Tuesday, August 28, 2012

ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்.போத்துக்கல், ஸ்பெய்ன் நாடுகளின் பழங்கதைகளின் பாத்திரங்கள் பல எங்கள் கிராமத்தில் உலாவித் திரிகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘ஊர்சோன்’.
ஊர்சோன் ஓர் அரசகுடும்பத்தில் பிறந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த
அசம்பாவிதம் ஒன்றால் அரசி காட்டுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றுப்
போடுகிறாள். குழந்தைகள் இருவரும் ஆண்கள் ஒருவன் ‘ஊர்சோன்’ மற்றவன் ‘பாலந்தை’ ஊர்சோன் குழந்தையாக இருக்கும்போதே அவனை
கரடியொன்று தூக்கிச் சென்றது. கரடிக்கு ஏன் அப்படியொரு ஆசை வந்ததோ தெரியவில்லை. அல்லது கரடி அப்போது எதன் குறியீடாக இருந்ததுவோ! அதுவும் புரியவில்லை. அக்கரடி தனக்கான காட்டுக்குள் ஊர்சோனை வளர்த்துவந்தது என்பதே மூலக் கதை.ஊர்சோன், பாலந்தையோடு கதையும் வளர்ந்துவந்தது. அந்தக் கதை நாடுகள் பலவற்றைக் கடந்தது. பல கலாச்சாரங்களை அணுகி, பல நிலங்களில் தன்னையும் இருத்திக்கொண்டது. அவ்வாறுதான் எங்கள் நிலத்திலும் அது இறங்கியது.

எங்கள் கிராமத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு கூத்தில் வரும் பாத்திரங்களின்
பெயர்களை வைப்பது வளக்கமாக இருந்தது. கூத்துக்களை உருவாக்கும் அண்ணாவியர்களும், பலவிதமான கதைகளைக் கொண்ட கூத்துகளும் இருந்ததால் இந்நிகழ்ச்சி சாத்தியமானது. கிறிஸ்தவம் பரப்பவந்தவர்கள்
எங்கள் சனங்களின் முன் கதைசொல்லிகளாக இருந்த காலத்தில் வேதசாட்சிகளான பலநாட்டு மனிதர்களின் கதைகளை எங்கள் கூத்துக்குள்
கொண்டுவந்தார்கள்.இவ்வாறுதான் எங்கள் ‘தென்மோடிக் கூத்துக்குள்’
‘ஊர்சோனும்’, ‘பாலந்தையும்’ பிறபாத்திரங்களும் வந்து சேர்ந்தனர். எங்கள்
கூத்தினுள் கன்னிமரியாளும்,சம்மனசும்,பார்போரம்மாளும்,ஏனைய புனிதவதிகளாக அடையாளப்படுத்தப் பட்டவர்களும் வந்தபோது எங்கள்
கூத்தின் சில ஆட்டவகைகள் இழக்கப் பட்டன. வேற்று நாட்டுப் புனிதவதிகள் எங்கள் மண்ணின் கற்பு நெறிகளுக்கு அமைவானவர்களாகவும்
ஆக்கப் பட்டனர்.

அப்பு பாடிய பாத்திரம் மகனுக்கும்,பேரனுக்கும் என்று தொடர்ந்து வந்தது.
அவ்வாறே ஒவ்வொரு பாத்திரங்களும் எங்கள் தலைமுறைகளுக்குள் தமக்கான வாரிசுகளை உருவாக்கிக் கொண்டன.இப்போது நான் சொல்லும் கதைக்குள் வரும் மனிதனும் ‘ஊர்சோன்’ ஆனது இப்படித்தான்.

