கதை வீடு



பிரதிக்குள் குடிபுகல்
 நான் வார்த்தைகளால் கட்டப்பட்ட கதைவீடு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பெயர் சனாதனன். இந்தக் கதைவீட்டின் கீழ்த்தட்டில் மூன்று அறைகள். அவற்றில் ஒன்றில் நான்,மற்றதில் கவிஞர் பைரவன், மற்றதில் என்னுடைய தம்பி தங்கியிருக்கிறோம். இது ஒரு வாடகை வீடுதான்.

எங்கள் அறைகளுக்கு தனித்தனியே குழியலறைகள் இருக்கின்றன. சமையலறை மட்டும் பொது.அனாலும் நாங்கள் மூவரும் வேறுவேறு நேரத்தில் வேலைக்குச் செல்வதால் ஒரே நேரத்தில் சமையலறையில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பமில்லை.
எங்கள் மூவரின் வருமானத்தில் ஒவ்வொரு பங்கையும் இந்தக் கதைவீட்டின் உரிமையாளராகிய மிஸ்டர் எழுத்தாளருக்கு தவறாமல் கொடுத்துவருகிறோம். எழுத்தாளரும் நிரந்தரமாக வீட்டில் குந்தமுடியாதவாறு இந்தப் பொருளாதார உலகத்துள் உழல்பவர்தான்.

நீங்கள் வாருங்கள் விறாந்தைக்குள் வந்ததும் முன்னால் இருப்பது என்னுடைய அறை. இந்த அறைக்கு நீல வர்ணம் பூசியிருக்கிறேன். என் கடலின் மீதான நேசத்தில் இவ்வாறு செய்தேன்.வீட்டுக்கு வருபவர்கள் உண்பதற்கும்,குடிப்பதற்கும் கதைகளையே கொடுப்பது எங்கள் வழக்கம் நீங்களும் கொஞ்சம் ‘கதை’சாப்பிடுங்கள்.

அகன்று விரிந்த கடல், கரைகள் தூரம், ஒரு சிறிய கட்டுமரம் அதில் மேற்சட்டையை இடுப்பில் கட்டியபடி ஒரு சிறுவன் அது நான். அப்போதைய நான். இந்தக் காட்சியை முதலில் உங்கள் கற்பனைக் கண்ணில் கொண்டுவாருங்கள்.......................................,

எப்போதென்றாலும் ஒரு புயல் வரலாம் இந்தப் பெருங்கடலின் திமிங்கிலமொன்று மேலெழுந்து தற்செயலாய் வாயை ஆவெனும்போது நான் விழுங்கப்படலாம். என்னிடம் இருந்தது ஒரு மரக்கோலும், தற்செயல்களை கடந்துபோக வேண்டுமென்ற மன நிலையும்தான். அது மன உறுதியென்று சொல்லமாட்டேன்.
முன்னரெல்லாம் என்னோடு அப்பா இருந்தார். அப்பா எனக்கு ஒரு உறையைப் போலத்தான் இருந்தார், புயல்வந்தாலும்,திமிங்கிலம் வந்தாலும் அப்பாவைக் கடந்தே என்னிடம் வரமுடியும் என்பதுபோன்ற எண்ணமொன்று இயல்பாகவே என்னிடத்தில் வளர்ந்திருந்தது. அப்பா கடலை நம்பிக்கையோடு பார்ப்பார்,அவரே கடலை நேசிக்கவும் கற்றுத்தந்தார். நானும்,அப்பாவுமாய் கடலை அள்ளி எறிந்து விளையாடுவோம். ‘ஒரு எற்றல் நீர் எத்தனை சுகம்” கடல் காலம் முழுதும் எற்றிக்கொண்டே இருக்கிறது. சுகம்,சுகம்,சுகம்.

