதை மற்றவர்கள் பார்த்து என்னை 'ஒரு மாதிரி ' யோசிக்காமல் இருக்க மூக்கங்கி உதவியாக இருக்கிறது. மூக்கங்கி சில நேரங்களில் கவசகுண்டலம் போலும் . நான் ஓர் சராசரி யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளைதான் .கிறீஸ்தவம் போதித்த பத்துக் கட்டளைகளையும் சிரம்தாழ்த்தி அனுஷ்டிக்க முயல்பவன்தான். ஆனால் 'மாணங்கி' அப்படி இல்லை வேலைக்கு வரும்போதே மண்டைக்குள் கண்ணை வைத்துக் கொண்டுதான் வருவார். நான் கடினமான வேலை செய்து கொண்டு நிற்கும் போதும் வந்து ஏதாவது விவாதிக்க முயல்வார் . நான் கதவுக்கு மை பூசிக்கொண்டு நின்றால் வந்து ஒருவித நையாண்டிச் சிரிப்போடு 'ஓ மரத்தின் சவத்துக்கு மை பூசிக் கொண்டு நிற்கிறாய்போலும்' என்று கிண்டலடிப்பார் . எனது முதலாளி என்னுடன் நடந்து கொள்வது போல அவருடன் நடப்பதில்லை . முதலாளிய...