ஒழுக்கக் கோர்வை.


காலையில் வேலைக்கு கூட்டிச் செல்வதற்காக தியாகு வாகனம் கொண்டுவந்திருந்தான். நான் வாகனத்தில் ஏறும்போது அவதானித்தேன் எங்கள் வீதியில் எங்கள் வீட்டிலிருந்து நான்காவதாய் தள்ளியிருந்த அந்த வீட்டின் முன்புறம் குந்தியிருந்து அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். நேற்று வேலை முடிந்து வரும்போதும் அவள் அங்கேதான் இருந்தாள்,இரவு அவளுடைய வீட்டிற்கு காவற்துறையினரின் வாகனம் வந்துபோனதையும் அவதானித்தேன்.
அவளைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாகவே இருந்தது, ஆனால்/ அவளுடைய கணவன் மிகவும் மோசமானவன்,யாழ்ப்பாணத்தை அப்படியே பிரட்டிக்கொண்டுவந்து கனடாவில் வாழ்பவன். எப்போது பார்த்தாலும் வெள்ளை,சிவப்பு இனத்தினரைத்தவிர மஞ்சள்,கறுப்பு இனத்தினரோடு கொஞ்சம் கடுகடுப்பாகவே நடந்துகொள்பவன். அதிலும் தமிழர்கள் யாரேனும் அவன் வீட்டுக்குப் போனால் ஊரையும் குறிச்சியையும் விசாரிக்கத் தொடங்கிவிடுவான். மாவீரர் தினம் ஒன்றிற்கு காசு சேர்க்கச் சென்றபோது என்னுடனும் அப்படித்தான் நடந்துகொண்டான். எனக்கு அவன்மீது கொஞ்சமும் மரியாதை இல்லை. அவனுடைய ஒருவகை கோணல் பார்வையை பார்க்கும்போதே முகத்தினில் குத்தவேண்டும்போல இருக்கும். ஆனாலும் அவனுடைய மனைவியின் கண்ணீர் என்னை வருத்தியது.
நானும் தியாகுவும் பல வருடங்களாய் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறோம்,என் வாகனத்தை என் துணைவி வேலைக்கு கொண்டுசெல்வதால் சில நாட்களாய் தியாகுவுடன்தான் போய்வருகிறேன்.எங்கள் பயணவேளைகளில் நாங்கள் பலவற்றைப் பேசிக்கொள்வோம்,பெரும்பாலும் எங்கள் பிள்ளைகளைப்பற்றியே பேசுவோம்,
பல்கலாச்சாரச் சமூகத்தில் ‘நீங்கள் உலகத்தின் பிள்ளைகள்’ என்று அவர்களை அப்படியே விட்டுவிட முடிவதில்லை. அவர்களின் பாடசாலை நேரம் தவிர்ந்து அவர்களுக்கு ஈடுபாடு வரத்தக்க பக்கமொன்றில் அவர்களைச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒருவகையில் பெரும்பாலான குடும்பங்களில் இவ்விடயம் ஒருவகை ‘பராக்குக் காட்டலாகவே’ அமைந்துவிடுகிறது.
ஆனால் என் மகனை ‘எந்தவகையிலும் நான் திட்டமிட்டு மேற்கூறியபடி வளர்க்க முற்படவில்லை’ அவனுக்குள் இயல்பாகவே ஒரு விடயம் உருவாகிக் கொண்டது. அதுதான் “தன் மூதாதேயர்களின் நிலத்தின் மீதான பற்று”. அதற்கு என்னை அவன் குருவாக உணர்ந்துகொண்டது காரணமாக இருக்கலாம்.
கனடாவில் நடந்த ‘ஈழத்தமிழ் உரிமைக்கான’ அனேக கூட்டங்களில் அவன் ஆர்வத்தோடு கலந்துகொண்டான். அவனிடம் ஒருவகை ஒழுக்கத்தை நான் உணர்ந்தேன். அந்த ஒழுக்கத்தின் பின்னால் ஒரு ‘தமிழ் மனோநிலையின் தாக்கம் இருப்பதையும் நான் அறியாமலில்லை.
நான் நேரில் அனுபவித்த பல விடயங்களை அவன் செய்திகளாய் அறிந்து வைத்திருந்தான் ‘அனுபவத்திற்கும்,செய்திக்குமான வித்தியாசம் ஒன்று’ என்னிடமும் அவனிடமும் இருப்பதையும் நான் உணராமல் இல்லை.
