ஐயாவின் ஆர்மோனியப் பெட்டி


சிறுவயதில் ‘குப்பாயம்’ கட்டிக்கொண்டு மன்னார்,அரிப்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் போய் ‘சென். பற்றிக்ஸில்’ படித்தவராம் அப்பப்பா. பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வரும் படகுகளை கண்காணிக்கும் அரசு வேலையில் இருந்தபடி, ஆங்கில- தமிழ் மொழிபெயர்பாளராகவும், ஓர் ‘ஆயுர்வேத வைத்தியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அதன்பின் அரிப்புத்துறையிலேயே  ‘உபதபாலதிபர் வேலையை எடுத்துக்கொண்டு வீட்டின் ஒருபகுதியையே தபாற்கந்த்தோராக மாற்றிக்கொண்டார். 

அவருடைய ஆங்கில அறிவு அவருக்குப் பல முக்கிய அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்றுக்கொடுத்திருந்ததோடு, ஒரு கைராசியான வைத்தியராகவும், அரிப்புத்துறை தேவாலயத்தின் ‘சங்கித்தன் ஆகவும், அத்தேவாலயத்திலேயே ஆர்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார்.
கேரளாவிலிருந்து வந்த ஒரு வித்தைக்காரரிடம் ‘வர்மக்கலை’ பயின்றார், கிராமத்துக் கலைஞர்களுக்கு ‘வாசகப்பா பயிற்றுவிப்பவராகவும் மன்னாரில் இருந்த யாழ்ப்பாணப்பாங்குக் கூத்துகளைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தன் ஆயுட்காலத்தில் எவற்றையெல்லாம் கற்றுவிட முடியுமோ அவற்றையெல்லாம் கற்றுவிட வேண்டுமென்ற பேராசையோடு தன் மரணகாலம் வரை கற்றுக்கொண்டே இருந்தார் அப்பப்பா.


அவரிருந்த காலத்தில் அவருடைய வீடு கல்வியாளர்கள், அரசியல்தொடர்புள்ளோர், கத்தோலிக்க மதகுருக்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்கள் அடிக்கடி வந்துசெல்லும் இடமாக இருந்தது. வீட்டின் ஒருபகுதி மருந்து மணம் நிறைந்ததாகவும், இன்னொருபுறம் ஒரு தபாலகத்தின் கடதாசி மணமும், உருக்கப்பட்ட ‘ராக்கினி மெழுகின் மணமுமாயிருக்கும்.
வீட்டின் ‘விறாந்தையில்’ வெவ்வேறு அளவுகளில் மான் கொம்புகள் கொழுவப்பட்டிருந்தன, அறைகளுக்குள்ளே கறுப்பு நிறத்தில் பூ வேலைகள் செய்யப்பட்ட இழுப்பறைகளைக்கொண்ட மரப்பெட்டிகள் இருந்தன. சமையலறை தனியே மண்ணும் கிடுகும் கொண்டு அமைக்கப்பட்டு உறிகளாலும், மண்குடங்கள், மண்சட்டிகளாலும் நிறைந்திருந்தன.

 ஐயாம்மா ஒவ்வொரு குடத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்திருந்தார்.
வீட்டின் பின்புறத்தில் ‘கோழி வளர்ப்புப் போட்டியில்’ வென்று பரிசாய்க் கிடைத்த கோழிக்கூடொன்று நெடுங்காலமாய் இருந்தது. வெவ்வேறு வகைக் கோழிகளும் வெவ்வேறு பெயர்களோடு காணியில் திரிந்தன. மாதுளை, கருவேப்பிலை,முருங்கை, சண்டி, தென்னை என்று பலவகை மரங்களும் காணியில் நின்றன.
நெய்தல் நிலத்தாருக்கேயுரிய விசேச சமையல் முறைகள் பலவும் ஐயாம்மாவின் கைவசம் இருந்தது. ‘உமிரிக்கீரைச் சம்பல்’, முருங்கையிலைச் சொதியெல்லாம் இன்னமும் என் நாவின் வழியான நினைவுகளாய் இருக்கிறது. 

