இன்னமும் இருக்கும் மூக்கங்கி .

கட்டடத் தொழிலாளியாகிய நான் ஒவ்வொரு புதிய வீட்டு வேலை வரும்போதும்
அந்த வீட்டின் மனிதர்களை நிதானமாக எதிர் நோக்கி ஒரு சிறிய புன்னகையோடு
கடந்து வருவது வழக்கம் . சிலரின் முன்னால் 'மூக்கங்கி' போட்டுக் கொள்வதும்
வசதிஎன்று கருதுவேன் . சில நேரங்களில் சுவரைப் பார்த்து பல மனிதர்களை நினைந்து
தனிமையில் சிரிப்பதை மற்றவர்கள் பார்த்து என்னை 'ஒரு மாதிரி ' யோசிக்காமல் இருக்க
மூக்கங்கி உதவியாக இருக்கிறது. மூக்கங்கி சில நேரங்களில் கவசகுண்டலம் போலும் .

நான் ஓர் சராசரி யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளைதான் .கிறீஸ்தவம் போதித்த பத்துக் கட்டளைகளையும் சிரம்தாழ்த்தி அனுஷ்டிக்க முயல்பவன்தான். ஆனால் 'மாணங்கி'
அப்படி இல்லை வேலைக்கு வரும்போதே மண்டைக்குள் கண்ணை வைத்துக் கொண்டுதான்
வருவார். நான் கடினமான வேலை செய்து கொண்டு நிற்கும் போதும் வந்து ஏதாவது
விவாதிக்க முயல்வார் . நான் கதவுக்கு மை பூசிக்கொண்டு நின்றால் வந்து ஒருவித
நையாண்டிச் சிரிப்போடு 'ஓ மரத்தின் சவத்துக்கு மை பூசிக் கொண்டு நிற்கிறாய்போலும்'
என்று கிண்டலடிப்பார் . எனது முதலாளி என்னுடன் நடந்து கொள்வது போல அவருடன்
நடப்பதில்லை . முதலாளியின் நடவடிக்கை பிடிக்கவில்லைஎன்றால் மனிசன் எந்தத்
தூரமும் பாராமல் நடக்கத் தொடங்கி விடுவார் . ஒருமுறை கவிதை ஒன்றை எழுதி
முதலாளியின் கையில் கொடுத்துவிட்டு நடந்து போனவர்தான் ..பின்னர் அந்த முதலாளியுடன்
அவருக்கிருந்த உறவும் முடிந்து போனது .

அந்தக் கவிதை இப்படி இருந்தது ;

நீர் மட்டச் சட்டம் பிழைத்துப் போன வாழ்க்கை
நாயிரும்பைப் போல சுருங்கி விரிகிறது
முதலாளியோ ஆணிகளை அறைகிறான்...
சுவர் மீதும் ,என் மீதும்
நானோ - நெளிந்து போன ஆணிகளை மட்டும்
பிடுங்கிக் கொண்டிருக்கிறேன் ...../

இப்போது என் புதிய முதலாளியோடு ஓரளவு ஒத்துப் போகிறது என்றே நினைக்கிறேன் .
ஆனால் என் வேலை நேரத்தில் எனக்கு இடஞ்சலானவராகவே அவர் நடந்து கொள்கிறார் .
பொருளாதாரத்துக்கும் ,இலக்கியத்துக்கும் இருக்கும் ஒவ்வாமை போலவே எங்கள்
இருவருக்கும் .ஆனால் நான் அவரின் ரசிகன்தான் .சில நேரங்களில் அவருக்குள் பதுங்கிக்
கொள்ள முயன்று தோல்வி அடைந்தவன்தான் . ஒரு விமர்சகனாக அவர் என்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் .

மிக அண்மையில் எங்களுக்கு ஒரு சீனநாட்டிலிருந்து குடியேறியவர்களின் வீட்டில் வேலை
இருந்தது . முதல் நாள் செல்லும்போதே சாளரக் கண்ணாடியில் குந்தியிருந்த இலையான்
ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்த வயதானபெண் ஒருவரைக் கண்டோம். மாணங்கியை
கேட்கவா வேண்டும் ?அன்று முழுவதும் என் அருகில் வந்து ' அந்தக் கிழவி இலையானுடன்
என்ன கதைத்திருப்பாள் என்று நினைக்கிறாய் " என்று கேட்டு என்னைக் குடைந்தவாறே
இருந்தார் . எங்கள் சாப்பாட்டு நேரங்களில் அந்த வயதானவர் என் அருகில் வந்து அமர்ந்தபடி

என்னோடு சீன மொழியில் பேசிக் கொண்டிருப்பார் , நான் பாரமான வேலைகள் செய்யும்போது
தனியே செய்யாதே என்று கைப் பாசையால் கடிந்து கொள்வார் . அந்த வயதானவர் என்னுடன்
பேசும்போதெல்லாம் 'பார் கிழவி உன்னையும் ஒரு இலையான் எண்டுதான் நினைக்கிற மாதிரி தெரியுது ' என்று கிண்டலடிப்பார் மாணங்கி . ஆனால் அந்த வயதானவருக்கும் எனக்கும் மொழி ஒன்றும் இடைஞ்சலாக இருக்கவில்லை பாசம் மிக்க தாயுள்ளத்தை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன் .

அந்த வயதான அம்மாவுக்கு சீனாவில் என்னைப் போலவே ஒரு மகன் இருக்கிறாராம் (என்னைப் போல அழகாக இல்லை- மெல்லிசாக) அவரின் நினைவோடுதான் என்னுடன் பழகுவதாக அந்த அம்மா சொன்னார். எனக்கோ இதே உணர்வோடு இயக்கத்துக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய சில தாய்மார் தங்கள் பிள்ளைகளின் சாயலைக் கொண்ட என்னை தலை தடவிய தருணங்கள் நினைவுக்கு வந்தது ... எங்கிருந்தாலும் தாயுள்ளம் இப்படித்தானே இருக்கின்றது என்று 'மூக்கங்கிக்குள் ' முணுமுணுத்துக் கொண்டேன் . அவர்களும் நானுமாய் படங்கள் எடுத்துக் கொண்டோம் அந்த அம்மாவிடம் சீன மொழியின் சில சொற்களை அறிந்து பேசிவந்தேன். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வரும்போதும் ' மின்தி இஞ்சியா ' (நாளை சந்திப்போம்)என்று சொல்லிவந்தேன் கடைசி நாள் வந்தபோது எனக்கு வார்த்தை தெரியவில்லை இருவரும் கண்கலங்கி விடைபெற்றோம். மாணங்கியோ முதல்நாள் கண்ட இலையானை மீண்டும் கிழவிக்குப் பிடித்துக் கொடுத்துவிடுவோமா என்று என்னைக் குடைந்தபடியே வாகனத்தில் ஏறினார் .

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)