மாயச் சுவர்

 

மதங்கர்துறைப்  பயல்சுட்டாங்குளத்தின்’  அருகில்தான் அமைந்திருக்கிறது நாடகப்பிட்டி.. குளம் வெட்டிக் குவித்த மண்ணில் கூத்தாடிய காலத்திலிருந்தே தோன்றிற்று அந்தப் பெயர். நாடகப் பிட்டியில் இப்போது பெரியதொரு பாதிவட்டமாய் அமைந்திருக்கிறதுதிருக்குடும்ப அரங்கம்’. ஒப்பேற்றப்படும் கூத்துக்களை மட்டுமே திரைவிலக்கிக் காட்டும் அந்த அரங்கத்தின் பின்னால் நடக்கும் கூத்துக்களை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மதங்கர்துறையில்சின்னப்பட்டாணி பிலிப்புப்பிள்ளைஎன்று பெயரெடுத்த ஒரு அண்ணாவியார் இருந்தார். ‘சந்தியோகுமையோர்கோயில் ஆலமரப் பொந்திலிருந்து அவருக்கு ஒரு எழுதுகோல் கிடைத்ததாகவும்,அதையெடுத்து அவர் சந்தியோகுமையோருக்கு பாட்டுக்கட்டியதாகவும், பின் வந்த காலத்தில் அவர் பல கூத்துக்களை எழுதியதாகவும் கதைகள் உண்டு.

மதங்கர் துறைக் கடலில்திருக்கை மீன்கள்கூட்டம்,கூட்டமாய் வந்து மீனவர்களை அச்சுறுத்தியபோது பிலுப்புப் பிள்ளைதான் மன்றாட்டுப்பாடல் இசைத்து கடலைக் கட்டினாராம். அதற்கு முன்னர் ‘திருக்கை மீன்கள்’  இந்து சமுத்திரத்தையே விழுங்கிவிடும் கோரப் பசியோடு அலைந்து திரிந்தனவாம். சின்னப்பட்டாணி பிலிப்புப்பிள்ளை அந்த ஊருக்குக் கிடைத்த காவற்சம்மனசு என்று மதங்கர் துறையார் நம்பினார்கள். பிலிப்புப்பிள்ளையும் கம்பீரமாகவே அந்தக் கிராமத்தில் வாழ்ந்துவந்தார். அவர் காலத்தில் ஒரு சிறந்த கலைஞராகவும் அவர் இருந்தார்.

 பிற்காலத்தில் கட்டிய புனிதப்பாட்டொன்றில்என் தேவனே எப்போதுந்தன் பதிக்கு வருவேன்என்பதற்குப் பதிலாகஎப்போ பரபதிக்கு வருவேன்என்று பாடியதால் அவர் இறந்துபோனாராம். அவர் கடைசியாய் எழுதிய அந்தப் பாடல்  ‘அறம் விழுந்த பாடல்என்று யாராலும் தீண்டப் படவில்லையாம். பின் வந்த காலங்களில் நிறையவே அறம் விழுந்தது, அறம் விழுந்த பாடல்களோடு சவங்களும் விழுந்தன. ஆனாலும் ஒருபோதும் அந்த மக்கள் கூத்தை விடவில்லை.

                          சின்னப்பட்டாணி பிலிப்புப்பிள்ளையின் பரம்பரையில் வந்த  இடக்கு ராசாதான்’  நம்முடைய கதையின் நாயகன்  அருளப்பச் சித்தன்’. ஆமாம் அப்படித்தான் அவனைக் கூப்பிடுவார்கள்  ஊரார்.              

ஒல்லியான உடலமைப்பும், நாசியால் இழுத்துக் கதைக்கும் விதமும்குறும்புகளுமாய் ஊருக்குள் ஒருவவுனாகவேவாழ்ந்துவந்தான் அருளப்பச்சித்தன். ஆனாலும் பல வேளைகளில் அவன் செய்யும் வேலைகள் யாருக்கும் புரியாதவையாக இருந்தன. 

