கதவுதிறக்கும் சொல்லாட்டம்



சொற்களை கொஞ்சம் உரைத்துப் பார்க்கின்றேன். முடிந்தால் கொஞ்சம் 'உரைத்து ஆடலாம்'. சொற்களை நாம்தான் ஆட்டுகிறோம். ஆட்டம் உச்சம்பெறும்போது அவை நம்மை ஆட்டுகின்றன.ஆட்டம் என்ற கலையைத்தான் சொற்களின் மூலம் செய்து பார்க்கிறோமா? இசைகூட உள்ளுடலின் ஆட்டம்தானே. அசைதல்தான் மொழியின் மூலகுணம் என்பதால் ஆட்டத்துக்கு உகந்ததுதான் மொழி.





ஒலியின், ஒளியின் ஆட்டம் மொழி என்றால் மொழியின் ஆட்டம்தான் இலக்கியமா? அல்லது அலையை அலம்புவதுபோல் நான் மொழியை அலம்பிக் கொண்டிருக்கிறேனா? என்னளவில் அதுவும் ஆட்டமே. நான் சொற்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறேன் இந்த ஆட்ட மாதிரியை. பாரபட்சமில்லாது எல்லாச் சொற்களுமே ஒன்றோடொன்று பற்றிக் கொண்டு ஆடுகின்றன. என்னோடு ஆடும் சொற்கள் பல என் முப்பாட்டியிலும் வயசானவை. நான் முப்பாட்டனை சொல்லாமல் முப்பாட்டியை சொல்லும்போதே அவை பெண்பாலாய் தோற்றம் பெறக்கூடியன. கருத்துக்களைத்தான் அவை எவ்வளவு துரிதகதியில் உள்வாங்கிக் கக்குகின்றன... சொற்கள் குறியீடுகளுக்கு தாயாகவும்,பிள்ளையாகவும் இருக்கின்றன. நான் சொற்களின் காதலன். பலதருணங்களில் சொற்களை நான் நுகருகிறேன், சிலதருணங்களில் சொற்கள் என்னை நுகருகின்றன.சொற்கள் என்னை நுகரும் தருணங்களில் என் சவத்தின்மீது நின்று ஆட பலர் வருவார்கள்.ஆனால் சொற்களுக்கு என்னை கொலைசெய்யும் எண்ணம் இல்லைப்போலும்.

புனைவுக்குள் ஆடுவோம் வருகிறீர்களா? என்று நான் சொற்களை அழைப்பேன் 'பொய்யுக்குள்' ஆடக்கூடிய சொற்கள் புனைவுக்குள் ஆட மறுக்கவா போகின்றன..நான் சொற்களோடு மூண்டு,மூண்டு ஆடுவேன். எனக்கும் சொற்களுக்கும் இடையில் ஏதேனும் மசவாது நடக்கின்றதா என்று பலர் மூக்கை நுழைத்துப் பார்ப்பார்கள் அப்போதுதான் தரவு என்ற கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவோம். குறியீடுகளின் தாயாகிய சொல் தரவு என்ற கம்பைத் தூக்கும் தருணத்திலேயே வெளிப்படுகிறது எனக்கும்,சொல்லுக்குமான அரசியல்.

முதலில் எங்களை சற்று புனைவுக்குள் ஆடவிடுங்கள்.விஞ்ஞானத்தின் இருட்டும் புனைவுக்குள் இறங்கி நிற்கிறது.இருட்டுக்குள்ளும் நாம் சொற்களோடு ஆடுவோம். இருட்டுக்குள் வழியேதும் தென்படுகின்றதா என்று தேட பிரமை நிறைந்த இந்த ஆட்டம் அவசியமானது. எங்கள் ஆட்டவிசை பிரபஞ்ச இயங்கு விசையோடு பொருந்தும் ஓர் அலைவரிசையில் செல்கின்றது.அந்த விசையை நான் 'சத்தியம்'என்று புரிந்து வைத்திருக்கின்றேன். விஞ்ஞானத்தின் இருட்டுக்குள் சொற்களோடு நின்று ஆடும்போதே சொற்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.

சொற்கள் ஆடியாடி நம்மை எங்கெங்கோவெல்லாம் கொண்டு செல்கின்றன.நாம் சொற்களால் கொண்டு செல்லப் படுபவர்களாக இருக்கிறோம். ஆட்டத்தை ரசிப்பவர்கள் எல்லோருமே கொண்டுசெல்லப் படலை யோசிப்பதில்லை. கொண்டுசெல்லப் படலுக்கு தயாரான ரசிக மனதை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சத்திய விசையில் ஆடும் ஆட்டத்துக்கு அப்போதுதான் நம்மால் கதவு திறக்க முடியும். தத்துவங்கள் வளர்த்துவிட்ட சொற்களோடு புனைவுக்குள் ஆடுவோம்.

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)