எனது அறையின் அருகில் இருப்பது பைரவனின் அறை.பைரவனை எனக்கு 14 வருடங்களுக்கு முன்னரே தெரியும்.
14 வருடங்களின் முன்னர் ஒரு இரவில் இரண்டு மோட்டார் பூட்டிய படகில் எங்கள் அரிப்புத்துறைக் கரையில் வந்திறங்கிய விடுதலைப்புலிகளில் ‘பைரவனும்’ ஒருவர்.  அப்போ அவருக்கு வேறு பெயர் இருந்தது. மன்னார்த் தீவில் இருந்த இராணுவத்தை உளவுபார்க்கவும்,அரசாங்கத்தின் சலுகைகளால் விடுதலைப் போராட்ட எண்ணங்களிலிருந்து மக்கள் விலகாமல் இருக்கவும் புலிகள் அரிப்புத்துறைப் பகுதிக்கு வந்துபோவது அவசியமாக இருந்தது. ஆரம்பத்தில் இரவுகளில் வந்துபோனவர்கள் பின் நாட்களில் பகல்களிலும் தங்கினார்கள். மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டிருந்ததால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இராணுவத்தினர் அரிப்புத்துறைக்கு வரமாட்டார்கள் என்று புலி இயக்கத்தினர் நம்பினார்கள்.
ஆனால் ஒரு பகலில் திடீரென்று இராணுவ டாங்கிகள் அரிப்புத்துறைக்குள் நுழைந்தபோது அதனை எதிர்பாராத புலிப்போராளிகள் கடலை நோக்கி ஓடவேண்டியிருந்தது அவ்வாறு ஓடும்போதுதான் எங்கள் வீதியில் பைரவனை ராணுவத்தினர் கண்டார்கள். எங்கள் சந்தியால் ஓடிவந்த பைரவனை ராணுவத்தினர் சுட்டபோது அந்தக் குண்டுதான்  சைக்கிளில் தண்ணீர்கட்டிவந்த எங்கள் அப்பாவின் மார்பில் ஏறித் துளைத்தது.

எங்கள் கண்முன் அப்பா சுருண்டுவிழுவதைக் கண்டு எங்கள் முற்றத்தில் நின்று ஓடிய என்னையும் தம்பியையும் அப்பாவுக்கு அருகில் போகவிடாமல் ராணுவத்தினர் அடித்தார்கள். எங்கள் காணியால் ஓடிய பைரவனை சுற்றி மறைத்தபடி எங்கள் பெண்கள் கத்திக் குளறியபடியிருக்க. காணியின் வெவ்வேறு மூலைகளிலெல்லாம் அவனைத் தேடித்திரிந்த ராணுவத்தினருக்கு. ‘இந்தா கிடக்கிறான் இவனாலதான் எங்கிட அப்பா செத்தவர் ‘ என்று என்னுடைய தம்பிதான் பைரவனைக் காட்டிக் கொடுத்தான்.
எங்கள் செங்கோல்மாதாகோவிலுக்குள் ஊர்ச்சனமெல்லாம் கூடியிருக்க இரண்டு ஓட்டைகள் போட்ட வெள்ளைச் சறத்தால் முகம் மூடப்பட்ட பைரவன் அன்று பலரைக் காட்டிக்கொடுத்தான்.
அதன் பின் வந்த நாட்களில் அப்பா இல்லாத வாழ்க்கையை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருந்த கலகலப்பு, எங்கள் எதிர்காலம்பற்றிய கற்பனைகள் எல்லாமே தொலைந்துபோயின. ராணுவத்தினர் பிடித்துப்போன ஆண்கள் விடுதலை செய்யப்பட்டு வீடுதிரும்பினார்கள் அப்பாமட்டும் திரும்பமுடியாத இடத்திற்குச் சென்றிருந்தார். அப்பா இறந்த நாளில் அவர் தண்ணீர் நிரப்பிக்கொண்டுவந்த ‘பிளாஸ்ரிக் கான்’ உடைந்த நிலையில் எங்கள் வேலியோரம் கிடந்து அந்த சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

நான் மூத்த பிள்ளையாக இருந்ததால் குடும்பப் பொறுப்பை நானே எடுக்கவேண்டியிருந்தது.என்னாலும்,தம்பியாலும் படிக்கமுடியவில்லை ஆனாலும் தங்கைகளை நன்றாக வளர்க்கவேண்டுமென்று நாங்கள் கடலில் இறங்கி உழைத்தோம். கனடாவில் இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் எங்கள் குடும்பத்தின் நிலையைப்பார்த்து எனக்கு கலியாணம் பேசி இங்கு வரவைத்தார். 