காலையில் எழுந்து தன் முன்னாலிருக்கும் சுவரோடு பேசுவான்.  நீ இருக்கும் இடத்தில் முன்னர் ஒரு நடைபாதை இருந்தது அந்த நடைபாதையால் நான் மாடுகள மேய்ச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன், நட பாதையின்ர ரெண்டு பக்கப் புல்லையும் மாடு மேயும், புல்லில இருந்து ஒரு தும்பி எழும்பிப் பறக்கும், மாட்டோடும் தும்பியோடும் என்ர மனசு போகும். அந்த மாடு ஆச்சியின்ர மூத்த பிள்ளை. இப்போ..... ஆச்சியில்லை, மாடில்லை, புல்லில்லை, பூச்சி, புழுக்கள் கனக்க இல்லாமப் போச்சு.  ஏ சுவரே நீ எல்லாத்தையும் மறுத்து முளச்சிற்றாய் எத்தின கெப்பேறு உனக்கு’ என்பான். சுவர் சிரிக்கும்.

அருளப்பச் சித்தன் ஒரு முடாக் குடிகாரனும்கூட.  கள்ளுக்கொட்டிலில் இருந்து வீட்டுக்குப் போகும் வழியிலிருந்த அரங்கத்தில்  ஒருக்காலெண்டாலும் ஏறித் துள்ளாமல்படினப்பாட்டுப்  பாடாமல் போக இயலாது  நம்மாளால்.

அன்றைக்கும் அப்படித்தான் இடுப்பில் கையை வைத்துக்கொண்டேஎஸ்பானியர்எஸ்பானியர் மாந்தரேஎன்று அடவு போட்டுக்கொண்டே நடுமேடையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அதன் எதிரே வந்து அடவு முடித்து நின்றான்.  தன் நீண்ட கழுத்தை நீட்டி இடுப்பை நெளித்தவாறு மேடையை கூசிப் பார்த்தான். யார்யாரோவெல்லாம் புதுசு,புதுசாய் 'கால்க்கோட்டுகளோடு' குந்தியிருப்பதைக் கண்டான். தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த சங்கித்தானிடம்ஆருகும்பாஎன்று கண்ணிமைகளை அசைத்துக் கேட்டான்.

..... பல்கலைக் கழகத்தில இருந்து பேராசிரியர்மார் வந்திருக்கினம் கூத்துப்பற்றிக் கதைக்கப்போகினமாம்.......... கும்பாவுக்கு நல்ல சுப்பாபோலக்கிடக்குஎன்று சிரித்தபடியே சங்கித்தன் கடந்து போனார்.

கள்ளாமிர்தம் கும்பா, கள்ளாமிர்தம்.’ என்றபடிநான்கொஞ்சம் இந்த வாத்தியளெட்ட நாலு வார்த்த நறுக்கெண்டு கேக்கவேணுமே.- இருந்தாப்போல கூத்தில கரிசன வந்தது எங்ஞனம் கப்பித்தானுகளேஎண்டு கேக்கவேணுமே’

 என்றபடி மேடையை நோக்கி அவன் நடக்க  அந்தப் பாதிவட்ட மேடையின் கிழக்குப் பின்புறத்திலிருந்துஉன்னக் கொல்லாம  விடமாட்டன்ரா  என்று கத்தியபடி சுவக்கீனின் மகன் தங்கராசுவை துரத்திவந்தான் யோனேசுக்குட்டியின் மகன் வதிரியான். அவன் கொஞ்சம் இளைக்கிறானெங்கும்போது அப்பன முந்திக்கொண்டு ஓடி வாறான் மகன் மாட்டீன். மாட்டீனின் கையில் நல்லாத் தீட்டிய வில்லுக்கத்தியொண்டு இருந்தது. அவன் தங்கராசுவை கிட்டையும்,முட்டையுமாக நெருங்கியிருப்பான் அதற்குள் பாய்ந்து பிடித்தான் நம்முடைய கீரோ  அருளப்பச் சித்தன்.

