மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்



'வழித்து மொட்டையான சவரக்கூட்டில் ஒட்டியிருந்து நேற்று, காதலி முகத்தில் குத்திய முடி சொன்னது - கழிந்து போகிறது காலம் வழிந்து போகிறது வாழ்க்கை என்று. உடல் பிழிந்து நெருப்பு மூட்டித் தீனியாக்கி, மலமாக்கி, அறிவு பொறுக்கி, நாச்சுழற்றி, மந்தம் வெளியேற்றி, மறுத்து, நீண்டு, நீண்டு, சுருங்கிச் சுருங்கி, நீளும் வாழ்க்கையில் எதனைக் கண்டோம்? கனவைத் தவிர!' இவ்வாறு வெறும் கனவைத் தவிர வாழ்க்கையில் வேறு எதனைக் கண்டோம் என்று -'பெருமூச்சோடு' என்ற பெயருடனான - தமது கவிதை ஒன்றில் அன்று அலுத்துக்கொண்ட அதே கவிஞன்தான் - சுமார் ஆறு வருடங்களின் பின்னர், தமது ஆழ்மனக் கனவுகளின் ஒரு கனபரிமாணத்தைத் தொகுத்து 'வேருலகு' என்ற பெயரில் ஒரு குறுநாவலாக இன்று வெளியிடுகின்றார்.



விஜயநாதன் யூஜீன் மசனெட் என்கின்ற மெலிஞ்சிமுத்தனின் அடிமனதில் முடங்கிக் கிடக்கும் சோகங்களை வெளியுலுக்குக் காட்டும் ஒரு கண்ணாடியாக அவரது கனவுகள் இந்த நூலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சொந்த ஊரையும், சொந்த பந்தங்களையும், வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து, அவமானப் பெருஞ்சுமையின் கீழ் நசிந்து கிடக்கும் ஒரு கலைஞனின் ஈனசுரமாக அவரது கனவுகள் இந்த நூலில் இசைக்கப்பட்டுள்ளன.

 போர் என்பது மானுடம் தோற்றுப் போய்விட்டதற்கான ஓர் அச்சொட்டான அடையாளம். அதுதான் எங்களை அனாதைகளாக்கியது. அகதிகளாக்கியது. நிர்க்கதியாக்கியது. நிர்வாணமாக்கியது. அப்போரின் கோரமுகத்தின் சுவடுகளாகவே அவரது கனவுகள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஈழத்து மனிதர்களின் துயரப் பதிவுகளின் ஒரு வாக்குமூலமான இத்தொகுப்பு, புற உலகுக்குமானதொரு நீதியையும் வேண்டி நிற்பதாக அவர் தமது முன்னுரையில் கூறியிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாவல் இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிலையின் வரலாற்று வடிவமாகும். கதை கூறலுக்கும் மேலாக, சமூக அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில், குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே ஒரு நாவலாசிரியனின் நோக்கமாகும்.

 கடந்த 30 ஆண்டுகளைக்கொண்ட வரலாற்றுக்கால கட்டம் ஈழத்தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்வுகளையும் கேள்விக்குட்படுத்திய ஒரு காலகட்டமாகும். பௌத்த சிங்கள பேரினவாத்தின் பாதிப்பினால் எழுந்த ஆயுதப் போராட்டமும் அதனால் விளைந்த வெளிநாட்டுப் புலம்பெயர்வுகளும் இக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தினைத் துரிதப்படுத்தின.

 இந்த அசைவியக்கத்தோடு பின்னிப் பிணைந்த சமூகப் பிரச்சினைகளைச் சித்திரிப்பதற்கென யாழப்பாணத்திலிருந்து ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த சூசை மரியதாசன் எனும் இளைஞனின் அகதி வாழ்க்கையையும் - மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பகுதியை அண்டிய அழகிய கிராமமான அரிப்புத்துறை மக்களின் வாழ்க்கையையும் கதைக் களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார்.