மூலக் கதைக்குள் இருந்த ஊர்சோனை கரடி தூக்கிச் சென்றதால் ‘ஊர்சோன்’
[நாம்பேசும்]மொழி தெரியாதவனாகவே வளர்ந்தான். அவனிடம் மொழிப்பற்றோ, மொழிவெறியோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் எங்களின்  ஊர்க்கூத்துக்குள் மொழியற்ற மெட்டு ஒன்றையே
‘பாப்பப்ப பாப்ப பாப்பப்ப பாப்ப’ என்று பாடித் திரிந்தான். தென்மோடி
மெட்டுக்குள் இருந்த ஜீவன் அந்த ஜீவனை உள்வாங்கிக் கொண்டது.
அவன் தன் வரலாற்றைச் சொல்ல அந்த மெட்டு போதுமனதாக இருந்தது.
மெட்டுமுழுதும் கசிந்தபடி இருந்தன அவனது உணர்வுகள்.கலையைச் சுவைக்கக் கூடியவர்களால் அவனது உணர்வுகள் உணரப்பட்டன.கலையச் சுவைப்பதுபோல் வாழ்க்கையைச் சுவைப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்?
அந்த மூலக்கதை எங்களூரில்,எங்கள் மொழிக்குள் வசமாகி எங்கள் குணங்களால்,எங்கள்வாதங்களால் உருமாறிவந்தது.பின்னர் எங்கள் நிலத்தின் அரசியல் சூழலிலும் அகப்பட்டுக் கொண்டது.

எங்கள் நிலத்தின் புதிய தலைமுறை ஊர்சோனும் ‘காலம்’ என்கின்ற
கரடியால் தூக்கிச் செல்லப்பட்டான்.அவன் போத்துக்கல் நாட்டின் தெருக்களில் அலைந்தபடி அந்த ஜீவமெட்டை பாடிக்கொண்டான்.
உருமாறிவந்த ஊர்சோனை அந்த நிலத்தினரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் புதியஊர்சோன் அவர்களின் முன் ‘பிறவுணியாக’
இருந்தான்.

பின்னர் பாலந்தை பல நாடுகளின் எல்லைகளைக் கடந்தான்.’பராக்குப்பார்க்கும் குணமே மனிதர்களிடம் விஞ்சியிருக்கின்றது’
என்று ஒட்டுமொத்த மனித இனத்தின்மீதும் தன் கணிப்பை செய்துகொண்டான். அவனது பயணம் ‘அமெரிக்கா’நாட்டின் ‘பவ்லோ’ என்ற
இடத்தில் சட்டவிரோதமாக நுளைந்த பயணிகள் தஞ்சம் புகக்கூடிய ‘விவிகாசா’ என்றமுகாமில் வந்துநின்றபோது இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

‘விவிகாசா’ முகாமின் மலகூடங்களை துப்புரவாக்கும் பொறுப்பு எங்கள் இருவருக்கும் தரப்பட்டிருந்தது.இருவருமாக வேலைசெய்யும் அந்தக் கணங்களில் அவன் அந்த ஜீவமெட்டுகளைப் பாடுவான்.அவனது சகோதரன்
‘பாலந்தை’ முழ்ழிவாய்க்காலில் மரித்துப்போன செய்தி அவனைப் பெரிதும் தாக்கியிருந்தது. அவன் பாடிய மெட்டுக்களில் இழப்பின் சோகம் இளையோடிக் கிடந்தது. அந்த மெட்டுகளுக்கு நான் போட்ட வரிகள் இவை;

பாடல்; 1                            பொங்குமெரியினிலே.. எ.மெ  (பார்போரம்மாள்)

முள்ளு வளையத்துள்ளே – என்னை
முடக்கிய நியாயங்களே
சந்தைக் குறிச்சியிலே – எந்தன்
சதைக் கூட்டின் விலையென்னவோ

செம்மணியின் வயிறே –அதில்
செரிக்காத என்மகளே
செங்கரத் தொட்டிலிலே –அள்ளிச்
சேர்த்த என் சதைக் குவிவே

வாழ்க்கையைச் சேகரித்தே – முழ்ழி
வாய்க்காலில் கொட்டினீரே
தோல்வியின் பெருங்கணமே – அதில்
துவண்டுபோய்க் கிடந்தவரே.

வாயற்ற கேள்விகளை – வாயில்
போட்டு விழுங்கிவிட்டேன்
பட்டினி வயிற்றினிலே – கேள்வி
கட்டிபோல் வளருதடி.