சின்னவயதில் தாயுடன் கோயிலுக்குச் சென்றுவருவான். தாய்க்கு அவனை மத ஈடுபாடுள்ளவனாய் ஆக்கிவிடவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அவன் ஓரளவு வளரும்போது கடவுள் பற்றிய கேள்விகளைக் கேட்பான்...இப்போதெல்லாம் கோயில் பக்கமே போவதில்லை. என் மனைவியோ என்னால்தான் அவன் கடவுள் நம்பிக்கையை இழந்தான் என்று குறை கூறுகிறாள்.
எங்கள் வீடுபோலத்தான் தியாகுவீட்டிலும் கதைகள் இருக்கின்றன. புலம்பெயர்வு வாழ்க்கையில் பெரும்பாலோர் கண்ட மிச்சம் பிள்ளைகள்தானே.
தியாகுவும் தன் பிள்ளைகள் பற்றியே அதிகநேரம் பேசுவான். ஆனாலும் இடையிடை  கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவான்,பாதுகாப்புப் பட்டியை மறந்துபோவான்,ஒருகையால் சாப்பிட்டபடி மறுகையால் ‘சேறிங்கைக்’ கையாள்வான். மிகவும் உதாசீனமான அவனுடைய சாரதித்தன்மை எனக்கு மிகவும் வெறுப்பானது, வேண்டுமென்றே வீதி ஒழுங்குகளை மீறுவதில் ஆர்வம் கொண்டவனைப் போலவே அவனை நான் பார்ப்பேன்.
இன்று காலை எனக்கிருந்த மனநிலையை அவனுடன் பகிர்ந்துகொள்வதா,இல்லையா என்று எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒழுக்கம் தொடர்பான முரண்கள் எனக்கும் அவனுக்குமிடையில் இருந்தாலும் தியாகு என்னுடன் நல்ல வகையில்தான் பளகுகிறான் அவனுடன் இந்த விடயம் பற்றி பேசிவிடலாம் ஆனால் அவன் வார்த்தைகளை நிதானமாகப் பேசுபவன் இல்லையே. ‘எந்த விசயத்தையேனும் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வதில் மன ஆர்வம் கொண்டவன் அவன் என்பதால் அமைதியாகவே வந்தேன்.
                             02
எரிபொருநிலையம் ஒன்றில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் கட்டுவதற்காக உள்ளே சென்ற தியாகு வாகனத்துக்கு வரும்போது ‘உன்னெட்ட காசிருந்தா ஒரு நூறு டொல்ர் தா‘ என்றான்  நான் இல்லையென்று சொன்னேன். அப்போது அவனுக்குப் பின்னால் உடல் திடகாத்திரமான குத்துச்சண்டை வீரன்போல ஒரு சிவலையன் வந்தான். வந்தவன் ‘என்ன எடுக்கிறாயா?,வேண்டுமா?’ என்று ஆங்கிலத்தில் தியாகுவிடம் கேட்டான். தியாகு அவன் அருகில்போய் அவனுடன் பேரம் பேசி 75டொலர்களுக்கு ஒரு மொத்தமான சங்கிலியையும்,25 டொலர்களுக்கு மோதிரமொன்றையும் வாங்கி வந்து வாகனத்தினுள் வைத்துவிட்டு வங்கி இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்றான். அந்தவேளை தன் சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டபடி என் அருகில்வந்த அந்த மனிதன் ‘உனக்கு வேணுமெண்டால் என்னிடம் இன்னொரு சங்கிலி இருக்கிறது எனக்கு 50 டொலர்கள் கொடுத்தால் போதும்’ என்றான். ‘என்னிடம் பணம் இல்லை வேண்டாம்’ என்றேன்.