'வெள்ளாட்டு மந்தையில் ஒரு கறுப்பாட்டைச் சுமந்தபடி விமானம் உன்னிப் பறந்தது' எனச் சொல்லி ஆரம்பிக்கும் இவர், 'நிலத்தை விட்டுப் பிரியும்போதுதான் மனசிற்குள்ளிருந்து ஏதோ தூர்ந்து போகின்றதே என்ற உணர்வு எழுகின்றது' என்றும் - 'அந்த ஓடைகள், மரங்கள், பாலங்கள், மனிதர்கள் .... என்று எல்லாவற்றையுமே இழந்து போகின்றோம் என்ற சோகம் மூண்டு நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கின்றது' என்றும் விபரிக்கும்போது ஏற்படுகின்ற மனவலி, ஊரைத் துறந்துவந்த, உறவை இழந்துவந்த எங்கள் எல்லோருக்குமே ஏற்படுகின்றது! பரிஸ் நகரில் தெரிந்த ஒரேயொரு முகமான பவானி மற்றும் அவளது மாமன் மாமி ஆகியயோருடன் தற்காலிகமாகத் தங்கியிருந்த காலத்தில் இடம்பெறும் கசப்பான சம்பவங்களையும் - நிரந்தர வதிவிட உரிமையின்றி நாடுவிட்டு நாடு பாயும் முயற்சியின்போது அனுவித்த துன்பங்களையும் தோல்விகளையும் - அவற்றினால் விளைந்த விரக்தியையும் வெறுப்பையும் உணரும்போது, தவிர்க்க முடியாதவாறு ஏனோ தமிழன் செய்த ஊழ்வினையை எண்ணி மனம் ஒருகணம் ஏங்கவே செய்கின்றது! இந்தக் குறுநாவலின் பெரும்பாகம் முழுவதும் - கடற்கரைக் கிராமமான அந்த அரிப்புத்துறையே தமது உலகமென எண்ணிவாழும் அந்த அப்பாவித் தமிழ் மக்களின் எளிமையான வாழ்வியல் பற்றிப் பேசுகின்றது.

பிரதானமாக அக்கிராமத்தின் இயற்கை அழகு பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் - 'கடல் பல கோணல் மாணல்களின் அழகு. காமத்தையும் கோபத்தையும் ஒருங்கே சேர்த்த திமிறலின் வடிவம். அது தன் கட்டுக்கடங்காத மோகத்தோடு எப்போதும் மண்ணோடு சரசமாடிக்கொண்டிருக்கிறது.

அது அலைகளால் மண்ணை அள்ளியள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறது. மண் நெகிழ்கிறதுளூ புரள்கிறதுளூ புன்னகைக்கிறது.... கடற்கரை முழுவதும் கேட்டபடி இருக்கிறது ஒரு படுக்கைறையின் முனகற் சத்தம்' ஆமாம் .... இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே! ஆனால் போரென்ற பொல்லாப்போ இடையில் புகுந்து அக்கிராமத்தின் அள்ளிப் பருகத் தூண்டும் அழகையும், கள்ளம் கபடமற்ற குழந்தைத் தனத்தையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி விடுகிறது. அதனால் அங்கிருந்த கடவக் குருவிகளும், பூச்சியாடுகளும், வண்ணத்துப் பூச்சிகளும், அகவியபடி பறந்து வரும் அந்த அழகிய மயில்களும், கீரி நின்று பார்த்த பற்றைகளும், காலைக் கடன் கழிக்கக் காவல்காக்கும் ஈச்சமரங்களும், இலை குவிக்கும் பூவரச மரங்களும், பாதைவழி பூத்தபடி காத்திருக்கும் கார்த்திகைப் பூக்களும் ....... ஏன் அந்த ஆவரசம் மஞ்சள் பித்தப் பூக்களும்கூட போரினால் அனாதரவாய்ப் போயின! மாமா, கண்மணி மாமி, சசியக்கா, அத்தாம்பிள்ளை, சின்னன், உலுந்தை, சேமாலையண்ணன், பெரியம்மா, பெரியையா, பொன்னுக்கிழவி, சந்தியாக்கிழவன் என்று கதைமாந்தர்கள் பலர் இங்கு வந்துபோகின்றனர்.