ஐயாம்மாவின் அண்ணன் ஒரு சிறந்த வேட்டைக்காரன் என்றும், அவர் இறந்தபோது அவர்களின் வீட்டில் வளர்த்த கிளி பறந்துபோனது என்றும் ஐயாம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஐய்யாமாவின் பிரதான பொழுதுபோக்கு அம்மானை பாடுவதாக இருந்தது. ஐயாம்மா அக்காலத்தில் இருந்த புலவர்களுக்கு எப்படி ‘அருள்’ கிடைத்தது, அவர்கள் எப்படி ‘அறம்’ விழுந்து செத்துப்போனார்கள் என்றெல்லாம் கதைகளாய்ச் சொல்லுவார்.

ஐயாம்மாவின் பெயர் சவீனம்மா. அவவுக்கு சலேற்றம்மா, சூசையம்மா, அன்னம்மா என்று சகோதரிகள் இருந்தார்கள் அவர்கள் அப்பப்பாவை அத்தான் என்றுதான் கூப்பிடுவார்கள். சகோதரியின் திருமணத்தின் பின்னர் மரியாதை நிமித்தம் அவர்கள் அவருடன் அதிகம் பேசுவதில்லை.
அப்பப்பா ஆழுமை நிறைந்த மனிதர். அவரின் உடல்மொழியையும், கம்பீரத்தையும், ஸ்ரைலையும் கலையையும், ஆத்மீகத்தையும் அவருடைய பிள்ளைகள் பிரித்தெடுத்து ஒவ்வொரு துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.
அந்த வகையில் அவருடைய கலையை எடுத்துக்கொண்டு அரை நூற்றாண்டு கண்ட ‘ஆர்மோனியகாரனாக’ வலம் வருபவரே என் தந்தையார்.


ஐயா 14- 07- 1947ல் பிறந்தார். ஐயா பிறந்திருந்த நாளில், அப்பப்பா ஏதோ அரசபணி காரணமாக வெளியூர் போய்விட்டு, மருத்துவமனைக்குப் போனாராம். போகும் வழியில் ஒரு விபத்திலிருந்து அதிசயமான நிலையில் தப்பினாராம், தப்பித்தவர் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு அந்தோனியாரின் சொரூபத்தைக் கண்டாராம். ‘அந்தோனியார்தான் காத்தார்’ எனும் நினைப்போடு மருத்துவமனைக்கு வந்து பிள்ளைக்கு ‘அன்ரனி விஜயநாதன்’ என்று பெயர் வைத்தாராம். ஐயா அவர்களுக்கு நான்காவது பிள்ளை.
00
என் சின்ன மாமி சின்னப்பிள்ளையாய் இருந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆடவேண்டியிருந்ததாம். துரு, துருவென இருந்த அந்தச் சின்னப்பொண்ணு ‘உன்பேரைச் சொன்னால்’ என்று தொடங்கும் மிகப் பழய சினிமாப்பாடலுக்குத்தான் ஆடவேண்டியிருந்தது. ‘மிகப் பழய’ என்று சொன்னால் மாமி கோவிக்கலாம் ஆனால் அதுதானே உண்மை.

மாமிக்கு ஆர்மோனியத்துடன் நடன ஒத்திகை பார்க்க ஆசை. ஆலயத்தில் ஆர்மோனியம் வாசிக்கும் பப்பா - வீட்டிலும் ஒன்று வைத்திருந்தாராம். பப்பா வெளியே போகும் நேரம் பார்த்து அவர்களின் அண்ணன்  ‘லியோப்போல்’ பதுங்கிப் பதுங்கிப்போய் ஆர்மோனியப் பெட்டியைத் திறந்து வாசித்துப் பளகுவாராம். பப்பா வீட்டுக்கு வருவதை கண்காணித்துச் சொல்வதற்காக தம்பியாரை காவலுக்கு விடுவாராம்.
சின்ன மாமி நடன ஒத்திகைக்கு அண்ணனாரைக் கேட்க முடியாததால் கண்காணிப்புப் பணியில் இருந்த தம்பியாரை ‘ஆர்மோனியகாரன்’ ஆக்க முடிவெடுத்தாராம். பப்பாவும், அண்ணனும் இல்லாத தருணம் பார்த்து அவர்களின் ஒத்திகை தொடங்கியதாம்.