 விடு குஞ்சியய்யா இவன ரெண்டில ஒண்டு பாக்க வேணும்’ என்று முறுகினான் மாட்டீன். கோபத்தில் அவன் கண்களால் கண்ணீர் வந்தது, மொத்த உதடுகளால் எச்சில் பறக்க அவன் தூசண வார்த்தைகளை முணுமுணுத்தபடி இழுபட்டான். முயன்று தோற்றவன் அருளப்ப சித்தனோடேயே நடக்கலானான். மற்ற இருவரும் மேடையின் மேற்குப் பின்பக்கத்தால் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அருளப்ப சித்தன் மாட்டீனிடமிருந்த வில்லுக்கத்தியை நாசூக்காய் வாங்கி மடித்துவிட்டு அவனை கொஞ்சம்,கொஞ்சமாய் சாந்தப்படுத்திக்கொண்டு போனான். ‘என்னடா நடந்தது’ என்று விசாரித்தான்.

சண்டைக்கு ஒன்றும் பெரிய காரணங்கள் இல்லை. வருசா வருசம் நடக்கும் கோயிற் திருநாளுக்குப் போடும் கூத்தில்சின்னப் பட்டாணி பிலிப்புப்ப்பிள்ளைபாடிய பாட்டை  இம்முறை யார் பாடுவது என்பதிலிருந்தே தோன்றியிருக்கிறது  பிரச்சினை. அருளப்பச் சித்தன் சொன்னான்டேய் மாட்டீன் ... அப்பன் பாடினது உனக்கும்,நீ பாடினது உன்ர மகனுக்கெண்டும் கூத்துப் பாத்திரத்த குடும்பப் பாத்திரமாக்கக் கூடாதெடா  கூள்முட்ட.   எல்லாரும் பாடவேணும்,  நம்மளவிட நல்ல கூத்துக்காரனக் கண்டா அவனுக்கு வழி விடவேணும் அப்பதான்ரா அந்தக் கல வளரும். இதுக்குப்போய் சண்ட புடிக்கிறதாடாஎன்றான் அருளப்ப சித்தன்.

மாட்டீன் சொன்னான். ‘ குலம் குலத்துக்கழும் கூதற சோத்துக்கழும் குஞ்சியய்யா  இது நம்மட உரிம இல்லையா

அட கூத்து நம்மட உரிமதான்ரா,அது நம்மட வாழ்க்கையோட கலந்தது அதுக்காக அடச்ச குரலோட இருக்கிற நான் என்ர அப்பன் பாடின சரித்திரகாரன் வேசத்தில நடிக்கலாமோ? அப்படி நடிச்சா அந்தக்கல உருப்படுமோ? ‘மூப்பன் பாடின சிந்த எடுத்து மூக்கடஞ்சான் பாடலாமோ  என்று பதில் சொன்னான் அருளப்ப சித்தன்.

நீ சொல்லுறதும் சரிதான் குஞ்சியய்யாஎன்றபடி அமைதியானான் மாட்டீன்.

அருளப்பச்சித்தன் மாட்டீனை உற்றுப் பார்த்துக்கொண்டே ‘டேய் மாட்டீன்’ வீரமும்,காதலும் எங்கட சொத்து எண்டு சொல்லிச் சொல்லியே கூத்து முழுக்க ஒரே வாளும்,தடியுமாக் கிடக்கு. உனக்கு ஒண்டு தெரியுமா? அடிக்கடி நம்மட ஆக்களுக்க சண்ட வாறத்துக்கு இந்தக் கூத்துகளுக்க வாற வன்முறையும் ஒரு தூண்டுதல் தானெடா, பார் எவனப் பார்த்தாலும் ‘நான்வீரன்’, ‘நான் வீரன்’ எண்டு நெஞ்ச உயர்த்தீற்றுத் திரியிறானுகள்.