இவர்களது தனிப்பட்ட பலங்களும் பலவீனங்களும் கதைக்கு வலுவூட்டுகின்றன. இவர்களுள் எல்லாம் சூசை மரியதாசன் என்ற பெயருடன் இக் கதையைச் சொல்லிப் போகும் கதாசிரியரின் ஆதர்ஷ புருஷனாகாத் திகழ்பவர், சந்தியாக் கிழவர்தான்! சந்தியாக் கிழவர் பற்றிக் கூறும்போது - 'அவர் ஒரு அரூபமான புள்ளியில் நின்றுதான் கதைகளைத் தொடங்குவார். தனக்கு உள்ளே இருக்கும் வெளி - வெளியில் வரும்போது, தன்னை ஒருவராலும் காண முடியாது என்பார்.

ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே இருக்கும் வெளியைக் கண்டால்தான் நம்முன்னே விரிந்து கிடக்கும் இந்த வெளியின் விந்தைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியமென்பார்.' என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 'சந்தியாகர் காணாமற்போன அன்றைக்கு நான் பனங்கூடல் காணியில்தான் இருந்தேன். சோகம் எனது நெஞ்சை நிறைத்திருந்தது. ஆனால் அந்தச் சோகம்தான் எனது பயணத்தின் வாசலாக அமையப்போகிறதென்ற விசயத்தை அந்தக் கணத்தில் நான் உணரவில்லை' என்று இன்னோரிடத்தில் கூறுகின்றார். இவற்றிலிருந்து கிழவர்மீது இவருக்கிருந்த வாஞ்ஞை புலனாகின்றது. ஆசிரியரின் ஆழ்மனதில் கிளைபரப்பி வியாபித்திருக்கும் அந்த வேருலகின் விந்தைகளைக் கனவுகளாகப் பிரித்து எழுதிவைக்கும் ஆர்வத்தை அவருக்கு ஏற்படுத்தியவர், பிறரால் ஒரு வகைப் பைத்தியம் எனக் கருதப்பட்ட சந்தியாக்கிழவரே தான். பைத்தியத்திற்கும் மேதமைக்கும் இடையே ஒரு மயிரிழைதான் வித்தியாசம் எனக் கூறப்படுவது ஒருவகையில் உண்மைதான் போலும்!

 இனி, ஆயுதப் போராட்டம் உக்கிரமாக இடம்பெற்ற காலத்தில் கோரமான படுகொலைகளும் மனதாபிமானமற்ற தண்டனை விதிப்புக்களும் தங்குதடையின்றி நிறைவேற்றப்பட்டமை வரலாறு. சிப்பாய் ஒருவனைச் சிரச்சேதம் செய்து, ரத்தம் சொட்டச் சொட்ட, அவனது தலையை வாளியில் தொங்கவிட்ட கொடுமையான காட்சி நெஞ்சை உறைய வைக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து மனம் நொந்தபடி –'அந்தச் சிப்பாயும் புனிதன் இல்லைத்தான்..... ஆயினும் அவனுக்கான தண்டனையின் விதம்..? சதைகளைப் பிளந்து, குருதியை வளியவிட்டு, நிரந்தர நீதிக்குப் பசளையாய் இடமுடியுமா?' என்று ஆசிரியர் கேள்வி எழுப்புகின்றார்.