இது மிகுந்த சோகமான மெட்டு. மெட்டுக்களை நாங்கள் பழய கூத்துக்களின்
மெட்டுக்களாலேயே குறிப்பறிந்து கொள்ளுதல் வளக்கம்.அந்த வகையில்
தென்மோடிக் கூத்துகளில் மிகப் பழய கிறிஸ்தவக் கூத்தாகிய
 ‘ தேவசகாயம்பிள்ளை’ என்ற கூத்தின் மெட்டுகளையே குறிப்புணர்த்த
பயன் படுத்துவதுண்டு. நான் இந்தப் பாடலுக்கு ‘பார்போரம்மாள்’ என்ற
கூத்தில் வரும் ‘பொங்குமெரியினிலே என்ற மெட்டை பயன்படுத்தியுள்ளேன்.

பாடல்;2                      
 கொச்சகதரு

தொன்மை யழகோ, துயரழகோ
மெய்மை பாவும் மிடுக்கழகோ,
வல்லோர் கையில் மல்லழகோ,
இல்லார்க் கிங்கே எதுவழகோ!
தாழ்ந்தோர் வாயின் தமிழேயுன்னை
தத்தெடுக்கும் கவியழகோ,
அறந்திரித்தோர் அறிவழகோ,
ஐயோ இங்கே எதுவழகோ!

ஆரோ மூட்டி வைத்த
அடுப்புகள் எரியுதடி – ஆரிராரிரோ
அதனிலே தினமெரியும்
விறகுகள் ஆனோமடி – ஆரிராரிரோ
பனையடி நிழலினை
கோடையில் நம்பி நிற்கும்
குடிகளாய் ஆனோமடி – ஆரிராரிரோ.

நேற்றிருந்த நிலவதுவும்
நெருப்புத்தின்றே பாதியாகும்
தேற்றுவாரற்றே மனிதம்
தெருவினிலே அலைந்துளலும்
குரலெடுக்க நாதியில்லை
கூடவர யாருமில்லை
பரந்தசிறைப் பட்டணங்கள்
பாவம் இந்தக் கேடயங்கள்.

பிணங்களைப் புணர்ந்தவரே
மனங்கொண்ட மாப்பிள்ளையோ- ஆரிராரிரோ
பணங்காக்கும் பூதங்களே
இனங்கண்ட தேவர்களோ – ஆரிராரிரோ
காறியுமிழ்நீர் துப்பி
காலத்தை இழிவு செய்தே
ஞாலத்தை பழித்திடடி – ஞாலம் சாபமே

(கொச்சகதரு எல்லாக் கூத்துகளிலும் இருக்கக் கூடியதொரு மெட்டு. இங்கு ஒரு தாலாட்டுப் பாடலாய் அமைந்துள்ளது)

பாடல்; 3

ஏலஏலோ தத்தைத் தாம் ஏல ஏலோ – ஏல
ஏலஏலோ தத்தைத் தாம் ஏல ஏலோ
தாய்நிலமே  திரைகொள் தமிட்கடலே – நீதித்
துறைக்கோரி ஒளிரும் அகல் விளக்கே
சுழியினிலே தொலைத்த சூரியனே – மாற்றான்
சூட்சுமத்தில் அலையும் கோத்திரமே
கருத்தினை மூட்டிய கட்டுமரத்தில்
அகத்தினைக் கோர்த்திட்ட சுக்கானியானேன்
அவரவர் மடிப்பெட்டி சுமைகளைத் தாங்கி
பிரிகின்ற மரத்துக்குப் பெயரென்ன சொல்லு?
                                                                       ( ஏல ஏலோ தத்தைத்தாம்…..)

காட்டுமதி தெரியாக் காலத்திலே – எங்கள்
கட்டுமரம் சிதையும் மாயத்திலே
பாட்டுக் கட்டும் கூத்தர் பயணத்துள்ளும் – பாரும்
ஏய்ப்பிருக்கும் அல்லால் இழிப்பிருக்கும்
சரியோடு சரிகளும் மோதிடும் போதில்
சிதைவினைச் சரியென்று சொல்வாருமுண்டு
பிழைகளின் கூட்டினை பிறகென்ன சொல்லி
வரலாற்றுக் கோவணம் அவிழுது பாரும்
                                               ( ஏல ஏலோ தத்தைத் தாம்…..)

