கதை வீடு

பிரதிக்குள் குடிபுகல் நான் வார்த்தைகளால் கட்டப்பட்ட கதைவீடு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பெயர் சனாதனன். இந்தக் கதைவீட்டின் கீழ்த்தட்டில் மூன்று அறைகள். அவற்றில் ஒன்றில் நான்,மற்றதில் கவிஞர் பைரவன், மற்றதில் என்னுடைய தம்பி தங்கியிருக்கிறோம். இது ஒரு வாடகை வீடுதான். எங்கள் அறைகளுக்கு தனித்தனியே குழியலறைகள் இருக்கின்றன. சமையலறை மட்டும் பொது.அனாலும் நாங்கள் மூவரும் வேறுவேறு நேரத்தில் வேலைக்குச் செல்வதால் ஒரே நேரத்தில் சமையலறையில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பமில்லை. எங்கள் மூவரின் வருமானத்தில் ஒவ்வொரு பங்கையும் இந்தக் கதைவீட்டின் உரிமையாளராகிய மிஸ்டர் எழுத்தாளருக்கு தவறாமல் கொடுத்துவருகிறோம். எழுத்தாளரும் நிரந்தரமாக வீட்டில் குந்தமுடியாதவாறு இந்தப் பொருளாதார உலகத்துள் உழல்பவர்தான். நீங்கள் வாருங்கள் விறாந்தைக்குள் வந்ததும் முன்னால் இருப்பது என்னுடைய அறை. இந்த அறைக்கு நீல வர்ணம் பூசியிருக்கிறேன். என் கடலின் மீதான நேசத்தில் இவ்வாறு செய்தேன்.வீட்டுக்கு வருபவர்கள் உண்பதற்கும்,குடிப்பதற்கும் கதைகளையே கொடுப்பது எங்கள் வழக்கம் நீங்களும் கொஞ்சம் ‘கதை’சாப்பிடுங்கள். ...