 இதேபோலவே ஆடு களவெடுத்ததற்காக போராளிக் குழுவொன்று சிமியோனுக்கு வழங்கிய தண்டனையைப் பார்த்துக் குமுறிப் பொருமுகின்றார் - 'இன்னொரு உடலின் உரிக்கப்பட்ட மாமிசம் தன்னுடைய மாமிசத்தில் ஒட்டியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது அவன் சிலிர்த்து நடுங்கியபடி நடந்தான். சிலர் அவனைக் கேலி செய்தார்கள். சிலர் முதுகைப் பிடித்துத் தள்ளினார்கள். அவனைச் சுற்றி நடந்த மனிசர்களின் முகத்தில் இரக்க சுபாவங்களைத் தேடி நான் தோற்றுப் போனேன். அந்தக் கணங்களில் நான் கண்ட சிமியோனின் முகம் எனது ஆத்துமாவை உலுக்கியது.' எனக் கூறித் தவிப்பது தெரிகிறது. 'கண்மணி மாமி வீட்டு இருட்டறைகளில் புரட்டிப் போடப்பட்ட ஆமைகள் மார்பில் அடித்தபடி, தங்களை விடுவிக்குமாறு ஓலமெழுப்பிக்கொண்டிருந்தன' என்ற சோகாந்தகாரம் செறிந்த செய்தியொன்று இக்கதையில் பலதடவைகள் ஆங்காங்கே ஒலிக்கின்றது.

'நீதியின் பொருட்டாயினும் ஒரு உயிரையேனும் கொல்லும் மனநிலை எனக்கு இல்லை' என்று இந்தக் குறுநாவலின் முகப்பிலேயே அடித்துக்கூறும் இவரது காருண்ய குணம் இக்கதையெங்கும் இவ்வாறாக இழையோடி நிற்கின்றது. 'வேருலகு' என்ற இந்தக் குறுநாவலில் பழங்கதைகளுண்டு, உண்மைக் கதைகளுண்டு, கனவுண்டு, காதலுண்டு, களவுறவுண்டு, காமமுண்டு, களிப்புண்டு, கவலையுண்டு, தோழமையுண்டு, துரோகமுண்டு, பசியுண்டு, பாசமுண்டு, சாதியுண்டு, சமயச்சடங்குண்டு சாதாரண கிராமம் ஒன்றிற்காணும் சகலதும் இதில் உண்டு. இவற்றை உணர்ந்தறிவதற்கான பரிச்சயமும் சாதுரியமும் இல்லாவிடத்து இவை கண்ணில் படாமலே போய்விடக்கூடிய ஆபத்தும் இதில் நிறையவே உண்டு. அழகிய கவிதையை ஒத்த உருவகங்களும் படிமங்களும் நிறைந்த இப்படைப்பினை நுகர்வதில் அதிக அவதானம் தேவை. அத்தகைய நுணுக்கமான படைப்புத் திறனைக் கைக்கொண்டே இக்கதை ஒரு கலாசிருஷ்டியாகப் புனையப்பட்டிருக்கின்றது.

'அவளை என் தங்கையாக வரித்துக் கொண்டதற்கும் ஒரு வலுவான காரணமிருக்கின்றதே' என்று 17ஆம் பக்கத்திலும் - 'துரோகிகளை அழிக்க அவள் மீண்டும் மீண்டும் பிறப்பாளென்று பொன்னுக்கிழவி சொல்லுவாள்' என்று 44ஆம் பக்கத்திலும் - 'புரண்டு கிடந்த ஆமைகள் மட்டும் தம்மார்பில் அடித்தபடி' என்று நூலின் பல இடங்களிலும் - இந்த நூலின் கடைசிப் பக்கத்தில் ஆறேயாறு வரிகள் கொண்ட கடைசிப் பந்தியிலும் - இன்னும் இவை போன்ற பல இடங்களிலும் பூடகமாகச் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் செய்திகளின் உட்கிடையான அர்த்தங்களைத் தவறவிடக்கூடிய பொழுதுபோக்கு நோக்குடனான இலகு வாசிப்பு, இந்தக் குறுநாவலை புரிந்துகொள்ள உதவப் போவதில்லை. இவை இந்த நாவலில் உள்ள பல நல்லம்சங்களில் ஒரு சில மட்டுமே! இதேவேளை, வெறும் புகழ்ச்சியினால் அழிந்துபோய்விடாமல், காத்திரமான ஆக்கபூர்வமான விமர்சனத்தால் பயனடையவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர் மெலிஞ்சி முத்தன் என்பதை நான் நன்கு அறிவேன்.