 ஒத்திகை முடித்து மூடி வைக்கப்பட்ட ஆர்மோனியப் பெட்டியை மறு நாள் திறந்து பார்த்தபோது அதற்குள் பாம்பு ஒன்று வந்து நல்ல நித்திரை கொண்டு எழும்பியிருந்ததாம்.
சலேற்றம்மா அப்பாச்சிதான் சொன்னாராம் ‘அடே விசயம் உன்ர நாதத்தக் கேட்டுத்தான் பாம்பு வந்திருக்கு நீ இந்தப் பாட்டுப்பெட்டிய விடாத’ என்று.

பாம்பு வந்த ஆர்மோனியப் பெட்டியில் பழகிய பதின் நான்கு வயதுச் சிறுவனுக்கு ஆலயத்தில் பூசைக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, சலேற்றம்மா பெரியாச்சியின் மகன் ‘சூசையப்பு அண்ணன், சொந்த அண்ணன் ‘லியோப்போல்’ ஆகியோரைத்தொடர்ந்து இவரும் அரிப்புத்துறை ஆலயத்தில் ‘ஆர்மோனியகாரன் ஆனார்’ பூசைப்பாடல்களோடு வேறுவகையான பாடல்களுக்கும் இடையில் வரும் இசைக்கோர்வைகளை கச்சிதமாய் வாசித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். பின்னர் காதற் திரமணம் முடித்து மெலிஞ்சிமுனைக்கு வந்து சேர்ந்தார்.

மெலிஞ்சிமுனைத் தேவாலயத்தில் அப்போது இவரின் சகலன் ‘பிரான்ஸிஸ்’ சீனியய்யா ஆர்மோனியகாரனாய் இருந்தார். அவரைத் தொடர்ந்து இவர் மெலிஞ்சிமுனைத் தேவாலயத்திலும் ஆர்மோனியம் வாசித்தார். பூசைப் பாடல்களுக்கு வாசித்துக்கொண்டிருந்தவரை சிறந்த கூத்துக் கலைஞரான ‘டேவிற்’ மாமாதான் கூத்துக்கு வாசிக்க ஆர்வப்படுத்தினாராம். அன்றிலிருந்து இவரின் ஆர்மோனிய வாசிப்பு வெவ்வேறு அண்ணாவியர்களோடு வெவ்வேறு கிராமங்களில் தொடர்ந்தபடியே இருந்தது. அவர் சென்ற இடங்களிலெல்லாம் வரவேற்புகளும், மரியாதையும் கிடைத்தது. தம்பியின் வளர்ச்சியைக் கண்டு கன்னியாஸ்திரியாய் இருந்த மூத்த அக்கா பாராட்டி, ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்.
00

நான் சிறுவனாக இருந்தகாலத்தில் எங்கள் கிராமத்தின் திருநாட் காலத்தை நன்றாகவே அனுபவித்திருக்கிறேன். எங்கள் கடையில் திருநாட்காலமென்றால் அதிகமான வியாபாரம் நடக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அம்மா சமாழிக்க மிகவும் கஸ்ட்டப்படுவார். அதே நேரம் திருப்பலிப் பாடல்களுக்கான ஒத்திகை நடத்தவேண்டியிருக்கும். வசதிகருதி எங்கள் வீட்டில்தான் ஒத்திகை நடக்கும் நான் கடையின் பரபரப்பையும், பாடல் ஒத்திகையின் அழகையும் மாறி, மாறி அவதானித்துக்கொண்டிருப்பேன். அப்பாடல்களில் எல்லாமே அக்காலத்தில் எனக்கு நல்ல மனப்பாடமாயிருந்தது.

