அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.
அமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா
மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்கும் என்பதற்கு அந்தக் குண்டுப் பூனை நல்லதொரு உதாரணம். அது பதுங்கியதை நான் கண்டதில்லை. எப்போதுமே ராஜநடையும் கம்பீரமான தோற்றமுமாகவே அது இருந்தது. யாரோ வீட்டில் வாய்வைத்து விழுந்த அடியில் அதன் கண்ணொன்று சிவந்து வீங்கிய கட்டியொன்று நிரந்தரமாகிப்போனது. பிற்காலத்தில் அது பெரியம்மா வீட்டின் பின்புறக் காணியிலேயே தங்கிக்கொண்டது. அந்தக் குண்டுப்பூனையின் பசிக்கு பெரியம்மாவீட்டில் நல்ல தீனி கிடைத்தது. தன்னை பெரியம்மாவீட்டின் ஒரு உறுப்பினராக மாற்றிக்கொள்ள ஒரு நல்ல பிள்ளையாய் நடந்துகொண்டிருந்தது. பெரியம்மா அந்தப் பூனைக்கு சாப்பாடு வைத்து உண்ணுமளவுக்கு அந்த வீட்டில் இடம்பிடித்துக் கொண்டது.
பூனைக்குப் பயந்த தாயின் வீர புத்திரன் நான். பூனைப்பயம் ஒரு பழக்கமாய் என்னிடமும் தொற்றிக்கொண்டது. அதுதான் என்னை பெரியம்மா வீட்டிற்கு அடிக்கடி போகாமல் தடுத்தது. பயம் இருந்தாலும் குட்டிப்பூனைகளின் மகத்தான உயிர்கள் என் நேசத்துக்குரியனவாக இருந்தன. ஆனாலும் பெரியம்மா வீட்டின் குண்டுப்பூனை............ எனக்குப்பிடிக்கவில்லை, பிடிக்கவே இல்லை.
பெரியய்யா வழிச்சல்வலை கொண்டு கடலுக்குப்போய் சாமத்தில்தான் வருவார். சாமத்தில் கொண்டுவரும் நண்டுகளை ஒரு பெரிய பானையில் போட்டு அவியல் நடக்கும். எனக்கு நண்டு அவித்த தண்ணீரின் சுவை மிகவும் பிடிக்கும். அவித்த நண்டும்,பாணும் பின் இஞ்சித் தேநீரும் என்று அந்தச் சாமம் அற்புதமாக இருக்கும். அந்த அற்புத இரவுகளுக்காய் நானும் பல இரவுகள் பெரியம்மாவீட்டில் போய் படுத்திருக்கிறேன். எங்களோடு புள்ளைகுட்டிகள் பலரும் அந்தச் சாமத்தில் சேர்வதுண்டு சில வேளைகளில் பெரியம்மாவே வீட்டுக்கு கொண்டுவந்து தருவதுமுண்டு.
என் அம்மம்மாவுக்கு அம்மா கடைசிப்பிள்ளை. பெரியம்மாவின் மூத்த மகளுக்கும், அம்மாவுக்கும் அதிக வயசு வித்தியாசம் இல்லை. பெரியம்மா அம்மாவை தன் மூத்த மகளாகவே நடத்திவந்தார். அம்மாவுக்கு ஆறு பிள்ளைகள் நாங்கள் ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும்போதும் பெரியம்மாதான் மருத்துவமனையும் வீடுமாய் திரிவார். சின்ன வயதில் நானொரு நோஞ்சான் பிள்ளையாம். அடிக்கடி எனக்கு வருத்தம் வந்து உயிர்வாழ்வது கடினம் என்று சொல்லப்பட்டபோதெல்லாம் பெரியம்மா என்னைத் தூக்கிக்கொண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஓடுவாராம். நான் வளர்ந்து இருபத்தைந்து வயதான பிறகும் உனக்கேன் அடிக்கடி வருத்தம் வருகுது என்றபடி ‘வெளிக்கிடு எனக்குத்தெரிஞ்ச டொக்டரெட்ட ஒருக்கா போய்ற்று வருவம்’ என்று கொழும்பு கொச்சிக்கடை வீதியில் பெரியம்மா நடந்த அந்த நடை இப்போதும் நெஞ்சில் படர்கிறது.