கனடாவுக்கு வந்து கடுமையாக உழைத்து தங்கைகளுக்கு கலியாணமும் செய்துவைத்து ,தம்பியையும் இங்கு கூப்பிட்டுவிட்டேன். ஆண்டுகள் பலவாகிப் போனபின்னர் இங்கு நடந்ததொரு அரசியற்கூட்டத்தில்தான் பைரவனைச் சந்திக்க நேர்ந்தது.
அரிப்புத்துறையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட பைரவன் சில ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு வவுனியாவில் மனப்பிறழ்வோடு அலைவதாய் கேள்விப்பட்டேன்.அதன் பின் பல ஆண்டுகள் கடந்து கனடாவில் சந்தித்தபோது மிகவும் சாதாரணமான நிலையில் அவர் இருந்ததை அவதானித்தேன்.
பின் வந்த நாட்களில் பைரவனோடு கதைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பைரவன் என்னுடன் பேசும்போது அவருக்குள் குற்ற உணர்வு இருப்பதை அவதானித்தேன். அதனைப் போக்குவதற்கு நான் விரும்பினேன்,அது என்னால் மட்டுமே ஆகக்கூடிய செயலாகவும் இருந்தது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களில் அரைவாசிப்பேராவது குற்ற உணர்வு என்ற இந்த பெருவியாதியோடே அலைகிறார்கள். குற்ற உணர்விலிருந்து விடுதலையாகிய சமூகம் புதிய சிந்தனைகளை நோக்கி முன்னேறவேண்டுமென்றே கருதினேன், அதற்கான தனிமனித முயல்வாகவே பைரவனுக்கும் எனக்குமான உறவு வளர்ந்து வந்தது.அவ்வாறே நானிருக்கும் இந்த வீட்டில் பைரவனும் குடியேறும் சூழல் ஏற்பட்டது.

பைரவன் சில மாதங்கள் இந்த அறையில் இருந்தார். பின்பு வந்த ஒரு நாளில்,யாருமற்ற நேரத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தார். அவருடைய மரணம் என்னை மிகவும் பாதித்திருந்தது. ஆரம்பத்தில் பைரவனை இந்த வீட்டில் கொண்டுவந்து இருத்தியது என்னுடைய தம்பிக்கு பிடிக்கவில்லைதான். அவன் பைரவனோடு முகம் கொடுத்து பேசியதில்லை.ஆனாலும் பைரவனின் மரணத்தால் அவனும் பாதிக்கப்பட்டான். ‘உயிரின் பெறுமதியை உணராமலே பிடிவாதங்களால் பின்னப்பட்டிருக்கிறோமே’ என்று அவன் அடிக்கடி வேதனைப்பட்டான். குற்ற உணர்ச்சி இடம் மாற்றப்படுவதை அப்போது நான் அவதானித்தேன்.

தம்பியின் அறை
தம்பியின் அறைக்குள் அப்பாவின் படம் பெருப்பித்து மாட்டப்பட்டிருக்கிறது. தன் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துக்கொள்ள அவன் இன்னொரு வீட்டிற்கோ,அல்லது ‘வெளிச்சவீட்டிற்கோ’ இடம் மாறலாம்.
பைரவனின் கொலை தொடர்பான விசாரணைகளால் என்னுடையதும்,தம்பியுடையதும் வாழ்க்கை மிகவும் சீர்குலைந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானோம். பொலிசாரின் தீவிரமான தேடலில் கொலையாளி கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்தான் எங்கள் தலைகள் தப்பியுள்ளன.
இந்தக் கதை வீட்டை பொலிசார் வந்து உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது ‘கொலையாளி மிஸ்டர் எழுத்தாளர்’ என்று. ஏனெனில் இந்தக் கதைவீடு பிணங்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது.
இது கதைவீடுகளை உடைத்துப் பார்க்கவேண்டிய காலம். “புனைபுத்தி” எவரையும் கொலைசெய்யக்கூடியது என்பதை நான் விளக்கவேண்டுமா என்ன?

மெலிஞ்சிமுத்தன்.

('மகுடம்' இதழ் -06ல் பிரசுரமானது) 


Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)