திருநாள் இரவில் கூத்து விடியும்வரை நடக்கும். நாங்கள் பெரும்பாலும் சாமத்திலேயே அம்மாவையும் கூட்டி வந்து படுத்துவிடுவோம். ஐயா இரவிரவாய் ஆர்மோனியம் வாசித்துவிட்டு பொழுது விடியும்போதே வீடு வந்து படுப்பார். காலையில் அம்மா கடை திறக்கும்போது இரவு கூத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்த பெரியமாமா பாய்க்கியநாதர்தான் முதல் ஆளாய் வந்து வெற்றிலை வாங்குவார். பெரியமாமா அப்போதுகூட தன் உதட்டுச் சாயத்தையோ, தன் சிவந்த வட்டமிடப்பட்ட மாங்கனிக் கன்னத்தையே, கண் மையையோ கழுவியிருக்கமாட்டார். வெற்றிலையை வாங்கி, மடித்துச் சப்பி, கடையின் ஓரமாய்த் துப்பி, ஒரு நெளிப்பு, நெளிப்பார். ‘என்ன விசயன் படுத்திற்றுதோ குழப்பாத பஞ்சி அலுப்பா இருக்கும்’ என்றபடி பெண்ணைப்போலவே நடந்து எங்களைச் சிரிக்க வைப்பார்.
00
ஐயா ஒருமுறை அரிப்புத்துறைக்குப் போய் வரும்போது ‘சூசையப்புப் பெரியய்யாவிடமிருந்து’ ‘லில்லி புரூட்’ எனும் வகையிலான இரண்டு தட்டு ஆர்மோனியப் பெட்டியை விலைக்கு வாங்கி வந்தார். அந்தப் பெட்டியை இந்தியாவிலிருந்து வந்த ‘எட்மண்ட் பிறதரிடம்’ பெரியய்யா வாங்கியிருந்தாராம். அப்பெட்டி வீட்டுக்கு வந்த பின்னர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அய்யா அதனோடேயே மினக்கட்டார். பின்னர் பாதிரியார் ‘லோறன்ஸ் சேவியரின்’ வேண்டுகோளுக்கிணங்க மெலிஞ்சிமுனை ஆலயத்திற்கு புதிய ஆர்மோனியப் பெட்டியைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்த ஆர்மோனியப் பெட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

ஐயாவுக்கு ஒரு ஆர்மோனிய வாரிசு வரவேண்டும் என்று மூக்கில் விரல் வைத்து யோசித்த அடியேன், வரலாற்றுப் பிசகின்றி, ஐயா வீட்டில் இல்லாத நேரமொன்றில், தம்பியைக் காவலுக்கு விட்டு, ஆர்மோனியக் கட்டைகளில் இதுவரை யாரும் கேட்டிராத மெட்டுகளையெல்லாம் வாசித்துவிட்டு, பாம்பு வந்து படுக்குமென்று கற்பனை செய்தேன். மறுநாள் ஆர்மோனியப் பெட்டிக்குள் கடக்கு, முடக்கு என்று சத்தம் வந்தது. வீட்டு வளையில் இருந்து இறங்கி வந்த எலிக்கூட்டம் உள்ளே தென்மோடிக் கூத்து ஒன்றை ஒத்திகை பார்த்துவிட்டுப் புறப்பட்டுப் போவதை என் இரண்டு கண்களாலும் பார்த்தேன்.
00
நாங்களிடம்பெயர்ந்த ஆரம்ப இடங்களுக்கெல்லாம் அந்தப் பெட்டியைக் காவிக்கொண்டே வந்தார் ஐயா. எங்கள் சட்டி, பானை, உடுப்புகளோடு அதுவும் குந்தியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் அதுதான் எங்களுக்குச் சோறு போட்டது. இடம் பெயர்ந்த ஒரு இடத்தில் அந்த ஆர்மோனியப்பெட்டி திருடப்பட்டபோது ஐயா மிகவும் வேதனைப்பட்டார். அம்மாதான் சொன்னார் ‘ நெடுகையும் அத நினைச்சுக் கவலப் படாதீங்க, பெட்டிபோனா இன்னொன்ற வாங்கீடலாம், கையிருக்குத்தானே’ என்று.
ஐயாவின் கைகள் இன்னமும் ஆர்மோனியத்தின் கட்டைகளை மென்மையாய் ஸ்பரிசிக்க ஆவலாகவே இருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஐயாவுக்கு இன்று பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்து ஐயா.


Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மாயச் சுவர்

அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.