தியாகு வாகனத்திலேறி அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருந்தோம். எனக்கு தியாகுமீது மிகுந்த வெறுப்பு வந்தது. ‘எந்த மனிதரைக் கொன்று இந்த நகையைத் திருடினானோ,இவற்றில் யாரின் கண்ணீரும்,இரத்தமும் தோய்ந்திருக்கிறதோ இந்தப் பழியை நீயேன் வாங்கினாய்?’என்று அவனிடம் கேட்டேன். இத நீ ஏன் அப்படி பார்க்கிறாய் நாம வாங்க இல்லையென்றால் வேறு யாருக்கோ அவன் விற்று காசாக்கியிருப்பான்’ என்றான். பின்னர் நாங்கள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. நான் ‘அறம்’ என்றால் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
இன்று பின்னேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் எங்கள் வீட்டின் நாலாவது வீட்டில் சனமாக இருந்தது.அதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த நெருடலாக இருந்தது. தமிழ் உணவகம் ஒன்றில் வாங்கிய கொத்துரொட்டிப் பொதியுடன் வீட்டுக்குள் போனேன். வீட்டுக்குள் யாரும் இல்லை என் துணைவியையும்,மகனையும்,மகளையும்  போன வருடம் வாங்கிய என்னுடைய மற்றவீட்டுக்கு காலையிலேயே அனுப்பிவைத்துவிட்டேன்.
கொத்துரொட்டிப் பொதியுடன் நிலவறைக்குள் போனேன் கதிரையில் இருத்தி கைகளும்,காலும் கட்டப்பட்டிருந்த அவனுடைய வாய்ச்சீலையை எடுத்துவிட்டேன். அவனுடைய வாயிலிருந்துவந்த கெட்டவார்த்தைகளுக்கு அளவே இல்லை, அவன் என் மகளை,மனைவியை,எங்கள் சாதியை எல்லாவற்றையும் இழுத்து மிக வக்கிரமான வார்த்தைகளால் திட்டினான்.
அவனை மிகவும் நேசமாய் தடவி, ‘எனக்கு இருக்கிறது ஒரேயொரு ஆம்பிளப் புள்ள அவன் ஏதோ தெரியாமல் உன்னக்கொண்டுவந்து கட்டிவச்சிற்றான் அவங்களோட நீ கதச்சதும்,நடந்துகொண்டதும் பிழை தானேதம்பி,நீ இப்படியெல்லாம் கதைச்சால் யாராக இருந்தாலும் கோபம் வரும்தானே. நான் உன்ன அவிழ்த்து விடுகிறன் வேறெதையாவது சொல்லி என்ர பிள்ளைய காப்பாற்று ராசா உனக்கு புண்ணியமாகப் போகும்’ என்று சொன்னேன். ஆனால் அவன் கேட்பதாய் இல்லை எங்கள் கிராமத்தில் எங்கள் மூதாதேயர்களை அவர்களின் மூதாதேயர்கள் எப்படியெல்லாம் அடக்கி,ஒடுக்கினார்களோ அவற்றையெல்லாம் அறிந்துவைத்திருப்பவனாய் பேசிக்கொண்டே இருக்கிறான். இன்னமும் புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் இந்த அரும்புகளுக்குள்கூட இவ்வாறான விசங்களை விதைக்கிறார்களே என்று கலங்கியபடி அமர்ந்திருந்தே.
அதுமட்டுமல்ல என்னுடைய மகனை எவ்வளவு நிதானமாக வளர்த்துவந்தேன்,அவனுக்குள் எப்படி இன்னொருவனை கட்டிவைத்து சித்திரவதை செய்யக்கூடிய மனநிலை வந்தது?......எங்கு தவறு நடக்கிறது? நாம் ஒழுக்கம் என்று கருதுகின்ற கோர்வைக்குள் எங்கெங்கோவெல்லாம் தவறுகள் மறைந்துகிடப்பதாகவே உணர்ந்தேன்.
நான் அவனுடைய வாயை மூடிவிட்டு சிறிதுநேரம் யோசித்தேன், பின்னர் காவல்துறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு காணாமற்போனவன் என் வீட்டில் இருக்கும் செய்தியை தெரிவித்தேன்.காவல்துறை என் மகனை பிடித்து செல்லட்டும்,ஆனாலும் இந்தச் சமூகத்தை மாற்றி உருவாக்க இவ்வாறான கைதுகள் எந்த அளவுக்கு உதவப்போகின்றன?
இப்போதுதான் தியாகு தொலைபேசியில் அழைத்தான். அந்தச் சிவலையனிடம் 100 டொலர்களுக்கு வாங்கிய நகைகளை மாற்றிச்செய்ய நகைக்கடைக்கு கொண்டுசென்றபோது அவர்கள் உரசிப்பார்த்ததில் அந்த நகைகள் பவுண் இல்லை என்று தெரியவந்ததாம்.
                                                    -மெலிஞ்சிமுத்தன்.




Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)