 வீரம் எண்டா வன்முறை இல்லையடா ராசா, நீ வீரனெண்டா உன்ர கூத்தக் கொண்டு உன்ன அடக்கிறவனோட மோது. இல்லையெண்டா விட்டிற்றுக் கிட. எடேய் சின்னச் சின்னச் சண்ட பிடிக்கிறவனெல்லாம் சேருறது இந்தக் கூத்தோடதானெடா மகனே நீ இதையே சண்டையா மாத்துறது  சரியில்லராசா, சொல்லீற்றன் மகனே கொஞ்சமெண்டாலும் சூதானமா நடக்கப்பார் இனிமேல் உன்ர கையில இப்பிடி ஏதாவது ஆயுதத்தக் கண்டனெண்டால் குஞ்சியய்யாட சவத்திலையும் நீ முழிக்க மாட்டாய் விளங்குதோ’ என்றான் அருளப்பச்சித்தன்.

மாட்டீன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே போனான்.

 

மேடையில் கூட்டம் தொடங்கியிருந்தது. அங்கு வந்திருந்த பேராசிரியர் ஒருவர் தணல் பறக்கப் பேசிக்கொண்டு நின்றார்.

கூத்து எங்களுடைய பாரம்பரியக் கலை அதனை நாங்கள் அழிய விடக்கூடாது. கிராமங்களில இருக்கிற கலைஞர்கள நாங்கள் ஊக்குவிக்க வேணும், தென்மோடி,வடமோடி,வசந்தன்,காத்தான், மோகினி போன்ற எல்லாக் கூத்தினையும் கலந்து எங்களுக்கானதொரு புது வடிவத்த நாம கட்டமைக்க வேணும், சிங்களவர்கள் தமக்கான தேசிய கலை வடிவத்தக் கட்டமைத்து விட்டார்கள். அவர்களே கூறுவார்கள் தம் கலைவடிவ உருவாக்கலுக்கு அடித்தளத்தில் தமிழ்க் கூத்துக்களே இருக்கின்றன என்று. ஆனால் நாமோ இன்னமும் விழிப்படையவில்லை.’ என்கின்ற விசயங்கள் உள்ளடங்கப் பேசிக்கொண்டே நின்றார்.

அருளப்பச் சித்தன் இடை மறித்தான். ‘பேசுறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு மாஸ்டர். பல்கலைக் கழகத்தில குந்திப்புடிச்சுக்கொண்டு கலைஞர்களைக் கட்டியாளவும், இன்னுஞ் சிலர புறம்தள்ளவும் செய்யிற உங்கட வேலைகள் போதாதெண்டு இப்ப கூத்துக் காரரெட்டையும் வந்திட்டியளாக்கும்.

இல்ல........நானொரு இடக்கு நாயம்தான்  கேக்கிறன்.... கூத்தாடுவதும்,குண்டி நெழிப்பதுவும் ஆற்றாதவன் செயல் எண்டு சொல்லுவினம் நிறைய ஆத்தின ஆக்கள். நாங்க ஆடுற கூத்தப் பாத்தா குப்பையாத் தெரியும் உங்களுக்கு. எந்த மெட்டுக்கு எந்த நரம்பு புடைக்குமெண்டு தெரியாது. வயிறு கட்டி ஆடேக்க கழுத்து நரம்பு தெறிக்கிறது தெரியாது.  ஆனா வரலாறு பேசுவீங்க, எதிர்காலம் பற்றிப் பேசுவீங்க எங்கிட வரலாறும் பெரிசு மாஸ்டர்,

இந்த நாடகப் புட்டிதான் கனபேருக்குத் தெரியும். ஒருகாலத்தில வீடுகளில கிடந்த உரல்கள உருட்டிவந்து ஒண்டாக்கட்டி மேட போட்டு ஆடின பரம்பரையில வந்த ஆக்கள் நாங்க. பிறகு வந்த காலத்தில குறஞ்ச சாதிக்காரன் அரசனா நடிச்சா அவனுக்கு சிம்மாசனம் கொடுக்கக்கூடாது உரல்தான் போடவேணுமெண்டு வந்ததில இருந்துதான் உரலத் தொடாம இந்த மேடைக்கு வந்த நாங்கள். கூத்து எங்கிறதே குறஞ்ச சாதியாக்கட சாமான் எங்கிற நினைப்ப முதல்ல போக்குங்கோ. அதுக்குப் புறகு வந்து வகுப்பெடுங்கோ. குடிசீலத்துண்ட அவிட்டு குமஞ்சான் காட்டாதீங்கோ

