பக்காமார்த்தாவின் அற்புதம்


 ‘வேளாங்கன்னி மாதாவி அற்புதங்கள்’ என்று ஊரில் ஒரு இரகசியக் கடிதம் வரும் அக்கடிதத்தை வாசிப்பவர் 7 கடிதங்கள் எழுதவேண்டும்.’எழுதியபலருக்கு அதிஸ்டலாபச் சீட்டெல்லாம் விழுந்திருக்கிறது என்றும்,உதாசீனப் படுத்தியவர்களுக்கு விபத்தெல்லாம் வந்திருக்கிறது என்றும் கடிதத்தில் எழுதியிருக்கும்.  ‘பக்காமார்த்தாவின் அற்புதங்கள்’ என்ற இக்கடிதம் அப்படியானதில்லை. வாசித்துப் பாருங்கள்.

                                                  பக்காமார்த்தாவின் அற்புதம்.


 
நான் இத்தாகூய் நகரத்திலிருந்து வந்திருக்கிறேன்.  என்னுடைய பெயர் ‘பக்காமார்த்தா’

‘ஆன்மாவின் ஆரோக்கியம்தான்  ஒரு மருத்துவனின் இறுதி இலட்சியம்’ நான் மருத்துவன். ஆன்மாக்களைத் தேடி வந்திருக்கிறேன்.

இத்தாகூய் நகரத்தில் ‘கிறீன் கவுஸ்’ என்ற மன நல மருத்துவமனையை நான் நடத்திவந்தேன். அதில் சமூகத்தின் எல்லாவிதமான மனநிலைகளையும் கொண்ட பைத்தியங்களையும் பூட்டி வைத்து வைத்தியம் பார்த்தேன்.

இப்போ இங்கே வந்திருக்கிறேன் இது இன்னொரு இத்தாகூய்.

குறைந்த பட்சமாய் ஒரு பொதுஉடன்பாட்டு நிலைக்கு வரமுடியாத சமூகமிது. புத்திசீவிகள்,அரசியல் அவதானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பதிப்பகத்தார், மதவாதிகள், வியாபாரிகள், உணர்ச்சிபொங்கிய பொதுமக்கள்...... என்று பலவகையான மனநோயாளிகள்./     எனது கிறீன்கவுசை  இங்கு கட்டப்போகிறேன்.

எல்லா வகையான புத்திசீவித் தனத்துள்ளும் தொற்றி தாக்கம் செலுத்திவரும் பயித்தியத்தியத்தை முதலில் நோயாளரே ஒப்புக்கொள்ள நான் அலுவல் செய்ய வேண்டும். அதற்காய் பயித்தியங்களை அதில் நான் அடைத்து வைக்கப்போகிறேன்.

நீங்கள் நம்பிவிடாதீர்கள் ‘புலி ஆதரவாளரையும்,புலி எதிர்ப்பாளரையும்’ நான் அங்கு ஒரே இடத்தில் அடைத்து வைக்க மாட்டேன்

மாக்சியவாதிகளுக்கோ, தலித்தியவாதிகளுக்கோ, பெண்ணியவாதிகளுக்கோ எந்த சலுகையும் வழங்க மாட்டேன்.

அப்பாவிப் பொதுமக்கள்  என்று எனது கிறீன்கவுசில் யாரும் இல்லை. முதலில் உங்கள் இரட்டைச் சிந்தனை வழிகளை நான் தகர்க்கப் போகிறேன். உங்கள் சிந்தனைப் பழுக்களை குறைக்க இன்றிலிருந்து வழிசமைக்கிறேன்.

எல்லோரும் ஒருமைப் படுகின்ற ஒரு தத்துவம் இருக்கிறது/ 

 எல்லோருமே குறைந்த பட்ச பைத்தியங்கள்’ என்பதுதான் அந்தத் தத்துவம்.

எனது கிறீன் கவுஸ் அந்தத் தத்துவத்தை துல்லியமாய் உங்களுக்கு விளக்கும்.

அது மட்டுமல்ல நம்மில் பலர் ஒழுக்கவாதிகளாய் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு ஒழுங்கை வைத்திருக்கிறோம். இந்த ஒழுங்குகள் புதுமைக்குத் தடைகளாய் இருப்பதை நான் உணர்கிறேன். இந்த ஒழுங்குகள் தோற்றுவிப்பன மட்டில் கடுப்பாய் இருக்கிறேன்.

என்னுடைய எதிரிகள் மீது இக்கணத்தில் நான் சலிப்புக் கொண்டிருக்கிறேன்

கோமாளிகள் மீதும் மிகுந்த சலிப்பே வருகிறது. முதலில் இந்த சமூகம் வித்தியாசமான எதிரிகளையும்,வித்தியாசமான கோமாளிகளையும் உருவாக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரேமாதிரி எதிரிகளுக்கு ஒரேமாதிரி பதில் சொல்லி,ஒரே மாதிரிக் கோமாழிகளுக்கு பல்லிழித்து வாழ்ந்து சோர்வுற்றது போதும்.

இத்தாகூய் நகரத்திலும் இப்படித்தான் செய்தேன்.  என்னை பலர் எதிர்த்தார்கள். முட்டாள் என்றார்கள்...... நான் அவர்களை பொருட்படுத்தவில்லை.