 அந்த வகையில் இந்த நூல் குறித்த சில குறைபாடுகளையும் இங்கு அவரது கவனத்திற்குக் கொண்டுவரத் தயங்குவேனாயின் நான் எனது ஆய்வுப் பணியிலிருந்து தவிறியவனாகிவிடுவேன். முதலாவதாக - எந்த ஒரு கலைப்படைப்பும் அதன் காலத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. அத்துடன் அப்படைப்புக்களில் அக்காலத்துக்குரிய பிச்சினைகள், அவைசார் சம்பவங்கள் மற்றும் அவற்றினால் பாதிக்கப்படும் மக்களின் துயரங்கள் என்பனவும் அதில் இடம்பெறுதல் வேண்டும் என்பதுவும் அத்தகைய ஓர் எதிர்பார்ப்புத்தான்! அதேவேளை எல்லா வகையான சமூக அமைப்பிலும் தலைதூக்கும் சவால்களுக்கும், அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான போர்க் குணமும் எழுச்சியும் ஏதோ ஒரு வடிவத்தில் மேலெழுந்து பல்கிப் பெருகி, பயன் விளைவித்தும் வந்துள்ளன என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்தத் தர்க்கவியல் உண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழினத்தவர்களது வாழ்வியலின் மாற்றத்துக்கான அடிப்படை அம்சங்களைத் தன்னிலும் இந்தக் குறுநாவல் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. அடுத்து, மெலிஞ்சி முத்தனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடாகக் கொள்ளப்படக்கூடிய ஒரு தரமான கலைப்படைப்பு இந்த 'வேருலகு' என்ற குறுநாவல். இது தரமான வாகசனின் ஆழ்மனத்துடன் உரையாடக்கூடியது.

அந்த வகையில் இது ஒரு வெற்றிகரமான படைப்பு என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் புறமனதையும், வெறும் தர்க்கீகத்தையும் மட்டுமே ஒரு படைப்பை நோக்கித் திறந்து வைக்கும் ஒரு சாதாரண வாசகனை இந்த 'வேருலகு' சென்றடையுமா? மொழியைத் தட்டையான ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரு கருவியாக அல்லாமல், பல பரிமாணங்களைக் கொண்ட ஓர் ஊடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் இந்தப் புதிய முயற்சி, ஒரு சராசரி வாசகனைத் திருப்திப்படுத்துமா? போன்ற அச்சங் கலந்த வினாக்கள் என் மனதில் எழுவதையும் என்னால் தடுக்க முடியவில்லை.

 அடுத்து, சொற்சிக்கனத்தை வேண்டிநிற்கும் கவிதையமைப்பில் இக்கதை எழுதப்பட்டமையாலும், இது ஒரு குறுநாவல் என்பதாலும் இதில் வரும் கண்மணி மாமி, சசியக்கா, சந்தியாக் கிழவர் போன்ற சில முக்கியாமன பாத்திரங்களின் குண இயல்புகளைச் சரிவர சித்திரிக்கும் வகையில் அவற்றின் பாத்திரப் பண்புகள் மேலும் வளர்த்தெடுத்துக்கப்படாமை ஒருவித போதாமைக் குறைபாட்டை தோற்றுவிக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. இருந்தபோதிலும், ஈழத்து – புலம்பெயர் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் 'வேருலகம்' ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றது என்பதே எனது ஒட்டுமொத்தமான கணிப்பீடு. வன்னிப் பிரதேச மண்வாசனை நாவல்களென்று பாலமனோகரனின் நிலக்கிளி, முல்லைமணியின் மல்லிகைவனம், தாமரைச்செல்வியின் சுமைகள் என்பன விதந்து பேசப்பட்டு வருவன.