என்று அருளப்ப சித்தன் கதைத்துக்கொண்டு நிற்கவே கூட்டத்துக்குள்ளிருந்த பெருசுகள் கொஞ்சம் குசுகுசுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரு பெரியவர் சொன்னார். ‘என்னப்பா ஒரு பெரிய மனிசர்,படிச்சமனிசர் நம்மட நன்மைக்காக கதைக்க வந்தா இப்பிடியா வெறியப் போட்டிற்று வந்து கதைக்கிறது

‘ணேய்  குறளிக் குஞ்சியப்பு / வந்திற்றேராம் மாசில்லாத மாஸ்ரருக்கு குட பிடிக்க…  கொஞ்சம் வாயையும் மற்றதையும் மூடிக்கொண்டு இரு. நாடக மேடையில ஒரு சமூக முன்னேற்றக் கூட்டம் நடக்குது , அதுக்குப் பின்னால ஒரு கத்திச்சண்ட நடக்குது,  பெரிய மனிசனெண்டா அதப் போய் விலக்குப்பிடி.

  இவங்க ஆய்வுக்கட்டுர எழுதிப்  பட்டம்பெற இஞ்ச வாறாங்க.  இவங்களா இருந்தாலும்,இவங்களுக்குப் பிறகு வாறவங்களா இருந்தாலும் எழுதப்போற கட்டுரைகளில இந்த மண்ணின்ர கலைஞன் சின்னப் பட்டாணி பிலிப்புப் புள்ளையின்ர பெயர் ஏதாவது வருகுதா எண்டு கண்ணுக்க விளக்கெண்ண ஊத்தி வச்சுக்கொண்டு பார். அப்பிடி வந்தா என்ர கமக்கட்டு மயிர வழிக்கிறன். நாளைக்கு கூத்து வரலாறு சொல்லும் இவங்கதான் எல்லாம் புடுங்கினாங்கள் எண்டு.’

கூட்டத்துக்குள் மீண்டும் குசுகுசுப்பு... பேராசிரியர் அவர்களை அடக்கினார்  அவற்ற ஆதங்கத்தையும் நான் புரிஞ்சு கொள்ளுறன் . ஆனால் தம்பி நம்மட கூத்துக்களில நிறையவே பிற்போக்கான விசயங்கள் இருக்கு. குறிப்பாக பெண் ஒடுக்குமுறைகளும், சாதி ரீதியான இழிவு படுத்தும் விசயங்களும் இருக்கு அவற்றையெல்லாம் இந்தக் காலத்தில அப்படியே செய்ய இயலாது அதுக்குத்தான் நாம் ‘கூத்து மீழுருவாக்கம்’ செய்யவேணும். அதுமட்டுமில்லாமல் நமக்கான தேசியக் கலை வடிவமொண்ட உருவாக்க வேணுமடாப்பா இது சம்மந்தமா அண்ணாவிமார் சிலபேர் ‘இவங்கள் கூத்தப் பழுதாக்கிறாங்கள்’ எண்டெல்லாம் விமர்சனம் சொல்லுறாங்கள் இதுகளக் கேட்டிற்று நாங்க சும்மா இருக்கேலாதுதானே தம்பி’. என்றார்.

மாஸ்டர்ர்ர் சும்மா பொரியுறுண்ட மாதிரிக் கதைக்கிறியள். பிற்போக்கான விசயங்களையெல்லாம் நொருக்கிப் போடுவம் அதில எனக்கு ‘நோ புறப்புளம்’ ஆனால்ல்ல். அண்ணாவி மரபு எங்கிறத்தையே ஒரு பழமவாதத் தன்மையோட நீங்க பொருத்திப்போட்டு இந்தச் சமூகத்தையே முன்னுக்குத் தள்ளுற ஆக்கள் நீங்கதான் எங்கிற மாதிரி அண்ணாவிமாற்ற குடிசீலத் துண்டில நீங்க தலப்பாக் கட்டக் கூடாது.