எங்கள் கிராமத்தில் எந்தத் திசையில் மருத்துவப் பூண்டுகள் கிடைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்த பெரியம்மா கீழ்காய்நெல்லி, ஆடாதோடை போன்றவற்றின் மருத்துவ குணங்களை நன்றாகப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டிருந்தார். குழந்தைகளுக்கான கிராமத்து வைத்திய முறைகளில் பெரியம்மா ஆர்வமாய் இருந்தார் என்பதும் பெரியம்மா பற்றிய என் அறிதலாக இருக்கிறது.
பெரியம்மா பெரியய்யாமீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அது மூன்றாவது மனிதர்களுக்கு அனாவசியமாக தெரியப்படுத்தாத ஒரு அரூபமான காதல். பெரியய்யா இறந்தபோது பெரியம்மாவின் வாயிலிருந்து வந்த ஒப்பாரி அந்த நேசத்தையும் பெரியம்மாவுக்குள் பதுங்கிக்கிடந்த கலை ஆழுமையையும் வெளிப்படுத்தியது. பெரியய்யாவின் மரணத்தின் பின்னர் பெரியய்யா பாடிய அகவலை பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டிருப்பார். கணவரின் மரணத்தின் பின் பெரியம்மாவின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்த்திருந்தாலும் எல்லோரின் குடும்பத்திற்கும் முன்நின்று வழி நடத்தும் ஒரு ஆழுமை மிக்க தலைவியாகவே பெரியம்மா இருந்தார்.
பெரியம்மாவின் மகன் வெளிநாடு வந்து அனுப்பிய முதற்பணத்தை பெரியம்மா தன் சகோதரங்களின் குடும்பங்களுக்கும் சிறு சிறு பரிசுகளாய் தந்தது பகிர்தலின் முன்மாதிரிகை என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெரியம்மா கொழும்பில் வசித்த காலத்திலும் பல சொந்தங்களும் வந்து தங்கிச்செல்லும் வீடாகவே பெரியம்மாவின் வீடு இருந்தது. ஆனாலும் பெரியம்மாவுக்குள் சில கவலைகள் இருந்தன அவற்றில் முக்கியமான ஒன்று தன் ஒன்றைவிட்ட சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மாரோடு உறவாட முடியாமற்போன துயரமே அது. பெரியம்மா தன் மரணப்படுக்கையில் இருந்தபடி தன் பிள்ளையொன்றின்மூலம் உறவாடமுடியாமற்போன தன் எல்லாச் சொந்தங்களையும் தான் நேசிப்பதாகவும் தன் எல்லாச் சொந்தங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான சூழலை ஏற்படுத்துமாறும் சொல்லிக்கொண்டார். பெரியம்மாவின் அந்தக் கடைசி ஆசையின் பெரும்பகுதி இன்று நிறைவேறியிருக்கிறது. பல சொந்தங்களின் இணைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பெரியம்மாவின் மரணம் பெரியதொரு இடைவெளியாய் எங்கள் குடும்பங்களுக்குள் இன்று ஏற்பட்டிருக்கிறது. பெரியம்மா தன் வாழ்நாளில் பல மரணங்களையும்,இழப்புகளையும் கண்டார் ஆனாலும் தளராதவராகவே வாழ்ந்தார் அந்த முன்மாதிரிகையே வாழ்க்கைக்கான பாடமென்று என் சொந்தங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். எதை எழுதினாலும்,பாடினாலும்,அழுதாலும் பெரியம்மாவுக்கு தீர்க்கமுடியாத கடன்காரராய் நானும் என் அம்மாவின் குடும்பமும் இருக்கிறோம். பெரியம்மாவின் குடும்பத்தோடு அன்புகசிய உறவாடுதலே எம்மால் இயலுமானது. அதுவே பெரியம்மாவுக்குச் செய்யும் நற்காரியமுமாகும்.
என் பெரியதாயாருக்கு என் இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-மெலிஞ்சிமுத்தன்.
Comments