Posts

Showing posts from December, 2009
இன்னுமென்னையே உருக்கி அன்பே உனை நான் இசைப்பேன் சொல்லிழந்த பாழ் வெளியில் அல்லலுற்ற போதினிலும்... (இன்னுமென்னை.................) எதனடியில் என் மனது துயரத்தை வாங்கியது. எதன் நுனியில் என்னிருப்பு இப்படியே நெழிகிறது அன்பென்பது வளரும் வடிவம் கட்டறுந்து எனில் வளரும் சிற்றெறும்பு தேனில் விழுந்து தத்தளித்து நீந்திவரும் (இன்னுமென்னை.............) கடந்து செல்லும் மனதினுள்ளே புள்ளி வைக்கும் குணமெதற்கோ வைத்தபுள்ளி கடந்து போனால் வருந்துமிந்த மனம் எதற்கோ உள் வெளியை உற்றுப் பார்த்தேன் புள்ளியல்ல பூரணி நீ எல்லையற்று எனில் பரந்தாய் பிள்ளையென ஆனேனடி (இன்னுமென்னை.............) ...........................................................
ஒற்றைச் சிறகால் ஒருபறவை என்னுள் பறக்கிறதே கொத்தும் அலகால் அது எந்தன் குடலைத் தின்கிறதே என்றோ நான் விழுங்கிய முட்டை இன்றென்னுள் பொரித்தது இன்றதுவோ என்னையும் தூக்கி வானத்தில் பறக்குது............ (ஒற்றைச்..................) கனவுலகம் சென்று வந்தேன் கனவுக்குள்ளே என்னைக் கண்டேன் என்றும் நான் கண்டிராத முகமாக இருக்கக் கண்டேன் என்முகமே என்முகமே இத்தனை நாள் எங்கிருந்தாய்? என்றே நான் முனகிக் கொண்டேன் இப்போதான் திரும்பி வந்தேன். (ஒற்றைச்....................) உள்ளியங்கும் ஓர் உலகம் ஊமைக் காற்றாய் நானிருப்பேன் சொல்லைவிட வல்லதொன்று அவ்வுலகை ஆட்டிவைக்கும் உள்ளொளியில் கண்டதெல்லாம் உன்னுடனே சொல்லி வைத்தேன் சொல்லைவிட ஏதோ ஒன்றால் சொல்லிவிட முயலுகின்றேன்............. (ஒற்றைச்..................)