ஆர்மோனியக் கட்டையளுக்க அடங்கிடாத கூத்த ‘சுருதி பேதம்’ எங்கிறதும், கர்நாடக சங்கீதத்தின்ர லென்சுக்குள்ளால கூத்து மெட்டப் பாக்கிறதும், தேசியக் கலை வடிவம் எண்டு எல்லாக் கூத்தையும் கூட்டிக் கட்டுறதும் பாக்கிறதுக்கு மாஸ்டர் மண்குடத்தக் கவுட்டு வச்சிற்று மூத்திரம் பேஞ்சதுபோலக் கிடக்கு.

உங்களுக்கு தேசிய மிருகம் ஒண்டு, தேசிய மலர் ஒண்டு, தேசியப் பறவை ஒண்டு எம்பிட்டதுபோல தேசியக் கலையொண்டு தேவ.  இந்தச் சமூகத்தின்ர பன்முகத் தன்மையை மதிச்சு, அதற்குள்ளான சமத்துவ நிலைப்பாட்ட உருவாக்கிற சக்தி உங்களுக்கு இருந்தால், அத உள்ள சுத்தத்தோட செய்யுங்க நாங்களும் கூட வரலாம்.

ஆனால் நீங்க ‘தேசியம்’ எண்டு வரும்போதே நெஞ்சுக்குள்ள நெருஞ்சி முள்ளு குத்துது மாஸ்டர்.

 தமிழ் தேசியத்தின்ர வரலாற்று வேர்கள நீங்க 19ம் நூற்றாண்டின்ர   ‘சைவ சீர்திருத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்க’ தேடிக் கட்டமைப்பீங்களெண்டால், 19ம் நூற்றாண்டின்ர வடபகுதி மொத்த சனத்தொகையில 50% வெள்ளாள சமூகத்ந்தின்ர சாதி உருவாக்கம் இருந்தது எங்கிறதையும் கொஞ்சம் மண்டைக்க கணக்குப் போடவேணும்.

 இந்தச் சாதி உருவாக்கம் தங்கட சமூக மேலாண்மையை உறுதிப் படுத்துறதுக்கு இந்த மறுமலர்ச்சிக்குள்ள  தன்ன தொடர்பு படுத்தி  விளையாடீச்சு எங்கிறதையும் அதே மண்டைக்குள்ளையே பதிஞ்சு வைக்கோணும்.

இப்பிடி நீங்க என்ன மறுமலர்ச்சி செய்தாலோ,மீழ் உருவாக்கம் செய்தாலோ அதிகார வர்க்கம் இதுக்குள்ள வந்து பதுங்கீரும். (இதெல்லாம் என்னத்த ஆதாரமா வச்சுச் சொல்லுறாய் என்று கேக்க விரும்புற ஆக்கள் வரலாற்ற வாசியுங்கோ, சமூகத்த அவதானியுங்கோ அவ்வளவுந்தான் சொல்லேலும்)

நான் கனக்கக் கதைக்கேல்ல மாஸ்ரர். இந்த அதிகார வர்க்கம் எங்கிறது மிக நாசூக்கா தோழில கைபோட்டுக் கொண்டு வந்துதான் எல்லாத்தையும்  பறிச்சிற்றுப் போகுது. உங்களையும் நானொரு அறிவு அதிகாரியாத்தான் பாக்கிறன்,சாதி அதிகாரியளின்ர சகபாடியள்தானே மாஸ்டர் அறிவு அதிகாரியள்.  எல்லாரும் ஒண்டாச் சேர்ந்துதானே நடக்குறியள்.

