சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம்.
அப்போது நான் நடந்துகொண்டிருந்தேன். அன்றிரவு நான் கனவில்கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள் அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும்அங்குமிங்குமாய் பயணித்துக் கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்தபடியே நடந்துகொண்டிருந்தேன். அநேக முகங்களில் நேரம் குறித்த பயம் இருந்தது. சில முகங்களோ வீதியோரத்து இருக்கைகளில் தொங்கிக் கிடந்தன. ஆயினும் வீதிகளில் நடந்து செல்லும் மனிதர்கள் குறைவுதான். உடல்முழுதும் காற்றை வாங்கிக் கொண்டு. நிலத்தை ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது. அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகின்றன. வாகனத்துக்குள்ளேயே வெம்மையும்,குழிருமான காற்று, வானொலி, படக்காட்சி, தொலைபேசியென்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள். வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம்.இவற்றையெல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஓரத்தால் விசுக்கு,விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தது நறுமணம். பூங்கா ஓரத்து...