அவற்றுள் முன்வரிசையில் இடம்பெறுவதற்கான சகல தகுதியும் கொண்டது இந்த வேருலகம் என்பது எனது கருத்து. புலம்பெயர் நாவல்களில் ஷோபாசக்தியின் கொரில்லா ஏற்படுத்திய தாக்கத்தையும் சலசலப்பையும் போன்று, பலராலும் விதந்து பேசப்படுவதற்கான நல்ல பல தகைமைகளைக்கொண்ட ஒரு புதிய முயற்சி இந்த வேருலகம்.

 எனது தீர்மானத்திற்குத் துணையாக, மேலும் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகநாதன் 'ஈழத்துப் படைப்புக்களுக்கு அடிக் குறிப்பு வேண்டும்' என்று சொன்னாராம். அவரைப் பின்தொடர்ந்து அங்கு சென்றிருந்த பகீரதன் 'ஈழத்துப் படைப்புக்கள் 50 வருடங்கள் பின்தங்கி நிற்கின்றன' என்று திருவாய் மலர்ந்தரளிப் போனாராம்.

 சில வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுதியைப் பார்த்த சுஜாதா 'ஒருவித புனைவத் தமிழில் எழுதியிருக்காங்களே! புரிஞ்சிக்கக் கஷ்டமாயிருக்கே' என்று சொல்லிக் கவலைப்பட்டாராம். இவ்வாறிருக்க, மெலிஞ்சி முத்தனின் இந்த 'வேருலகு' நூலக்கு முன்னுரை வழங்கியுள்ள இன்றைய தமிழ் நாட்டு முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் இப்படி எழுதியிருக்கின்றார் - 'கவிதையைப் போலப் படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது.

கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனைப் பற்றிய உண்மையான வெளிப்பாடு ....... நம்பிக்கை தரும் புதிய படைப்பாளியாக, உரைநடையில் பதிய பாய்ச்சலையும் கவித்துவத்தையும் உருவாக்கும் மெலிஞ்சி முத்தனிடமிருந்து இன்னும் நிறைய கதைகளும் கவிதைகளும் வரவேண்டும்.

அவரது புதிய எழுத்து அதற்கான தனித்தவத்தையும் நம்பிக்கையையும் நிறையவே தருகிறது.' ராமகிருஷ்ணனது நம்பிக்கை ஓர் உண்மையான - நேர்மையான நம்பிக்கையாயிருந்தால் அவருக்கு எனது நன்றி! மெலிஞ்சி முத்தனுக்கு எனது பாராட்டு! விமர்சனம் என்ற பெயரில் கதையைக் கூறி, படிப்போரின் சுவையைக் கெடுக்க நான் விரும்பவில்லை. பதிலாக, உங்கள் ஆர்வத்தைத் தூண்டி, இதனைப் படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுவே எனது நோக்கம்.

அப்பணியை ஓரளவுக்காவது செய்து முடித்திருக்கிறேன் என்ற திருப்தியுடன், முடிவாக - ஒருகாலிழந்து, மறுகாலுடன் மட்டுமே தத்தித் தத்தி இரை தேடிக்கொண்டிருந்த, பாவம், அந்த ஒற்றைப் புறாவின் கதையைக் கேட்ட பின்னர் - நீண்ட பெருமூச்சுடன் யூஜீன் சொல்லிவைத்த - ஒரு மணிக் கவிதையொத்த - அந்த நம்பிக்கையூட்டும் வரிகளையே உங்களுக்கும் நினைவூட்டி, விடைபெற விரும்புகிறேன். 'நாடிழந்து, அலைந்து களைத்த, ஈழத் தழிழரின் கால்களாகவே, உனது கனவின் கால்களை, நான் காண்கின்றேன். மறுபடி அந்தப் புறாவை நீ கண்டால், 'உனக்கும் சிறகுகள் உண்டு' என்று அதனிடம் சொல்லிவிடு!

 (வேருலகு வெளியீட்டின்போது வழங்கப்பட்ட விமர்சனம் - சில மாற்றங்களுடன் ஜீவநதி 3ஆம் ஆண்டு வெள்ளி மலரில் வெளிவந்தது) . .

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)