உங்களில் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எழுத்தை நீங்கள் ஆள்வதாகவோ,எழுத்து உங்களை ஆள்வதாகவோ நினைத்திருக்கிறீர்கள்.முதலில் ஆட்சி என்கின்ற சொல்லுக்குள் இருக்கும் அதிகாரக் குணம் உங்கள் மீது தொற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வாசகர்களை முட்டாள்கள் என்று எண்ணும் முட்டாள்தனம் உங்களிடம் இவ்வாறுதான் தொற்றிக்கொள்கிறது போலும்.

ஈழத்துக் கவிஞர்களின் எண்ணிக்கை  ‘இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தேழு ஆக இருக்கலாம். கணினி வைத்திருப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் கவிஞர்கள்.

ஆனால் விமர்சகர்களோ கவிஞர்களிலும் மூன்று மடங்கு அதிகம்.

தமிழர்களுக்கான எனது கிறீன்கவுஸ் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டதாக இருக்கப் போகிறது.

எனது மருத்துவ முறைக்குள் பெரும்பாலும் அகப்படாமல் தப்பித்துக் கொள்பவர்கள் கவிஞர்கள்தான்.  கவிதை பல திருடர்கள் புகுந்திருக்கும் பல அறைகளைக் கொண்டதாக இருக்கிறது. 

அவர்கள் சொற்களை நாய்களைப்போல தங்கள் வாசல்களில் அமர்த்தி வைக்கிறார்கள். நான் முதலில் நாய்களின் மீதே எனது பார்வையைச் செலுத்துகின்றேன்.

நாய்கள்/ பொல்லாத நாய்கள்............

கவிதையை பலர் இறங்கு வரிசையில் எழுதுகிறார்கள், பரிசோதனை முயற்சி என்ற பெயரில் கட்டுரைபோல எழுதுகின்றார்கள். கண்ட கண்ட இடத்திலெல்லாம் பிரித்து அடுக்குகிறார்கள்.

புகலிடக் கவிதை, போர்க்கவிதை, நவீன கவிதை, என்றெல்லாம் சொல்கிறார்கள்.

 செப்பனிட வேண்டியது முதலில் கவிதையை அல்ல. கவிதை மனத்தைத்தான். இதனை நான் எந்த ஒழுங்கிற்குள்ளும் நின்று சொல்லவில்லை.

ஒரு வைத்தியனாய் சொல்கிறேன்...... வயித்தியமும் ஒருவகை ஒழுங்குதானே என்று யாரும் வாதிட வரவேண்டாம்.  கவிமனமும், பயித்தியமும் சிறு விழிம்பில்தான் வித்தியாசப் படுகின்றன.   நான் பயிதியங்களையே தேடுகின்றேன்.

எந்தக் கவிதை சிறந்தது, எந்தக்கவிதை குறைந்தது என்று சொல்வதற்காக அல்ல. அவ்வாறு சொல்ல நான் யார்?

 ஒரு கவிதையை இன்னொரு கவிதையோடு ஒப்பிட முடியாது.

விமர்சிப்பவர் எங்கு நின்று விமர்சிக்கிறார் என்பதை விமர்சிக்கவும் இன்னொரு விமர்சகர் தேவையாய் இருக்கிறது.

இதனால்தான் விமர்சனப் பயித்தியங்களுக்காக எனது கிறீன்கவுசில் பெரிய இடமொன்றை ஒதுக்கி வைத்துள்ளேன்.

இலக்கியத்தையும்,அரசியலையும் பேசிவரும் உங்களில் பலர் வியாபாரிகளாகவும் இருக்கிறீர்கள்.வியாபாரியின்,புத்தியும் இலக்கியஅகத்தின் தன்மையும் தூரமானவை நீங்கள் நவீன இலக்கியவாதி இப்படித்தான் இருக்க முடியும் என்று நியாயம் சொல்கிறீர்கள். நீங்கள் எடுத்த பட்டங்களைப் பறை சாற்றவும், உங்கள் விசிற்றிங் காட்டுகளை பரப்பவும் இலக்கியக் கூட்டங்களை பயன் படுத்துகிறீர்கள். வெதுவெதுப்பான இலக்கியச் சூழல்தான் பரிதாபமான நிலைக்கு மாறிவரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கனதியான அறிகுறி.

ஓ இலக்கியவாதிகளே வறுமைப்படுங்கள்/ என்று நான் சொல்லவில்லை. இலக்கிய வியாதிகளாய் இல்லாதிருங்கள் என்றே சொல்கிறேன்.

மேலதிகமாய்  என்னோடு உரையாட விரும்புபவர்கள் கிறீன்கவுசுக்கு வாருங்கள் நாம் சாவகாசமாய் உரையாடுவோம்

நன்றி ‘பக்காமார்த்தா’

 

இந்த ஆக்கம் ‘ மச்சடோ டி ஆசிஸ்’ என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘மனநல மருத்துவர்’ என்ற நாவலை வாசித்தபோது எனக்குள் உருவானது – நன்றி ; மெலிஞ்சிமுத்தன்.






Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)