Posts

Showing posts from August, 2009

நான் பற்றிய குறிப்புகள்

நான் ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு நிமிடமும் மறந்துகொண்டும் இருக்கிறேன் இந்த நிமிடத்தின் நினைப்புத்தான் நான். மறதியின் நான் பிரேதம். செத்துப்போன என்னை சில வேளைகளில் உயிர்ப்பிக்கிறேன் நினைப்பின் அழகே வாழ்க்கையின் அழகு. நான் வாழ்க்கையைச் சேமிக்கிறேன் மரணத்தைத் தாண்டிய ‘நினைப்பில்’ அதனை இருத்தி வைக்கிறேன் நினைப்பு எனக்கு மட்டும் சொந்தமானதல்ல…………………………… நினைவில் காலூன்றி எதிர்பார்ப்புகள் எனக்குளிருந்து எள முயல்கின்றன எதிர்பார்ப்புகளின் சுமை அதிகரிக்கையில் சேமித்து வைத்த வாழ்க்கை கொஞ்சம் குறைகிறது. எனக்குள் அரூபங்கள் இருக்கின்றன அவற்றுக்குள் மறைந்து கிடக்கிறது ‘மாவாழ்க்கையின் வரைபடம்’ நான் அந்த வரைபடத்தைத் தேடுகிறேன். எழுத்துக்களின் வாலில்தான் இப்போது நிற்கிறேன் எழுத்துக்கழுக்கு வரைபடம் தெரியும்.

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)

[நாள்- ஒன்று] ஒரு சொட்டுப் பூலோகம் தன்காலடியிற் கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தான் மாணங்கி. படர்ந்துகிடந்த மேகங்களைக்கிழித்துக்கொண்டு எந்தப்பேரொளியும் பூலோகத்தைத் தொடுவதாய் தெரியவில்லையே என முணுமுணுத்தான். ‘நொருங்குண்ட இந்த இரவுகளைக் கடக்க நீர் தந்த குப்பிவிளக்குகள் போதவில்லையே என் பரமபிதாவே” என்று அவன் கண்ணீர் வடித்தான். உளைவுமிக்க இரவுகளை அவன் கடக்கமுடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்துபோயின. ‘எண்ணெய்ப்பீப்பாய்களை உருட்டிக்கொண்டு பகல் ஒரு வேட்டைநாயைப்போல வருகிறது எழுந்திரு மாணங்கி, எழுந்திரு” என்று உலுப்பியெழுப்பினான் கிழவன். படுக்கையை விட்டெழுந்து சோம்பல்முறித்து கிளிநொச்சியிலிருந்து இறைச்சிக்கெனக் கொண்டுவந்து பிணமாகி வயிறூதிய உருண்டை மாடுகளைச் சளியச், சளிய வண்டிலிலேற்றி குருகுமணலில் கால்புதைய இழுத்திழுத்து மாய்ந்தான் மாணங்கி. கொழுத்திய வெயிலில் கொப்பளித்துப்போனது அவர்களின் கால்கள். ‘வாழ்க்கை மிகவும் பாரமானது தாத்தா… அதைக்கடக்க நம்மை விடவும் பாரமான பலவற்றைச் சுமக்கவேண்டியிருக்கிறது…. இதோ பார்த்தாயா பசியிலும் பார்க்க வலிகூடிய கொப்பழங்கள்” என்றான் மாணங்கி. கிழவன் எதுவுமே பேசாமல

மலையைச் சுற்றிய கன்றுக் குட்டி

(முருகையன் பற்றிய நினைவுக் குறிப்பு) மரணத்தை எப்படி எழுதுவதென்று யாரும் எனக்கு சொல்லித் தந்ததில்லை. சொல்லித் தந்தவர்களின் நுட்பங்களெல்லாம் வாழ்க்கைக்குள் மட்டுமே நின்று சுழன்றிருக்கின்றன. நான் மரண இருட்டைக் குடைய ஆசைப்படும் சுயம்பு. கடந்துபோய்க்கொண்டிருக்கும் காலம் வீசியெறிந்திருக்கும் மரணப் புத்தகங்களின் குவியல் என் நுண்ணுணர்வின் மீது அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கையில் முருகையனென்ற கவிஞர் மரணமடைந்தார் என்ற செய்தியும் எனக்கு எதையோ குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கிறது. குறியீடுகளோடு பரீட்சயமான மனிதர்கள் குறியீடுகளாகவே மாறுதலில் ஒன்றும் புதுமை இல்லைதான். மரணம் பற்றி அவரோடு உரையாடியிருக்கிறேன். எப்போதுமே அவர் தனது சிந்தனை ஊன்றியெழுகின்ற தொடக்கப் புள்ளியை விட்டுத்தூரம் போவதில் நாட்டமிருந்தாலும் தான் தொடங்கிய புள்ளியை யாருடைய விவாதமும் உடைத்துவிடக் கூடாதென்பதில் அக்கறையாக இருப்பார். இராமுப்பிள்ளை முருகையன் என்ற கவிஞர் – ஈழத்துக் கவிதை முன்னோடி