என்றான் அருளப்பச் சித்தன்

சத்தம் போடாமல் கேட்டுக்கொண்டு நின்ற பேராசிரியர் ‘தம்பி அதுக்கேன் தம்பி அரசியலெல்லாம் கதைக்கிறீர். உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நான் போறன் அதுக்காக என்னையும் ஒரு சாதி வெறியன் என்கிறமாதிரி சித்தரிக்கக் கூடாது’ என்றார்.

‘புட்டுவங்கொட்டிக்கு புடுக்கில கட்டாம், புடுங்கின பூதத்துக்கு புட்டுவஞ் சிறுசாம். போங்கமாஸ்ரர் போங்கோ போய் வேறவேலையப் பாருங்க’ என்றான் அருளப்பச்சித்தன்.                                                                                 

அப்போதுதான் அந்த ஊர்ப் பாதிரியார் வரும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. பாதிரியார் அருகில் வந்ததும்என்ன பிரச்சினை,என்ன பிரச்சினைஎன்றபடி விசாரித்தார் பல விரல்கள் சேர்ந்து அருளப்ப சித்தனைக் காட்டின,அருளப்ப சித்தன் அந்த இடத்திலிருந்து துரத்தப்பட்டான்.

அருளப்ப சித்தன் போகும் வழியில் பார்த்தான் எவன் கத்தியைக்கொண்டு துரத்தினானோ அவனை மற்றவன் துரத்திக்கொண்டு ஓடினான். அவர்களைப் பிடித்து சமாதானம் சொல்ல யாரும் இருக்கவில்லை.

‘யோ வீர குல மாணிக்கங்களே நில்லுங்கடா’ என்றபடி அவன் அவர்களின் பின்னால் போனான், மேடையில் போட இருந்தஅடவைதெருவில் போட்டான்,குனிந்து பார்த்தபோது கால்களின் கீழே வரிசையாக எறும்புகள் குண்டிகளைத் தூக்கிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருந்தன. அவன் அவைகளோடு பேசினான்.

ஏய் நேசமுள்ள எறும்புகளே எனக்கு இப்போ மூத்திரம் முடுக்குகிறது. ஆனாலும் நான் இப்போ உங்களைக் கடந்து சென்றே அதனை வெளியேற்றுவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி செய்கிறேன். நோவாவுக்கும்ஆபிரகாமுக்கும் வாக்குக்கொடுத்து  களைத்துப்போன கடவுளில்லை நான். ‘சீனாப் பானா அருளப்பச் சித்தன்’.

 அதோ பாருங்கள் மேடையில் கூட்டம் நடத்துகிறார்களே அவர்கள் உங்கள் நண்பர்கள்ஒழுக்கமும்,நேர்த்தியும் கொண்டவர்கள், உணவுத் தட்டில் அறுசுவை உணவு இருந்தால் அவர்கள் சீனிப்பாணி ஊற்றிய இடத்தைத்தான் நாடுவார்கள். படித்து வீங்கிய சித்திநுள்ளான்கள்நானோ இலட்சியமற்றவன், இலக்கியமும் இலட்சியவாதமும் எங்கு பொருந்துகின்றதோ அங்கு எக்காளமிட்டுச் சிரிப்பவன். நோ கார்......நோ பெற்றோல்.....நோ றைவர்........ஆனாலும்........

இலக்கியப் பொட்டுக் கடைக்காரர்களோடு நமக்கென்ன வேலை நான் போறன், இனி காகங்களோடு சேர்ந்து கவிதை பாடலாம், அல்லாவிடில் கள்ளால் வரும் ஏவறையில் குடல் மணத்தை அவதானிக்கலாம்.

அருளப்பச்சித்தன் எழுந்து போனான்.

இந்தக்கதை நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கூத்துப்பற்றி பல கட்டுரைகளை பலபேர் எழுதிவிட்டார்கள். அவற்றில் எங்கேயும்சின்னப் பட்டாணி பிலிப்புப்பிள்ளைபற்றி ஒரு வரிகூட இல்லை.

ஹிஹ்ஹிஹ்ஹி அருளப்பச்சித்தன் குண்டியால் சிரிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

முடிந்தது.

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)