Posts

Showing posts from June, 2008

தற்செயலாய் ஏறிய பேருந்து

அன்று மரணத்தை மிக அருகில் சந்தித்தேன். அது, பாதை கடந்துகொண்டிருந்த என்னைத் தேடி, ஒரு வேகமான வாகனத்தில் வந்தது. என்னைச் சுற்றியோர் காற்றுச் சுழியை உண்டுபண்ணிவிட்டு என் முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல நின்று சிரித்தது. அது, தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தது. அதை ஏற்றிவந்த வாகனம் என்னைத் தாண்டிச் சென்ற பின்னும், அது என்னோடு ஒரு நெடுநாள் நண்பனைப்போல உரையாடிக்கொண்டிருந்தது. தேய்ந்து போகாதவைகளும், கட்டிபட்டுப் போகாதவைகளுமான புதிய வார்த்தைகளைத் தேடி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.... அந்த நாட்களில் இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். உலக வரலாற்று இயங்கியல் நிலைகளை ஆராய்ந்த மிகப் பிந்திய கோட்பாட்டு வடிவங்களின் ‘புதுயுகத்தை’ எதிர்கொள்ள முடியாமையின் விளைவினால் உருவாகிப் பரிணமித்து நிற்கும் பிரச்சினைக் கூறுகளைக் காவிநிற்கும் கூட்டங்களுக்குள் நான் எந்தக் கூட்டம் என்கின்ற வினாக்களிலிருந்து விடுபட்டு எனக்கானதோர் தத்துவப் பின்புலத்தை நான் கண்டடைய வேண்டிய தேவையொன்று இருந்தது. எனது தப்பியோடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போ