இதுவொரு மீனவர்பாடல் வகையைச் சேர்ந்த தென்மோடி மெட்டு.

நாங்கள் இருந்த  ‘விவிகாசா’ முகாமிலிருந்து கனடா எல்லைக்குக் கொண்டுவரப்பட்டோம். கனடாவுக்குள் நாங்கள் நுளையவேண்டுமென்றால்
எமக்கு இரத்த உரித்தான ஒருவர் கனடாவுக்கு உள்ளே இருக்கவேண்டும் என்பது சட்டம்.நாங்கள் விசாரணை அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அங்கே எனது அக்காவும்,ஊர்சோனின் மாமாவும் வந்திருந்தார்கள்.எங்கள் இருவரைப்பற்றிய விசாரணைகளும்

பலமணிநேரம் நடந்தது. இறுதியில் நான் கனடாவின் உள்ளேயும், ஊர்சோன்
அமெரிக்காவின் உள்ளேயும் அனுப்பப்பட்டோம். ஊர்சோனின் விசாரணை
முடிவுதோல்வியில் முடிந்ததில் அவன் பெரிதும் வருத்தப்பட்டான். இருவரும்
பிரியும்போது என் கையில் கட்டியிருந்த மணிக்கூட்டை அவனது கையில்கட்டிவிட்டு விடைபெற்றேன்.

ஊர்சோன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு வதிவிட அனுமதிகோரி
வளக்குகளைத் தொடர்ந்துகொண்டு, எரிபொருள் விற்பனை நிலையமொன்றிலும் வேலை செய்து வந்தான். அடிக்கடி தொலைபேசியில்
என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனின் தொடர்பு சிலமாதங்களாய் இல்லாதுபோனதால் மிகவும் கவலையுடன் அவனின் மாமனாரிடம் சென்று
விசாரித்ததில் தன்னுடனும் தொடர்பில்லையென்று கூறி அவரும் வருத்தப்பட்டார். சில நாட்களின் பின் அவர் ஊர்சோன் தங்கி நின்ற இடத்துக்கும் சென்று பார்த்ததில் அவன் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.பலரிடம் விசாரித்ததில் எந்த இலாபமும் கிடைக்கவில்லை
அவர் அமெரிக்க காவல்துறையிடம் மருமகனைக் காணவில்லையென்று
புகாரிட்டுவிட்டு கனடாவுக்குத் திரும்பினார். சுமார் ஒருமாதத்தின் பின்னர் கனடிய எல்லைப்பகுதிக்காவலர் அலுவலகத்தில் இருந்து ஊர்சோனின் மாமனாருக்கு  தொலைபேசி அழைப்பு வந்தது.

அமெரிக்காவிலிருந்து ‘சென்லோறன்ஸ் ஏரி’ வழியாக கனடாவுக்குள் நுளைய இரண்டு செவ்விந்தியர்களுடனும்,இரண்டு தமிழர்களுடனும்
ஊர்சோனும் வந்திருக்கின்றான். அவர்கள் வந்த படகு அந்த ஏரிக்குள்ளேமூழ்கியிருக்கிறது. அவர்கள் வந்தது ஒரு பனிகாலம் என்பதால்
ஏரிக்குள்ளேயே உறைந்து கிடந்தபின் ஒரு வெயில் காலத்தில் மிதந்து  கனடிய எல்லைக்கு வந்திருக்கின்றன அவர்களின் சடலங்கள்.

ஊர்சோனுக்கு நான்கொடுத்த மணிக்கூட்டை வைத்தும்,ஏனய சில பொருட்களை வைத்தும் அவனது சடலத்தை உறிதிப்படுத்திக் கொண்டோம்.
இன்னமும் உறைந்துபோகாத அந்த மணிக்கூடு ஒவ்வொரு முற்பகல் நான்கு மணிக்கும் அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறது.

‘பாப்பப்ப பாப்ப பாப்பப்ப பாப்ப’

                                          முடிந்தது.

மெலிஞ்சிமுத்தன்.

No comments:

அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...